தரகு வேலை பார்க்கும் பார்ப்பனர்கள்
(சென்னை சட்டசபை அங்கத் தினரும், உப தலைவருமான திருமதி. டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபையில் தேவதாசி ஒழிப்புக்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச் செய்தால் அதற்கு என்ன தண்டனை ஏற்படுத்தவேண்டும் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வமயம் இரண்டு தேவதாசிப் பெண்கள் இச்சட்டத்தால் தங்கள் பிழைப்பு நின்றுவிடும் என்று எதிர்ப்பிரச் சாரம் செய்தனர். அவர்கள் பார்ப்பனர் களின் தூண்டுதலால்தான் செய்திருக்க வேண்டுமென்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் எண்ணினர்.
இச்சட்டத்தால் அப்பெண்களுக்குத் தரகர்களாய் இருந்து நோகாமல், ஒரு சொட்டு வியர்வைகூட நிலத்தில் விழாமல் சுகவாசிகளாய் வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனர் களின் தூண்டுதலால்தான் செய்திருக்க வேண்டுமென்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் எண்ணினர். எனவே, திரு. சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் இச்சட்டத்தை எதிர்த்தமைக்கு அதுவே காரணம் என்று கீழ்வரும் செய்தியால் தெளிவாக நமக்குத் தெரிகிறது.)
ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு அம்மாள், பார்வதி அம்மாள் ஆகிய இரு பெண்கள் பேரால் பொட்டுக்கட்டும் வழக்கத்தை நிறுத்துவதால் தங்கள் சமூகத்திற்குக் கேடு வரும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களது மசோதாவுக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்ய வந்த காரியங்கள் நாம் பார்த்த உடனேயே இக்காரியங்கள் அவர்களால் நடைபெறுவதல்ல என்றும் இதற்குப் பின்னால் ஏதோ ஒரு கூட்டம் ஆண்கள் இருந்து செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகப்பட்டோம். அப்படிச் சந்தேகப்பட்டது சரி என்று மெய்ப்பிக்க இப்போது ஆதாரங்கள் கிடைத்துவிட்டன, என்னவென்றால் சுயராஜ்ஜியக் கட்சி உயிர் நிலையான ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அவர்கள் சுயராஜ்ஜியக் கட்சித் தலைவர் வீட்டில் பேசியபோது குறிப்பிட்ட வாசகங்களிலிருந்தே ஸ்ரீமான் சத்திய மூர்த்தி கூட்டத்தாருடைய தூண்டுதலாகக் தான் இருக்க வேண்டும் என்று நம்ப இடமேற்படுகிறது. ஆதலால், இம்மாதிரி ஆட்சேபங்களைப் பொது ஜனங்கள் இலட்சியம் செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகிறோம்.
(குடிஅரசு 13.11.1927) பக்கம் 10
தகவல் – மு.நீ.சி