ராம வன்ம பூமியில் கொலைகாரக் காவிகள்!

பிப்ரவரி 16-28

– சரவணா ராஜேந்திரன்

1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பின் காரணமாக ஒரே நாளில் `ராம ஜென்ம பூமி உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது. ராமர் பிறந்த புனித பூமி வன்முறைக்களமானதே என உலகம் முழுவதிலுமுள்ள இந்து மதத்தினர் வேதனைப்பட்டதாக ஓர் ஆங்கில மாத இதழ் தலைப்பிட்டிருந்தது. 2006-ஆம் ஆண்டு இரண்டு சாமியார்கள் குழு நில அபகரிப்பு தொடர்பாக மோதிக்கொண்டதும் அதில் சிலர் கொல்லப்பட்டதும், செய்தியாக வந்தவுடன் பத்திரிகைகளின் பார்வை மீண்டும் அயோத்தியின் மீது திரும்பியது.

 

அதற்கு அடுத்த ஆண்டு கழிவறைத் தொட்டியில் ஒரு சாமியார் மற்றும் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டிப் புதைக்கப்பட்ட விவகாரம் ஜன்மோர்ச்சா என்ற பத்திரிகையில் வெளிவந்தவுடன் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு சிலரின் கைப்பாவையாக மாறி இருப்பதால், உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்டு பொய்யான தகவல்களே கிடைக்கின்றன. இந்த நிலையில் அயோத்தியின் உண்மை நிலையை அறிய `ஓபன் என்ற ஆங்கில இதழ் கடந்த ஆண்டு (2013) ஆகஸ்ட் மாதம் களமிறங்கியது. களமிறங்கிய உடனேயே சாதுக்களின் நில ஆக்ரமிப்பு விவகாரத்தைப் பூதாகரமாக வெளிக்கொண்டு வந்தது. இதனை அடுத்து தெகல்காவும் களமிறங்க, நூறாண்டு காலமாக நடந்து வரும் ஒரு பயங்கரம் வெளியானது. ராம ஜென்ம பூமி என்பது ராம வன்ம பூமியே என்ற  இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த பயங்கர உண்மை வெளிவந்தது. 21 ஜூலை 2013-_இல் சராயு நதிக்கரையில் உள்ள ஒரு சிறிய நிலத்திற்காக இரண்டு சாமியார் குழுக்கள் இடையே பெரிய கலவரம் நிகழ்ந்தது.  பகவான் தாஸ் என்ற சமாஜ்வாதி கட்சி ஆதரவு பெற்ற சாமியாரின் குழுவும் ஹரி சங்கர் தாஸ் என்ற பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற சாமியாரின் குழுவும் அயோத்தியின் புறநகரில் மோதிக்கொண்டன.  எப்போதும் போல கல், கம்பு கத்தியுடனான கலவரமல்ல; வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி சகிதம் மோதிக் கொண்டனர். இதில் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒருவர் கொலை செய்யப்பட்டார். சுமார் 200 ஆண்டுகாலமாக நடந்துவரும் இது போன்ற வன்முறைகள் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பரிணாமத்தில் ஆயுதங்களுடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. ராமரின் ஜென்ம பூமி என்று இவர்களால் கதைக்கப்படும் நிலம் ராம வன்ம பூமியாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.

நவீன ரக துப்பாக்கிகளுடன் சாமியார்கள்

சாமியார்களின் கரங்களில் ஜெபமாலையும், கமண்டலமும்தான் இருக்கும் என்பார்கள். ஆனால் அங்கே சாராய பாட்டில்கள், குடிலின் இரகசிய அறையில் விபச்சாரிகள் மற்றும் இடுப்பின் முன்பு கத்தி மற்றும் வாள் போன்றவை இருந்தன. தற்போது  உக்ரேன் தயாரிப்பு துப்பாக்கிகளும், நவீன ரக கையடக்க பிஸ்டல்களும் இருக்கின்றன.  அயோத்தியாவில் பல சாமியார்களின் மீது வயதுக்கு வராத குழந்தைகளைக் கற்பழித்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், சாமியார் வேடம் மற்றும் மக்களின் மூடத்தனத்தால் அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்.

குருவைக் கொலை செய்து அந்த இடத்தைப் பிடி

முன்பு அயோத்தியா(பைசாபாத்) நகரின் காவல்துறை இணை ஆணையராக இருந்தவரும் தற்போது ரேபரேலி மாவட்டத்தின் ஆணையராக இருக்கும் ஆர்.கே.எஸ் ராதோட் கூறும்போது, பைசாபாத்(அயோத்தியா) நகரில் இருக்கும் சாதுக்களில் பொரும்பாலானோர் மிகவும் கடுமையான குற்றங்களைச் செய்தவர்களாக உள்ளனர். அவர்களில் பலரது குற்றப் பின்னணியைப் பார்க்கும் போது, பெரிய பெரிய கொலை மற்றும் வழிப்பறிக் குற்றவாளிகள் அனைவரும் சாதாரணமானவர்கள்தான். நீண்டகாலமாக பைசாபாத் காவல்துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தர்மேந்திர சிங் கூறுகையில், ஏதாவது ஒரு சாமியாரின் மீது புகார் வராத நாளே கிடையாது. குழுக்களுக்குள் சண்டை, சிறுமிகள் மற்றும் பெண்களைச் சீண்டியது, போதைப்பொருள் உட்கொண்டு பொது இடத்தில் அநாகரிகமாக நடந்தது என தினசரி புகார்கள் வந்துகொண்டு தான் இருந்தன. சில நேரங்களில் நான் மிகவும் வேதனைப்பட்டதுண்டு, இது போன்ற காரியங்கள் செய்வதற்கு சாமியாராக ஏன் இருக்கவேண்டும் பேசாமல் ரவுடிகளாக மாறிவிடலாமே? என நினைப்பதுண்டு.

காவிகளிடம் கண்ணை பறிகொடுத்த சகோதரர்கள்

அயோத்தியாவின் மாஜிஸ்ரேட் தரக்கேஷ்வர் பாண்டே மற்றுமொரு திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார்.  இராவணன் சீதையைக் கவர எத்தனையோ வேடங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது சாமியார் வேடம்தான். காரணம், சாமியார் வேடத்தில்தான் மக்களை எளிதில் ஏமாற்ற முடியும். அயோத்தியாவில் உள்ள அனைத்து சாதுக்கள் மீதும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்குற்றம் அல்லது போதை உட்கொண்டு ரகளை செய்தல் மற்றும் கொலைக்குற்றம் போன்றவை உண்டு. சராயு நதிக்கரையில் உள்ள ராம்ஜானகி கோவில் மடத்தின் தலைமை குருவான கிஷோர் சரண் சாஸ்திரி, பக்தர்களின் உள்ளத்தில் சாமியைவிட சாமியார்கள்தான் உயர்ந்தவர்கள். சாமியார்களுக்குத் தலைவர் குரு. அவரே எல்லா அதிகாரங்களையும் கையில் கொண்டவர். ஆகையால் குருவின் காலைப் பிடித்து சீடனாகவேண்டும். பிறகு அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தான் குருவாகிவிடவேண்டும். இதுதான் தற்போதைய சாமியார்களின் நடவடிக்கை என்கிறார். சாமியார் பாரம்பரியம் ஒழுக்கம் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது, எல்லா மடங்களிலும் தலைமை குரு தனக்கு எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு சீடர் வழியில் மரணம் நேரலாம் என்று பயத்துடன் தினசரி நாட்களைக் கழிக்கின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மத குருமார்களின் மரணம் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. 2012ஆம் ஆண்டு நகரின் முக்கிய கோவிலான ஹனுமான் கோவில் மடத்தின் தலைமை குருவான ஹரிசங்கர் தாஸ் மீது நவீன ரக கைத்துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 8 குண்டுகள் கழுத்து வயிறு மற்றும் தொடையில் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய நீண்ட நாளைய சீடன் ஒருவனே அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். அதே மடத்தின் புதிய தலைமை குரு ரமேஷ் சரண் தாஸ் மடத்தில் உள்ள 4 சீடர்கள் மீது கொலைமுயற்சியில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டினார். இதற்குக் காரணம் ஹனுமான் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட ஏராளமான சொத்துக்களையும் பெருமளவில் குவிந்து இருக்கும் தங்க நகைகளையும் அபகரிக்கும் நோக்கமே ஆகும். அடியாட்களை வைத்து கொலை மற்றும் நிலங்களை அபகரிக்கும் அயோ(க்கிய)த்தி சாமியார் டான் சாமியார் எனப்படும் திரிபுவன் தாஸ்.

அகில பாரதிய வினர்ய மற்றும் சாமியார்கள் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் கவுரி சங்கர் தாஸ் என்பவர் பைசாபாத் நகர காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சாமியார் ஹரி சங்கர் தாஸை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சாமியார் திரிபுவன் தாஸ் என்ற தலைமைச் சீடன் தன்னையும் கொலை செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டு வருவதாகவும், மற்றும் அவனது ஆயுதக்கிடங்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். 2012ஆம் ஆண்டு திரிபுவன் தாஸின் வலதுகரமான சாமியார் ஹரிநாராயண் தாஸ் அயோத்தியா நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த போது போலீஸாருக்கும் சாமியார் குழுவிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தச் சண்டையில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். போலீசாரால் கொல்லப்பட்ட ஹரிசங்கர் தாஸ் மீது 17 குற்ற வழக்குகள் உள்ளன. இதில் குழந்தைகள் மீதான பாலியல் வழக்கு மூன்று உள்ளது. இது போன்ற சம்பவங்களைத் தொகுத்தால் பல தொடர் புத்தகங்களே எழுதலாம்.

குற்றச்செயல்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கூடம்

சிறையில் இருக்கும் ராம்சரண் ராமானந்த சாமியார் கொடுத்த பேட்டியில், அயோத்தியில் குற்றங்கள் பெருக உஜ்ஜைன் மடத்தைச் சேர்ந்த திரிபுவன் தாஸ்தான்  காரணமாக இருந்தார். இவர் பிறருடைய சொத்தை அபகரிக்க வேறு வேறு மடத்தின் சீடர்களை போதை மருந்து மற்றும் பெண்கள் மூலம் அவர்களின் மனதை மாற்றி கொலை வரை செய்ய பயிற்சியளித்தார். மேலும் அவர் கூறியபோது, “தன்னுடைய கமண்டலத்தில் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு திரியும் திரிபுவன் தாஸின் குற்ற நடவடிக்கை காரணமாக அவனை ஹனுமான் காடி மடத்தில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால் அவன் வெளியேறி வெளியிடங்களில் இருந்து சாமியார்களை அழைத்துக்கொண்டு புதிய மடத்தை ஆரம்பித்தான். அவன் அழைத்து வந்த சாமியார்கள் அனைவருமே பெரும் குற்றப்பின்னணி உடையவர்களாக இருந்தனர். அயோத்தியில் நடந்த அனைத்துக் குற்றச் சம்பவங்களுக்கும் மூல காரணம் திரிபுவன் தாஸ் என்ற திரிதாஸானந்த். இவனே நேரடியாக 70க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்துள்ளான். மேலும் தனது சீடர்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்துள்ளான். இவன்தான் அயோத்தியாவில் குற்றச்செயல்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கூடமே தொடங்கியவன் என்றார். கவுரி சங்கர் என்ற சாமியார் கூறுகையில், திரிபுவன் தாஸ் நேரடியாக எந்தக் குற்றச்செயலும் செய்யமாட்டான், அவன் தன்னுடைய சீடர்கள் மூலம் தன்னுடைய காரியத்தை அரங்கேற்றிவிடுவான்.  இவனுடைய சீடர்கள் அனைவருமே சிறையில் இருந்தவர்கள், சிறையில் இருக்கும் வேறு குற்றவாளிகளும் வெளியில் வந்த பிறகு இவரிடம் தீட்சைபெற்று சாமியாராகி குற்றச்செயல்களில் இறங்கிவிடுகின்றனர். திரிபுவன் தாஸ் இன்றும் தன்னுடைய மடத்தில் இருந்துகொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறான் என்றார்.

நிருத்திய கோபால் தாஸ்

ராம ஜென்மபூமி சமிதி தலைவர் ராமச்சந்திர பரமஹம்சரின் ஆலோசகரும் துணைத்தலைவருமான நிருத்திய கோபால் தாஸ் என்ற சாமியார் பெயரிலும் பல குற்றவழக்குகள் உள்ளன. தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு மடத்தின் தலைவர் கூறியபோது, நிருத்திய கோபால் தாஸ், சாமியார் அல்ல; ஒரு காலத்தில் கல்கத்தாவில் பல குற்றச்செயல்களைப் புரிந்த பயங்கரமான குற்றவாளி. குற்றவாளிகளை போலீசாரின் பிடியில் இருந்து விடுவிப்பது, மடத்தின் சொத்துக்களை போலிப் பத்திரங்கள் மூலம் விற்பது மற்றும் சாதுக்களுக்குப் பெண்களை அனுப்புவது போன்ற காரியங்களைச் செய்து வருகின்றான். இவன் கண்ணில் ஒரு இடம் தென்பட்டுவிட்டால் அதை வாங்கியே தீருவான். அதைக் கொடுக்க மறுத்தால் இறுதியாக அந்த இடத்தின் உரிமையாளர்களைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்றுவிடுவான். இப்படியே பல இடங்கள் மடங்களாக மாற்றப்பட்டு அவனுடைய சொத்துக்களாக மாறிவிட்டன என்றார்.

எழுத்தாளர் சாரதா துபே தன்னுடைய புத்தகமான போட்டரஸ் ஆப் அயோத்தியாவில், அயோத்தியா நகரில் உள்ள பிரமோத் வனம் பகுதியில் பழைய கால ஆடம்பர பங்களா ஒன்று இருந்தது. அங்கு இருந்தவர்கள் சுமார் 5 தலைமுறைகளாக அங்கு வசித்து வந்தார்கள். ஒரு முறை தற்செயலாக அந்தப் பகுதிக்குச் சென்ற நிருத்திய கோபால் தாஸ் பார்வையில் அந்த பங்களா பட்டது. அந்த நிமிடமே காரில் இருந்து இறங்கி அந்த பங்களாவை வாங்குவது குறித்து வீட்டு உரிமையாளரிடம் பேசினார். ஆனால், தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். இதை விற்க முடியாது என்று உரிமையாளர் கூறிவிட்டார். பலமுறை தானே நேரடியாக வந்து கேட்டுவிட்டார். இறுதியாக, 2008ஆம் ஆண்டு அந்த வீட்டின் உரிமையாளர் அடையாளம் தெரியாத 8 நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருந்த பிறகு இறுதியில் அவர்கள் குடும்பத்துடன் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை, தற்போது அந்த பழங்கால மாளிகை நிருத்திய கோபால் தாஸின் உல்லாச மாளிகையாக மாறிவிட்டது என்று தனது நூலில் எழுதியுள்ளார்.

சுமார் 5 தலைமுறைகளாக வாழ்ந்த பங்களாவை அபகரித்த மகான் குறித்து  மற்றொரு திடுக்கிடும் செய்தியும் உண்டு. மணிராம்தாஸ் என்ற புகழ்பெற்ற மடாதிபதியின் பிந்து சரோவர் கோவில் தொடர்பானது. மணிராம் தாஸின் முக்கிய சீடர்களில் ஒருவரான திரிவேணி தாஸ் என்பவருக்கும் நிருத்திய கோபால் தாஸுக்கும் பிந்து சரோவர் கோவில் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்தச் சம்பவம் காவல்துறை தலையீடு வரை சென்றுவிட்டது. காவல்துறை இருவருக்கும் சமரசம் செய்துவைத்தது. சில நாட்கள் கழித்து திரிவேணி, சராயு நதிக்கரை ஓரத்தில் தலை முற்றிலும் நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். காவல்துறையும் அதிகாலையில் குளிக்க வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்துவிட்டார் என்று கூறி வழக்கை முடித்துவிட்டது. ஆனால் அந்தச்சாலையில் டிராக்டர் கூட மிகவும் மெதுவாகத்தான் செல்ல முடியும். இது திட்டமிட்ட கொலை என்று பலரும் கூறுகின்றனர். இந்தக் கொலைக்குப் பின்னால் நிருத்திய கோபால் தாஸின் சதித்திட்டம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். ஆனால் யாரும் அவருக்கு எதிராக புகார் கொடுக்கத் துணிவதில்லை. என்ன செய்ய சாமியார்களுக்கும் உயிராசை!? கத்தி எடுத்தவன் கத்தியால்….

வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்ற முதுமொழிக்கேற்ப நிருத்திய தாஸ் மீது அவருடைய பகைவர்கள் தாக்குதல் நடத்தினர். 2001 மே 12ஆம் தேதி பிரபல அரசியல் தலைவரின் சந்திப்பிற்கு முதல் நாள் அதிகாலை அய்ந்து மணியளவில் தனது பாதுகாவலர்களுடன் நதிக்கரையில் குளித்துக்கொண்டு இருந்த நிருத்திய கோபால் தாஸ் மீது நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த நிருத்திய கோபால் தாஸ் மற்றும் அவரது சீடர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மறுநாள் பிரபல அரசியல்வாதி மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வெளியில் வந்ததும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நிருத்திய கோபால் தாஸ்மீது தாக்குதல் நடத்தியதாக பொய்யான செய்தியை பத்திரிகையாளர்களிடம் கூறி சம்பவத்தைத் திசை திருப்பிவிட்டார். இந்தத் தாக்குதல், அர்த்தாத் சாது சமாஸத்தில் இருந்து விரட்டப்பட்ட தேவ்ராம் தாஸ் வேதாந்திரி என்ற சாமியாரின் சதித்திட்டம் என்று கூறப்படுகிறது. இந்த வேதாந்திரி சாதுவை சமாஸத்தில் இருந்து துரத்திவிட்டவர் நிருத்திய கோபால் தாஸ் தான். இந்தச் சம்பவத்திற்குப் பழிக்குப் பழிவாங்கும் விதமாக இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வேதாந்திரி தாஸ் என்ற சாமியாரை போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடிவந்த போலீசார் 1995-ஆம் ஆண்டு 13 வயது பெண்ணுடன் தனிமையில் பாகல்ப்பூர்(பிகார்) நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து கைது செய்தனர்.

அம்மண சாமியார்கள்

அயோத்தியில் நடக்கும் குற்றங்களில் அம்மண சாமியார்களின் பங்கு அதிகம். சுமார் எழுநூற்றுக்கும் அதிகமான நாகா சாதுக்கள் இங்கு தங்கி இருக்கின்றனர். பொதுவாக இந்த மடாலயத்தில் உள்ள சாதுக்கள் அனைவருமே தங்களை மடாலயத்தின் தலைவராகவே கருதிக்கொண்டு இருக்கின்றனர். அப்படியென்றால் அந்த மடாலயத்தின் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த மடாலயத்தின் தலைவராக இருந்த ஹரிபஜன் தாஸ் சாமி, 1984-ஆம் ஆண்டு சக சாமியார்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்குப் பிறகு தற்காலிகமாக மஹந்த் தீன் பந்து தாஸ் என்பவரை நியமித்தார்கள். அதன் பிறகு இரண்டு குழுவாகப் பிரிந்து நாகா சாதுக்கள் தங்களுக்குள் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். பல முறை இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்க தற்காலிக மடாலயத் தலைவர் உயிர் பயத்தில் மடத்தைவிட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். 1995-ஆம் ஆண்டு நாகா சாது நவீன் தாஸ் என்பவன் தன்னுடைய 4 கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவில் வளாகத்திலேயே ராமஜா தாஸ் என்ற நாகா சாதுவைக் கொலை செய்துவிட்டான். 2005-ஆம் ஆண்டு நாகா சாதுக்கள் தங்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் பல நாகா சாதுக்கள் படுகாயமடைந்தனர். 2010-ஆம் ஆண்டு ஹர்பஜன் தாஸ் மற்றும் பஜ்ரங் தாஸ் என்ற இரண்டு நாகா சாதுக்கள் கோவில் வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரவுடி பாபா

ஹனுமான் காடியில் பிரஹலதாஸ் என்பவன் அங்குள்ள மக்களால் ரவுடிபாபா என்று செல்லமாக அழைக்கப்படுகிறான். இவன் மீது பல கொலைவழக்குகள் உள்ளன. இதன் காரணமாக இரண்டு முறை இவன் மீது நகர மாஜிஸ்ட்ரேட் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். ஆகையால் இவர் மக்களிடையே ரவுடி சாமியார்(குண்டாபாபா) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். இவரும் 2011-ஆம் ஆண்டு எதிர்க் குழுவினரால் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சாமியார்களின் பெயர்கள்
சாது ஹரி நாராயந்தாஸ், சாது ராம் சங்கர் தாஸ், சாது ராம் பிரகாஷ் தாஸ் போன்ற பிரபல ரவுடி சாமியார்கள் காவல்துறையின் துப்பாக்கி ரவைக்குப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் பல கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பைசாபாத் நகர காவல்துறையின் கணக்கின்படி 2001-லிருந்து 2012 வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட சாமியார்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காவல்துறையுடனான நேரடி மோதலில் ஈடுபட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். சாமியார்களின் துப்பாக்கி ரவைக்குப் பலியான காவலர்களும் இந்தப் பட்டியலில் உண்டு.

பதவி ஆசை+பொருளாசை=கொலை

2007-ஆம் ஆண்டு அயோத்தியாவையே அதிர வைத்த ஒரு சம்பவம் இருக்கிறது. மோக்ஷமுக்தி(முக்ஷி)பவன் என்ற மடத்தின் மடாதிபதி சுதர்ஷணாச்சார்யா என்பவர் திடீரென காணாமல் போய்விட்டார். பல மாதங்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.  அவர் மனநிலை சரியில்லாதவர், ஆகையால் எங்காவது ரயிலேறிச் சென்றுவிடுவார். இம்முறையும் அப்படி ஆகிவிட்டது என்று கூறி மடத்தின் தலைமைப் பொறுப்பை ஜித்தேந்திர தாஸ் என்பவர் ஏற்றுக் கொண்டார். தலைமைப் பொறுப்பை ஏற்ற சில வாரங்களில் கோவிலின் தங்க நகை மற்றும் சுமார் 8 லட்சம் ரொக்கத்துடன் காணாமல் போய்விட்டார்.

மனநிலை சரியில்லாமல் காணாமல் போன சுதர்ஷணாச்சார்யாவின் சகோதரர் தலைமைப் பொறுப்பேற்க ஹரித்துவாரில் இருந்து திரும்பி மடத்தைக் கவனித்து வந்தார். மடத்தைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கினார். வேலைக்காரர்கள் கழிப்பறைத் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, அது மண் கொண்டு நிரப்பப்பட்டிருப்பது கண்டு திகைத்தனர். மணலைச் சிறிது அகற்றிய போது சில எலும்புகள் மணலுடன் வெளியே வந்தன. இதனை அடுத்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, காவல்துறையினர் முன்னிலையில் மணலை அகற்ற இரண்டு நபர்களின் எலும்புக்கூடுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அதில் ஒன்று சுதர்ஷணாச்சார்யா, மற்றொன்று ஒரு இளம்பெண்ணின் எலும்புக்கூடு. இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் மத்தியபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் தங்கி இருந்த ஜித்தேந்திர தாஸை காவல்துறையினர் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட ஜித்தேந்திரதாஸ் விசாரணையில், முக்ஷி பவனில் உள்ள தங்கம் மற்றும் ரொக்கப்பணத்தின் மீது நீண்ட நாட்களாக ஒரு கண் இருந்தது. இதற்காகத் திட்டமிட்டு, பனாரசில் இருந்து கூலிக்கு ஆட்களை வரவழைத்து தக்க சமயத்திற்காகக் காத்திருந்தேன். சுதர்ஷணாச்சார்யா தனது சிஷ்யையுடன் தனிமையில் இருந்த போது இரகசியமாக அவரைக் கொலை செய்தேன். சாட்சியாக இருந்த சிஷ்யையையும் கொலை செய்தேன். செப்டிக்டாங்கில் இருவரின் பிணங்களையும் வெட்டிப்போட்டு அதில் மணலை நிரப்பி மூடிவிட்டேன். மறுநாள் மனநிலை சரியில்லாததால் காணாமல் போனதாக கதைவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்தான்.

அயோத்தியில் உள்ள சாதுக்கள் பற்றி பைசாபாத் வழக்குரைஞர் ரஞ்சீவ் வர்மா,  பைசாபாத் நகர நீதிமன்றத்தில் 90 விழுக்காடு வழக்குகள் சாமியார்கள் பற்றியே உள்ளன. இங்குள்ள அனைத்து மடங்களும் ஏதாவது ஒரு வழக்கில் தொடர்புடையதாகவே உள்ளன. சீடர்கள் மீது கொலைவழக்கு மற்றும் பாலியல் தொடர்பான வழக்குகள் என்றால் மடத்தலைவர்கள் மீது நில அபகரிப்பு, அடியாட்களை வைத்து மிரட்டுதல் போன்ற வழக்குகள் உள்ளன என்று கூறியுள்ளார்.

சாமியார்களும் ஜாதியும்

அயோத்தியில் பார்ப்பனர்கள், தாக்கூர் மற்றும் யாதவ் ஜாதிகளைச் சேர்ந்த பூசாரிகள் அதிகம் உள்ளனர். இதில் பல்வேறு மடத்தில் உள்ள சீடர்கள் தங்கள் ஜாதி சாமியார்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். -ஜாதிப் பிரச்சினைகள் எழுந்தால் மொத்தமாகப் போய் தாக்குதல் நடத்தவும் தங்கள் ஜாதிச் சாமியார்களை ஒன்று கூட்டி கலகம் செய்யவும் ஆரம்பிப்பார்கள். நமது ஊரில் ஜாதிச் சங்கங்கள் போல் அங்கு ஜாதிமடங்களும் உண்டு. அதில் சில பெயர் நாவூ கோவில், பதாயி கோவில், விஷ்வகர்மா கோவில், சந்த ரவிதாஸ் கோவில், ஹல்வாயி கோவில், தோபி கோவில், திரிகுப்த கோவில் என தங்கள் ஜாதிக்களுக்கு என கோவில்களை உருவாக்கி அதற்கு மடங்களையும் உருவாக்கி விடுகின்றனர். இவர்களுக்கு அந்த அந்த ஜாதியைச் சேர்ந்த மக்களும் அங்கே சென்று தங்களுடைய காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். வேறு ஜாதிக்காரர் கோவிலுக்குச் சென்று காணிக்கையோ வழிபாடோ நடத்தினால் தண்டனையுடன் அபராதமும் விதிக்கும் பழக்கமும் அயோத்தியில் உண்டு. ஒரு ஜாதிக்குள் உள்ள பிரிவினருக்குள்ளும் வெட்டுகுத்துக்கள் வந்ததுண்டு. இது குறித்து தெகல்ஹா இதழுக்கு சாதுக்கள் அளித்த பேட்டியில்,  ஒருவர் வங்காள பூம்ஹாரராக (பிற்படுத்தப்பட்ட ஜாதிப்பிரிவு) இருந்தால் எங்களுக்கு அவர் சமமாக மாட்டார், நாங்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தூய பூம்ஹார், அவர்களோ பஹோரா பூம்ஹார்(கலப்பில் பிறந்தவகளாம்). ஆகையால் ஒரே ஜாதியாக இருந்தாலும் அவர்களை நாங்கள் சேர்த்துக்கொள்வதில்லை. எங்களிடம் வரும் பக்தர்களை போலியான ஜாதிப்பெயர் கூறி அவர்கள் பக்கம் இழுத்தால் நாங்கள் அவர்களைக் கொலை செய்யக்கூடத் தயங்கமாட்டோம் என்று தங்கள் ஜாதிப் பற்றைப் பறைசாற்றியுள்ளனர்.

ஊரைக்காலி செய்த கொடூரம்

12 நவம்பர் 1998-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூரத்திற்கு பார்வையற்ற சகோதரர் இருவர் இன்றும் சாட்சியாக உள்ளனர். அயோத்தியா நகரத்திற்கு 8 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குப்தார் காட் என்ற மீனவர் கிராமத்தில் இரவு 10 மணி அளவில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் நுழைந்தனர். மீனவர் கிராமத்தில் கட்டப்பட்டு இருந்த ஆடுமாடுகளை அடித்து விரட்ட ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் பார்த்த காட்சி, சாதுக்கள் கையில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்தனர். கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த லாலாஜி நிஷாத் மற்றும் ராம் ஜி நிசாத் இருவரையும் கூட்டத்திற்குள் புகுந்து இழுத்து வந்தனர். அவர்களை விட்டுவிடச் சொல்லி அவர்களின் 13 வயது தங்கை சாமியார்களின் காலில் விழுந்து கதறியது. உடனே சில சாமியார்கள் அந்தக் கூட்டத்தின் முன்பே அச்சிறுமியின் ஆடைகளைக் களைந்தனர். இதனிடையே என்ன நினைத்தார்களோ என்னவோ, ஒரு சாமியார் சிறுமியின் கைகளைக் கத்தியால் வெட்டியபிறகு தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுமி மரணமடைந்தார்.

இந்தக் கொடூரங்களைக் கண்டு சிறிதும் கலங்காத சாமியார்கள் இரண்டு சகோதரர்களின் ஒவ்வொரு கண்ணைத் தோண்டி எடுத்து தரையில் வீசிவிட்டுச்சென்றனர். இதில் ராம்ஜி நிசாத்தின் பார்வை பறிபோனது. லாலாஜியின் ஒரு கண் பார்வை மட்டும் இருந்தது. ஏன் நடந்தது? யஞ்யசாலா பஞ்சமுகி கோவிலின் தலைமைச் சாமியாரான மணிபாபா தலைமையில் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்திற்கு வந்த சாமியார்கள் இது எங்கள் மடத்திற்குச் சொந்தமான பூமி ஆகையால் நீங்கள் விரைவில் இந்த இடத்தைக் காலிசெய்து விட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்கள். இந்தச் சம்பவத்தை அடுத்து நாங்கள் அனைவரும் மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் செய்தோம். பாதிக்கப்பட்ட சகோதரர்கள் சாமியாரின் மீது காவல்துறையில் புகார் செய்தனர். இதனடிப்படையில் காவலர்கள் பஞ்சமுகி கோவிலுக்குச் சென்று அங்கிருந்த சில சாமியார்களைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  இந்தச் சம்பவத்தினால் கோபமடைந்த சாமியார்கள், சகோதரர்கள் இருவரின் கண்களையும் நோண்டி எடுத்தனர். அவரது சகோதரியையும் கொலை செய்தனர். இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து 6 சாமியார்களைக் கைது செய்தது. அவர்களும் சிறிது காலம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தனர். தொடர்ந்து நடந்த வழக்கில் அந்த 6 சாமியார்களுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தீர்ப்பை அறிந்துகொண்ட சாமியார்கள் மடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் இன்றுவரை காவல்துறையினரிடம் சிக்கவில்லை என்பதே அங்கிருப்போரின் பதில். ராமஜென்ம பூமி இவ்வளவு வன்முறை நிறைந்ததா? அப்படி என்றால் அங்கு சட்டம் ஒழுங்கு என்று ஒன்றும் கிடையாதா? அது இந்தியா சட்டவிதிகளுக்கு உட்பட்ட நகரமில்லையா என்ற கேள்வி எழலாம். என்ன செய்ய, அது ராமர் ராஜ்யம் செய்த ஊராமே! காவல்துறை அங்கு உண்டு.

ஆனால் அவர்களின் கரங்கள் அரசியல்வாதிகளால் கட்டுப்போடப்பட்டுள்ளன. ஊடகங்கள் அயோத்தி சாமியார்கள் பற்றி எழுதுவதில் மிகவும் கண்ணியமானவை. இவ்வளவு நடந்தும் எந்தச் செய்தியும் அயோத்தியை விட்டு வெளியில் தெரியாதவாறு செய்துவிடுவார்கள் அப்படியே ஒன்றிரண்டு செய்தி வெளியேறினாலும் இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான், இங்கு நடந்த பல சம்பவங்கள் ஊடகங்களால் வெளிஉலகிற்குத் தெரிந்தவுடன், உடனடியாக பாகிஸ்தானின் அய்.எஸ்.அய்.-யின் கரம் இதில் உள்ளதென்று செய்தி பரப்பி விசயத்தை மூடிவிடுவார்கள். அரசியல் தலையீடு மற்றும் அதிகாரமையம் முழுவதும் சாதுக்கள் மீது எந்த ஒரு களங்கமும் வராமல் அவர்கள் எந்தத் தவறுகள் செய்தாலும் அதை மூடி மறைத்துக் கொண்டு வருகிறது. இது அசிங்கத்திற்கு அத்தர் பூசி ஊர்வலம் கொண்டு வருவது போல் ஆகும். அயோத்தியில் காவி உடையில் திரியும் குண்டர்களின் செயல்களில் நாங்கள் அறிந்தது சிறு பகுதியே. முக்கியமாக எவரும் அவ்வளவு சமானியத்தில் செய்திகளைத் தர முன்வரவில்லை. இறுதியாக சராயு நதிக்கரையில் ஒரு சாமியாரிடம் இது பற்றிக் கேட்ட போது அவர் ரவிதாஸ் கவிதையில் இருந்து சில வரிகளை மாத்திரம் கூறி விலகினார். பாவம் அவர் பாதிக்கப்பட்ட சாமியார் போலும். பொய்யர்கள் மாத்திரம்தான் வேடமிடுவார்கள், சாமியார்கள் வேடம் என்றும் பாதுகாப்பானது. ஆனால் உண்மை முகம் மறைக்கப்படுவதுமில்லை _ மறைவதுமில்லை. நாளை என்று ஒன்று வரும். அப்போது உண்மை வெளிவரும். ஆனால், மூடர்கள் வாழும் ஊரில் உண்மை வெட்கப்பட்டு ஓடிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *