– சென்ற இதழ் தொடர்ச்சி…
தாத்தா
அண்ணன்கிட்ட பேசினேன், அங்கேயும் மூனு, நாலு மாசம் இருக்கலாம், அப்புறம் ஊரிலே அக்கா வீட்டுலே போய் தங்கியிருந்து வரலாம், அப்புறம் தம்பி வீடு, ஏன்னா உங்களுக்கும் ஒரே இடத்திலே இல்லாம மாறிமாறி இருந்தா, மகிழ்ச்சியா இருக்கும்… ம் அதுக்குத்தான், என்று சற்றுத் தயக்கத்துடன் சொல்லி முடித்தான்.
மகனையே பார்த்துக் கொண்டிருந்தவர், எதிர்பார்த்தது வேறு. பரவாயில்லை ஒரு நிம்மதிப் பெருமூச்சுவிட்டார், சரி அமுதன், மற்ற பிள்ளைங்க வீடுதானே, அது எப்போ வேணும்னாலும் போய்க்கலாம் இப்போ, என்ன அவசியம் வந்தது? என்றார்.
கால்களின் பெருவிரலால் தரையில் அழுத்தி அழுத்திச் சுற்றிக் கொண்டிருந்தவன் எப்படிச் சொல்வது, எதைச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான். இப்பொழுது அவனின் நிலையை உணர்ந்தவர்போல உங்களுக்குப் பிரச்னை நாங்களா, பிள்ளைகளா, என்றார் நாசுக்காக.
நெருப்புத்துண்டை மிதித்தவன்போல, அப்பா!… என்றான் அமுதன். மகன் போடும் அதட்டலுக்கு ஒன்றும் பயப்படாமல் பேரப் பிள்ளைகளுக்கு நாங்க ரெண்டு பேரும் ஒன்றும் செய்யக்கூடாது அதானே?… என்று உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெரியும் உண்மையைச் சொன்னார். அவனும் விட்டுக்கொடுக்காமல் அதுதான் அவ இருக்காளே…!, என்று கூறியதும் சிதம்பரம் ஓ.. அப்படியா!, என்று மெல்ல தலையை மேலும் கீழும் அசைத்து சிவகாமியம்மாளைப் பார்த்தார்.
ஆமாம், நாங்கதான் என்னென்ன வகுப்பு இருக்கு? என்ன சாப்பாடு கொடுக்கணும்? என்ன செய்யணும்? என்று எல்லா அட்டவணையும் போட்டு வைச்சு இருக்கிறோம். நீங்க வேற ஏன்…? தனியா என்று சிடுசிடுப்புடன் பேசினான்.
பொறுமையுடன் எல்லாவற்றையும் கேட்டவர் அப்போ, எங்களுக்குன்னு எந்த உரிமையும் கிடையாதா.. நாங்க என்ன தடைக் கைதிகளா சொல்லுப்பா, என்று குரல் தழுதழுக்கக் கேட்டார்.
அவங்களுக்கு எல்லாம் சரியா சொல்லிக் கொடுத்து வளர்க்கணும்னு நினைக்கிறோம் அது தப்பா? என்று மீண்டும் குரலில் ஓர் அழுத்தத்தைக் கொடுத்தான் அமுதன்.
தன் மகனின் வாய்மொழியாக அதைச் சற்றும் எதிர்பார்க்காத பெரியவர் மெல்லிய குரலில் நாங்க மட்டும் என்ன? எல்லாம் தப்புத் தப்பாவா சொல்லிக் கொடுப்போம்!, என்று மிகவும் பரிதாபமான குரலில் கேட்டார்.
ம்! என்று தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
இது என்ன பெரிய கொடுமையாக அல்லவா இருக்கின்றது..! சம்பாதிக்க வந்தவளிடம் உள்ள நம்பிக்கை, பெற்றவர்களிடம் இல்லை, அப்படித்தானே, என்று மகனைப் பார்த்தபடி கேட்டார்.
சிறிது நேரம் வரை பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு இருந்தவனிடம் சிவகாமியம்மாள் கன்னத்தை ஈரமாக்கும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டு அமுதன், முகத்தை இப்படித் திருப்பி, அப்பா கேட்கிறார் பதில் சொல்லு, என்றார் விசும்பும் குரலில்.
சீறிக்கொண்டு இப்போ, நீங்க ஆரம்பிக்காதீங்க, ஏம்மா மறந்து விட்டீங்களா? அந்தக் காலத்திலே எல்லாம் அவரு விருப்பம் போலதான் நடக்கணும்! ஒரே அக்கா! அவங்களையும் அங்கே போய் கட்டிக் கொடுத்தாரு! நமக்குன்னு என்ன பெரிசா செய்தாரு?, சற்று நிறுத்தியவன் இப்பவும் உங்களுக்காகத்தான் பொறுமையா இருக்கேன், என்று கூறிவிட்டு முகத்தை மீண்டும் திருப்பிக் கொண்டான்.
மகனை அதிர்ச்சியுடன் பார்த்து என்னடா? இப்படிக் குத்தலா பேசுற, அவரு செய்யாமலா நீங்க எல்லோரும் ஆளானீங்க? என்றவர் அழுகை தொண்டையை அடைக்க பேச்சை நிறுத்திக் கொண்டார்.
கண்களில் வழியும் மனச்சுமையைக் கைகளால் துடைத்தால் மட்டும் போதுமா? அந்த முதிய தம்பதியர் தங்களின் ஆறுதலைக் கண்களால் பரிமாறிக் கொண்டார்கள்.
தென்னையை வளர்த்தா இளநீரு, பிள்ளையைப் பெற்றா கண்ணீரு என்பது அன்றுதான் முதன்முதலாக அனுபவமாயிற்று அவர்களுக்கு.
அன்று கைக்குழந்தையும் சூழல் புரிந்து எந்தவித ஓசையும் எழுப்பாமல் அமைதியாக இருந்ததும், அங்கு நடக்கும் மனப் போராட்டங்களுக்கு ஓர் தீர்வு காண உதவியது.
மௌனம் கலைத்து பணிப்பெண்ணை அழைத்து இரண்டு டம்ளரில் வெந்நீர் கொண்டு வரச் சொன்னார்.
கொண்டு வந்து கொடுத்ததில் ஒன்றை மனைவியிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். மற்றொன்றை காய்ந்திருந்த தொண்டை நனைய முழுவதும் அருந்தி முடித்தார். அது சற்று இதமாக இருந்தது. லேசாகச் செருமிவிட்டுக் கொண்டார் சிதம்பரம்.
அமுதன் இப்படிப் பார்!, என்றார் கனிவுடன். அவன் முகத்தை மறுபக்கம் சாய்த்தபடி அமர்ந்து கொண்டான். நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு! என்றார்.
அந்தக் காலத் தகப்பனா கொஞ்சம் படிப்பு, குறைந்த சம்பளம் அதனால், இரண்டு மூனு இடத்தில் வேலை பார்த்து, எவ்வளவு சிக்கனமா இருக்க முடியுமோ இருந்து, கிடைக்கிற வேலை இடம் தூரமா இருந்தாலும் சைக்கிள்லதான் போய் வந்தேன். ஏன், உன் அண்ணனும் நீயும் சில நாட்கள் ராத்திரிச் சாப்பாட்டை வேலை செய்த இடத்திற்குக் கொண்டு வந்து கொடுத்ததை மறக்கலப்பா!, என்றார் நெகிழ்வுடன்.
சிலவற்றை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கத்தான் வேணும். குறைஞ்ச விலையில ஒரு துணியை வாங்கி அதிலே மூனு, நாலு சட்டை தைத்துப்போட்டு வாழ்ந்து வந்ததாகத்தான் நினைப்பு! என்று நிறுத்தினார்.
சிவகாமியம்மாளுக்கு கடந்த காலத்தின் நினைவுகள் பசுமையாக மனதில் நிழலாடிக் கொண்டிருந்தன. சிதம்பரம் மீண்டும் தொடர்ந்தார். செய்ததையெல்லாம் சொல்லிக்காட்டி, உன் மனதைப் புண்படுத்த நினைக்கல, உன் அம்மாவும் சேர்ந்துதான் பல துன்பங்களை அனுபவிச்சா, என்று தம் மனைவியை நன்றியோடு பார்த்தார்.
பெருமூச்சுடன் உங்களுக்குத்தான் எல்லாம் செய்தேன், ஆனா! உங்க மனசுக்குப் பிடித்த வாழ்க்கையைக் கொடுக்கவில்லைங்கறது, மகனைப் பார்த்துக்கொண்டே இன்றைக்குத்தான் தெரிந்துக்கிட்டேன், என்றார் அமைதியாக.
அவரிடம் ஒரு உற்சாகம், இப்போ எங்க மனசு பூரா இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதில்தான் ரொம்ப மகிழ்ச்சியும் நிம்மதியுமா இருக்கு, என்றபோது மகனை மீண்டும் பார்க்கிறார்.
செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி அமர்ந்திருந்தான்.
தலையை ஆட்டிக்கொண்டே மீண்டும் தொடர்ந்தார். நாங்க பெத்த பிள்ளைங்க நல்லா இருக்கணும் என்கிற ஒரே நினைப்போடு வாழ்ந்தவங்க, இப்போ நீங்க பெத்த பிள்ளைங்களையா… கெடுத்துவிடுவோம்? கொஞ்சம் யோசித்துப்பார், என்று அமுதன் சிந்திக்க வேண்டும் என்று நிறுத்தினார்.
மீண்டும் அவரே, அப்போ அந்தக் காலத்திலே உங்களுடன் செலவழிக்க எங்களுக்குக் கிடைக்காத நேரத்தை இப்போ உங்க பிள்ளைங்களோட செலவழிக்க விரும்புறோம்!
உங்க விருப்பம்போல வளர்த்துக்குங்க! நாங்க ஒன்னும் அதைப்பற்றிச் சொல்லவில்லை. ஆனா, தாத்தா பாட்டியா எங்களுக்கும் கொஞ்சம் இடங்கொடுங்கன்னுதான் கேட்கிறோம் என்று மனம் இளகப் பேசியவர், பெத்த பிள்ளையா இதுவரை எதுவும் உரிமையுடன் கேட்டது இல்லை! எங்கள வீட்டை விட்டுப்போகச் சொல்லாதே! மரண தண்டனை பெற்ற குற்றவாளிக்குக்கூட கருணை மனு இருக்கு! அதைப் போலத்தான் கேட்கிறோம் என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று எழுந்து நின்று கைவணங்கிக் கேட்டார்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காத அமுதன் அதிர்ச்சியில் துணுக்குற்றான்.
பின், நாற்காலியைக் காலால் பின்னுக்கு ஒரு தள்ளுத் தள்ளி விட்டு எதுவும் பேசாமல் அறைக்கு விரைந்தான்.
சிவகாமியம்மாள் கணவரின் மறுபக்கத்தைப் பார்த்து உருக்கத்துடன் அமர்ந்து இருந்தார்.
சிதம்பரத்தின் மனநிலையைச் சொல்ல வார்த்தைகள் உண்டோ?
அங்கு நடந்தது எதுவும் புரியவில்லை யென்றாலும் கதவின் இடுக்குவழி பார்த்துக் கொண்டு இருந்த கதிரவனின் பிஞ்சு மனம் தாத்தா வேணும் என்று மட்டும் கூறிக்கொண்டிருந்தது.
பெற்ற மனம் பித்து! பிள்ளை மனம்? கல்லாக இருக்கவில்லை.
தாயின் மீது கொண்ட பாசம் வளைந்து கொடுத்தது.
அந்த ஆண்டு முதல் கதிரவன், பள்ளித் தேர்வுகளில் உச்சத்தேர்ச்சியுடன், சிறந்த மாணவன் என்கிற நற்மதிப்பும் பெற்று வந்ததைப் பார்த்த அமுதன் தம்பதியர் பூரித்துப் போனார்கள்.
நாளடைவில் சிதம்பரம் சிவகாமியம்மாளுக்குப் போடப்பட்டிருந்த தடைகள் மெல்ல மெல்லத் தகர்த்தப்பட்டன.
காலத்தின் சுழற்சி இயற்கையின் ஆளுமையில் நடந்துகொண்டிருந்தது. மாலை நேரம், சற்று ஓய்வாக சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன்.
முன்பு இருந்த வீட்டை விற்றுவிட்டு இரண்டு மாடிகள் கொண்ட புதிய வீட்டிற்குக் குடிவந்து ஓர் ஆண்டுதான் இருக்கும்.
வெளியே தோட்டத்தில் மலர்ந்திருந்த மலர்களின் மணம் காற்றில் மிதந்து வந்து இதமாக வீசிக்கொண்டிருந்தது.
மனைவியும் பணிப்பெண்ணும் கடைத் தொகுதிக்குச் சென்றிருந்தார்கள். அந்த நேரத்தில் மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்த மகன் கதிரவன், மருமகள் இருவரையும் பார்த்தவுடன் நிமிர்ந்து அமர்ந்துகொண்டான் அமுதன்.
அப்பா! இன்றைக்கு சமூக மன்றத்தில், வரும் தேசிய நாள் கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளைப் பற்றிய முக்கியக் கூட்டம், போய் வருகிறோம். அப்படியே திரும்பி வரும்போது பல்கலைக்கழகத்திலிருந்து தங்கச்சியையும் அழைத்து வரேன் அப்பா! என்று கூறிவிட்டுத் திரும்பியவன் கைகளில் இருப்பது?
கதிர், அது என்ன?, என்று அமுதன் கேட்டவுடன் தன் கையில் இருந்த புத்தகங்களைக் காட்டி தாத்தா கொடுத்த தமிழாசிரியர் ராமசாமி அய்யா புத்தகங்கள்! நண்பரிடம் கொடுப்பதற்கு எடுத்துச் செல்கிறேன், என்று கூறிவிட்டு வாசலில் நிறுத்தியிருந்த வாகனத்தில் மனைவியுடன் புறப்பட்டான் கதிரவன்.
அவர்கள் சென்றதும் இந்தக் காலத்திலே கண்டதே காட்சி கொண்டதே கோலம்! என்று வாழும் பெரும்பான்மையான இளையர்கள் மத்தியில், இங்கு படிப்பு முடித்து, பின் வெளிநாடு சென்று படித்து, இன்று அரசாங்கத்தில் நல்லதொரு பணியில் இருந்தாலும், கதிரவனின் பண்பும் குணமும் யாருக்கு வரும்?
சற்று நேரம் அமைதியாக இருந்தான். கதிரவனை தன் வளர்ப்புத்தான் என்று பெருமிதம் கொள்ள முயன்றாலும் குற்ற உணர்வால் குறுகிப் போனான்.
இது நீர்மேற் குமிழி போன்றது, நிரந்தரம் இல்லாத நிலை. ஓடும் சக்கரம் ஓர் இடத்தில் நிற்கத்தான் வேண்டும். அன்று உனக்கும் புரிந்துகொள்ள காலம் வரும்! என்று அறிவுரையாகச் சொல்லி வந்தவர்.
மெல்ல எழுந்து மலர்மாலை போடப்பட்ட அந்தப் பெரிய படத்தின் அருகில் சென்றான் அமுதன்.
படத்தின் வழி அவரின் பார்வை, பார்ப்பதைப் போன்றே இருந்தது. அப்பா…! (முதல்முறையாக அழைப்பதைப் போன்ற உணர்வு) அப்பா… மன்னித்து விடுங்க, இப்போ உங்களைப் பற்றி நல்லாப் புரிந்துகொண்டேன் என்று வாய்விட்டுச் சொல்லி பலமுறை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்ளம் துடித்தாலும், இன்று அவர் இல்லை!
மனம் கனத்தது, கண்களைக் கண்ணீர் மறைத்தது. அப்பா, தனக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுபோல ஓர் நிம்மதி.
மெய்சிலிர்க்க அமுதன், அப்பா, நானும் விரைவில் ஒரு தாத்தாவாகப் போகிறேன்! உங்க மாதிரி நானும்…! என்று நிறுத்தி ஏதோ யோசித்தவன், ஆமாம்.. அதுதான் சரி, கதிர் கைகளில்! இதுவரை திரும்பிக்கூட பார்க்காத சிந்தனைக் களஞ்சியங்களைத் தேடி மகனின் நூலக அறைக்கு ஓடினான்.
சிறிது நேரத்தில் கையில் ஓர் புத்தகம்! வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினான். மானமும் அறிவும்தான் மனிதர்க்கு அழகு!, என்று படிக்கும்பொழுது கதிரவனை நினைத்து மகன் தந்தைக்கு ஆற்றியுள்ள மிகப்பெரிய உதவியென்றால் அது? இது அல்லவோ! என்று மனமகிழ்ந்தார் தாத்தா. (அமுதன்)
இந்தத் தாத்தாவிற்கு இதுதான் ஆரம்பம்!
– தமிழ் முரசு, 8.12.2013,
( தங்கமுனை விருது 2013 போட்டியில் கௌரவக் குறிப்பு பெற்ற சிறுகதை )
– மலையரசி