கலை என்பது சமுதாயத்தின் கண்ணாடி. சமூக அவலங்களுக்கு எதிரான ஆயுதம். மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்கும் உணர்வு. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான், கருப்பு கலைக் குழுமம் (Karuppu Art Collective).
கருப்பு என்பது வெறும் நிறமல்ல. அது வெளிச்சத்திற்கு முந்தைய புள்ளி. உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம். மனிதத் தோலின் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் தன்மை. தாயின் வயிற்றில் உள்ள கரு. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் தந்துள்ள உரிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தும் எதிர்ப்பின் அடையாளம். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் கருப்பு கலைக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை கவின் கலைக் கல்லூரியின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 9 பேர் இணைந்து இந்தக் குழுமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஓவியக் காட்சியுடன் இதன் தொடக்க விழா 2013 டிசம்பர் 15ஆம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் உள்ள பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் -_ அனிதா இல்லத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்தியாவை மதவாதம் ஆளத்துடிக்கும் நிலையில் அதற்கெதிரான ஆயுதமாக கலைவடிவங்கள் இருக்க வேண்டும். தான் விரும்புவது மட்டுமே இருக்க வேண்டும் என்பதே பாசிசம். தான் விரும்புகிற கலையும் கலாச்சாரமும் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் இந்துத்வாவும் பாசிசம்தான். அதற்கு எதிரான குரலாக கலைஞர்கள் செயல்பட வேண்டும். வளர்ந்து உலகச் சூழலில் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும், புதிய கலைஞர்களை ஊக்குவிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாகும் என்றார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.
கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான ஓவியர் சந்துரு, கலை விமர்சகர் சதானந்த் மேனன், லலித்கலா அகாடமியின் மண்டலச் செயலாளர் இராம.பழனியப்பன் ஆகியோர் சென்னைக்குரிய கலை பாரம்பரியத்தையும் அவை ஏற்படுத்திய தாக்கங்களையும்
இன்று ஏற்பட்டுள்ள தொய்வினையும் சுட்டிக்காட்டி அதனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வரைதல், செதுக்குதல், உருவாக்குதல் மட்டுமல்லாமல், எங்கள் படைப்புகளையே திரும்பத் திரும்பச் செய்யும் இயந்திரத்தனத்தில் விழுந்துவிடாமல் இருக்கும் சவால்களைக் குறித்தும்
நாங்கள் விவாதிப்போம். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொள்கை விளக்கங்களோடு வெளிப்பட்ட எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டு விழுந்த குழிகளை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். அதே வேளை அரசியல், பண்பாடு, பொருளாதாரம், பாலியல் சமன்பாடு, சூழலியல் மற்றும் தத்துவம் போன்றவை குறித்த அக்கறையும் அது சார்ந்த படைப்புகளை உருவாக்கும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது, பத்தாண்டுகளில் எங்கள் வெளிப்பாடு கொள்கை விளக்கமாகக் கூட இருக்கும் என்று கூறும் கருப்பு குழுவினர் செயலிலும் அதைத் தொடங்கியுள்ளனர்.
கல்வி, எழுத்து, ஆய்வுப் புலம், கலை, ஊடகம் போன்றவற்றின் நிகழ்கால நிலை குறித்து பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் இமையம், நிகழ்த்து கலைஞர் ப்ரீத்தி ஆத்ரேயா, இயக்குநர் ரமணி ஆகியோர் பங்கேற்ற கருத்துப் பகிர்வோடு டிசம்பர் 28-ஆம் தேதி நிறைவுற்றது கருப்பு கண்காட்சி.
அபராஜிதன் ஆதிமூலம், சந்துரு, எபினேசர் சுந்தர் சிங், கிருஷ்ணப் பிரியா, மரிய அந்தோணி ராஜ், மைக்கேல் இருதயராஜ், நடேஷ் முத்துசுவாமி, நரேந்திரன், ஷர்மிளா மோகன் தாஸ் ஆகியோர் படைப்புகளில் கருப்பின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடிந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைக் கலைக்காட்சியில் ஒரு பகுதியாக கருப்பும் இவ்வாண்டு பங்கேற்கிறது என்று தெரிவித்தார் இதன் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்த அனிதா. கருப்பு புரட்சியின் நிறம்; புதுமையின் நிறம். மக்கள் பிரச்சினைகளிலிருந்து விட்டுக் கலை விலகியிருக்கிறதோ என்ற எண்ணத்தை அகற்றும் இந்தக் கருப்பு கலைக் குழுமம், இருளில் ஏற்றப்பட்ட விளக்காக ஒளிர்கிறது.
– ஓவியம்