ராஜகோபாலாச்சாரி ஆகிறார் ரங்கசாமி

ஜூலை 01-15

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ & இந்தித் திணிப்பு

தமிழ்நாட்டில் எண்ணற்ற தனியார் பள்ளிகள் சமச்சீர் பாடத்திட்டத்திலிருந்து, சி.பி.எஸ்.இ முறைக்கு மாறிக் கொண்டிருப்பதால் தமிழக பள்ளிக் கல்வித் துறையே மாநில அரசின் கைகளிலிருந்து நழுவிப் போகிறது என்பதைக் கடந்த இதழில் விரிவாகப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் புதுவையின் அறிவிப்பு கல்வித் துறையைப் பொறுத்த அளவில் அபாய அறிவிப்பாக அமைந்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை நடைமுறையில் இருந்த தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் மாற்றப்பட்டு, நடப்புக் கல்வி ஆண்டு முதல், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுவையின் முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார். சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தால், மாணவர்களிடத்தில் இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படுவதோடு, தமிழே இனி பாடத்திட்டத்தில் இருக்காது என்ற நிலையை உருவாக்கியுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தித் திணிப்பு என்பது தமிழகக் கல்வி வரலாற்றில் புதிதல்ல. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்வியில் மீண்டும் இந்தி புகுத்தப்படுவதும், அதற்கு மாநிலத்தை ஆளும் தமிழரே துணைபோவதும் தான் வேடிக்கையாக இருக்கிறது. புதுச்சேரியை ஆளும் ரங்கசாமி ராஜகோபாலாச்சாரி போல் செயல்படுகிறார் என புதுச்சேரி மக்கள் குற்றம் சாற்றுகின்றனர். புதுச்சேரியில் உள்ள 572  அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், மத்திய அரசு சார்பில் 3 உறுப்பினர்களுமாக மொத்தம் அய்ந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவானது, தமிழ் வழி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அம்மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும்போது இக்கல்வி முறையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதேபோல், ஆங்கில வழிப் பள்ளிகளில் இவ்வாண்டே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இக்கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஆக, இந்த 572 பள்ளிகளிலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழ் வழியில் நடத்தப்படாமல் ஆங்கிலத்திலேயே நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தைக் கட்டாயமாகவும், இந்தி அல்லது தமிழ் உள்பட ஏதேனும் ஒரு பிராந்திய மொழியை விருப்பப் பாடமாகவும் படிக்கலாம். அதேநேரத்தில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என அறிவித்துள் ளது. இவ்வாறு மேல்வகுப்புகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 1 ஆம் வகுப்பு முதலே இந்தியையே விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் தொடக்கக் கல்வி முதல் தமிழைப்  படிக்காமலேயே உயர்கல்விக்குச் செல்லும் அவலம் ஏற்படும். எனவேதான் இக்கல்வி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், முதல்வர் ரங்கசாமியோ இக்கல்விமுறையை பெற்றோர்கள் விரும்புவதாகப் பேசி வருகிறார்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அரசுப் பள்ளிகளுக்குச் சுதந்திரம் வழங்கினால் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் எ.மு.ராஜன் கூறுகிறார். இதுகுறித்து அரசுக்கு அவர் வழங்கியுள்ள ஆலோசனையில், தில்லியில் மூன்று கல்வி வாரியங்கள் உள்ளன. அதில் எதில் வேண்டுமானாலும் அரசுப் பள்ளிகள் உட்பட எந்தப் பள்ளியும் இணைப்பு பெறச் சுதந்திரம் உண்டு. புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளுக்குத் தற்போது அந்தச் சுதந்திரம் உண்டு. ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் சி.பி.எஸ்.இ. கட்டாயம் என்பது எந்த வகையில் நியாயம்? எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாயம் என்கிற பகுதியை மட்டும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் இத்திட்டத்தில் சேர முடிவு எடுக்கும் பொறுப்பை விட்டுவிட்டால் எல்லாக் குழப்பங்களும் தானாகத் தீர்ந்துவிடும்.

அரசு பள்ளிகளும் இத்திட்டத்தில் சேர சுதந்திரம் கொடுக்கலாம். புதுவை மாநிலத்தில் 572 அரசுப் பள்ளிகளில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக புதுச்சேரி பகுதியில் 5 வட்டங்கள் காரைக்கால், மாஹ, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஒரு ரோஸ்டர் மூலமாக 2 பள்ளிகளுக்கு 1 பள்ளி எனும் அடிப்படையில் இத்திட்டத்தை அறிமுகம் செய்யலாம். அப்போது 286 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ திட்டமும், 286 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டமும் செயல்படும். இப்பள்ளிகள் அடுத்தடுத்து உள்ளதால், எந்தப் பாதிப்பும் இல்லாமல் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர விரும்பும் பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ நடைமுறையில் உள்ள 286 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ எதிர்பார்க்கும் உள்கட்டமைப்பு வசதிகளை எளிதாச் செய்து கொள்ளலாம். தற்போதுள்ள ஆசிரியர்களில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை அப்பள்ளிகளுக்கு மாற்றம் செய்யலாம். அவற்றைக் கண்காணிக்கும் வேலையும் எளிதாகி விடும். சி.பி.எஸ்.இ திட்டம் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளையும் அதன் கீழ் கொண்டு வரலாம். கல்விச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைப்பார்கள். மகிழ்ச்சியோடு இத்திட்டத்தை வரவேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ முறைக்கு ஆசிரியர்களைத் தயார்படுத்துவதற்கென்று ஒரு குழுவை புதுவை அரசு அமைத்துள்ளது. அக்குழுவினர் வேறு ஒரு பிரச்சினையை கவனத்துக்குக் கொண்டு வருகின்றனர். புதுவைக்கென்று சில சிக்கல்கள் இருக்கின்றன. அதைச் சரிசெய்யும் முயற்சியாகவே சி.பி.எஸ்.இ. கல்வி முறையை அரசு கொண்டுவர முனைகிறது. புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் தமிழ்நாட்டையொட்டியுள்ளவை.

தமிழ்நாட்டின் பண்பாட்டோடு இணைந்தவை. அதேநேரம் மாஹி மலையாள மொழி பேசும் மக்களையும், ஏனாம் தெலுங்கு மொழி பேசும் மக்களையும் கொண்டது. எனவே அவை முறையே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பாடத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. ஆனால் மேல்படிப்புகளுக்குச் செல்லும்போது, அனைத்து மதிப்பெண்களையும் சரி செய்து போடுவதிலும், அவற்றுக்குள் விகிதாச்சாரம் பேணுவதிலும் ஏற்படும் நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்கவும், புதுவை மாநிலம் முழுக்க ஒரே சீரான  கல்வித் திட்டத்தை அமல்படுத்தவுமே முதல்வர் இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதைவிட வேறு வழி இல்லை. இதில் புதுவை, காரைக்கால் பகுதிகளுக்குத் தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவிப்பதாக முதல்வரும் உறுதியளித்துள்ளார். எனவே தாய்மொழி படிக்காமல் போய்விடுவார்கள் என்ற கவலை அவசியமில்லை என்கிறார்கள்.

ஆனால், பிரச்சினை தாய்மொழி படிப்பதில் மட்டுமில்லை. ஒரு வேளை சி.பி.எஸ்.இ.யில் சிறப்பு அனுமதி பெற்று அவரவர் தாய்மொழியைக் கட்டாயம் என்று ஆக்கினாலும், தாய்மொழிவழிக்கல்வி (மீடியம்) பயிலும் வாய்ப்பையே இத்திட்டம் அடியோடு மறுக்கிறது. ஆறாம் வகுப்புக்கு மேல் இந்தி கட்டாயம் என்றால் பெற்றோர் தொடக்கம் முதலே இந்தியைத்தான் விரும்புவார்கள். ஆங்கிலப்பாடமாகவே இருந்தாலும், அதில் பண்பாட்டு அடையாளங்களையும், கருத்துகளையும், பகுதிகளையும் கொண்ட மாநிலப் பாடத்திட்டங்களிலிருந்து வட நாட்டுப் பண்பாட்டையும், பெயர்களையுமே கொண்ட பாடத்திட்டம் மாணவர்களிட மிருந்து அந்நியப்பட்டு நிற்கும். சமச்சீர் கல்வித் திட்டத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பாடமாக இடம்பெற்றது. வரலாற்றுப் பாடத்தில் அப்பகுதி மக்களின் வரலாறு குறைந்தளவு கூட இருக்காது. இதற்கெல்லாம் என்ன தீர்வு, மறுமொழி வைத்திருக்கிறது புதுவை அரசு. எந்தப் பதிலும் இல்லை என்பதுதான் நாம் அணுகியவரை தெரிந்த செய்தி.

பல்வேறு பாடத்திட்டங்கள் கொண்ட நம் நாட்டில், அனைத்துப் பாடத்திட்டங்களின் மதிப்பெண்ணுக்கும் விகிதம் நிர்ணயித்துத் தான் தேசிய அளவிலான கல்லூரி இடங்கள் நிரப்பப்படுகின்றன. மாநிலத்தின் கட்டுப் பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களும், மற்ற மாநில மாணவர்களுக்கு இடம் ஒதுக்கும் போது கணக்கீடுகள் வைத்துத்தான் ஒதுக்குகின்றன. அது ஒரு பெரிய சிக்கலாக இருக்க முடியாது. ஆனால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தக் கல்வியையும் மத்திய அரசிடம் கொண்டுபோய் அடகு வைப்பதும், அதன் மூலம் இந்தி நுழைய அகலக் கால்வாய் வெட்டுவதும், மாநில உரிமையைப் பலிகொடுப்பதும் சரியா என்னும் கேள்வியைத் தான் அறிவோர் எழுப்புகின்றனர். புதுவையை வைத்துப் பார்த்தால் குறைந்தபட்சம் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் பறிக்கப்பட்ட நிலைதான் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும்!

தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்பதையும், சமச்சீர் கல்வி, அருகமைப் பள்ளி, பொதுப் பள்ளி போன்றவைதான் சரியான, முறையான, நேர்மையான கல்வியை மக்களுக்கு வழங்கமுடியும் என்பதையும் உலகளவிலான கல்வியாளர்கள் முதல் இந்திய, தமிழகக் கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் வரை அனைவரும் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு முற்றிலும் மாறான திசையில் அரசுகளும், பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் பயணிப்பதை எப்படிப் பார்ப்பது? –

– இளந்திரையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *