சமூகநீதிக் காவலர் கி.வீரமணி முன்பு நிற்பதே எனக்குப் பெருமை!

பிப்ரவரி 01-15

மராட்டிய அமைச்சர் புஜ்பால் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை இந்தியா முழுதும் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் வட மாநிலங்களில் பல நூறுமுறை பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார். இந்த ஒப்பற்ற பணிக்கு உறுதுணையாக உள்ள பெருமக்களைச் சிறப்பிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யம் `சமூக நீதிக்கான வீரமணி விருதினை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அந்த வரிசையில்  மராட்டிய மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல் அவர்களுக்கு 2013ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா 11.1.2014 அன்று மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில் மராட்டிய மாநில ஆளுநர் கே. சங்கரநாராயணன் விருதினை வழங்கினார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன், அய்.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன், ப.க. பொதுச்செயலாளர்  வீ.குமரேசன், உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், `சமூக நீதிக்கான வீரமணி விருதைப் பெற்றுக் கொண்ட மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல், மராட்டியத்தில் முதன்முதலாக இந்த விருதை வாங்குபவன் என்ற பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது, இது எனக்கான பெருமையல்ல, இந்தியாவில் சமூக நீதிக்கான போராட்டத்தை ஆரம்பித்த மகாத்மா புலே மற்றும் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர், சாஹூ மஹராஜ் போன்றோரின் போராட்டத்திற்கான பெருமையாகும்.   பெரியார் தென்னகத்தில் சமூக நீதிக்கான புரட்சி விதையைத் தூவியவர், மராட்டியத்தில் சமுக நீதியை நிலைநாட்டப் பாடுபட்டவர்களான மஹாத்மா ஜோதிபா புலே, சாவித்திரிபாய் புலே, பாபாசாகிப் அம்பேத்கர் போன்றவர்களின் பாதையில் அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஒளியின் பாதையில் நாம் பயணிக்கிறோம். இந்த விருதைப் பெற்றபிறகு எனது பணிகள் இன்னும் சிறப்பு மிக்கதாய் அமைய எனக்குள் ஒரு உத்வேகம் பிறந்திருக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த விருதை நான் தலித், ஆதிவாசி மற்றும் பெண்களுக்காக அர்ப்பணிக்கிறேன்,.

மகாத்மா புலே மற்றும் பாபாசாகிப் அம்பேத்கர் ஏற்றி வைத்த புரட்சித்தீயை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும், இதை நாம் செய்தே ஆகவேண்டும்.  தெற்கில் பெரியார் கொண்டு வந்த மாற்றம் என்பது சாமானியர்களின் வெற்றி, -அதை பெரியார் நிகழ்த்திக் காட்டினார். நமது பணிகளுக்கு உற்சாகமளிக்கும் செயலில் தென்னகத்தில் பெரியாரின் பணியை மேற்கொண்டு வரும் திரு கி.வீரமணி அவர்கள் இந்த விருதைக் கொடுத்து என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.  சமூக நீதிக்கான காவலர்கள் மிகவும் பொறுமைசாலிகள் என்பதற்கு கி.வீரமணி அவர்கள் நமக்கு முன்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் முன்பு நான் நிற்பதற்கே பெருமைப்படுகிறேன். விருதிற்கான நன்றிகள் எல்லாம் மிகவும் உயர்ந்தவை; அது சொற்களில் அடங்காது என தனது நன்றிப்பெருக்கை வெளிப்படுத்தினார்.

மராட்டிய மாநில ஆளுநர் கே. சங்கரநாராயணன் பேசும்போது. இந்திய நாடு வளர்ந்துவிட்ட நாடு என கூறப்பட்டாலும் வளர்ச்சி என்பது மேலும் தொடர வேண்டிய நிலை நீடிக்கிறது. மக்களின் உளப்பாங்கு, மனநோக்கத்தினை மாற்றம் காணச் செய்திருப்பதில் பன்னெடும் தூரம் பயணப்பட வேண்டியுள்ளது. சமூக அநீதி உணர்வுகள் இன்னும் ஆதிக்கவாதிகளிடம் ஆழமாக வேரூன்றி உள்ளது. அவை வெகு விரைவில் மறைந்திட வேண்டும். உலகமயமாக்கப் பணியின் விளைவுகள், பெரும்பான்மை மக்களிடம் சென்று சேரவில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களிடம் குறிப்பாகச் சென்றடையவில்லை.

ஏழை -_ பணக்காரன் இடைவெளி மேலும் பெருக்கமடைந்து உள்ளது. படிப்பறிவின்மை, பசி, சுரண்டல் ஆகிய நிலைகளிலிருந்து, புதிய பொருளாதாரச் சூழல்களிலிருந்து மக்களைக் காத்து மேம்படுத்த வேண்டிய பணி நமக்கு உள்ளது. பிற்போக்குத் தன்மை வாய்ந்த, சமுதாயத்தில் சமத்துவமின்மையினை வலியுறுத்தி நீடித்திடச் செய்யும் ஆன்மீகச் சக்திகளிடமிருந்து வெகு மக்களைக் காத்திட வேண்டும். சமூகநீதித் தலத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திட வேண்டும்.

திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உரிமை நிலைநாட்டலுக்கு மேலும் பாடுபட வேண்டும். உலக அரங்கில் பெரியாரின் தத்துவங்கள், பெரியாரின் பற்றாளர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றார்.

நிறைவாக கி.வீரமணி அவர்கள் தனது உரையில், சமூக- நீதிக்காகப் போராடிய களங்கள் மாறி மாறி வந்துள்ளன. ஆனால் அதற்கான போர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. (We have won many battles, but the war still continues) அனைவருக்கும் சம உரிமை என்பது அடிப்படை உரிமை. சமூகநீதித் தலத்தில் நாம் உரிமை கோரிப் போராடுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தினை மீறிய செயல் அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதிக்காகத்தான் போராடி வருகிறோம். மகாத்மா ஜோதிபா பூலே, சிறீ நாராயணகுரு, சாகுமகராஜ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போட்டுத் தந்த பாதையில் சமூகநீதியினை வென்றெடுக்கப் போராடி வருகிறோம்.

இது, பன்னாட்டுப் பங்கேற்புக் கொண்ட சமூகக் கூட்டணி ஆகும். நினைத்தோம்; செயல்படுகிறோம் என்ற நிலை, அணுகுமுறை கொண்டவர்கள் அல்ல நாம்; தத்துவார்த்த அடிப்படையில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ள அணுகுமுறையாளர்கள் நாம். தொடர்ந்து விழிப்புணர்வுடன் முழுமையாக இருந்து  செயல்படுவதே உண்மையான சமூக விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலையாக இருக்க முடியும். (Eternal Vigilance is the price we have to pay for the freedom backed with Social Justice) அத்தகைய விழிப்புணர்வுடன் இருந்து போராட்டக் களங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமூக நீதியினை வென்றெடுப்போம்! என்று குறிபிட்டார்.

பெரியாரின் சமூகநீதிக் கொள்கை இந்தியா முழுமைக்குமானது என்பதற்கு இந்த விழா இன்னொரு சாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *