பொதுத்துறை அரசு வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா?

ஜூன் 16-30

முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்து இயங்கிய நிலையில், நாயக் கமிட்டி என்ற ஒரு குழுவை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிலைப்பாடு, செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்கு அமைத்தது. அதன் அறிக்கை வெளியானது; அதில் சிகிச்சை என்பது நோயைவிடக் கொடுமையானது என்பது போல் பரிந்துரைகள் பெரிதும் அமைந்துள்ளன.

அதைப்பற்றி மிகவும் விரிவாக விளக்க வேண்டியதில்லை; தற்போது நாட்டுடைமையாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளை, மீண்டும் தனியார் மயமாக்கி, தனியார் வங்கிகளாக்கிடவே அதற்கு ஒரு முன்னோடித் திட்டம் போல அமைந்துள்ளது!

1971இல் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராகி முன்பு தனியார் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கி மிகப் பெரிய புரட்சிகரமான முடிவை எடுத்தார்.

அதன் விளைவு நாட்டின் அடிக்கட்டுமானம் (Infrastructure) மிகவும் பரவலாக வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்பட்டது.

ஒரு நாட்டு வளர்ச்சி பொருளாதாரத் துறையில் ஏற்பட வேண்டுமானால், வாணிபமும், தொழிலும் வளர்ச்சி பெற வேண்டும்.

அதற்கு மக்களிடையே வங்கிப் பழக்கம் (Banking Habit) பெருகிட வேண்டும்.

சுமார் 120 கோடி மக்களுக்கு மேல் உள்ள நமது நாட்டில், அதிலும் 70 விழுக்காட்டினர், கிராமங்களில் வாழும் நிலையில் 51.2 லட்சம் கிராமங்களில் வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் அதில் பணப் புழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், விவசாயிகள்கூட தங்களது விவசாயம் பெருக வங்கிக் கடன் முதலியவைகளைப்  (நபார்டு வங்கி ஓர் உதாரணம்) பயன்படுத்தி முன்னேறும் நிலை உள்ளது.

அத்தகைய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இப்படி மீண்டும், பழைய கருப்பனாக்குவதுபோல, தனியார் மயமாக்கினால் அது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் ஆகும்!

தற்போதுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தொண்டு _ பணி- என்பது வெறும் லாப நோக்கத்தை மட்டும் பாராமல், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குச் சேவை என்ற அளவில் செய்கைகள் தனியார் மயமாக்கப்பட பரிந்துரை செய்வதில் முழு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

லாபம் பெறுவதாகத்தான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. அப்படி நட்டம் வருவதாக வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், மக்களுக்கு சேவை என்பதில் வெறும் வியாபார லாப நட்ட நோக்கு மட்டும் தானா?

பொது அமைப்புகளை அரசு நடத்துகையில் (Public Utility Undertakings) அதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது வாய்ப்பற்றவர்களுக்குக் கிடைக்கும் சேவையின் மதிப்பு (Value of Service); அதை விடுத்து அதன் செலவு (Cost of Service) மட்டும் கணக்கிட்டுப் பார்ப்பது தனியார் கொள்ளை லாப வியாபார நோக்கம் ஆகும்.

இதை உரிமையுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம்தான் மக்கள் எதிர்பார்க்க முடியும் _ உரிமையுடன் கேட்க முடியும்.

இதைத் தனியாரிடம் கேட்க முடியாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தற்போது போதிய மூலதனம் இல்லை (Financial Adequacy)என்ற கருத்து ஒரு சாக்குப் போக்கே தவிர, ஒரு நாயைக் கல்லால் அடிப்பதற்கு முன் அதற்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று பட்டம் சூட்டுவதுபோன்ற ஒரு திட்டமிட்ட செய லாகும். தற்போதுள்ள மூலதனம்பற்றி பெரும் அளவில் பஞ்சமோ, பற்றாக்குறையோ இல்லை என்பதோடு, ரிசர்வ் ஃபண்டு போன்றவைகளும் உள்ளனவே!

அமெரிக்காவில் முன்பு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதே அவை அரசு வங்கிகளாலா? தனியார் வங்கிகளாலா?

அது மட்டுமா? விஜயா பேங்க், ஆந்திரா பேங்க் போன்ற சிறிய வங்கிகள்கூட பொதுத்துறை வங்கிகளோடு இணைந்துள்ளனவே, அதனால் லாபமா? நட்டமா?
ஆகாத மனைவி கை பட்டாலும் குற்றம்; கால் பட்டாலும் குற்றம் என்ற பழமொழி போல், இப்படி முன் கூட்டியே முடிவு செய்து தனியாருக்கு, பெரு முதலாளிகளுக்குக் கதவு திறக்க இப்படி ஒரு பரிந்துரையா?

பொருளாதாரக் கண்ணோட்டம் ஒருபுறம் இருந்தாலும், சமூகநீதி அடிப்படையில் பொதுத்துறை வங்கிகள் வந்த பிறகுதான் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், தனியார்மயமாக்கப் பட்டால் நிச்சயம்  இடஒதுக்கீடு ஒழிக்கப்படும்;

அதையும் மனதிற் கொண்டே இப்படி ஒரு உயர் (ஜாதி) வர்க்கத்தினரின் சூழ்ச்சித் திட்டமாக இப்படி ஒன்று நாயக் கமிட்டி அறிக்கை மூலம் உருவாகி உள்ளது. இதை வன்மையாக எதிர்க்கிறோம்.

இதனை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் போர்க் கொடி தூக்கியிருப்பது 100-க்கு 100 சரியானது; அதனை நாம் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம்.

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்க்கவும், தேவைப்பட்டால் கிளர்ச்சிகளில் கூட இறங்கவும் நாம் தயங்க மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

பொருளாதாரக் கொள்கையில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் அரசின் அதே கொள்கையை  நரேந்திரமோடியின் பா.ஜ.க. அரசும் செய்தால், அது பழைய கள், புது மொந்தை என்றே ஆகிவிடும். நாயக் கமிட்டி அறிக்கையை அலமாரியில் வைத்துப் பூட்டுங்கள் என்றே புதிய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.

 

– கி.வீரமணி,
ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *