பக்தி

ஆகஸ்ட் 01-15

புதுமை இலக்கிய பூங்கா

பக்தி

– டி.கே.சீனிவாசன்

புகழ்பெற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான டி.கே.சீனிவாசன் தாய்நாடு இதழின் ஆசிரியர். தத்துவ மேதை என்று அழைக்கப்பட்டவர். இவர் எழுதிய ஆடும் மாடும் என்ற நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர்.

 

டுக்கடுக்காக, ஒன்றுக்கொன்று ஆதரவாகப் பின்னிப் பிணைந்திருந்த அந்த மலரின் இதழ்களைப் பார்க்கும்போது, என் இதயம் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது. உதிக்கும் கதிரவன் ஒளி பட்டதும் அவை அத்தனையுமே விதிவிலக்கில்லாமல் மலர்ந்து சிரிக்கும். வட்டமிடும் வண்டு மலரை முத்தமிடும்போது ஒவ்வொரு இதழும் சிரிக்கும். ஒன்றுபட்டு வாழ்ந்த அந்தக் குடும்பத்தைத் துண்டுபடுத்திய அந்தச் சிறு நிகழ்ச்சி…!

எவனோ ஒரு வேலையற்ற விவேகமில்லாத வீணன் அந்த மலரைச் செடியிலிருந்து பறித்து அதன் இதழ்களைப் பிய்த்துப் போட்டுவிட்டான். சேர்ந்து வாழ்ந்தபோது அவைகளுக்கு ஜீவசக்தி ஊட்டிய அதே கதிரவன் ஒளியே அவை சிதறி விழுந்தவுடன் சுருக்கித் தீய்த்துவிட்டது.

என் மனம் இந்த அலங்கோலத்தைக் கண்டு அழுது கண்ணீர் வடித்தது. ஆனால்…? மலரின் இதழ்களுக்கு நாங்கள் ஒன்றும் உயர்ந்து போகவில்லை என்று மனித இதயங்கள் சொல்லிக் காட்டும்போதுதான் வெட்கத்தாலும் வேதனையாலும் துடிதுடித்துப் போனேன். பொன்னம்பலக் கவிராயருக்கும் தங்கப்பனுக்கும் இடையே இருந்த அந்த ஆழமான நட்பு கயிறு கட்டிப் பிணைத்த கதம்ப மாலையாக இல்லை, ஒன்றோடொன்று உருக்கி வார்த்த உலோகக் கலப்பாக இருந்தது. அந்தக் கலப்பைக் காய்ச்சித் தனித்தனியே பிரித்த நிகழ்ச்சி மிகவும் சாதாரணமானதுதான்.

ஒரு நாள் பேச்சுவாக்கில் தற்செயலாக கவிராயர் திக்கற்றவர் களுக்குத் தெய்வந்தானே துணை என்று சொன்னார். தங்கப்பன் கொஞ்சம் சு.ம. வாடை படிந்தவன்! அவனும் விளையாட்டாகவே, தெய்வமே திக்கற்றுக் கிடக்கிறதே, அது எங்கே துணை செய்யப் போகிறது? என்று சொல்லிவிட்டான்.

இந்த உரையாடலைவிட அது நிகழ்ந்த நேரந்தான் நெருப்பாக இருந்து அவர்கள் நட்பைப் பிரித்தது. அந்த ஊர்ப் பரந்தாமன் கோவில் பாழடைந்து கிடந்தது. சட்டபூர்வமான சோதாக்களுக்குப் பதிலாக கள்ள மார்க்கட் சோதாக்கள் அதைப் பஞ்சமா பாதகங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கப்பனுடைய சொற்கள் இந்தச் சோகச் சித்திரத்தைச் சுட்டிக் காட்டுவதுபோல கவிராயருக்குத் தெரிந்தது. ஆபத்பாந்தவன் அவருடைய இதயத்தின் ஆழத்தில் அவதாரமெடுத்து அபயம் அபயம் என்று கதறினார்.

அன்றிலிருந்து கவிராயரும், தங்கப்பனும் கிழக்கும் மேற்கும் ஆனார்கள். இருவர் உள்ளங்களும் ஈட்டி முனைகளாக உருப்பெற்றன!

ஏமாளித்தனத்தின் சின்னம் என்று பரிதாபப்பட்டான் தங்கப்பன். தடி கொண்டு தாக்கப்பட வேண்டிய படமெடுத்தாடும் நச்சுப் பாம்பு என்று ஆத்திரப்பட்டார் கவிராயர்.

வேத, சாஸ்திர, புராணங்கள் கவிராயர் கைஆயுதங்களாக ஆயின; விடுதலை, திராவிட நாடு, போர்வாள் கொஞ்சம் சொந்தப் புத்தி, இவைதாம் தந்கப்பனுக்குக் கிடைத்த ஆயுதங்களும், அஸ்திரங்களும்!

ஊர் இரண்டுபட்டது. சொற்போரில் தொடங்கி மற்போரில் வந்து முடிந்தது இந்தப் போராட்டம்! மலர்க்குலம் மனித குலத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.

இத்தனைக்குமிடையில் அனாதையாகக் கிடந்த அந்த ரட்சகன் மீது அந்த ஊரில் புதிதாக நிலம் வாங்கிய செட்டியாருக்கு அக்கறை பிறந்தது. வண்டி வண்டியாக வந்திறங்கிய கருங்கல்லும் செங்கல்லும் வானளாவும் மதிலாகவும் கோபுரமாகவும் உயர்ந்தன. எவனோ எங்கிருந்தோ வீசியெறிந்த வாழைப்பழத் துண்டு எப்படியோ நம் வாய்க்குள் வந்து விழுந்தால் ஏற்படும் திகைப்பும் மகிழ்ச்சியும் கவிராயர் உள்ளத்தைக் கட்டி அணைத்தன. நினைந்து நினைந்து நெக்குருகினார். மகிழ்ச்சியில் மல்கிய கண்ணீர் கசிந்து கசிந்து தரையில் விழுந்து சாய்ந்தது! பக்தர்களை ரட்சித்து துஷ்டர்களைத் துவம்சம் செய்யும் அந்தப் பரந்தாமனே செட்டியார் உருவில் அவதாரம் எடுத்துத் தங்கப்பனை மட்டம் தட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார். அன்று ஆண்டவன் கோவிலில் உட்பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்து வந்தார் கவிராயர். நிமிர்ந்து நின்ற கோபுரத்தின் நிழலில் நிம்மதியாகப் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனைப் பார்க்கப் பார்க்க அவருக்குப் பரவசமாக இருந்தது. தங்கக் கவசம்_அதில் பட்டுத் தெறிக்கும் பகலவனின் ஒளிக்கதிர்கள்! நீர்வீழ்ச்யிலிருந்து தெறித்து விழும் நீர்த்தி வலைகள் உடல்மேல் படும்மீது உண்டாகும் கோமளமான உணர்ச்சி கவிராயர் உள்ளத்தைத் தழுவியது. அதே நேரத்தில் கோவிலின் வாயிற்படியில் நின்ற தங்கப்பனுடைய பார்வை கல்லை உடைத்து உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கும் தொழிலாளர்கள்மேல் பதிந்திருந்தது. காய்ந்து வறண்டு போன அவர்களுடைய உடல்கள்_ அவைகளை மேலும் மேலும் காய்ச்சிப் பதப்படுத்தும் கதிரவனின் வெம்மை! இத்தனை உழைப்பும் எவனோ ஒரு தனி மனிதன் புகழுக்கும் பெருமைக்கும்தானே என்பதை நினைத்தபோது அவன் நெஞ்சு பிளந்தது.

அவர்கள் இருவரும் கோவிலிலிருந்து ஒன்றாகவேதான் திரும்பி வந்தார்கள். இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் வண்டிக்காரன் சாட்டையால் விரட்டப்பட்டு வெருண்டோடுவதுபோல, வேகம் வேகமாக மௌனமாக ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர்.

அய்யா! ஏழை! காலணாக் கொடுங்கோ! கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்!

தீனமான அந்தக் குரல் இருவரையுமே திரும்பிப் பார்க்கச் செய்தது. ஒரு பேசும் எலும்புக் கூடு, பிணமாகாமல் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லாமற் சொல்லி நின்றது.

கடவுள் உனக்கு நல்லகதி காட்டுவாரப்பா என்று உருக்கமாகச் சொல்லிக் கொண்டே நடந்தார் கவிராயர்.

தங்கப்பன் ஒரு காலணாவை எடுத்து அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுத்தான். கவிராயரைக் குறும்பாக ஒரு முறை பார்த்தான்.

நல்ல வேளை! கடவுள் இதற்காவது உபயோகப்படுகிறாரே! அதுவரையில் லாபம்தான்! என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.

இந்தச் சின்னஞ்சிறு நிகழ்ச்சி அன்றிரவு தங்கப்பன் வீட்டெதிரே ஒரு பெருங்கூட்டத்தையே கூட வைத்துவிட்டது.

கவிராயர் பக்தியால் தூண்டப்பட்டு ஆவேசத்தோடு கூச்சலிட்டார். அவர் கட்சி ஆட்கள் வெறிபிடித்துக் கூத்தாடினார்கள். செட்டியார் கொடுத்த காசும் அவர்களோடு சேர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தது. இவற்றால் ஏற்பட்ட பலன் தங்கப்பன் உடம்பிலிருந்து ஒருசில எலும்புகள் ஒடிந்து விழுந்ததுதான்! குற்றுயிரும் குலை உயிருமாக அவனை ஆக்கிவிட்டு அந்தக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது.

இந்த நிகழ்சி செய்தியாகி எல்லாத் தமிழ் ஆங்கிலச் செய்தித்தாள்களிலும் நாத்திகம் பேசி நாத்தழும் பேறியவனுக்கு அந்த ஊர் மக்கள் நற்பாடம் கற்பித்தனர் என்ற தலைப்போடு வெளியாகி பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்காவரை பரவியது. அடுத்த நாள் மாலை கவிராயரைத் தேடிச் செட்டியாரே வந்துவிட்டார்.

நம்ம கோவிலுக்கு அதன் மகிமையை விளக்கி நீங்கதான் ஒரு ஸ்தல புராணம் எழுதித் தரணும் என்ற வேண்டுகோளை வினயமாகத் தெரிவித்தார்.

உடலை விட்டுப் பிரிந்த உயிர் எப்படி அந்தரத்தில் ஊசலாடும் என்பது இதுவரைக்கும் எவருக்குமே தெரியாது. ஆனால், அப்போது கவிராயர் அதை உண்மையாகவே அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அன்றிலிருந்து கவிராயர் இரவும் பகலும் அகராதியும் நிகண்டுமாகக் காலங் கழிக்கத் தொடங்கினார்.

ஒவ்வொரு செய்யுளாக இயற்ற இயற்றப் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவ்வப்போதே அரங்கேற்றம் செய்த கவிராயருக்கு அந்தப் புது ஸ்தல புராணம் அச்சாகி வந்ததும் எவ்வளவு இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும்? அப்போது தான் ஈன்ற கன்றை ஆசையோடு நாவால் தடவிக் கொடுத்தார். ஒவ்வொரு செய்யுளிலும் கற்கண்டும் கனிச்சாறும் கலந்து ஓடுவதைப் போலத் தோன்றியது. அவருக்கே அவற்றை எழுதும்போது அவருக்கே புலப்படாத உட்பொருளும் மெய்ப்பொருளும் அவற்றில் பொதிந்து கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தார். கவனிப்பாரற்றுக் கிடந்த அகராதியும் நிகண்டும் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தன!

கவிராயர் தமிழுக்குச் செய்த அரும்பெரும் தொண்டைப் பாராட்டி தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திரிகைகள் எல்லாம் விமரிசனம் செய்தன. அவைகளைப் படித்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சி அவரைத் தன் நிலையில் இருக்க வொட்டாமல் செய்தது. அத்தனை புத்தகங்களையும் அப்படியே எடுத்துப்போய் அந்தக் கருணை வள்ளலின் காலடியில் காணிக்கையாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பட்டு, வேகவேகமாக ஓடினார் செட்டியார் வீட்டை நோக்கி!
உள்ளே செட்டியார் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததால் கவிராயர் வெளியில் நிற்க வேண்டி ஏற்பட்டது.

ஏது, இடிஞ்சு கிடந்த கோவிலைப் புதுப்பிச்சிருக்காப்போலே இருக்கே?

புதுக்குரல்!

கவிராயர் உள்ளத்தில் அந்தக் கேள்விக்குப் பதில் உருவானது. ஏதோ இந்த ஊர்க்காரவுங்களுக்குத்தான் அக்கறையில்லாமே இருக்குது. நாமாவது செய்யலாம் என்றுதான்

அப்படியே அதன் எதிரொலியைச் செட்டியார் வாயிலிருந்து எதிர்பார்த்தார் கவிராயர்.
இல்லை, புதுசா இந்தக் கிராமத்திலே ஒரு இருநூறு வேலி நிலம் வாங்கினேன். இந்தக் காட்டுப்பய ஊருக்கு வந்து போகப் பயமாயிருந்துச்சி. செலவோடு செலவா இதைக் கட்டித் தொலைச்சிட்டா நாலு பேரு வந்து போக இருப்பாங்க. நமக்கும் பயமில்லாமே இருக்கும் என்றுதான்….

டணார் என்று தொடங்கித் தொடர்ந்து ஒலித்தன ஆண்டவன் ஆலயத்திலிருந்து மணியொலிகள்.

கவிராயர் கையிலிருந்த புத்தகங்கள் நழுவிக் கீழே விழுந்தன.

திரும்பி வேகமாக நடந்தார். ஓடினார். பறந்தார்.

அடி தாங்காது உயிர் துறந்த தங்கப்பன் பிணத்தை எரிக்கச் சுடுகாட்டுக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தனர்.

அதன் எதிரில்போய் விழுந்து தங்கப்பா என்று கதறினார் கவிராயர்.

அப்பன் ஆலயத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். தங்கம் அவர் தலையில் கிரீடமாக ஒளிவிட்டது. கோவில் மணிகள் மட்டும் நிதானந் தவறாமல் ஒலித்துக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *