ஆசிரியர் பதில்கள்

மார்ச் 01-15

கேள்வி : மோடி பிரதமரானால் இந்தியாவின் நிலை எப்படி இருக்கும்? சிறிய உதாரணம் மூலம் சொல்லமுடியுமா?
– ஜெயராஜ் (மின்னஞ்சல் கேள்வி)

பதில் : ஒரு பாசிச ஆட்சி _ சர்வாதிகார ஆட்சியில் எப்படி கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுமோ அந்த வகையில், ஹிந்துத்துவ காவி ஆட்சியாகவே இருக்கும்!

கேள்வி : நம் இயக்கத்தில் (தி.க) மட்டுமே ஆரியம், பார்ப்பான் என்று பழைய விஷயத்தைச் சொல்லி மக்களைப் பிரிப்பதாக என் நண்பர் கூறினார். அதில் ஓரளவு உண்மை இருப்பது போல தோன்றுகிறது. இப்பொழுது சில ஜாதிகள் (வன்னியர், தேவர்) தானே ஜாதி வெறியைப் பரப்புகிறார்கள்? – அவினாசி (மின்னஞ்சல் கேள்வி)

பதில் : வேர்தான் முக்கியம்; அடிப்படையான கொள்கை லட்சியங்களை _ பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கம் பற்றிக் கூறாமல் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமா? ஜாதி வெறிக்கு எதிரானவர்கள் நாம். பண்பாட்டுப் பாதுகாப்பு வேறு; ஜாதிவெறி வேறு.

கேள்வி : கோவில் கொள்ளைகளைக் கடவுள் தடுக்கவில்லையே? அரசு கொள்ளைகளைச் சட்டம் தடுக்கவில்லையே, என்ன செய்வது?
– திங்கள் நகர் நூர்தீன், நெய்யூர்

பதில் : இரண்டையும் எதிர்த்துத் துணிவுடன் போராட முன்வர வேண்டும் _ துணிவுடன்.

கேள்வி : கற்சிலைகளுக்குத் தங்கக் கவசம் அணிவிப்பது போதாதென்று இப்போது முத்துராமலிங்கனார் சிலைக்கும் தங்கக் கவசம் அணிவித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : வாக்குவங்கி அரசியல் காரணம் என்று அவாள் ஏடுகளேகூட எழுதியுள்ளனவே!

கேள்வி : மாணவர்களை அறிவியல் மனப்பான்மையில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பிலுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் அவ்வாறில்லாமல் ஊதியத்திற்காக மட்டும் பணியாற்றும் நிலை குறித்து?
– பாவா. வெற்றிச்செல்வன், கீழ்வேளூர்

பதில் : மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. அத்தகைய ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் தொழிற்சங்கப் பணி நடப்பது விரும்பத்தக்கதல்ல.

கேள்வி :உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெறாதது கல்வியின் தரம் நம் நாட்டில் குறைந்துள்ளதைக் காட்டுகிறதா?
– அ.தமிழரசன், சேலம்

பதில் : அத்தகைய ஒப்பீடு தேவையில்லை; காரணம், இந்தியா வளரும் நாடுகள் பட்டியலிலிருக்கும் நாடாகும்!

கேள்வி : அம்மா உணவகம், மருந்தகம், குடிநீர்… என்று தொடங்குவதால் தமிழகப் பொருளாதாரம் உயர்ந்துவிடுமா? – க.திராவிட முரசு, காஞ்சி

பதில் : பொருளாதாரம் உயருவதைவிட, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பு உயர்ந்ததா? இல்லையா என்பதுதானே அவர்களின் முக்கிய நோக்கம்!

கேள்வி : அண்மையில் வெளிவந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பட்ஜெட்டில், பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருள்களுக்குச் சலுகை இருப்பதுபோல் ஏழைகளுக்கு ஏதேனும் உள்ளதா? – தி.அன்புமொழி, திருச்சி

பதில் : மோட்டார், கார் சலுகையெல்லாம் பரம ஏழைகளுக்கு உதவத்தானே! புரியவில்லையா? அரிசிக்கு சேவை வரி நீக்கம் _- அப்பாடா!

கேள்வி : வடநாட்டிலிருந்து வேலைதேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் அவர்களைக் கணக்கெடுப்பது, கண்காணிப்பது அவசியம் அல்லவா? – ச.மாசிலாமணி, நங்கநல்லூர்

பதில் : தேவை! அவசியம் தேவை!

கேள்வி : இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் தமிழர் நலனுக்கு எதிராகத் திரும்பி இருப்பது தேசிய இறையாண்மைக்குப் பாதகமாக அமையாதா?
– இரா.சரவணா, பாப்பையாபுரம்

பதில் : தேசிய இறையாண்மை என்றால் என்ன? அது இன்று எந்த அளவில் உள்ளது? இதற்கு விடை தந்தால் பதில் கூறுவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *