யூதர்களின் நாடான இஸ்ரேலால், பாலஸ் தீனப் பகுதியில் குறிப்பிட்ட சம்பவத்தை ஒரு சாக்காக வைத்து பாலஸ்தீனிய குழந்தைகள், பெண்கள் உள்பட கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். பாலஸ்தீனிய மக்கள் – பெரிதும் மதத்தால் இஸ்லாமியர்கள்.
இதனால் இது ஒரு மதத்தை அடிப்படை யாகக் கொண்டே இந்த இரு நாடுகளின் பிரச்சினைகள் பெருக்கப்பட்டும், சுருக்கப் பட்டும் வருகின்றன.
மதம் மக்களை ஒருபோதும் எங்கும் ஒற்றுமைப்படுத்தாது என்பதை அன்றாட உலக நிகழ்வுகள் தெளிவாக அறிவித்த வண்ணம் உள்ளன.
ஈராக்கில் வாழ்வோர் ஒரு மதத்தவர் என்றாலும், இரு வேறு பிரிவினர்களுக் கிடையே அமைதியின்மை; பயங்கரவாத வெறிச் செயல்களும், கொலைகளும் அங்கு நடைபெறுகின்றன.
உலக நாடுகள் இஸ்ரேலைக் கண்டித்தன; அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்குத் தனித் துணிவை அளித்து வருவது மிகவும் கேடானது; மனிதநேயத்திற்கே முரணானது.
பாலஸ்தீன மக்கள்மீது இஸ்ரேல் புற்று நோயை உண்டாக்கும் ஆபத்தான எறிகுண்டு களை வீசி, அவர்களை அழித்து வருவதை விட மனிதநேயத்திற்கு நேர் எதிரான அறி வியல் காட்டுமிராண்டித்தனம் (‘‘Scientific Primitiveness’’) வேறு உண்டா?
ஆதி சமூகத்தின் தொடக்க காலத்தில் மக்களை ஒன்றுகூட்ட மதம் பயன்பட்டிருக்கக் கூடும்; பிறகு காலம் வளர, வளர, மதப் பிரிவுகளும், பிளவுகளும், சுரண்டல் வியாபாரிகளின் போட்டி வியாபாரத்தால், மிகப்பெரிய சண்டை சச்சரவு, யுத்தங்களுக்குத் தானே வழிவகுத்து, மனிதகுல அழிவுக்கும், ரத்த ஆறுகள் ஓடுவதற்கும் வழிவகை செய்வதாக உள்ளன!
கடந்த 2 நாள்களாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.
மும்பை ஓட்டலில் தொடர் குண்டுவெடிப் புக்கு முழுக் காரணமான காஷ்மீரின் தீவிரவாதியை – ராம் வேதா பிரதாப் வேதிக் சந்தித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் வேறு குரலில் பேசினாலும், அவர்களின் குருபீட மான ஆர்.எஸ்.எஸ். வேதிக் பக்கம் நின்று பச் சையாக ஆதரவு முஷ்டியை உயர்த்தியுள்ளது!
இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
மீண்டும் இங்கே மதக் கலவரங்களுக்குத் திட்டமிட்டு தூபமிடப்படுகிறதோ என்ற அச்சம் வந்த காரணத்தால், நாடாளுமன்றத்தை உலுக்குகிறது.
முந்தைய ஆட்சியில் இப்படி ஒரு சந்திப்பு – திட்டமிட்டு நடத்தப்படாமல், சாதாரணமாக நடந்திருந்தால்கூட, என்ன பாடுபடுத்தியிருப் பார்கள்? பா.ஜ.க.வும், அதன் சுற்றுக் கிரகங்க ளான பரிவாரங்களும் எண்ணிப் பார்க்கட்டும்!
எனவே, மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று வள்ளலார் கூறிய மொழி போன்றவை இருந்தும், அக்கருத்தை ஏற்காமல் வெறும் பூசம் மட்டும் நடத்தி பஜனை பாடினால் போதுமா?
மதம் மக்களுக்கு அபின் என்பது காரல்மார்க்சின் கருத்து!
மதம் மக்களைப் பிரிக்குமே தவிர, ஒன்றாக்காது ஒரு போதும்!
ஆகவே, மதங்களற்ற ஒரு சமுதாயம் மட்டுமே மனித நேயத்தை நிலைக்கச் செய்யும் என்ற தந்தை பெரியாரின் அறிவுரையும், காலத்தால் அழியாத கல்வெட்டு மட்டும் அல்ல, ஞாலம் பின்பற்றவேண்டிய சீலம் – கொள்கை நெறியும் ஆகும்!
– ஊசி மிளகாய்!