சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்?

ஜுன் 1-15,2021

 

  • சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்?
  • ஆசிரியர் பயிற்சி நிலையங்களும் மூடப்படும் நிலை ஏன்?

முதல் அமைச்சர் உடனடித் தீர்வு காண வேண்டும்!  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளும், ஆசிரியப் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து, இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை முதல் அமைச்சர் காண வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த தமிழ்நாட்டுக் கல்வித் துறை இப்போது பல்வேறு அவலங்களுக்கும் குறைபாடுகளுக்கும் கடும் விமர்சனத்திற்கும் ஆளாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளாக உள்ளவை பல – போதிய அடிக்கட்டுமான வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை – அதன் காரணமாக, பல ஏழைப் பெற்றோர் கள்கூட, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியதால் ஏற்பட்ட மாணவர்கள் போதாமை.

அரசுப் பள்ளிகளை மூடும் நிலை

அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் இல்லாததால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை என்று சில பகுதிகளில் உள்ள கிராமப் பெற்றோர்கள் கூறுவதாக தொலைக்காட்சியில் செய்திக் கோவைகள் வருகின்றன.

அரசின் கல்வித் துறை இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்; ஏற்கெனவே படிக்கும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வசதிகள் – இலவச சைக்கிள், உயர் வகுப்பு மாணவர் களுக்கு மடிக்கணினி, சம்பளமில்லா படிப்புச் சலுகை எல்லாம் வரவேற்கத்தக்கவை என்றாலும், புதிதாக பல ஊர்களில் அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுவதைத் தவிர்த்திட, மாற்றுப் பரிகாரம் செய்ய வேண்டியதும் அவசர அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டவே இதனை எழுதுகிறோம். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பலவும் மூடப்படும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏன்?

தமிழ்நாட்டில் 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 450 தனியார் பள்ளிகள் (ஒரு காலத்தில் வாரிவழங்கியதன் விளைவு இது) உள்ளன.

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித் திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில்  வெற்றி பெற்ற பிறகு டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு   தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். (இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).

இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி – இவற்றை அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும் அரசுகள். இப்போதும் காலந் தாழ்ந்து விடவில்லை.  முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மை வாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப் படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு  செயல் பட்டால் அது பல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும் என்பது உறுதி.

1. இடை நிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடை பெறாதது.

2. பல்வேறு போட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின் பரிதாப நிலை.

இவை காரணமாக இப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டிய கொடுமையான நிலை!

மாணவர் – ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை!

மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால்,  ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும் அதிகம் வாய்ப்பாக அமையும்.

ஆரம்பக் கல்விக்கு அரசுகள் செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச் சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை – ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது.

ஆட்சியாளர் நோய் நாடி, நோய் முதல் நாட முன் வரவேண்டும்.

மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்கு E என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான்.

முதல் அமைச்சர் கவனிப்பாரா?

ஆட்சியாளர் மறவாமல் மற்ற இலவசங்களை  விரிவுபடுத்துவதைவிட பள்ளிகள் மூடப்படாமல்  பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வு காண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா?

கி.வீரமணி
ஆசிரியர்

சென்னை
29.7.2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *