அய்யா இல்லாத வெற்றிடம்…!

ஜனவரி 16-31 - 2014

– கவிஞர் விக்ரமாதித்யன்

அன்று ஞாயிற்றுக்கிழமை; காலை டூட்டி முடிந்து, பஜார் பக்கமுள்ள அடைத்த கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; எதிரே, சுவரொட்டியில், தந்தை பெரியார் பேசுகிறார் என்றிருந்தது; சின்ன நோட்டீஸ்தான்; படம் கூட இல்லை.

சென்னையில், 62 தேர்தலின்போதும் அதற்கு முன்பும் அண்ணா, நாவலர், கே.ஆர்.ராமசாமியிலிருந்து எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். வரையிலும் எல்லோருடைய மேடைப் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அய்யா பெரியார் பேச்சுக் கேட்க வாய்ப்புக் கிடைக்கவில்லை; சாயுங்கால டூட்டி முடிந்ததும் போய்விட வேண்டியதுதான்.

திரளான கூட்டம்; கருப்புச் சட்டையுடன் திராவிடர் கழகத் தொண்டர்கள்; பொதுமக்கள்; பெரியார் பேச ஆரம்பித்ததுமே நிசப்தமாகிவிட்டது சூழல்; பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை; எதிரில் இருப்பவர்களுடன் உரையாடுவது போன்ற எதார்த்தம்; சுயமரியாதை என்ற சொல்லையே முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்; வர்ணாஸ்ரமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் தெரியும்; சரளமான பேச்சு.

எண்பதுகளின் தொடக்க ஆண்டொன்றில் நானும் நண்பர் துரையும் சேர்ந்து, ஒரு பத்திரிகைக்கு நேர்காணல்கள், மேட்டர்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தோம்; மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், வித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரைப் பேட்டி எடுத்துத் தந்திருந்தோம்; ஆனால் வெளியிடப்படவில்லை; தகவலாக இருக்கிறது, பத்திரிகை சுவாரஸ்யம் இல்லை என்பதனாலோ என்னவோ தெரியாது (பாவாணர் மறைவையொட்டி, பாவாணர் என்ற பெயர் எப்படி வந்தது என்ற செய்தியை மட்டும் துணுக்காகப் போட்டிருந்தார்கள்.)

கா.அப்பாதுரையாரிடம் கேட்ட ஒரு கேள்வி:

நாகர்கோவில் பக்கம் ஹிந்தி பண்டிட்டாக இருந்த நீங்க எப்படிச் சென்னை வந்தீர்கள்?

பதில்: பெரியார், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன் ஹிந்தி பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்; தெரியாமல் எதிர்க்கக் கூடாதென்று எண்ணினார்; இதற்காகவே என்னை அழைத்து வந்தார்.

காமராஜர் ஆட்சியை பெரியார் ஆதரித்ததும், பச்சைத்தமிழன் என்று புகழ்ந்ததும் ஏன் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும்.

யாராவது கூற முடியுமா, தமிழ், காட்டுமிராண்டி பாஷை என்று.

அய்யா பெரியார் அவர்களுக்கு இனம்தான் முதல்; பிறகுதான் மொழி.

திராவிடர் கழகத்தை ஏன் அரசியல் கட்சியாக இல்லாமல், சமூக இயக்கமாக வைத்திருந்தார் அவர்?

தமிழ்க் கவிதையைப் பெரிதாகப் பொருட்படுத்தாத அந்த உள்ளத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியுமா, என்ன.

சினிமாவைக் கடுமையாகக் கண்டனம் செய்து வந்ததை எவ்விதம் விளங்கிக் கொள்வீர்கள்?

மகத்தான ஆளுமைகளைச் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது; அதனால்தான் காலம் முழுக்க விமர்சனங்களும் விவாதங்களும்.

செயல்கள், அவற்றின் விளைவுகள் _ இவைதான் ஆக்கம்; எதிர்வினைகள் என்னவாகும்.

தமிழினம் கிடந்த கிடையிலிருந்து உசுப்பி எழவைத்த தலைவர் அவர்; வணக்கத்துக்குரிய வன்றொண்டர்.

நான் அறிவு ஜீவியல்லன்; உணர்வு வழிப்பட்ட கவிஞன்; என்னதான் ஆன்மிகமாக இருக்க முயன்றாலும் ஜோதிடமெல்லாம் கற்றுத் தேர்ந்தாலும் இன்னமும் உள்ளம் விரும்புவதையே கையில் எடுத்துக் கொள்கிறேன்; பெரியார் மீதான பிரியமும் இந்த விதம் வந்ததுதான்.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அய்யா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப்படுகிறது; அந்த நேர்மை, அந்த உண்மை, அந்த ரௌத்ரம், அந்த கலகக்குணம் கொண்ட தலைமை இப்பொழுது இந்த இனத்துக்கு வெகுவாக வேண்டியிருக்கிறது; இல்லையென்றால் உய்வடைவது தள்ளிப் போவதைக் காலம் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்; வேறென்ன சொல்ல.

நன்றி: குமுதம் தீராநதி டிசம்பர் 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *