அய்யாவின் அடிச்சுவட்டில் … -112

பிப்ரவரி 16-28

அம்மாவின் கவலை

சென்னைக் கடற்கரையில் 28.3.78 அன்று நடந்த கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் இரங்கற் கூட்டத்தில் தி.மு.க.தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய இரங்கலுரையின் தொடர்ச்சி…

அன்னை மணியம்மையார் அவர்கள் பெரியாருடன் ஈரோட்டு மாளிகையில் வாழ்ந்த அந்தக் காலத்திலிருந்து அவர்கள் அருகேயிருந்து _ அவர் அன்னம் பரிமாற அதை அருந்தியவர்களில் ஒருவன் நான்.

இந்த மேடையிலே இருக்கிற நாவலர், பேராசிரியர் மற்றுமுள்ள நண்பர்கள் சிலராவது அந்த அளவுக்கு பெரியாருடனும் அன்னை மணியம்மையுடனும் பழகியிருக்கிறோம்.

ஒருவரைப் பார்த்து அறிவதற்கும் _ பழகி அறிவதற்கும் உள்ள வேறுபாட்டை நாவலர்தான் அடிக்கடி சொல்வார்.

அந்த வகையில் பெரியாரோடு _ அண்ணாவோடு _ மணியம்மையாரோடு பழகி அவர்களை உணர்ந்தவர்கள் இந்த மேடையில் வீற்றிருக்கிறோம்.

அப்படிப்பட்ட நாங்கள் பெரியாருடைய கொள்கைகளை, அன்னை மணியம்மையார் அவர்களுடைய கொள்கைகளை எடுத்துச் சொல்கிறோமென்றால் அந்தக் கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கு பெரியாருக்கு எவ்வளவு உற்ற துணையாக மணியம்மையார் அவர்கள் வாய்த்திருந்தார்கள் என்பதை அனைவரும் நன்றாக அறிவோம்.

பெரியாருடைய வாலிப வயதில் அவருடைய பொதுத்தொண்டிற்கு _ தேசத் தொண்டிற்கு _ நாட்டு விடுதலைக்கு அவர் பாடுபட்ட அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்க பெரும்பரிதியாக பெரியார் விளங்கிய அந்தக் காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அன்னை நாகம்மையார். அவர்கள் மறைந்த பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் அந்தப் பெரும் தொண்டினை இறுதிக் காலம் வரையிலே ஆற்றி வந்தார்கள்.

நிக்ழ்ச்சி ஒன்றில் அன்னை மணியம்மையாருடன் கலைஞர்-நாவலர்-பேராசிரியர்

 

பொதுத் தொண்டிலே _ சமுதாயத் தொண்டிலே ஈடுபடுகிற இப்படிப்பட்ட புரட்சிக்காரர்களுக்கு துணைவியார் வாய்ப்பது என்பது உள்ளபடியே ஒரு பெரும் சிறப்பு.

சாக்ரடீஸ் வரலாறு படித்திருக்கிறோம். சாக்ரடீஸ் தெரு மூலையிலே _ வீட்டு வாயிற் புறத்திலே நின்று தெருவிலே போகிறவர்கள், வருகிறவர்கள் என்று நூறு பேரைக் கூட்டிவைத்து அவருடைய சொற்பொழிவை முடிக்காமலேயே நடத்திக் கொண்டிருப்பார்.

எப்போது முடித்துத் தொலைக்கப் போகிறாய் என்று உள்ளேயிருந்து அவரது மனைவி சேந்த்திப்பி (Xanthippe) எழுப்புகின்ற கூக்குரல் கேட்கும். கூட்டத்தில் இருப்பவர்கள் இது என்ன கூக்குரல் என்று கேட்பார்கள். சாக்ரடீஸ் அதற்கு, ஒன்றுமில்லை; இடி, இடிக்கிறது என்பாராம்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அம்மையார் பொறுக்க முடியாமல் உள்ளேயிருந்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து சாக்ரடீஸ் தலையில் ஊற்றுவார்களாம்.
இது என்ன என்று கூட்டத்தினர் கேட்பார்களாம். இடி இடித்தது அல்லவா? அதைத் தொடர்ந்து மழை பொழிகிறது என்று சாக்ரடீஸ் சொல்வாராம்.

பெய்யெனப் பெய்யும் மழை

அன்னை மணியம்மையார் அந்த மழையாக அல்ல;  பெரியார் அவர்களுக்கு மழையாகத்தான் இருந்தார். எப்படியென்றால், வள்ளுவர் சொன்னதைப்போல பெய் எனப் பெய்யும் மழையாக இருந்தார்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்றார் வள்ளுவர்.

தெய்வத்தைக்கூடத் தொழாமல் கணவனையே தெய்வமாக வணங்குகிறவள், மழை பெய் என்று சொன்னால் மழை பொழியும் என்பதல்ல அதற்குப் பொருள்.

பெய் என்று சொல்கிற நேரத்தில் பெய்கின்ற மழைக்கு ஒப்பாவாள். அப்படிப் பெய்யவேண்டும் என்கிற நேரத்தில் பெய்கிற மழையாக அன்னை மணியம்மையார் அவர்கள் பெரியாருடைய வாழ்க்கைத் துணைவியாய், பெரியாருடைய பொது வாழ்விற்கு ஊன்றுகோலாய்த் திகழ்ந்தார்கள்.

பெரியார் மறைந்த பிறகும்கூட அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய தொண்டும், அவர் ஈடுபட்ட போராட்டங்களும், உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அப்படிப்பட்ட அம்மையார் அவர்களை இன்று நாம் இழந்து தவிக்கிறோம். நம்முடைய திராவிடர் இயக்கம் இழந்து தவிக்கிறது.

அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்றாலும், நம்முடைய பேராசிரியர் அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல _ திராவிடர் இயக்கத்துடைய கொள்கைகள் இன்று நேற்றல்ல _ ஏறத்தாழ அறுபதாண்டு காலம் _ அதற்கு முன்பேகூட ஊன்றப்பட்ட விதைதான் திராவிடர் இயக்கத்தின் விதையாகும்.

விழுதுகள்

அப்படிப்பட்ட விதையிலே முளைத்த தருவாக _ பெரியார் அவர்களுடைய சுயமரியாதைத் தரு என்ற ஆலமரம் _ முளைத்து, தழைத்து, வளர்ந்து அதிலேயிருந்து பல கிளைகள் _ பல விழுதுகள் _ பல்வேறு கட்சிகளாக _ பல்வேறு இயக்கங்களாக _ அரசியல் கட்சிகளாக பல்வேறு விழுதுகளாக விட்டிருந்தாலும்கூட பெரியாருடைய கொள்கை என்கிற அந்த ஆணிவேரை யாரும் எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது என்கிற ஓர் உண்மையை நாம் மறப்பதில்லை.

அப்படிப்பட்ட அரும்பெரும் தலைவருக்கு வாழ்க்கைத் துணைவியாராக வாய்த்து _ பாரதிதாசன் எடுத்துக் காட்டியதைப் போல, வயதில், அறிவில் முதியார் _ நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்

என்று பெரியாரைச் சித்தரித்தாரே _ அதைப் போலவே அன்னை மணியம்மையார் அவர்களும் தான் உடல் நலிவு உற்ற காலத்திலும் _ தனக்குத் தள்ளாமை வந்துவிட்டது என்று எண்ணிய நேரத்திலும், தான் எடுத்த காரியங்களை _ பெரியார் வகுத்த நெறிகளைப் போராடியாவது வெற்றி காண வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை பெற்றவராக இருந்தார்.

அவர் மறைவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பு அன்னை மணியம்மையார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். ஏறத்தாழ அரைமணி காலத்திற்குமேல் என்னோடு அவர்கள் உரையாடினார்கள்.

அய்யா நூற்றாண்டு விழா

அவர்களுக்கு இருந்த பெரும் கவலை _ பெரியாருடைய நூற்றாண்டு விழா வருகிறது; அதனைத் தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றவரையிலாவது நான் உயிரோடு இருந்தால் போதும்; அதற்குப் பிறகு நான் வாழவேண்டுமென்று ஆசைப்படவில்லை என்று தன்னுடைய விழைவினைத் தெரிவித்தார்கள். ஆனால், காலம் அவருடைய ஆசையை நிறைவேற்றி வைப்பதற்கு மாறாக _ இயற்கை அவரை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டு ஓடிவிட்டது என்றாலும் _ அவர்கள் உருவத்தால் நம்மிடையே இல்லை என்றாலும் உள்ளத்தால், இலட்சியத்தால், குறிக்கோளால், போர்ப்பாட்டால், கொள்கையால், நம்மிடையே வாழ்கிறார்கள் என்கிற ஆறுதல் பெற்று _ பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், அன்னை மணியம்மையார் விட்டுச் சென்ற அந்தப் பணிகளை நாம் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்ற சூளுரையை இந்த இரங்கல் கூட்டத்தில் எடுத்துக் கொள்வோம் என்று கூறி முடித்தார்.

தி.மு.கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டதாவது:

நம்முடைய மதிப்பிற்குரியவராக, நம்பிக்கைக்கு உரியவராக, திராவிட இயக்கத்தினுடைய பாதுகாவலராக தந்தை பெரியார்தம் கொள்கையினுடைய சின்னமாக, பெரியார் அவர்கள் மறைந்ததற்குப் பின்னாலும் அந்த மறைவைத் தன்னுடைய பணியாலே நிறைவு செய்கிற அரிய பொறுப்பை ஏற்றவராக விளங்கிய மணியம்மையார் அவர்கள், அண்மையிலே மறைந்தது காரணமாக நாமெல்லாம் மிகப் பெரிய அளவிற்குத் துயரத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.

ஒரு இயக்கத்தைக் கட்டிக் காத்து வளர்க்கின்ற எல்லாத் தகுதியோடு, அதற்காக முழுப் பொறுப்பையும் உள்ளத்திலே தாங்கியிருந்த ஒருவரை இழந்துவிட்டதே அந்த இயக்கம் என்று எண்ணுகின்ற எண்ணத்தாலே நம்முடைய துயரம் அதிகமாகிற அளவிற்கு அம்மையாருடைய மறைவு நிகழ்ந்துவிட்டது.

என்றாலும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவு வாதத்திலே நம்பிக்கை உடையவர்கள், மனிதன் ஒரு நாள் பிறக்கிறான்; சில காலம் வாழ்கிறான்; மற்றொரு நாள் மறைகிறான் என்ற இயற்கை நியதியை மறக்க முடியாத காரணத்தால் அந்தப் பகுத்தறிவின் அடிப்படையிலே நாம் இயற்கையை எண்ணி ஆறுதல் பெற்றாக வேண்டும்.

தியாகப் பட்டாளம்

அம்மையார் அவர்கள் பெரியார் அவர்களின் மறைவுக்குப் பின்னால் திராவிடர் கழகத்தை நடத்திச் சென்ற முறையை அறிந்தவர்கள், அந்தக் கழகம் சமுதாயத்திற்கு நல்ல வகையில் பயன்படத்தக்கதாக, தமிழ் இன உணர்வைக் காப்பாற்றுகிற ஆற்றலுடையதாக, தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த நேரத்திலும் ஒரு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய வல்லமை உடையதாக, இன்னும் சொல்லப் போனால் தியாகத்திற்கும் ஒரு பட்டாளம் முன்வரத்தக்கதாக அந்த இயக்கத்தை அம்மையார் அவர்கள் நடத்தினார்கள் என்றால், உள்ளபடியே பெரியார் அவர்கள் இருந்தால் ஆற்றக்கூடிய அந்தப் பணியை அம்மையார் ஆற்றினார் என்றுதான் நாமெல்லாம் மனதாரக் கருதுகிறோம்.

சிறப்புகள்

உடல் நலம் குறைந்திருந்தாலும்கூட, தளர்ச்சியுடையவராகக் காணப்பட்டாலும்கூட, அவ்வப்-போது சோர்வடைவதற்கான சூழ்நிலை அவருக்கு இருந்தாலும்கூட இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசால் பல தொல்லைகளுக்கு அவர் ஆளாகியிருந்தாலும்கூட அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தார் அவர். தன்னுடைய எண்ணத்தில் உறுதியாக, தன்னுடைய சொற்களிலே மிகமிகத் தெளிவாக, எந்த எண்ணத்திலும் குழப்பத்திற்கு இடம் தராமல் தெளிவாக அவர் விளங்கினார். பெரியார் அவர்களிடத்திலே ஏறத்தாழ 40 ஆண்டுக் காலம் அம்மையார் கற்ற பயிற்சியின் காரணமாக, பெரியாருடைய உள்ளத்திலே ஊறிவந்த எண்ணங்களை யெல்லாம் உணர்ந்த அந்த ஆற்றல் காரணமாக பெரியார் வாழ்ந்த அந்த நீண்ட வாழ்வு தமிழ்நாட்டு மக்களுக்காக ஏற்ற லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து இந்த இயக்கம் நிலைபெற வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக, அத்தகைய சிறப்போடு அம்மையார் பணியாற்றினார்கள்.

ஏறத்தாழ 35 ஆண்டுக் காலத்திற்கு மேலாக அம்மையாரை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்களிலே நானும் ஒருவன்.

அந்தக்காலம், பெரியாருடைய இயக்கம் பெரிய செல்வாக்கைப் பெறாத காலம். இன்றைக்கு மேடையிலே வீற்றிருக்கிற தலைவர்களில் பெரியாருடைய கொள்கையை செட்டி நாட்டரசர் ஒருவர் மட்டுமே ஆதரிக்கின்ற காலத்தில், இங்கே உள்ள மற்றவர்களில் பலர், (வேறு இயக்கத்தில் உள்ளவர்களை நான் சொல்லவில்லை) திராவிட இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட எங்களைப் போன்றவர்களெல்லாம் இளைஞர்களாக, மாணவர்களாக இருந்த காலத்தில், அம்மையார் மாணவியாக இருந்த காலத்திலே, பெரியாருடைய கொள்கையில் பற்றுவைத்து, பெரியாருக்குத் தொண்டு செய்வதே ஒரு இயக்கத்திற்குச் செய்கிற தொண்டு என்கிற உணர்வோடு சில ஆண்டுக்காலம் பெரியாருடன் தொண்டாற்றுவதற்காக உடன் இருந்து பணியாற்றி, அதற்குப் பின்னர் அந்த இயக்கத்திலே மற்ற தோழர்கள் மதிக்கத்தக்க ஒரு இடத்தை அவர்கள் பெற்றார்கள்.

பெரியாருடைய நம்பிக்கையை முழு அளவிற்குப் பெற்று 40 ஆண்டுக் காலம் அவரோடு பழகி, அந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றிய அம்மையார் அவர்கள் மறைந்துவிட்ட அந்தத் தன்மை, இன்றைக்கு திராவிடர் கழகத் தோழர்களைப் பொருத்தமட்டில், தாயை இழந்த பிள்ளைகளைப் போன்ற ஒரு உணர்வுக்கு அவர்களை ஆளாக்கி இருக்கிறது என்பதை நான் உணருகிறேன் என்றாலும், இலட்சியங்கள்தான் நிலைபெற்று இருப்பவை என்பதை உணர்கின்ற தோழர்கள், அந்த இலட்சியங்களைக் காப்பாற்றுவதற்காக, பெரியாருடைய இலட்சியம், ஒரு பெரும் தலைவருடைய வாழ்நாளிலே மட்டும் நிறைவேறிவிட முடியாத அளவிற்கு _ பல தலைமுறை தொடர்ந்து மக்களிடத்திலே எடுத்துச் சொல்லப்பட்டால்தான் நிலைபெறும் என்ற அளவிற்கு ஆழமாக, மிகமிக முற்போக்காக, சிந்தனைவாதிகளை மக்களிடத்திலே உருவாக்கத்தக்க தன்மை உடையவை என்ற காரணத்தால் அந்த இலட்சியத்திற்குப் பணியாற்றுவதிலே பெரியாரை, அம்மையாரை உங்கள் நினைவிலே என்றைய தினமும் வைத்துக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தோடு, அந்த இலட்சியத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்று இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

நினைவு நாள் ஏன்?

முன்னாள் முதல்வர் பெரியவர் பக்தவத்சலனார் அவர்கள் பேசுகின்றபோது, இலட்சியத்திற்குப் பணியாற்றுவதிலேதான் ஒரு பெரியவருக்கு, மறைந்தவர்களுக்கு நாம் ஆற்றக்கூடிய கடமை இருக்கிறது. அந்த இலட்சியத்தைக் காப்பாற்றுகின்ற ஆற்றலிலேதான் பெரியவருடைய நினைவை நாம் பெருமளவிற்கு நிறைவு செய்தவர்களாக ஆகமுடியும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

அந்தவகையிலே திராவிடர் கழகத்தினுடைய லட்சியத்தைக் காப்பாற்றுவதற்கு உறுதி எடுத்துக் கொள்ளத்தான் இந்த நினைவுநாள் நமக்கெல்லாம் பயன்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பெரியார் அவர்கள், அல்லாதாருக்காகவும் போராடிய ஒரு தலைவராவார். பல்வேறு வாய்ப்பை இழந்தவர்கள் ஒரு காலத்தில் அல்லாதவர்களாகக் கருதப்பட்டார்கள். அதேபோல் சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ளவர்களெல்லாம் இல்லாதவர்களாக என்றைக்கும் கருதப்படுகிற நிலையிலே இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு இயக்கம் தேவை என்றுதான் நீதிக்கட்சியிலே தலைவராகப் பொறுப்பேற்ற பெரியார் அவர்கள் அந்த அல்லாதாரும் இல்லாதாரும் _ யாரென்று பார்த்துத்தான் திராவிடர் கழகத்தையே அன்றைய தினம் தோற்றுவித்தார்கள்.

பெரியார் அவர்களுடன், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய அந்த திராவிடர் இயக்கம், யாருக்காகப் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிப் பார்த்து உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் ஒரு கணம் சிந்திப்பீர்களேயானால், இந்த நாட்டினுடைய அடித்தள மக்களுக்காக _ தீண்டாமைக் கொடுமைக்கு ஆளான மக்களுக்காக _ மூட நம்பிக்கையினாலே பலியிடப்பட்ட மக்களுக்காக _ இன்னும் சொல்லப்போனால் வெவ்வேறு வகையில் பிறரால் ஏமாற்றப்பட்ட மக்களுக்காக _ வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக _ வாழ்விழந்த மக்களுக்காக _ அறிந்தோ அறியாமலோ அடிமைத்தனத்திற்கு ஆளாகிவிட்ட மக்களுக்காக _ அதைப் புரிந்துகொள்ள ஆற்றலற்றவர்களுக்காக _ தேரையாக, புழுவாக, பூச்சியாக, சமுதாயத்திலே தாழ்ந்து கிடந்த மக்களுக்காக பெரியார் அவர்கள் அந்தப் பெரிய இயக்கத்தை இன்றைக்குத் தோற்றுவித்தார்கள் என்று சொன்னால், அன்றைக்கும் அந்தக் கொள்கையோடு அந்த இலட்சியத்தின் பணியை நாம் எந்த முகாமிலே இருந்தாலும், எந்த இடத்திலே இருந்தாலும் அந்த இலட்சியத்தோடு பொதுப்பணியை நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தேசிய இயக்கப் பாரம்பரியத்திலே இடம் பெற்ற தந்தை பெரியார் அவர்கள் _ நாட்டு விடுதலைக்காக தேசிய இயக்க முன்னணியிலே நின்ற மிகப் பெரிய தியாக சீலராக விளங்கிய பெரியார் அவர்கள் நாட்டிற்காக இந்த இயக்கம் என்று ஏற்றுக் கொண்டாலும், சமுதாயத்திற்காகத் தோற்றுவித்த அந்த இயக்கத்திலேதான் இன்றைக்கு மேடையிலே இருக்கின்ற பெரும்பாலான தோழர்கள் இருக்கிறார்கள்.
எனவே, பெரியாருடைய இலட்சியம் பல்வேறு முகாமிலே முழங்கப்படுகிற அந்த நிலையைத்தான் இன்றைக்கு நாம் காண முடியும்.

எனவே திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பைத் தவிர, வேறு சில அமைப்புகள் அந்த இலட்சியத்தை ஓரளவு தாங்கிய அமைப்புகளாக இருக்கிற காரணத்தாலே, இன்றைக்கு பெரியாருடைய இலட்சியம் விழுதுகள் விட்டிருக்கின்ற மிகப் பெரிய ஆலமரத்தைப் போல பரவி இருக்கிறது. இன்னும் விழுதுகளெல்லாம் மறுபடியும் மரமாகிற அளவிற்கு, பல்வேறு தன்மையிலே வளர்ந்திருக்கின்றன. எனவே, பெரியாருடைய இலட்சியம் என்றைக்கும் காப்பாற்றப்படும். என்றைக்கும் அந்த இலட்சியம் வெற்றி பெறுவதற்காக இந்த நாட்டிலே பல்வேறு அணியிலே உள்ளவர்கள் தொடர்ந்து பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து மறைந்துவிட்ட அம்மையார் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை திராவிடர் கழக நண்பர்களுக்கும், அம்மையாரிடத்தில் பற்றுக் கொண்ட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

– கி.வீரமணி

– நினைவுகள் நீளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *