ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள்?

மே 01-15

எப்போதும்போல இல்லாம, வெள்ளையுஞ் சொள்ளையுமாகக் கண்ணிலபட்டாரு மூனுகலர் முத்தையா. தேசபக்தி எப்போதுமே திரண்டு வழியிறதால சட்டைப் பாக்கெட்டில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறத்தில் கலர் பென்சில் வைச்சுக்கிட்டிருந்தாரு ஒரு காலத்தில். அதனால பெயர் அப்படியாகிவிட்டது முத்தையாவிற்கு! பிறகு பென்சில் வச்சுக்கிற பழக்கம் போய்ட்டாலும் பெயர் அவரவிட்டுப் போகலை. தேசபக்தியில் அர்ஜுனுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதவர் மூனுகலர். யாரது அர்ஜூன்னு கேக்குறீங்களா? அதான் ஆல் இண்டியா ரேடியோவில வர்ற ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வந்தேமாதரம், ஜனகனமண.. பாட்டு முதல் வரியை பேரா வச்சு படமெடுத்து அதில பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பந்தாடுவாரே… அவருதான்! மூனுகலரு எப்ப பேசினாலும், அத்வானி பேசுற மாதிரிதான் இருக்கும். ஆனா ஊனான்னா அய்.எஸ்.அய் ஊடுருவல், அயல்நாட்டுச் சதி, அந்நிய சக்திகள் மாதிரியான வார்த்தைகள் அப்பப்போ வந்துவிழும். அதுக்காக ஆர்.எஸ்.எஸ். ஆளுன்னும் நினைச்சுட முடியாது. இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள்ங்கிறதுல உறுதியானவரு.

எல்லாப் பெண்களும் சகோதரின்னு உறுதி கொடுத்திட்டோமே எப்படிக் கல்யாணம் பண்ணிக்கமுடியும்னு டவுட்டாகி அப்துல் கலாமுக்குக் கடிதம் எழுதிக் கேட்டவரு. சுருக்கமா சொல்லணும்னா… தினமலர், துக்ளக், இந்தியா டுடே படிச்சு தன்னோட அறிவை வளர்த்துக்கிட்டவரு அப்படித் தானே இருப்பாரு. மத்தபடி இந்தியா கிரிக்கெட்டுல ஜெயிக்க பிரார்த்தனை பண்றது… அதுக்காக எல்லோருக்கும் மெசேஜ் அனுப்புறது… தீவிரவாதிங்களால யாராவது செத்துட்டா மெழுகுவர்த்தி அஞ்சலி நடத்துறது… குடியரசு நாளு, சொதந்திர நாளுக்கெல்லாம் நெஞ்சில கொடியைக் குத்திக்கிட்டு ஊரச் சுத்திவர்றது… இப்படி நாட்டை முன்னேத்துற தேசபக்திப் பணியில மிஷிளி: 1947 வாங்கினவரு.

இந்தியா ஒலகக் கோப்பையை ஜெயிச்சுடுச்சுன்னு சொன்னவுடனே கண்டிப்பா தோனியோட புது ஸ்டைலான அரை மொட்டைலதான் சுத்திட்டிருப்பாருன்னு நெனச்சுட்ருந்த எனக்கு இது என்னடா மதராச பட்டணம் படத்துக்குள்ள வந்துட்டோமான்னு சந்தேகமாப் போச்சு… அட.. ஆமாங்க… சென்னையில துணி துவைக்கிற ஆர்யா, லகான் பட அமீர்கானோட கோட்டைப் போட்டுட்டிருந்த மாதிரி, சம்பந்தமே இல்லாம தலையில ஒரு குல்லாய் போட்டிருந்தாரு நம்ம மூனுகலர். என்னண்ணே, எல்லோரும் மதம் மாறுவாங்க. நீங்க என்ன திடீர்னு சேட்ஆக கன்வர்ட் ஆயிட்டிங்களான்னு கேட்டேன். அடப் போப்பா உனக்கு எப்பவுமே கிண்டல்தான். இது காந்தி குல்லாய் தம்பி! தேச பக்தர்கள்லாம் குல்லாய் போடுங்கன்னு அண்ணா சொல்லியிருக்காருல்ல.. அதான் என்றார்.

என்னடா இது அண்ணாவுக்கு வந்த சோதனை? ன்னு நினைச்சுக்கிட்டு, ஏன்னே.. கடைசி வரை காந்தி இந்தக் குல்லாயப் போட்டிருந்த மாதிரி எந்தப் படமும் நான் பார்த்ததில்லையே… அவர் பேரச் சொல்லித்தான் நிறையப் பேரு மத்தவனுக்குக் குல்லா போடுறான். ஆமா ஜெயலலிதாவோட கூட்டணி வச்சுக்கச் சொல்லி விஜயகாந்த்துகிட்ட அண்ணா ஆவி சொன்ன மாதிரி, உன்கிட்ட குல்லாய் போடச் சொல்லிச் சொன்னாரா என்ன? அப்படின்னு வெள்ளந்தியா கேட்டுப்புட்டேன். அவ்ளோதான் வந்துச்சே கோபம் நம்ம மூனுகலருக்கு. என்னப்பா நீ பொறுப்பில்லாமப் பேசிக்கிட்டிருக்க… உன்னை மாதிரி ஆளுங்களாலதான் நாட்டில ஊழல் பெருகிப்போச்சு… அலட்சியம்தான் நம்ம நாட்டோட சாபக்கேடு.

நாட்டில இரண்டாம் சுதந்திரப் போர் நடந்துக்கிட்டிருக்கு. இளைஞர்கள்லாம் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏத்திட்டிருக்கோம்… அங்க ஒரு மனுசன் 71 வயசில உண்ணாவிரதம் இருந்து இந்தியா வையே ஆட வச்சுக்கிட்டிருக்காரு… அதனால்தான் ரிடையர்டு ஆன அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அதிகாரிங்க, நடிகர், நடிகைகள், நாட்டு மேல அக்கறையுள்ள இளைஞர்கள்ல ஆரம்பிச்சு இன்னைக்கு அவரு பின்னாடி இந்தியாவே இருக்கு.  சாகிறதுக்கு 8 வருசத்துக்கு முந்தியே காந்திஜி எடுத்த மறுஅவதாரம் தான் நம்ம அன்னா  ஹசாரே… அன்னா ஹசாரே… அன்னா ஹசாரேன்னு நரம்பு புடைக்க, கண்ணு சிவக்கச் சிவக்க வலது கை ஆள்காட்டி விரலை நீட்டுனபடி, நாலஞ்சு பிளாஷ் கட்-ல எதிரொலியோட சொல்லி முடிச்சாரு. யப்பா… ஒரு தெலுங்குப் பட டிரைலர் பார்த்த எபெக்ட்டு…  அண்ணே… அந்தக் கையைக் கீழ போடுங்க… நீங்க மெழுகுவர்த் தியோட போருக்குப் போறதெல்லாம் இருக்கட்டும். அவரு பின்னாடி இந்தியாவே இருக்குன்னா, அவரு என்ன காஷ்மீர் பார்டர்ல இருக்காரா? இல்லை கன்னியாகுமரி வள்ளுவர் சிலைக்கு அந்தாண்ட நடுக்கடல்ல நிக்கிறாரா? பில்ட் அப்-பைக் குறைச்சுக்கிட்டு விசயத்தைச் சொல்லுங்கண்ணேன்னு நானும் தெரியாத மாதிரியே கேட்டேன். அப்புறம்தான் கொஞ்சம் எமோசனைக் கட்டுப்படுத்திக்கிட்டு ஆரம்பிச்சாரு நம்ம முத்தையா.

தம்பி, அன்னா ஹசாரே… அன்னா ஹசாரேன்னு ஒரு தேசபக்தர். ஊழலை அழிக்கணும்னு உண்ணாவிரதம் நடத்திப் போராடுறாரு. எந்த அரசியல்வாதியும் பக்கத்தில வரக்கூடாதுன்னு சொல்லிட்டாராம். எல்லோரும் என்னோட சேர்ந்து போராடுங்கன்னு அழைப்பு விடுத்திருக்காராம். ஜனபால் மசோதாவை நிறைவேத்தணும்னு போராடி கவர்மெண்டையே பணிய வச்சிருவாராம்ன்னார். அது ஜனபாலும் இல்லை; ஆவின் பாலும் இல்லை. ஜன் லோக்பால் அப்படின்னு சொன்னேன்.

ஏய்.. என்னப்பா உனக்கே தெரியுதுல்ல.. அப்புறம் ஏன் என்னையக் கேக்குற. வா.. நாமளும் ஒருநாளு சாப்பிடாம இருந்து போராடுவோம்னு கூப்பிட்டாரு மூனுகலர். அண்ணே.. நீங்களும் நானும் உண்ணாவிரதம் இருந்தா, இப்படி அரசு கண்டுக்குமா? நாட்டில 20 கோடிப் பேரு ஒவ்வொரு நாளும் சாப்பிட வழியில்லாம உண்ணாவிரதம் இருக்கானே… கிடங்கில இருக்கிற உணவையாவது அந்த மக்களுக்குக் கொடுங்கன்னு கோர்ட் சொன்னதுக்கே முடியாதுன்னுட்டாங்க… நீங்க என்னமோ என்னையும் கூப்பிடுறீங்க. 10 வருசமா இரோம் ஷர்மிளான்னு ஒரு அம்மா உண்ணாவிரதம் இருக்கு மணிப்பூர்ல. அந்தம்மா மேல தற்கொலை வழக்குப் போட்டு, ஆஸ்பத்திரியில வச்சு மூக்கு வழியா ஆகாரத்தைச் செலுத்தி, அந்த மருத்துவமனையயே கிளைச்சிறைன்னு அறிவிச்சிருக்காங்க.

இதுதான் உண்ணாவிரதத்துக்கு அரசு கொடுக்கிற மரியாதை. மத்த நாட்டைப் பத்திப் பேசாத.. நம்ம நாட்டுக்கு வா. இது காந்தி பிறந்த நாடு. இங்கே அஹிம்சை வழியில நடக்குற போராட்டத்துக்கு எப்பவுமே மதிப்பு உண்டுன்னு உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாரு முத்தண்ணே!

அடக் கொடுமையே… இவ்வளவுதான் உங்க தேசபக்தி லட்சணம். காஷ்மீரு, கார்கிலு, கிரிக்கெட்டு.. இதைத் தாண்டி இந்தியாவில எதுவுமே உங்க கண்ணுக்குத் தெரியாதே. மணிப்பூர்ங்கிறது இந்தியாவில உள்ள ஒரு மாநிலம்ணே! அந்த மக்கள் போராடுறதே உங்க இந்திய ராணுவத்தோட அட்டூழியத்தை எதிர்த்துத்தான். இரோம் ஷர்மிளாவோட உண்ணாவிரதம் மட்டுமில்ல.. அங்க ராணுவம் நடத்துற கொலை, கற்பழிப்பைக் கண்டிச்சு அந்த ஊர்ல இருக்கிற பாட்டியில இருந்து சின்னப் பொண்ணு வரைக்கும் 25 பேருக்கும் மேல எங்களைக் கற்பழிங்கடான்னு கோஷம் போட்டுக்கிட்டு நிர்வாணப் போராட்டமே நடத்தினாங்க. அப்பவெல்லாம் உங்க தேசபக்தி எங்கண்ணே போச்சு? ன்னு கேட்டேன்.

இதெல்லாம் நான் எந்தப் பத்திரிகையிலேயும் படிக்கலையேப்பா.. நீ என்ன புதுசா சொல்ற?ன்னாரு அவரு.

எந்தப் பத்திரிகையும் இதையெல்லாம் வெளியில சொல்லாதுண்ணே! ஏன்னா, இது மாதிரி மக்களோட உண்மையான பிரச்சினையெல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்சுடக் கூடாதுங்க்கிறதுக்குத்தானே இந்தப் பத்திரிகைகளும், மீடியாவும் உங்க அன்னா ஹசாரே மாதிரி ஆளுங்களைத் தூக்கிப் பிடிக்குது. போயும் போயும் சொன்னீங்க பாருங்க அஹிம்சைப் போராட்டத்தை இந்தியா மதிக்கும்ன்னு.. அந்த நெனப்பையெல்லாம் திலீபன் உண்ணாவிரதம் இருந்து செத்தப்போவே, அவனோட சேர்த்துப் புதைச்சிட்டோம்

அதுக்காக ஆயுதம் தூக்கினால் இந்தியா மதிக்கும்னு நினைக்குறியா? அப்படியெல்லாம் இல்லப்பா… பாரு மக்கள்லாம் சேர்ந்து குரல் கொடுக்கிறாங்க… பத்திரிகையெல்லாம் பெருசா செய்தி போடுதுன்னு சொன்னதும் அரசு இறங்கி வந்துடுச்சு பார்த்தியா?ன்னாரு.

தியேட்டருல இடைவேளையில பாப்கார்ன் சாப்பிடுற மாதிரி, வோர்ல்டு கப்பு கிரிக்கெட் முடிஞ்சு, அய்.பி.எல் கிரிக்கெட் ஆரம்பிக்கிறதுக்கு இடையில இருந்த கேப்புல செய்தி கிடைக்காம இருந்த பத்திரிகையெல்லாம் தூக்கிவிட்டது தான் உங்காளு இவ்வளவு தெரியுறதுக்கு ஒரு முக்கியமான காரணம். அவருமட்டும் இன்னும் ரெண்டுநாளு சேர்த்து உண்ணாவிரதம் இருந்திருந்தா தெரியும் இந்தப் பத்திரிகையெல்லாம் எப்படி நடந்துக்கிட்டிருக்கும்.. நீங்க சொல்ற மக்கள் எப்படிப் போராடியிருப்பாங்கன்னு! எதுக்காக இந்தப் போராட்டம், இது சாத்தியமா? இதில பிரயோஜனம் ஏதாவது உண்டா? யார் இவரு? இவ்வளவு நாளு எங்கே இருந்தாரு? சரி, ஊழலை ஒழிக்கணும்னு சொல்ற இந்த ஆளுங்க எல்லாம் உண்மையான ஆளுங்களா? உத்தமருங்களா? ஏதாவது தெரியுமா இந்தப் புதுப் புரட்சியாளர்களுக்கு… ஆனா… ஊனான்னா.. மெசேஜ் அனுப்புறது, ஈமெயில அனுப்புறது… இதிலெயே சொறிஞ்சுக்கிட்டுத் திரியிறது.. எவனாச்சும் இன்னிக்கு ஆசிட் மழை பெய்யும்னு மெசேஜ் அனுப்புனா அதையும் எல்லாருக்கும் அனுப்புவானுங்க… காஸ்மிக் கதிர் வரும்னாலும் அனுப்புவானுங்க… இதில அக்கறையிருந்தால் அனுப்புங்க…, உண்மையான இந்தியன்னா அனுப்புங்க-ன்னு மிரட்டல் வேற. அப்ப, மெசேஜ் அனுப்பாதவன்லாம் என்ன இந்தோனேசியாக்காரனா? இல்லை இங்கிலாந்துக்காரனா? நல்லா கௌப்புறாய்ங்க பீதிய அத விடுப்பா… அப்படின்னா நாங்க உணர்ச்சிவசப்பட்டது; போராடுனது; ஆதரவு கொடுத்தது எல்லாம் தப்புங்கிறியா? என்று கொஞ்சம் எகிறினார் மூனுகலர்.

இப்படி உணர்ச்சிவசப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டுத்தான் எப்பவுமே தப்புத் தப்பா முடிவெடுக்கிறீங்க… அது சரி… ஏதோ போராடுனோம்னு சொன்னிங்களே அப்படின்னா என்ன? சனி, ஞாயிறுல ஆபீஸ் வேலையில்லாம ரெஸ்ட் எடுக்கிற சமயத்தில கிரிக்கெட் மேட்ச் பார்க்கிற மாதிரி வந்து கொடி பிடிக்கிறதுதான் போராட்டமா? சாப்டுவேரு இஞ்சினியருக, படிச்சவங்க எல்லாம் போராடுறாங்கன்னு கிளப்பிவிட்டதெல்லாம் எதுக்குத் தெரியுமா? எங்கே தப்பித்தவறி உண்மையான பிரச்சினைகள்ல தலையிட்டு கவனம் செலுத்திடக்கூடாது; ஜாதி, மதம், இடஒதுக்கீடு, பொருளாதாரம், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கிற பன்னாட்டு நிறுவனங்கள் இப்படி இருக்கிற பிரச்சினையெல்லாம் கண்ணிலேயே பட்டுடக் கூடாது.

அங்கங்க போராட்டம், புரட்சினு எல்லா நாட்டிலேயும் நடக்கிற மாதிரி தப்பித்தவறிக் கூட எதுவும் நடந்துடக்கூடாது. ஆயிரக்கணக்கில சம்பளம் கொடுத்துட்டு, லட்சக்கணக்கில உழைப்பை உறிஞ்சுற முதலாளிங்க மேல கோபம் வந்திடக் கூடாது. இதையெல்லாம் யோசிச்சுத்தான் உங்களையெல்லாம் போராட வச்சாங்க… நீங்களா எல்லாம் ஒன்னும் போராடலை… என்று சொன்னதும் பேந்தப் பேந்த விழித்தார் மூனுகலர் முத்தையா.

புரியலையா…. வேகமா அரிவாளை எடுத்தா மரத்து மேலயாவது ஒரு கொத்துக் கொத்துவாங்களே அது மாதிரி… எல்லா இடத்திலேயும் பிரச்சினைகள், ஊழல்கள் இருக்குன்னு புலம்பிக்கிட்டிருக்கிற, குறை சொல்றதையும் புலம்புறதையும் தவிர எதுவுமே செய்யாத படிச்ச, நடுத்தர வர்க்கத்துக்கு நாமளும் போராடிட்டோம்னு ஒரு சுயதிருப்தியை உருவாக்கிறதுதான் இந்தப் போராட்டத்தைப் பத்திரிகைகளும், முதலாளிகளும் தூக்கிப்பிடிச்சதுக்கு நோக்கம். நம்மகிட்ட, நம்ம அலுவலகத்தில எவ்வளவு தகிடுதித்தம் நடக்குது? எவ்வளவு பிராடு வேலை, உள்ளடி வேலையெல்லாம் செஞ்சு ஒவ்வொரு பிராஜெக்டையும் பிடிக்கிறோம்? இதெல்லாம் பிரச்சினைகளாவோ, ஊழலாவோ நமக்குத் தெரியிறதில்லை.

அதெல்லாம் மேனேஜ்மெண்ட் டெக்னிக் அப்படின்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதனால் அதெல்லாம் தப்பாவே நமக்குத் தோணாது. இப்படி எதுவும் புரியாம நீங்களும் கிளம்பிட்டீங்க மெழுகுவர்த்தியைத் தூக்கிக்கிட்டு! போராடுறது முக்கியமில்லை.. எதுக்காகப் போராடுறோம்; யாரோடு போராடுறோம்; யார் தலைமையில போராடுறோம்ங்கிறதும் முக்கியம்.

என்னப்பா இப்படிச் சொல்ற? அன்னா ஹசாரே,  அவர் கிராமத்தை முன்னேத்தினதுக்காக, அரசாங்கமே அவருக்கு விருதெல்லாம் கொடுத்துப் பாராட்டியிருக்கு தெரியுமில்ல… என்றார் புதுத்தகவல் சொல்பவர் போல!

உண்மையான எந்தப் போராளியையும் உங்க இந்திய தேசியம் ஏத்துக்காதுண்ணே! உங்காளு ஹசாரே உண்மையான போராளியா இல்லையாங்கிறதுக்கு வேற எங்கேயும் போக வேண்டாம். அரசு பத்மபூஷன் விருது கொடுத்துப் பாராட்டியிருக்குன்னு சொன்னீங்களே அது ஒண்ணே போதும். கிராமத்து மக்களுக்கு உதவி செஞ்சு மருத்துவம் செஞ்சு உண்மையா உழைச்ச பினாயக் சென்னுங்கிற மருத்துவருக்கு இந்தியா கொடுத்த கௌரவம் நாலு வருசம் ஜெயில் தண்டனைதானே தவிர விருது இல்லன்னு… சொன்னதும் மெதுவா தலையில இருந்த குல்லாயை எடுத்துட்டு தலையைச் சொறிய ஆரம்பிச்சிட்டாரு முத்தையா.
உங்காளு ஹசாரே யாரு? அவருக்கு ஏன் இப்படி எல்லாப் பார்ப்பன ஊடகங்களும் ஆதரவு கொடுக்குதுன்னு தொடர்ந்து நல்லா கவனிச்சுக்கிட்டு வந்திங்கன்னாலே தெரிஞ்சிருக்கும்.  மேடைக்குப் பின்னாடி ஆர்.எஸ்.எஸ்.காரங்க பயன்படுத்துற பாரத மாதா படம், அக்னிவேஷ் ராம்தேவ்னு வரிசையா காவிக் கூட்டம், கீழயிருந்து மேல இழுத்துப் போடுற ஆர்.எஸ்.எஸ். காவி நாமம்… போதாக்குறைக்கு 7 வருசமா இதுவரை லோகாயுக்தா அமைப்புக்கு (மாநில லோக்பால் அமைப்பு) ஆட்களை நியமிக்காத மோடியைப் பாராட்டுறாரு… இதுக்கு மேல என்ன வேணும்? மோடி தலைமையில குஜராத்-ல படுகொலைகள் நடந்தப்போ எல்லாம் ஹசாரே எந்தக் கிராமத்தில போய் களை புடுங்கிக்கிட்டிருந்தாருன்னு இப்போதான் ஒவ்வொரு ஆளா கேட்க ஆரம்பிச்சிருக்காங்க… முதல்ல ஏமாந்து போராட்டத்தில உட்கார்ந்த கிரண்பேடி மாதிரி ஆளுங்களுக்கே இப்போதான் உண்மை தெரிய ஆரம்பிச்சிருக்கு.. அவரு நடந்துக்குற விதம் சர்வாதிகாரமா தோணுது; அவரு யாரு எல்லோரையும் கட்டுப்படுத்திறதுக்குன்னு கேள்வி ஆரம்பிச்சிருக்கு.. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சோட பாணியே இதுதான்னு இன்னும் பலருக்குப் புரியல… முதல்ல சமூக சேவகர்ங்கிற பேருல நுழைஞ்சு, சர்வாதிகாரம் பண்றது; இந்துத்துவாவைக் கொண்டு வர்றது எல்லாம் படிப்படியாதான் நடக்கும்.

ஆமாப்பா.. கூட இருக்கிற ஆளுங்க எல்லாம் சரியில்ல போலிருக்கே… ன்னு சுதியை மாத்திட்டாரு மூனுகலர்.

வெறுமனே கூட இருக்கிறவங்கன்னு சொல்லாதீங்க… இவர் யாரைப் பரிந்துரை பண்ணாரோ அவங்க சரியில்ல… சாந்தி பூஷனையும் அவரு மகனையும் தான் 121 கோடி பேருல நல்லவங்கன்னு சொன்னாரு… ஆனா நீதிபதியை எவ்ளோ ரூபாய்க்கு வாங்கலாம்னு பேரம் பேசுன சாந்தி பூஷனோட குரல் சி.டி.யில வெளியில வந்ததும்தான் இப்போ பம்முறாரு. போகப் போகத்தான் அன்னா ஹசாரேவைப் பத்தின தகவல்களெல்லாம் வந்துக்கிட்டிருக்கு… என்று சொன்னதும் என்னப்பா சொல்ற?ன்னு அலறிட்டாரு பாவம்.

இப்போதான் அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் உள்ள தொடர்பு தெரிய ஆரம்பிச்சிருக்கு… ஹிந்து ஸ்வராஜ் அறக்கட்டளை_-ன்னு அவர் நடத்துற டிரஸ்ட் மேல உள்ள பழைய ஊழல் பிரச்சினையெல்லாம் வெளியே வர ஆரம்பிச்சிருக்கு… இனி பாருங்க… ஹசாரேவை டார் டாரா கிழிச்சு உண்மையை எடுத்துட்டு வருவாங்க… அப்பத்தான் இந்த ஊடகங்களும், வெளியே தெரியாத ஆர்.எஸ்.எஸ். கும்பலும் எதுக்கு ஹசாரேவுக்கு ஆதரவு கொடுத்ததுன்னு உங்களுக்குத் தெரியும்.
ஆமப்பா… எனக்குக் கூட இவரு நான் சொல்ற ஆளைத்தான் நியமிக்கணும்; நான்தான் தலைவரா இருக்கணும். நான் சொல்றபடிதான் சட்டம் இருக்கணும்னு ஜெயலலிதா மாதிரியே நான் – நான்னு பேசிக்கிட்டிருக்காரே… இந்தம்மா கூட அவருக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்களே… அடக் கொடுமையே!ன்னு சலிச்சுக்கிட்டார் முத்தையா.

கருப்புப் பணம் புழங்குற முக்கியமான இடமான சினிமாத்துறையில இருந்து ஆதரவு, ஊழல்ல திளைச்ச ஜெயலலிதா ஆதரவு, சவப்பெட்டி ஊழல் பி.ஜெ.பி ஆதரவு, ஜெயில்ல இருக்கிற பப்பு ஆதரவுன்னு ஜன்லோக்பால் வேலிக்கு இந்த ஓணான்கள்லாம் சாட்சி சொல்லுது. அண்ணே,  ஊழல் என்ன உங்க பென்சில்ல எழுதின எழுத்தா ரப்பரை வச்சி அழிக்கிறதுக்கு! எந்தப் பிரச்சினையா இருந்தாலும் அதனோட உண்மையான வேரைத் தேடிப் பிடிச்சு வெட்டி எறியாம எதையும் சரி பண்ணமுடியாது. இப்ப இருக்கிற முறையிலேயே தேர்தல் இருக்கும். அரசியல் இருக்கும். மதம் இருக்கும். மடமை இருக்கும். ஜாதிப் பிரச்சினை இருக்கும். உலகமயமாக்கலும், முதலாளித்துவமும் இருக்கும். ஆனா ஊழல் மட்டும் ஒழியணும்னா எப்படி?அரசியல்வாதிகள் மேல மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையின்மையை இன்னும் வலுப்படுத்தி, ஒருநபர் சர்வாதிகாரம், வழிபாட்டை உருவாக்குறதுதான் இவங்க நோக்கம். சந்தடி சாக்கில அவங்க உள்ளே நுழைச்ச விசயம் ஒன்று போதும்… பார்ப்பன ஊடகங்கள் கொடுக்கிற விளம்பரத்துக்கு..

அப்படி என்னப்பா விசயம் அது?ன்னு கேட்ட மூனுகலர் முத்தையாகிட்ட இந்தப் படத்தைக் காண்பிச்சேன். மனுசன் கோபமாயிட்டாரு. என்னப்பா இது, இடஒதுக்கீடு ஜனநாயக விரோதம்னு போட்டிருக்கான். ஏதோ எல்லாத் தரப்பு மக்கள் கிட்டேயும் இன்னைக்குப் படிப்பும், வேலைவாய்ப்பும் போய்ச் சேர்ந்திருக்கிறதுக்கு அதுதான் காரணம். கடைசியில அடி மடியில கையை வைக்கப்பார்க்கிறாங்களே… ஆமா இந்த ஹசாரே அய்யரு இல்லைன்னு சொன்னாங்க… அவருமா இப்படி இருக்கிறாரு?ன்னு பதறிப்போயிட்டார்..

இப்போ புரியுதா? நேரடியா ஒரு பார்ப்பான் இதைச் சொன்னா உடனே நமக்குத் தெரிஞ்சு போயிடும். அதனால் மறைமுகமா சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கத்தான் பார்ப்பனரல்லாத ஹசாரே கிட்ட கடப்பாறையைக் கொடுத்து விட்டிருக்கானுங்க பார்ப்பானுங்க… அய்யா சொன்ன ஒரு அடையாளம் போதும்ணே! பார்ப்பான் யாரையாவது கடுமையா விமர்சிச்சா, எதிர்த்து எழுதினா அவன் நம்மாளு- _ அவனால பார்ப்பானுக்கு ஆப்பு. அதுவே கடுமையா ஆதரிச்சு எழுதினா அவன் நம்ம ஆளாவே இருந்தாலும் நமக்குத்தான் ஆப்பு. மூனுகலரு புரிஞ்சுக்கிட்டாரு போலிருக்கு.. புரிஞ்சுக்கிட்டா பொழச்சுக்கலாம்.. என்ன நான் சொல்றது?

– சமா. இளவரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *