திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்திய ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலிலிருந்து சில முக்கியப் பகுதிகள் அவரது 200ஆம் பிறந்த நாளையொட்டி (7.05.2014) இங்கே…
இந்தியும், வங்காளமும், பிற கௌரிய இனமொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து நேரிடையாகத் தோன்றியதைப் போலவே, திராவிட மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழிகளே என்று கூறும் அப் பிறப்பியல்முறைக் கருத்து மட்டும் உறுதியாகப் பிழைபட்டதேயாம். (1) அக்கொள்கை, திராவிடத்தில் காணலாம். சமஸ்கிருதத் தன்மைகளைக் காட்டிலும், சமஸ்கிருதப் புறத்தன்மைகளே நனிமிக அதிகமாம் என்ற உண்மையைப் புறக்கணிப்பதாகும்.
(2) அக்கருத்து, திராவிட மொழிகளின் இடப்பெயர்களும், எண்ணுப் பெயர்களும், பெயர்வினைகளின் சொல்லாக்கங்களும், வாக்கிய அமைப்பு முறைகளும், சுருங்கச் சொன்னால், ஒரு மொழியின் உயிர் நாடியென மதிக்கத்தகும் அத்துணை இயல்புகளும், சமஸ்கிருத மொழியியல்புகளோடு, அடிப்படையிலேயே அறவே வேறுபடுகின்றன என்ற இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த உண்மைகளையும் புறக்கணிப்பதாகும்.
(3) சமஸ்கிருதத்திலிருந்தே திராவிடம் வந்தது என்ற கருத்துடையராய கீழ்நாட்டு மொழி நூல் வல்லுநர், திராவிட மொழி நிகண்டுகள் அனைத்தும், எண்ணித் தொலயாச் சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஒன்றையே தமக்குச் சார்பாகக் கொண்டுள்ளனர். ஆனால், அச்சொற்கள் திராவிட மொழிப் புலவர்களால், தனித் திராவிடச் சொற்களாக என்றும் மதிக்கப் பெற்றதில்லை.
மாறாகச் சமஸ்கிருதச் சொற்களாகவே மதித்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன; அவை அடைந்திருக்கும் திராவிடத் தன்மையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்பவும், அவை திராவிடச் சொற்களாகத் திரியத் துணைபுரிந்த இடைநிலைகளின் தகுதிகளுக்கு ஏற்பவுமே வரிசை செய்யப்படுகின்றன என்ற உண்மைகளையும், அந்தோ அவர்கள் அறிந்திலர். தென்னிந்திய மொழிகளில் மிகப் பெரும் அளவில் இடம்பெறும் திராவிடச் சொற்கள், அம்மொழி இலக்கண ஆசிரியர்களால், மேலே கூறிய சமஸ்கிருதத் தன்மை வாய்ந்த வேற்று மொழிச் சொற்களிலிருந்து வேறாக உணரப்பட்டு தூய சொற்கள், இயற்சொற்கள் என்பன போலும் பெயர் சூட்டிச் சிறப்பிக்கப் பெறுகின்றன என்ற உண்மையையும், அந்தோ! அவர்கள் அறிந்திலர்.
திராவிட மொழிகளில் வந்து வழங்கும் சமஸ்கிருதச் சொற்களைப் பழந்திராவிட வேர்ச்சொற்களிலிருந்து வேறு பிரித்தறிவதில், பொதுவாக எவ்வித இடர்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஒரு சொல், திராவிடச் சொல்லா, சமஸ்கிருதச் சொல்லா என்று துணிந்து கூற முடியாத நிலையில் உள்ள சொற்கள் ஒரு சிலவே. நீர் (கண்ணீர்) மீன் என்ற இவ்விரு சொற்களையும் தனித் தமிழ்ச் சொற்களாகவே நான் கருதுகின்றேன். ஆனால், இவற்றைத் தம் மொழிக்கே உரிய தனி உடைமைகளாம் என அவ்விரு மொழிகளுமே வாதிடுகின்றன.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் வரும் இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த அறுபது சொற்களின் ஒப்பீட்டுப் பட்டியல்
(4) திராவிட மொழிகளைச் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழை நாட்டு மொழிநூல் அறிஞர்கள், சமஸ்கிருதச் சொற்கள், எங்கே அருகி இடம்பெறுவதல்லது, பொதுவாக, அறவே இடம் பெறாதனவாய திருந்தாத் திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர் சமஸ்கிருதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள் தாமும் அச்சொற்களை, ஆடம்பரப் பொருளாகவும், அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது, மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை யாதலின், அவற்றை அறவே அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தத்தம் தனிநிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு, சமஸ்கிருதச் சொற்களை அளவிற்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன; அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின், தன்னுடைய சமஸ்கிருதக் கலவைகளைக் கைவிடுவது தெலுங்கு மொழிக்கு, இப்பொழுது அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனிலும் அரிதாம்; மலையாளத்திற்கு, அவை எல்லாவற்றைக் காட்டிலும் அரிதாம்.
அவற்றின் இயல்பு அதுவேயாயினும், திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.
* * *
வடஇந்திய மொழிகள், திராவிட மொழிகளோடு ஒருமைப் பாடுற்றிருக்கும் சிறப்பியல்புகள் கீழ்வருவன:
1. உருபேலாப் பெயரடிகளோடு வேற்றுமை உருபுகள் போலும் பின் இணைச் சொல்லாக்க உருபுகளை இணைத்துப் பெயர்களை வேறுபடுத்துவது
2. பன்மைப் பெயர்களை வேற்றுமைப்படுத்த, அப்பெயர்களின் பன்மையுணர்த்தும் சொல்லுருபுகளை அடுத்து ஒருமைப் பெயர்களை வேற்றுமைப் படுத்த, புணர்த்திய வேற்றுமையுருபுகளையே புணர்த்துவது
3. படர்க்கைப் பெயரை உள்ளடக்கி உணர்த்துவதும், நீக்கி உணர்த்துவதுமாய், தன்மைப் பன்மை இடப்பெயர்கள் இரண்டைப் பெற்றிருத்தல்
4. முன் இணைகளுக்குப் பதிலாக பின் இணைகளை ஆளுதல்
5. எச்சவினைகளின் துணையால் வினைகளின் காலங்களைத் தோற்றுவித்தல்
6. தொடர் வாக்கியங்களை முற்றுவினைகளின் முன் வைத்தல்
7. முடிக்க வரும் சொல்லையடுத்து, முடியும் சொல்லை நிறுத்தி முடித்தல் மேலே கூறிய இவ்விளக்கங்களில், வட இந்திய மொழிகள், திராவிட மொழிகளை அய்யமற ஒத்துள்ளன. ஆனால், இவைபோலும் பொது நிலையான ஒருமைப்பாடுகளால் பெறலாகும் முடிவு, கீழ்வரும் காரணங்களால் பெரிதும் தகர்ந்து விடுகிறது.
1. அம்மொழிகள், அதே இயல்புகளில், அதே அளவில், சித்திய இனத்தைச் சேர்ந்த பிறமொழிகள் பலவற்றோடும் ஒத்துள்ளன.
2. துருக்கி அல்லது மங்கோலிய மொழிகளோடு, திராவிட மொழி கொண்டிருக்கும் வேறுபாடு எதுவும் நான் அறிந்த வரையில் வட இந்திய மொழிகளில் கண்டுபிடிக்கப்பட்டிலது. உதாரணமாக, கோண்ட் ஒன்று நீங்க ஏனைய திராவிட மொழிகள் அனைத்திலும், தொடர்புணர்த்தி இணைக்கும் சுட்டுப் பெயர்களுக்குப் பதிலாகப் பெயரெச்சப் பெயரடைகளை ஆளும் நிகழ்ச்சியின் அடிச்சுவடே அம்மொழிகளில் இல்லை.
3. திராவிட மொழிகளின் எதிர்மறை வினைகளையும் அவை இழந்துள்ளன
4. திராவிடச் சுட்டுப் பெயர், எண்ணுப் பெயர்களில் எதையும் அவை பெற்றில; பெகிஸ்தன் இடத்துக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளனவற்றையும் அவை பெற்றில; ஒஸ்தியாக் மொழி, சீன மொழி, இலாப்பியர் மொழி போலும் தொலை நாட்டு மொழிகள் பெற்றிருப்பனவற்றையும் அவை பெற்றிருக்கவில்லை.
5. வடஇந்திய மொழிகளில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதப் புறமொழி மூலங்கள், திராவிட மூலங்களேயாயின் அம்மொழிகளின் சொற்கோவையில் தலை, கால், கண், காது என்பன போலும் திராவிட மொழியின் இன்றியமையா மூலங்கள் சிலவற்றையாவது எதிர்பார்த்தல் வேண்டும்; ஆனால், இவ்வகைப் பொருள்களைக் குறிக்கும் அம்மொழிச் சொற்களிடையே, எத்தகைய ஒருமைப்பாட்டையும் கண்டிலேன். இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த மூலச் சொற்களின் ஒருமைப்பாடும், சிறப்பாக இலக்கண அமைப்பு முறைகள் அளிக்கும் ஒருமைப்பாடும் இல்லாத நிலையில், சான்றாக ஏற்றுக் கொள்ளத்தகாத, அன்றாட ஆட்சிக்கு உதவாது அருகிவரும் சில சொற்கள் அளிக்கும் ஒருமைப்பாடுகளே காட்டப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப் பட்டுள்ள தன்மை ஒருமை இடப்பெயர்கள், முன்னிலையொருமை இடப்பெயர்களின் பட்டியல்களிலிருந்து, மொழிக்கு இன்றியமையா மூலச் சொற்களில் திராவிட மொழிகளுக்கும், வட இந்திய மொழிகளுக்கும் இடையில் நிலவும் மிகப்பெரிய வேறுபாடும், திராவிட மொழிச் சொற்களிடையே நிலவும் சிறப்புடைய ஒருமைப்பாடும் நிலைநாட்டப்படும். ஓர் இடப்பெயரின் ஒரு வடிவம் எழுவாயில் வெளிப்பட, ஒரு வடிவம் வேற்றுமை ஏலா நிலையில் வெளிப்படும்; மற்றொன்று சாரியை ஏற்புவழி வெளிப்பட்டு நிற்கும்.
* * *
திராவிட இனத்தைச் சேர்ந்த மொழிகளில், அவற்றின் தொன்மை நிலையைத் தெளிவுற உணர்த்தும் மொழி எது?
செந்தமிழ் என்று பெயரிட்டு அழைக்கப்பெறும் தமிழ் மொழியின் இலக்கியத் தமிழ், திராவிடப் பழங்குடியினர் வழங்கிய தொன்மொழியின் நிலையினைத் தெளிவுற உணர்த்துகிறது என்று சிலர் கருதுகின்றனர் செந்தமிழின் பெருமதிப்பைக் குறைத்துக் கூறாமலே, திராவிட மொழியின் தொன்மை நிலையைத் தெளிவுறக் காட்டும் கண்ணாடியாம் தனித்தகுதி, தனி எம்மொழிக்கும் இல்லை என்றே தான் கருதுகின்றேன். இன்று வழக்கிலிருக்கும் அனைத்து மொழிகளின் ஒப்பீட்டு ஆராய்ச்சியே, அம்மொழிகள் தோன்றத் துணைபுரிந்த திராவிடத் தொன்மொழி வழக்கின் நிலையை உணர்த்தவல்ல, நனி மிகச் சிறந்த வழித்துணையாகும். செந்தமிழே அல்லாமல், திருந்தாமொழிகள் உட்பட, இன்று இருக்கும் அவ்வின ஒவ்வொரு மொழியும், இம் முயற்சியில் தத்தம் துணையினை அளிப்பது முக்காலும் உண்மை. பழங் கன்னட மொழியின் துணையில்லாமல் தமிழ் மொழியின் தன்மை முன்னிலை இடப்பெயர்களின் இயல்பினை உணர்ந்து கொள்வது இயலாது. தன்மொழியின் இலக்கண விதிமுறைகளை ஒரு சில ஆண்டிற்கு முன்னரே எழுத்துருவில் வகுத்துக் கொண்ட குறையுடையதும், திருந்தா மொழியின் படர்க்கை இடப்பெயரின் ஆண்பால் பெண்பால் விகுதிகள் பற்றிய விளக்கத்தை அளித்துத் துணை புரிகிறது என்றாலும், திராவிட மொழியின் தொன்மை நிலையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இது, திராவிட மொழிகள் அனைத்திலும், அது நனிமிகப் பழங்காலத்திலேயே நாகரிக நிலை, பெற்றுவிட்டதன் விளைவாகும்.
தெலுங்கின் பெரும்பாலான வேர்ச்சொற்களும், சொல்லுருவங்களும், தமிழ்ச் சொற்களின் சிதைவுகளே, அத்தமிழ்ச் சொற்களிலிருந்து தோன்றியனவே என்ற மொழியுண்மை தமிழ்ச் சொற்களின் பழமையை மறுக்க முடியாதவாறு நிலைநாட்ட வல்லதாம். இதற்கு எடுத்துக்காட்டாக, தெலுங்கு மொழிச் சுட்டுப் பெயர்களில் நிகழும், உயிரெழுத்துக்களின் இடம் மாற்றம் என்பதை மட்டும் சுட்டிச் செல்கின்றேன். திராவிட மொழிச் சுட்டுப் பெயர்களின் உண்மையான மூலம், அண்மையாயின் இ கரமும், சேய்மையாயின் அ கரமுமாம். இவற்றோடு ஈற்றில் பால் உணர்த்தும் விகுதிகளும், அவ்விரண்டனுக்கும் இடையில் வகர உடம்படு மெய்யும் இணைக்கப் பெறும். இம்முறையால் தமிழ்ச் சுட்டுப் பெயர்கள் அவன், இவன் என்பன தோன்றின. தமிழ் அன் விகுதிக்கு இணையான தெலுங்கு விகுதி டு, உடு அல்லது அடு என்பனவாம். ஆகவே, அத்தெலுங்குச் சுட்டுப் பெயராக அவன், இவன், என்பனவற்றிற்கு ஈடாக, அவடு, இவடு என்பனவே வருதல் வேண்டும்; ஆனால், மாறாக வாடு, வீடு என்பனவே வந்துள்ளன. இச்சொற்களில், சுட்டு மூலங்களாகிய அகரமும், இ கரமும், தமக்குரிய இடமாகிய மொழி முதலிலிருந்து இடம் பெயர்ந்து, மொழியிடையே சென்றுவிட்டன. ஆகவே சிதைந்து, வேறுபட்ட இத்தெலுங்குச் சொல்லுருவங்கள், பிற்பட்டனவே ஆதல் வேண்டும். ஆனால், தெலுங்கின் இலக்கிய நடை இச்சொல்லுருவங்களை யல்லது வேறு சொல்லுருவங்களைப் பெறவில்லையாகவே, இலக்கியங்கள் துணை செய்ய, எழுத்துருவ விதிகளால் தெலுங்கு இலக்கணம் உருவாக்கப்பெற்ற காலம், இச்சொல்லுருவங்கள் சிதைந்து உருப்பெற்ற காலம், இச்சொல்லுருவங்கள் சிதைந்து உருப்பெற்ற காலத்திற்குப் பிற்பட்டதேயாம்; ஆகவே அக்காலம், தமிழ் இலக்கிய நாகரிகத் தோற்றக் காலத்திற்கு நனிமிகப் பிற்பட்டதாகும் என்க.
தமிழில் வந்து வழங்கும் சமஸ்கிருதத் தத்துவச் சொற்களை மிகவும் உருமாற்றி வழங்குவது, அத்தமிழின் தொன்மைக்குப் பிறிதொரு சான்றாகும்.
தமிழில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்கள், கால வேறுபாட்டால் முப்பிரிவுகளாகப் பிரிக்கப்பெறும்.
1. காலத்தால் மிக மிகப் பிற்பட்ட சமஸ்கிருதச் சொற்கள், ஆகம நெறியை அடிப்படையாகக் கொண்ட சைவ சித்தாந்த சமய ஆசிரியர்களும், அத்வைத நெறி நிற்கும் சங்கர ஆச்சாரியரும் இவ்விரு சமயங்களுக்கும் பகையாகிய வைஷ்ணவ நெறி நிற்கும் இராமானுஜரும் நுழைந்தன ஆகும். இவர்களின் சமயத் தொண்டும் செல்வாக்கும் இடம்பெற்ற காலம், கி.பி.பதினோராம் நூற்றாண்டிற்கும் பதினாறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்; அவர்கள் வழங்கிய அவ்வட சொற்கள் சிறிதும் சிதையாத தூய சமஸ்கிருதச் சொற்களாகவே காட்சி அளித்தன.
2. மேலே கூறிய இந்து சமய ஆசிரியர்களுக்கு முன்பு, அளவிறந்த சமஸ்கிருதச் சொற்களைத் தமிழில் நுழைத்தவர் சமண சமய ஆசிரியர்களாவர். அறிவுத் துறையிலும் ஆராய்ச்சித் துறையிலும் சமண சமயத்தவரின் ஆட்சி ஓங்கியிருந்த அக்காலம், தமிழ் இலக்கிய வளர்ச்சியின் பொற்காலமாகும். மதுரையில் கடைச்சங்கம் திகழ்ந்ததும் குறளும், சிந்தாமணியும் மற்றும் பிற சங்க இலக்கியங்களும், செந்தமிழ் இலக்கணமும் உருப்பெற்றதும் அக்காலத்திலேயே. அக்காலத்திய தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற சமஸ்கிருதச் சொற்கள், தமிழ் ஒலி முறைக்கு ஏற்பப் பெரும் அளவில் மாற்றப்பட்டன. சமஸ்கிருத லோக, உலகு என்றும், சமஸ்கிருத ராஜா, அரசு என்றும் மாற்றப்பட்டன.
அக்காலத்தில் தமிழில் இடம் பெற்ற சமஸ்கிருதச் சொற்கள், தமிழ் மொழியின் ஒலிமுறைகளை ஒட்டி அடைந்திருக்கும் மாறுதல்களுக்கு ஏற்ப. தத்சமம், தத்பவம் என இருவகையாகப் பிரிக்கப்படும் தத்சம வகையைச் சேர்ந்த சமஸ்கிருதச் சொற்கள், ஒரு சிறு மாற்றமும் பெறாமல், சமஸ்கிருத மொழி வடிவாகவே விளங்கும்; இந்து சமயம் செல்வாக்கால், சமஸ்கிருத நெடுங்கணக்கு முறையும், சமஸ்கிருத ஒலிமுறையும் தமிழ்நாட்டில் ஆட்சி புரியத் தொடங்கிய காலத்தில், பிராமணர்களால் நுழைக்கப்பட்டன அச்சொற்கள், தமிழ் நாட்டின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவும், தமிழ் மொழியின் ஒலி முறைக்கு ஏற்பவும் பெரிதும் வேறுபட்டனவாம்.
* * *
சூத்ர என்ற சொல்லின் ஆட்சி
திராவிட, கௌரிய இனத்தவர் அனைவரும் உள்ளிட்ட இன்றைய இந்தியர்களுள் பெரும்பகுதியினரைக் குறிக்கும் பொதுப் பெயராக வழங்கப் பெறும், சூத்ர என்ற சொல், பண்டு சிந்து நதிக்கரையில் வாழ்ந்திருந்த பழங்குடிமக்களை மட்டுமே குறிக்க வழங்கியதாகத் தெரிகிறது. திருவாளர் வாசன் அவர்கள், அச்சொல் சிந்து நதியின் முடிவிட நகரைக் குறிக்கும் சித்ரொஸ் என்ற பெயரிலிருந்தோ, குறிப்பாக, சுத்ரொகி என்ற இனப் பெயரிலிருந்தோ பிறந்திருத்தல் கூடும் என்று கருதுவர். ஹிப்ஹீரர், நிஷாதர்களைப் போலவே, சூத்ரர்களும் கருநிற மேனியும், நீண்ட தலைமயிரும் வாய்ந்த ஒரு பழங்குடியினராவர் என்றும், ஆரியர்களால் வென்று அடிமையாக்கப்பட்ட வரேயல்லது, அவ்வாரிய இனத்தின் ஒரு கிளையினர் அல்லர் என்றும், ஆரியரால் அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்ட முதல் பழங்குடியினர் சூத்ரரேயாதலின் சூத்ரா என்ற அப்பெயர், காலப் போக்கில் அவ்வாரியரால் வென்று அடக்கப்பட்ட, நடுநாடுகளில் வாழ்ந்திருந்த ஏனைய பழங்குடியினர்க்கும் இட்டு வழங்கப்பெறலாயிற்று என்றும் அவர் கருதுவார். சூத்ர என்ற சொல் பிறந்த வரலாறு யாதே யாயினும், காலம் செல்லச் செல்ல, தஸ்யூ, மிலேச்சர் என்ற சொற்கள், ஆரியர்க்கு அடங்காது வாழ்ந்த பழங்குடியினரைக் குறிப்பனவாக, சூத்ர என்ற இச்சொல், ஆரியரால் அடிமை நிலைக்குத் துரத்தப்பட்ட இனத்தவர் அனைவரையும் குறிக்கலாயிற்று என்பதில் சிறிதும் அய்யமில்லை.
இப்பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுள் பெரும்பாலானவர், சூத்ரர்களும் காலப்போக்கில் சூத்ரர் என்ற பெயரிட்டு அழைக்கப்பெற்ற ஏனைய வட இந்திய அடிமைகளும் ஆரிய இனத்திற்குப் புறம்பான இனத்தவராவர் என்ற கருத்துடையவராகவே காணப்படுகின்றனர். அக்கருத்தை அவ்வாறே ஏற்றுக் கொள்ள நான் அஞ்சுகின்றேன். ஆரியராகவும், அவரைப் பின்பற்றுவோராகவும் வாழ்ந்த மக்களுள் பெரும் பகுதியினர், தொடக்க காலத்தில், அவ்வாரிய இனத்தைச் சேர்ந்தவராகவே இருந்திருத்தல் இயலும் என்றே நான் கருதுகிறேன். கிழக்கு அய்ரோப்பிய இனமாகிய சலவோனிய இனத்தவரின் அடிமைகள், அச்சலவோனிய இனத்தவராகவே இருந்ததைப் போலவும், ஆசிய அங்கேரிய இனமாகிய மாகிய இனத்தவரின் அடிமைகள், அம் மாகிய இனத்தவராகவே இருந்ததைப் போலவும், ஆரியரின் அடிமைகளாகிய சூத்ரர்களும் ஆரிய இனத்தவரே யாதல் வேண்டும் என்ற கருத்து ஏற்புடைய தாகாமல் போகாது. பிராகிருத மொழியிலும் பிற வட இந்திய மொழிகளிலும், இன்றியமையா மொழியியல்புகள் பலவும் சமஸ்கிருதத் தன்மை வாய்ந்திருப்பதற்கு, இக் கருத்தல்லது வேறு காரணத்தை என்னால் காண முடியவில்லை.
திராவிடர்களை இந்துமத வேலிக்குள் கொண்டு வந்து அடைத்தது, போராடிப் பெற்ற வெற்றியின் விளைவன்று; மாறாக, அவரிடையே குடியேறி வாழ்ந்து, அவர் உள்ளத்தில் தம் ஆரிய நாகரிக வேட்கையை மெல்ல மெல்லப் புகுத்தியதன் விளைவே ஆகும் என்றே தோன்றுகிறது. ஆரியர்களின் தென்னாட்டுப் படையெடுப்புப் பற்றிய செய்தியோ, அவர்கள் திராவிடரை வென்று அடிமைகொண்ட செய்தியோ, வரலாறுகளிலோ, புராணங்களிலோ காணக்கூடாதனவாம். அவைபோலும் நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்குமேயாயின், அவற்றைப் பற்றிய ஒரு சில குறிப்புகளாவது, நாட்டு வரலாற்றிலும், வழக்காற்றிலும் நின்று நினைப்பூட்டும். ஆனால், இன்று நாட்டில் உலாவும் வரலாற்றுச் செய்திகளும், ஆரியரை உணர்த்தத் தமிழில் வழங்கும் அய்யர், பார்ப்பார் என்பன போலும் சொற்களும், ஆரியர், தம் அறிவாலும், ஆட்சி புரியும் திறத்தாலுமே உயர்ந்தவராகக் கருதப்பட்டனர் என்றே அறிவிக்கின்றன.
* * *
தமிழ் மொழியிலிருந்து சமஸ்கிருதச் சொற்களை அறவே நீக்கிவிட்டு நோக்கினால், எஞ்சிநிற்கும் பழம் பெரும் சிறப்பு வாய்ந்த திராவிடச் சொற்கள், ஆரியக் கலப்பற்ற திராவிட நாகரிக வாழ்க்கை முறைகளை விளங்க உணர்த்தவல்ல உயிர் ஓவியம் ஒன்றை வனப்புற வரைந்து காட்டும். அம்மொழியின் பழம்பெரும் சொல்லுருவங்கள், சமஸ்கிருதத் தளைகளினின்றும் விடுபட்ட நிலையில் விளங்கி நிற்கும் பண்டைத் தமிழரின் மனவளம், வாழ்க்கை வளம், வழிபாட்டு வளம் ஆகியவற்றை மட்டும் ஈண்டு காட்டிச் செல்ல விரும்புகின்றேன்.
பண்டைத் தமிழரிடையே வழக்கிலிருந்த சொற்கள் அளிக்கும் சான்றுகளிலிருந்து, கீழ்க்காணும் வரலாற்றுண்மைகளை நாம் அறிகிறோம். காவல்மிக்க அரச இல்லங்களாகிய அரண்களில் வாழ்ந்து சிறுசிறு மாவட்டங்களை உள்ளடக்கிய நாடுகளில் கோலோச்சி கோ எனவும், கோன் எனவும் பெயர் பூண்ட அரசர்கள் அவர்களிடையே இருந்தனர். விழாக் காலங்களில் இசை இசைக்கும் பாணர் அவர்களிடையே இருந்தனர். பனையோலை மீது எழுத்தாணியில் எழுதிய அகரம் முதல் னகரம் ஈறாகக் கொண்டு முப்பது எழுத்து உருவங்களை அவர்கள் அறிந்தார்கள். பனையோலையால் ஆன அவ்வேடுகள் பலவற்றைக் கொண்ட கட்டிற்கு அவர்கள் நூல் எனும் பெயர் சூட்டியிருந்தனர். கடவுள் உண்மையை ஏற்று அதற்குக் கோ எனும் பெயரிட்டு வழிபட்டு வந்தனர். அவ்விறைவனுக்குக் கோயில் கட்டிச் சிறப்பித்தார்கள். அறநூலையும் ஒப்புரவு என அழைக்கப்பெறும் உலகியல் நெறிகளையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
தமிழ்ச் சொற்களிலிருந்து அறியலாகும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட திராவிட மக்களின் வாழ்க்கை முறைபற்றிய இவ்விளக்கங்கள் நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாச் சிறப்பியல்புகள், அத்திராவிடரிடையே, அத்துணைப் பழங்காலத்திலேயே நிலவியிருந்தன என்பதை நிலைநாட்டப் போதியனவாகும்.