தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு பல முறை உடைமாற்றுவதும், அந்தந்த பகுதிக்கேற்ற தொப்பிகள், உடைகள், வண்ணங்கள் பூசிக் கொண்டு தோன்றி, அடிப்படையே இல்லாத உணர்ச்சிப்பூர்வ வசனங்களாகப் பேசி வென்றுவிட்ட மோடியின் நாடகம் அடுத்த காட்சிக்குச் சென்றுள்ளது. காட்சியின் திரைவிலகியதும், நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார் ராஜபார்ட் மோடி. முதல் அடி வைப்பதற்குள் கீழே விழுகிறார். ஏதும் சறுக்கிவிட்டதா என்று எல்லோரும் பதற்றத்துடன் பார்க்க, நாடாளுமன்றப் படிகளை விழுந்து வணங்குகிறார் மோடி. அத்தனை கேமராக்களும் சுற்றி சுற்றிப் படமெடுக்க, அவற்றின் பிளாஷ் ஒளியில் காட்சி முடிந்து, நாடாளுமன்ற மைய மண்டபத்துக்குள் தொடர்கிறது அடுத்த காட்சி. கண்ணீரும் கம்பலையுமாக மோடி தொடங்கிய நாடகத்தில் வாழ்ந்து கெட்ட துணை கதாபாத்திரமான அத்வானியும் சேர்ந்து கொள்ள 1960 களில் அழுவாச்சி படம் பார்த்த எபெக்டில் ஒட்டுமொத்த இந்தியாவும் கைக்குட்டை தேடுகிறது.
இது ஒருபுறம் என்றால், பக்கத்து செட் நாடகத்தில் ராஜபார்ட்டான ராஜபக்சேவுக்கு, மோடி விடுத்த அழைப்பிற்கு தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு கிளம்ப, நாங்கள் விடுத்த அழைப்பு நெய்யில் பொறித்தது என்று விளக்கம் கொடுத்தார் பா.ஜ.க.வின் ஒரே தமிழ்நாட்டு எம்.பி. நாடகத்த்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து பேர் வாங்க வேண்டும் என்ற துடிப்பு ராஜபக்சேவுக்கு இருக்காதா? உடனடியாக சிறையில் உள்ள இந்திய மீனவர்களையெல்லாம் விடுதலை செய்யப் போவதாக அவரும் அறிவித்துள்ளார். அதற்காக ஓநாய் சைவமாகிவிட்டது என்று பொருளல்ல. அப்புறம் அடுத்த முறை இந்தியா வரும்போது நல்லெண்ணத்துக்காக விடுவிக்க ஆள் வேண்டுமே! மீண்டும் கைதுகள் நடக்கும்; துப்பாக்கிச் சூடுகள் நடக்கும். கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்படலாம். ஆனால், கொன்றவர்களை என்ன செய்வார்? சொல்லமுடியாது சூப்பர்மேனாக கேதர்நாத்தில் குஜராத்திகளை மட்டும் மோடி காப்பாற்றிய காட்சி போல், சிங்களர்களால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களை மட்டும் சாவித்திரியாக வேடமேற்று மீட்டுவந்தாலும் வரலாம். யார்கண்டா? இந்த அய்ந்தாண்டில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேற இருக்கின்றவோ?