நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்

ஆகஸ்ட் 01-15

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரைப் புகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்களை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார், என்று பதிவு செய்துள்ளார்.

அதற்குத் தக்க பதிலடியாக, …உண்மை வரலாறு என்ன? என்று சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் அதை மழுங்கடிக்க ராஜாஜி _ வைத்தியநாதய்யர் கூட்டணி நடத்திய கபட நாடகத்தையும் எடுத்துக்காட்டி 12.7.2014 விடுதலை ஞாயிறு மலரில் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள் கருத்துகளைத் தொகுத்துள்ளார்.

இச்செய்திகளை வெளியிடும் தினத்தந்தி போன்ற ஏடுகளுக்கு சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வரலாற்றை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம்.

நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.

திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.

1874இல் மூக்க நாடார் மதுரை— கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.

1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.

1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.

1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.

1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.

1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.

1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.

இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே

தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தையும், சனாதனக் கொள்கையையும் அழிக்க வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை உணருவார்களா?

சிவ.பாலசுப்ரமணியன்,
கண்ணந்தங்குடி மேலையூர்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *