சிங்கப்பூர் சிறுகதை – பகுதி – 1

பிப்ரவரி 01-15

தாத்தா

– மலையரசி

காலை வெயிலின் தாக்கம் சற்று தணிந்து, காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது. ஆரோக்கியமற்ற புகைமூட்டப் பிரச்சினை விலகி வானம் தெளிவாக இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை; வாரத்தின் இறுதி நாள். பல நாட்கள் தங்களின் விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் வருந்தியவர்களுக்கு அன்று உற்சாகமளிக்கும் பொழுதாகப் புலர்ந்திருப்பது இன்பமாக இருந்தது.

அங் மோ கியோ வட்டாரத்தில், அந்த நடைபாதையும் அதை ஒட்டியுள்ள பெரிய பச்சைப்பசேலென்று பசுமையாக உள்ள புல்தரையும் பலவித உடற்பயிற்சிகள் செய்வதற்கு வசதியாகப் போடப்பட்டதாகும். அங்கு பல வயதினர் இன நல்லிணக்கத்துடன் விருப்பமுள்ள பொழுதுபோக்கில் மகிழ்ச்சியாகவும் உல்லாசமாகவும் இருப்பதைக் காண முடிந்தது. அவர்களில் சிதம்பரமும் ஒருவர்.

பேரன் கதிரவன் அவருக்கு முன்னால் இருசக்கர வண்டியை மெல்ல ஓட்டிச்செல்ல, கைகளைப் பக்கவாட்டில் வீசிக்கொண்டும் கால்களை மெதுவாக உதறிக்கொண்டும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என்றும் இல்லாமல் அன்று பேரனும் உடன் வந்ததுதான் சிதம்பரத்தின் எல்லையில்லா மகிழ்விற்குக் காரணம்.

சுமாராக அய்ம்பது நிமிடங்களுக்குப்பின், இளைப்பாறலாம் என்று இருவரும் அங்கு போடப்பட்டிருக்கும் காலியான நீண்ட இருக்கை ஒன்றில் அமர்ந்தனர். வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலைத் திறந்து இருவரும் தாகம் தீர நீரை அருந்தினார்கள்.

அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி சில ஆண்களும் பெண்களும் தைச்சீ (சீனர்களின் ஒருவகை உடற்பயிற்சி) செய்வதைப் பார்த்துக் கொண்டும், இடையிடையே சிலர் மெது ஓட்டம் ஓடும்பொழுது, அவர்களின் செல்லப் பிராணிகளும் பின் தொடர்ந்து ஓடுவதைப் பார்த்தும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ ஞாபகம் வந்த மாதிரி தாத்தா, அப்பாவும் சின்னப் பையனா இருக்கும்போது சைக்கிள் ஓட்டுவாரா? என்றான் கதிரவன்.

ம்… ஓட்டுவாரு, ஆனா நண்பர்கிட்ட இரவல் வாங்கித்தான் ஓட்டுவாரு! என்றவரிடம் ஆச்சரியத்துடன் ஏன் தாத்தா? என்று வினவும் பேரனிடம் அப்போ, எல்லாம் அப்படித்தான். பக்கத்துவீட்டு சீன, மலாய்க்கார பிள்ளைகள் என்று எல்லோரும் ஒன்னாச் சேர்ந்துதான் விளையாடப் போவாங்க! கண்ணாமூச்சி, போலிஸ்_திருடன், கோலி, பம்பரம் விடுறது, ஓடிப்பிடித்து விளையாடுறது, சாயந்தர நேரம், லீவு நாளு எல்லாம் ஒரே விளையாட்டா இருக்கும்! இப்போ எங்கே? உங்களுக்கு நேரமே இல்லையே!, என்று கூறியதைக் கேட்ட பேரனின் முகம் வாடி இருப்பதைப் பார்த்தவர், உடனே ஆனா, உங்களுக்கு இப்போ கணினி இருக்கு, கைத்தொலைப்பேசி இருக்கு, நிறைய சாப்பாட்டுக் கடைகள், புதுப்புதுச் சட்டைகள் வாங்க கடைகள், நூல் நிலையம், சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள், என்று அடுக்கிக் கொண்டே போனார் சிதம்பரம்.

இப்பொழுதுதான் பேரனின் முகத்தில் பால்பற்கள் விழுந்துவிட்ட வாய் திறந்து சிறு புன்னகை பூத்தது. அவரே தொடர்ந்தார், எல்லாம் இருந்தாலும் படிப்பும் ஒழுக்கமும்தான் ரொம்ப முக்கியம்! என்றார்.

ஒழுக்கம்னா என்ன தாத்தா? என்ற கேள்வியைக் கேட்ட பேரனிடம், மற்றவங்க நம்மகிட்ட எப்படி மரியாதையா நல்லபடியா நடந்துக்கணும், நமக்கு என்ன செய்ய வேணும் என்று நினைக்கிறமோ, அதேமாதிரி, நாமும் மற்றவங்ககிட்ட நடக்க வேணும்! அதுதான் ஒழுக்கம்! என்று எட்டு வயதே நிரம்பிய பேரனுக்குப் புரியும்படி நிறுத்தி நிதானமாக விளக்கிச் சொன்னார் சிதம்பரம். கதிரவனும் அவர் சொல்வதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

அதே மாதிரி, உன் படிப்பும் மற்றவர்களுக்கு உதவும்படி இருக்க தொண்டு செய்ய வேண்டும் கதிரவா! என்றவரிடம், சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை வேகமாக அசைத்தவன், கண்களைப் பெரிதாக்கிக்கொண்டு வியந்து, தாத்தா உங்களுக்கு மட்டும் எப்படி நிறைய விசயங்கள் தெரியுது? என்று ஆவலோடு வினவும் பேரனிடம் பெருமையுடன் மகிழ்ச்சியோடு, எல்லாம் எங்க தமிழாசிரியர் ராமசாமி அய்யாதான் காரணம் என்று கூறியவர் அவரு எழுதின புத்தகம் நிறைய இருக்கு, எல்லாம் படி; தாத்தாவும் தெரிந்த எல்லாம் சொல்லித்தாரேன், என்றார். உடனே, சரிங்க தாத்தா! என்ற பேரனை உள்ளம் மகிழ அணைத்துக் கொண்டார்.

சரி கிளம்புவோமா! என்றவரிடம் சரி தாத்தா! என்று இருவரும் உரையாடிக் கொண்டே நடந்தார்கள், அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை!

அந்தப் பகுதி அடுக்குமாடி வீடுகள் ஒன்றில் பதிமூன்றாவது தளத்தின் கடைசியில் இருந்த வீட்டுவாசலின் அழைப்புமணியை அழுத்தினார் சிதம்பரம்.

சற்றுநேரத்தில் கதவைத் திறந்த பணிப்பெண் சார் அவங்க வந்துட்டாங்க! என்று ஆங்கிலத்தில் கூறினாள். சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அதை நிறுத்திவிட்டு, என்ன அப்பா, எங்கே போனீங்க, கைத்தொலைப்பேசியையும் வைத்துவிட்டுப் போய்விட்டீங்க, இவ வந்து தேடிப் பார்த்தாள்; உங்களைக் காணோம், ஏன்? இவ்வளவு நேரம்!, என்று சற்று குரலை உயர்த்தியபடி அமுதன் கேள்விகளைத் தொடுத்தான்.

அதற்கு அவர் பதில் கூறும்முன், அருகில் நின்ற மகனிடம் கோபத்துடன் உதட்டைக் கடித்துக்கொண்டே, ஏன்? உனக்குத் தெரியாதா, இன்னைக்கு கராத்தே வகுப்பு இருக்குனு? இப்பவே பார் மணி ஒன்பதாகிவிட்டது, போ… சீக்கிரம் கிளம்பு, என்று மகனை விரட்டினான்.

விர்ரென்று மனைவியுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டவனைப் புண்பட்ட மனத்துடன் பார்த்து நின்றவரிடம் அருகில் வந்த சிவகாமியம்மாள் ஆறுதலாக, சரி விடுங்க வந்து பசியாறலாம் வாங்க! என்று அன்புடன் அழைக்கும் இல்லாளை நோக்கி தம்மை ஒன்றும் பேசவிடவில்லை. பேரனை ஏன் கோபித்துக் கொள்ள வேண்டும் என்பதை வருத்தத்துடன் சைகையில் காட்டினார் சிதம்பரம்.
அன்று காலையில் வெளியே சென்றவர்கள் இரவு பதினொரு மணிபோல வீடு திரும்பினார்கள். வெளியே அவர்களின் ஆரவாரம் கேட்டபின்தான் அறையில் அந்த முதியவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அமைதியாக சிவகாமியம்மாள் தூங்கிவிட்டார். ஆனால் சிதம்பரம்…?

குடும்பத்துடன் வெளியே போய் வருகிறேன் என்று பணிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றானே, அப்போ நாங்க இரண்டுபேரும்…? வருத்தம் பெருமூச்சுகளாக வெளிவந்தன.

அகவை எழுபத்திரண்டைத் தாண்டினாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால் அதிகமான உடற்கோளாறுகள் இன்றி, பெரும்பாலும் வயதான காலத்தில் வரும் சர்க்கரை நோயும் அளவோடு இருந்தது. ஓய்வு நேரங்களில் நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவர், தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மனைவியையும் அழைத்துச் செல்வது, அந்தக் கால நண்பர்களுடன் கலந்துரையாடல், மற்றும் சமூக மன்றங்களில் முடிந்த உதவிகளையும் செய்து வந்தார், நல்ல சிந்தனையாளர். அந்தக் காலத்தில் ஆன்சன் சாலையில் இருந்த தனியார் கட்டடத்தில் இரவு நேரப் பாதுகாவலராகவும், பகல் நேரங்களில் ஓய்வு நேரம் போக கிடைக்கும் சில மணிநேர வேலை எதுவாக இருந்தாலும் குடும்பத்தை நினைத்தே உழைத்தார்.

மனைவி சிவகாமி, ஒரே மகள் மூன்று மகன்கள் என அய்வருடன் சேர்த்து, வந்தவர்கள் போனவர்கள் என அனைவரையும் வீட்டையும் பொறுப்புடன் கவனித்து வந்தார்.

மகளை ஊரில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த மைத்துனர் மகனுக்கே மணம் முடித்துக் கொடுத்து வேண்டிய வசதிகளையும், உதவிகளையும் செய்தார்.

அதேபோல் மூத்த மகனுக்கு தங்கையின் பெண்ணையும் ஊரில் இருந்து வரவழைத்து மணம் முடித்தார். இரண்டாவது மகன்தான் அமுதன், மூன்றாம் மகனும் திருமணமாகி அய்ந்து ஆண்டுகளாகியும் குழந்தைகள் இன்றி இருக்கிறார்கள்.

சிதம்பரம் இவர்கள் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று தனியாக தம் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இதுவரை ஆர்ச்சட் சாலையில் பகுதிநேரப் பாதுகாவலராக வேலை பார்த்து வந்ததையும் நிறுத்திக் கொண்டார்.

அதற்குக் காரணம் சில மாதங்களுக்கு முன்பு மகன் அமுதனுக்குப் பெண் குழந்தை பிறந்து, அதன் பெயர் சூட்டும் விழாவிற்கு வந்தவர் பேரன் கதிரவனின் பேச்சிலும் பேத்தியின் அழகுச் சிரிப்பிலும் கரைந்து போனார். அவர்களுடன் தங்கி இருப்பதற்கான அனுமதியோடு, தங்களுக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் தாமே கவனித்துக் கொள்வதாகக் கூறி சிவகாமியம்மாளுடன் அங்கு தங்க வந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்டன.

காலையில் நடந்த சம்பவம் மீண்டும் மனதில் வேதனையுடன் அலைமோதினாலும், பேரன் கதிரவனின் அறிவுக்கூர்மையும், பேத்தியின் பொக்கைவாய்ச் சிரிப்பும் அதுவரை மன அழுத்தத்தைக் கொடுத்த அனைத்தும் மறந்து போக நிம்மதியாக உறங்கத் தொடங்கினார்.

விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவர்போல் அறையை விட்டு வெளியே வந்தார். அப்பொழுது பணிப்பெண் முன்வாசலைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவரைப் பார்த்தவுடன் காலை வணக்கம் என்று ஆங்கிலத்தில் கூறினாள். அவரும் சிரித்த முகத்துடன் பதில் வணக்கம் கூறிவிட்டு சமையலறைப் பக்கம் மெல்ல நடந்து சென்றார்.

அவர் வருவது தெரியாமல் சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமியம்மாளை அழைத்தார்.

..ம் என்னங்க, நல்ல தூக்கமா? என்றதும் ஆமாம், அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களா?, என்று கேட்டவரிடம், ஆமாங்க, அவங்க இரண்டு பேருக்கும் மத்தியானச் சாப்பாடு கட்டிக் கொடுத்தேன். பேரனிடம் மட்டும் தாத்தாவிடம் கொடுத்து அனுப்புகிறேன், என்று சொல்லி அனுப்பிவிட்டேன். நீங்க குளித்துவிட்டு வாங்க, இட்லியும் உங்களுக்குப் பிடிச்ச புதினா சட்னியும் தயாரா இருக்கு பசியாறலாம். பேத்தி இன்னும் தூங்கிட்டு இருக்கா, பால்கூட குடிக்கல, அந்தப் பொண்ணுகிட்ட வேலையை முடிச்சுட்டு, கடைக்குப்போய் கீரை வாங்கிவரச் சொல்லி இருக்கேன், நம்ம பழைய பக்கத்து வீட்டுக்காரங்க இப்பத்தான் போன்லே பேசி வைச்சாங்க! என்று இரயில் வண்டி ஏறப்போகும் அவசரப் பயணியைப்போல மளமளவென்று பேசி முடித்தார் சிவகாமியம்மாள்.

அவர் கூறியவற்றைப் பாசமிகு கணவராக அமைதியாகக் கேட்டுவிட்டு, நீ சாப்பிட்டாயா? என்று சிதம்பரம் கேட்டதற்கு இல்லை என்று தலையாட்டிய மனைவியிடம், சரி எல்லாம் எடுத்து வை என்று கூறி குளியலறை நோக்கிச் சென்றார்.

வெயில் மண்டையைப் பிளக்கும் அளவு இருந்தது. நன்கு குழையவைத்த சோற்றுடன் கடைந்த கீரை பாசிப்பருப்பையும் சேர்த்துக் காய்ச்சிய நெய்யை இரண்டு சொட்டு அதிகமாகவே விட்டுத் தயாரித்த உணவை கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டார்.

குளியல் முடிந்து அபார பசியுடன் இருக்கும் கைக்குழந்தைக்கு டப்பாவில் அடைக்கப்பட்ட உணவைத் தயாரிக்க முயன்றவளிடம், இதெல்லாம் வேண்டாம் போ என்று பிடுங்கி ஓரமாக வைத்துவிட்டு கிண்ணத்தில் இருக்கும் நெய் மணக்கும் உணவைப் பேத்திக்கு ஊட்ட முற்பட்டவரிடம், இல்லை! இல்லை! (பணிப் பெண்ணுக்குத் தெரிந்த சில தமிழ்ச் சொற்களில் ஒன்று) என்றவளிடம், நீ! போ அங்கே என்று வெளியே கையை நீட்டினார் சிவகாமியம்மாள். என்னடா செல்லம், பாட்டி சாப்பாடுதானே பிடித்து இருக்கு என்று கைகளைத் தட்டிக்கொண்டு ஆவலோடு விரைவாக வாயைத் திறந்து காட்டும் பேத்தியிடம் கூறிக்கொண்டு தானும் ஒரு குழந்தையைப் போல் மாறி தலையை ஆட்டியாட்டிப் பேசிக்கொண்டு சாப்பாட்டை ஊட்டினார். அடுத்த அறையில் இருந்துகொண்டு நேரடி வர்ணணை செய்யும் பணிப்பெண்ணைப் பற்றியோ அல்லது மறுமுனையில் கேட்டுக்கொண்டிருக்கும் மருமகளைப் பற்றியோ ஒன்றும் அவருக்குக் கவலை இல்லை.

தம் பேத்தியின் வயிறு நிறைந்து சிரித்தது போதும்! என்று இருந்துவிட்டார். பேரன் கதிரவனுக்கு உணவைக் கொடுத்துவிட்டு, வெயிலில் வந்த களைப்புடன் வரவேற்பறையில் அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

வழக்கம்போல் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. மகன் அமுதனும், மருமகளும் தாயிடம் காட்டும் அதே அன்பு! தன்னை மட்டும் வேண்டாதவனாகப் பார்க்கும் பார்வைகள் எல்லாவற்றையும் கவனித்து வந்தார். நடக்கும் விசாரணையற்ற வழக்கின் தீர்ப்பு வரும் நாள் என்றோ என்றுதான் காத்திருந்தார்.

அன்று வெள்ளிக்கிழமை, மாலை நீச்சல் வகுப்பிலிருந்து வந்தவர்கள் கொஞ்சநேரம் ஓய்வுக்குப்பின், வீட்டுப்பாடத்தைச் செய்யட்டும் என்று பேரன், தாத்தா, சிவகாமியம்மாள் மடியில் கைக்குழந்தை என அனைவரும் தொலைக்காட்சியில் கேலிச் சித்திரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் வருகையை அந்நேரத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. வந்தவர்கள் நேராக தங்களின் அறைக்குச் சென்றார்கள். அதுவரை சாய்வாக அமர்ந்து இருந்தவர்கள் நிமிர்ந்து கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் மாற்றுடையுடன் அமுதன் வெளியே வந்தான். சாப்பாட்டு மேசையின் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு, அவர்களுக்குச் சற்று அருகில், ஆனால் சுவரைப் பார்த்தபடி வந்து அமர்ந்தான். அதே சமயம் இரண்டு கோப்பைகளில் தேநீருடன், சில கேக் துண்டுகளைத் தட்டில் வைத்து மேசையில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள் பணிப்பெண்.

தன் கையில் இருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு செல்லும் மருமகளை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமியம்மாள்.
கதிர், என்ன வீட்டுப்பாடம் இல்லையா? நிறுத்திவிட்டு, எழுந்து போய்ப் படி என்று கண்களால் முறைத்தபடி விரட்டியவுடன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுத் தன் அறைக்கு ஓடினான் கதிரவன்.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு தன் தேநீரையும் எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசைப்பக்கமாகச் சென்று அமரும் மனைவியைத் திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பினான்.

அப்பா! அம்மா! நான் கொஞ்சம் பேச வேணும், என்று அமுதன் பேச்சைத் தொடங்கினான். நடக்கும் பனிப்போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று காத்திருப்பவர் ஆயிற்றே, உடனே ம் சொல்லப்பா!, என்றார் சிதம்பரம்.

– அடுத்த இதழ்வரை கொஞ்சம் காத்திருங்களேன்…

சிங்கப்பூர் தமிழ் முரசு (8.12.2013) இதழில் வெளிவந்த இச்சிறுகதை தங்கமுனை விருது 2013 போட்டியில் கௌரவக் குறிப்பு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *