தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி
தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி எனும் உயிரியல் அறிவியலறிஞரை சார்லஸ் டார்வினின் புல்டாக் (BULL DOG) என்பார்கள். புல்டாக் எனும் பெயருள்ள நாய் பருத்த உடலும் முரட்டுப் பார்வையுமாய், பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் தோற்றம் கொண்டது. பரிணாமத் தத்துவத்தை முதன்முதலில் அறிவித்த சார்லஸ் டார்வினுக்கு மதவாதிகளால் எதிர்ப்புத் தோன்றியபோது, அவர்களை எதிர்த்து வாதிட்டு வென்ற பெருமைக்குரியவர் ஹாக்ஸ்லி. தமது கருத்தை வலிமையுடன் விளக்கி, வாதாட டார்வின் தயங்கிய போது அவருக்குத் தோள்கொடுத்த தோழர். 1825 இல் பிறந்து 1895 இல் மறைந்தவர்.
டார்வினின் படிநிலை வளர்ச்சி எனும் கொள்கையைத் தயங்கித் தயங்கி ஏற்றுக் கொண்டவர் என்றாலும் அவருக்காக வாதாடி மக்கள் கருத்தை உருவாக்கியவர் ஹக்ஸ்லி. அதுபோலவே, இயற்கைத் தேர்வு எனும் டார்வினின் கொள்கையைப் பொருத்தமட்டில், முழுமையாக ஹக்ஸ்லி ஏற்கவில்லை என்றாலும் உயிரியலாளர் எனும் வகையில் உயிர்கள் படைக்கப்படவில்லை; பரிணாமம் அடைந்து உருவானவை என்பதை ஏற்றுக் கொண்டவர்.
பிரிட்டனில் அன்றைய நாள்களில் பாடத்திட்டம் என்பது மதம் சார்ந்த கல்வியாக இருந்த நிலையை மாற்றி அறிவியல் முறைப் பாடத்திட்டமாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.
உலகத் தோற்றம், உயிர்களின் தோற்றம் ஆகியவை கடவுளின் படைப்பு எனும் கொள்கையை ஏற்க இயலாது எனும் அளவில் சந்தேகக் கொள்கை கொண்டவர்களை இன்றளவும் குறித்திடும் அக்னாஸ்டிக் (AGNOSTIC) எனும் இங்கிலீஷ் சொல்லை முதன் முதலில் உருவாக்கி உலவவிட்டவர் இவரே! தம்மை அவ்வாறே அழைத்துக் கொண்ட முதல் நபரும் இவரே! இங்கிலீசுக்கு ஒரு புதிய சொல்லைத் தந்தவர்.
இத்தனைக்கும் இவருடைய பள்ளிப் படிப்பு சில ஆண்டுகள் மட்டுமே, தந்தை பெரியாரைப் போலவே! தாமாகவே அனைத்தையும் கற்று, உலகின் சிறந்த உடற்கூறு அறிவியலாளர் என்ற பெருமை பெற்றவர். முதுகெலும்பு உள்ள விலங்குகள் பற்றி ஆய்ந்து, மனிதக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்புகளைப்பற்றி அறிவித்தவர்.
பலதரப்பட்ட ஆய்வுகளைச் செய்து ஆர்கிலோப்ட்ரிக்ஸ் (ARCHAEOPTERYX) எனும் ஆதிகாலப் பறவைகள் பற்றியும் Compsognathus எனும் உயிரினம் பற்றியும் ஒப்பிட்டு ஆய்வு செய்து இவர் அறிவித்த முடிவுகள் இன்றளவும் உலகில் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகளாகியுள்ளன. சிறிய அளவிலான இறைச்சி உண்ணும் டைனோசார்கள்தான் படிநிலை வளர்ச்சியடைந்து இன்றைய பறவைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன எனும் கொள்கை!
இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற இவர், 4.5.1825 இல் ஈலிவ் எனும் சிறு ஊரில் பிறந்தவர். தந்தை கணக்கு ஆசிரியர். அவர் வேலை பார்த்த பள்ளி மூடப்பட்டவுடன், பொருளாதார நெருக்கடியால் 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல இயலாத நிலை. இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்திருந்தார்.
அதன்பிறகு சுயமாகப் படித்துத் தேர்ந்தவர். 19 ஆம் நூற்றாண்டின் சுய கல்வியாளராகத் திகழ்ந்தார். இளவயதில் சுயமாகவே ஜெர்மனி மொழியைக் கற்றார். அம்மொழியில் இருந்த அறிவியல் நூல்களை மொழிபெயர்க்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றார். லத்தீன், கிரீக் ஆகிய மொழிகளையும் ஓரளவு கற்று, அரிஸ்டாட்டிலின் நூல்களை அம்மொழிகளிலேயே (மூல மொழியிலேயே) படித்துத் தெரிந்து கொண்டவர்.
அதன்பிறகு முதுகெலும்பு இல்லாத உயிரிகளைப்பற்றி அறிந்து கொண்டவரானார். பின்னர், முதுகெலும்புள்ள உயிரிகளைப்பற்றியும் ஆய்ந்து, அந்த வகையில் அனைத்தும் அறிந்தவராக பிரிட்டன் நாட்டில் விளங்கினார் என்பது மாபெரும் சிறப்பு. தமக்குத் தாமே ஆசிரியர்! சுய படிப்பாளி. சுய சிந்தனையாளர்!
பல மருத்துவர்களிடம் உதவியாளராகத் தமது 13ஆம் வயதிலிருந்தே பணி புரிந்தார். 16ஆம் வயதில் சைடன் ஹாம் கல்லூரியில் சேர்ந்து உடற்கூறு கற்றார். வெள்ளிப் பதக்கம் பெற்ற சிறப்புக் கிடைத்தது. அதன் விளைவாக மருத்துவப் பணியில் சேர்ந்து பல மருத்துவப் படிப்புகளையும் கற்றார். கண்மருத்துவம் உள்பட பலவும் கற்றுத் தேர்ந்தார்.
1845 இல் தம் 20ஆம் வயதில் அவர் எழுதிய அறிவியல் கட்டுரை மிகவும் புகழ் பெற்றது. மனித உடலில் உள்ள மயிர்களுக்குக் கீழே உள்ள பகுதியை மறைத்துக் கொண்டிருக்கும் படிமம் (LAYER) பற்றிய அவரது கண்டுபிடிப்பு இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படியொரு படிமம் இருப்பது அதுவரை ஒருவரும் அறியாதது. எனவே, இன்றளவும் அது அவர் பெயராலேயே குறிக்கப்படுகிறது ஹக்ஸ்லியின் படிமம் என்று!
மருத்துவத்தில் முதலாண்டுப் படிப்பில் தேர்ச்சிபெற்று லண்டன் பல்கலைக்கழகத்தில் தங்கமெடல் பரிசு பெற்றார். எனினும், இரண்டாம் ஆண்டுப் படிப்பைப் படித்துப் பட்டம் பெறவில்லை. படித்த படிப்பை வைத்தே கப்பல் படையில் சேர்ந்தார். இவரைச் சோதித்த கப்பற்படையின் மருத்துவப் பிரிவுத் தலைவர் இவரை அறுவை மருத்துவக் கல்லூரிக்கு வாய்மொழித் தேர்வுக்கு அனுப்பினார். தேர்ச்சி பெற்று உதவி சர்ஜன் ஆனார். 25 ஆம் வயதில் திஸிஷி பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டில் ராயல் சொசைட்டி மெடல் பெற்று மருத்துவக் கவுன்சில் உறுப்பினராக ஆக்கப்பட்டார். அத்தனையும் பட்டறிவினால்! 1854 இல் கப்பற்படையிலிருந்து விலகி சுரங்கப் பள்ளியில் பேராசிரியராகி, இயற்கை வரலாறு கற்பித்தார். 1885 முடிய 31 ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் பல பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
தம் ஆய்வுக் கட்டுரைகளை மொத்தம் ஒன்பது தொகுதிகளாக 1890 இல் வெளியிட்டார். 1895 இல் ஜூன் 29 இல் மாரடைப்பால் காலமானார்.
படிநிலை வளர்ச்சிக் கொள்கையின் வலுவான ஆதரவாளராக, அதற்காக வாதாடுபவராக 30 ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்ந்ததன் வாயிலாக, 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலீஷ் மொழி பேசும் மக்கள் உலகில் சிறந்த அறிவியல் அறிஞராக விளங்கியவர் எனும் பெருமைக்குரியவர். பறவையினத் தோற்றம் குறித்த அவரது ஆய்வு முடிவு, இன்றளவும் நிலைபெற்றுள்ளது என்பதே, அவருடைய ஆய்வறிவுக்குத் தக்க சான்று.
டார்வின் தமது படிநிலை வளர்ச்சிக் கொள்கையை உலகுக்குத் தெரிவிப்பதற்கு முன்பாகவே, அவருக்கு நெருக்கமாக இருந்த சிலருக்குத் தெரிவித்திருந்தார். அந்த சிலரில் ஹக்ஸ்லியும் ஒருவர். ஆனாலும், டார்வினுக்காக அவர் விவாதத்தில் கலந்து கொண்டதுகூடத் தற்செயலானதுதான்_ திட்டமிடப்பட்டதல்ல.
விவாதம் 30.6.1860 இல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகக் காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாட்டாளரும் நூல் பதிப்பாளருமான ராபர்ட் சேம்பர்ஸ், ஆக்ஸ்போர்ட் தெருக்களில் சோர்ந்துபோய் நடந்து கொண்டிருந்த ஹக்ஸ்லியை எதிர்பாரா விதமாகச் சந்தித்து விவாதம் பற்றித் தெரிவிக்கவே, அவரும் கலந்து கொண்டார். டார்வினின் நண்பர்களான லப்பாக், ஹூக்கர் ஆகியோருடன் ஹக்ஸ்லி மூன்றாவது பேச்சாளர். எதிர்த்தரப்பில் ஆக்ஸ்போர்டு நகர பிஷப் சாமுவேல் வில்பர்ஃபோர்ஸ் மற்றும் ராபார்ட் ஃபிட்ஸ்ராய், ஆகியோர். ராபர்ட் ஃபிட்ஸ்ராய் என்பவர், டார்வின் ஆராய்ச்சிக்காக பயணம் செய்த பீகிள் கப்பலின் கேப்டன். நடுவராக டார்வினின் மேனாள் ஆசிரியரான ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோ. பிஷப் வில்பர்ஃபோர்ஸ் பெரிய வாயாடி. பரிணாமத் தத்துவத்திற்கு எதிராக 1847 இல் பிரிட்டிஷ் சங்கம் சார்பில் நடந்த வாதத்தில் பங்குபெற்று ராபர்ட் சேம்பர்சைத் தாக்கிப் பேசியவர். அவருக்குச் சொல்லிக் கொடுத்துத் தயார்ப்படுத்தியவர் ரிச்சர்டு ஓவன் என்பவர். பிஷப் வில்பர்ஃபோர்ஸ் பேசும்போது, ஏற்கெனவே அவர் எழுதிய கட்டுரை வரிகளைத் திருப்பிக் கூறினார். பந்தை அடித்து விளையாட வக்கில்லாதவன் ஆட்டக்காரரின் காலை அடித்தது போல், முட்டாள்தனமான வாதம் ஒன்றை எடுத்து வைத்தார். எதிரணியைச் சேர்ந்த ஹக்ஸ்லியின் தாய்வழிப்பாட்டன் குரங்கா? அல்லது தந்தைவழிப் பாட்டன் குரங்கா? என்ற அறிவற்ற வாதத்தை எடுத்துவைத்துச் சிரித்துக் கொண்டார். ஹக்ஸ்லி ஆத்திரப்பட்டு எதையாவது கடுமையாகக் கூறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பகுத்தறிவுவாதியான ஹக்ஸ்லி மிகச் சிறப்பாகப் பதில் கூறினார். உண்மையை மறைத்துப் பேசும் (வில்பர்ஃபோர்ஸ் போன்ற) மனிதர்களை உறவினர்களாகப் பெறுவதைவிட, குரங்குகளை உறவுக்காரர்களாகப் பெறுவது ஒன்றும் வெட்கப்படத்தக்கதல்ல என்று பதில் கூறினார்.ராபர்ட்சேம்பர்சின் கருத்துகளை மதவாதிகள் எதிர்த்தனர். என்றாலும், சீர்திருத்தவாதிகள் ஆதரித்தனர். அந்நிலையில் 1847 மே மாதத்தில் அறிவியலின் வளர்ச்சிக்கான பிரிட்டிஷ் சங்கத்தின் சார்பில், ஆக்ஸ்போர்டு நகரில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கால கட்டத்தில் செயின்ட் மேரி சர்ச்சில் ஞாயிற்றுக் கிழமை காலையில் நடக்கும் கோயில் கூட்டத்தில் பேசிய பிஷப் வில்பர்ஃபோர்ஸ், அறிவியலைத் தவறாகப் போதிக்கும் போக்கு என வருணித்துப் பேசினார். ராபர்ட்சேம்பர்ஸ்சின் அறிவியல் நூலைத் தாக்கி இவ்வாறு பேசினார் என்றாலும் அவரது நூல், மிகப் பெரும் அளவில் விற்பனையாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
டார்வினின் உயிர்களின் தோற்றம் எனும் நூல் 24.11.1859 இல் வெளிவந்தபோது பலமான வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ரிச்சர்டு ஓவன் என்பார், தம் பெயரைப் போடாமல் நூல்விமர்சனம் எழுதினார். பிஷப் வில்பர்ஃபோர்ஸ் தம் பங்குக்கு ஓர் அநாமதேய விமர்சனத்தை எழுதினார். ஹக்ஸ்லி தி டைம்ஸ் ஏட்டில் டிசம்பர் 1859 இல் நூலின் கருத்துகளை வரவேற்று விமர்சனம் எழுதினார். எனினும், மதவாதிகளின் எதிர்ப்பு வலுவாகக் கிளம்பிக் கொண்டிருந்தது.
சுதந்திரமான சிந்தனையுள்ள நம்பிக்கையாளர்கள் (ஆத்திகர்கள்) ஏழு பேர் ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டனர். ரெவரன்ட் பேடன் பவல் என்பவர், ஏற்கெனவே பரிணாமக் கொள்கையை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்தவர். இவ்வாறாக ஆத்திகர் பிளவுபட்டிருந்தனர்.
ஹக்ஸ்லியுடன் வாதத்தில் பங்கேற்க பேடன் பவல் முடிவு செய்திருந்தார். எனினும் 11 ஆம் நாளன்றே மாரடைப்பால் காலமாகிவிட்டார். கடைசிநேரத்தில் விவாதத்தின் நடுவர் ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோ என்பவரை ஓவன் பரிந்துரைத்தார். டார்வினின் கொள்கைகளைத் தோற்கடித்து முடிவு கூறிட இவர் உதவிடுவார் எனும் நம்பிக்கையில் இவ்வாறு செய்தார். என்றாலும் கூட்டத்தில் கலந்து கொண்டோர், கிட்டத்தட்ட அனைவரும், பிஷப் வில்பர்ஃபோர்ஸின் கருத்துகளுக்கு எதிராகவே இருந்தனர். ஹக்ஸ்லியின் வாதங்களுக்குப் பெரும் வரவேற்பை அளித்து மகிழ்ந்தனர். மகிழ்ச்சிப் பெருக்கில் ப்ரூவ்ஸ்டர் சீமாட்டி மயங்கிச் சாய்ந்துவிட்டார் எனும் செய்தி வரலாற்றில் பதிவாகியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வாதத்தின் நினைவாக, 150 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மியூசியத்தின் அருகே கல்தூண் நிறுவப்பட்டு சிறப்பளிக்கப்பட்டுள்ளது ஒன்றே விவாதத்தின் சிறப்பையும் விவாதப் பொருளின் சிறப்பையும் இன்றளவும் நினைவு கூர்கிறது பிரிட்டனின் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்பதற்கு ஆதாரம்! இந்த விவாதத்தின் முடிவில், டார்வினின் கொள்கைகள் பெருத்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டயான் புர்கிஸ் என்பார் உலக வரலாற்றில் முதன்முதலாகக் கிறித்துவம் அறிவியலுக்கு முன்பாக மண்டியிடும் நிலை உருவாகிவிட்டது என்றே குறிப்பிட்டார். இத்தகைய வெற்றிக்குக் காரணமான ஹக்ஸ்லி அறிவியலை மதக் கருத்துகளுக்கு எதிராக நிறுத்தி, வளர்த்து மதத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக உழைத்தவர்.
கற்றோர் மத்தியில் ஹக்ஸ்லியின் கருத்துகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. பொது விவாதங்களில் அவர் பங்கேற்கும் ஆர்வத்தை ஊட்டின. டார்வின் கொள்கைகளை எவரும் தள்ளிவிட முடியாது என்ற நிலையை உருவாக்கின. அறிவியல் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தைப் பொது மக்கள் மனதில் தோன்றிடச் செய்தன. எல்லாவற்றிற்கும் மேலாக பைபிளின் பழைய ஏற்பாடு, ஆதியாகமம் போன்றவற்றில் உள்ள பரிணாமக் கொள்கைக்கு எதிரான படைப்புக் கொள்கை ஆட்டங்களைத் தொடங்கியது. சுயமாகச் சிந்திக்கும் தன்மைகொண்ட மத நம்பிக்கையாளர்களேகூட, படைப்புக் கொள்கையை நம்ப மறுக்கும் நிலை உருவாகிவிட்டது. அத்துடன் நிற்கவில்லை அவருடைய பணி.
பிரிட்டனின் கல்வித் திட்டத்தை மாற்றியது. இன்றைய கல்வி முறைக்கு அடித்தளம் அமைத்தவரே அவர்தான்!
– சு. அறிவுக்கரசு