சிறப்புச் சிறுகதை – வேலை

ஜனவரி 16-31 - 2014

– இமையம்

சாமியெ மொதல்ல கும்பிடு. அப்புறமா மெயில ஓப்பன் பண்ணி இண்டர்வியூக்குப் பதில் சொல்லலாம். வா, வந்து சாமியக் கும்பிடு என்று பெருமாள் சொன்னார்.  இருப்பா அம்மாவையும் தங்கச்சியையும் கூப்புட்டுக்கிட்டு வர்றேன் என்று சொன்ன தனுசு விமலாவையும் சாந்தியையும் அழைத்துக் கொண்டு சாமி கும்பிடுகிற இடத்திற்குப் போனான். எதுக்கு நிக்குற? கற்பூரத்த ஏத்து என்று பெருமாள் சொன்னதும் விமலா கற்பூரத்தை ஏற்றினாள். முதலில் எல்லா சாமிப் படங்களுக்கும் தீபத்தைக் காட்டினாள்.  அடுத்ததாக தனுசுவிற்குக் காட்டினாள்.  அப்போது விமலாவினுடைய கண்கள் கலங்கின. அதைப் பார்த்த பெருமாள், வாழ்க்கையிலெ கடவுளு இன்னிக்கித்தான் நல்லது பண்ணியிருக்கான். இந்த நேரத்திலெ நீ ஏம்மா அழுவுற?

என்று சொன்னார்.  அவர் சொன்னதைக் காதில் வாங்காமல் கீழ விழுந்து கும்புடுப்பா என்று தனுசுவிடம் சொன்னாள். பிறகு தானும் விழுந்து கும்பிட்டாள் விமலா.  அவர்களைப் பார்த்து பெருமாளும் சாந்தியும் தரையில் விழுந்து சாமி கும்பிட்டனர். மற்றவர்களுக்குத் திருநீறு பூசி, தானும் பூசிக்கொண்ட பெருமாள் போம்மா  போயி ஒங் கையால கம்ப்யூட்டர ஆன் பண்ணு என்று சொன்னார்.  கண்கலங்கியபடியே விமலா கணினி இருந்த அறைக்குள் போனாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் போனார்கள்.

அண்ணெ சீக்கிரம் மெயில ஓப்பன் பண்ணு. நேரமாவறது தெரியல? என்று சொல்லி சாந்தி அவசரப்படுத்தினாள்.  கும்புட்டுட்டு அப்புறமா ஓப்பன் பண்ணுப்பா என்று விமலா சொன்னாள்.  அவள் சொன்ன மாதிரியே செய்தான் தனுசு.  தன்னுடைய மெயில் பகுதியைத் திறந்தான்.  நேர்முகத் தேர்வுக்கான அய்.கே.எஸ். கம்பெனியின் அழைப்புக் கடிதம் வந்திருந்ததைக் கண்டதும் நால்வரின் முகத்திலும் மகிழ்ச்சியும் பரபரப்பும் படர்ந்தது.  ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். தனுசுக்கு இடது பக்கமாக உட்கார்ந்திருந்த பெருமாள் அவனுடைய தோளில் செல்லமாகத் தட்டிக்கொடுத்து, என்னா கேக்கிறான்னு பாரு என்று சொன்னார். கேம்பஸ் இண்டர்வியுவிலேயே கஷ்டமான எல்லாக் கேள்வியையும் கேட்டுட்டான். இனிமே கேக்கிறத்துக்கு ஒன்னுமே இல்லெ. எல்லாம் பார்மாலிட்டிஸ் கேள்வியாத்தான் இருக்கும் என்று சொன்ன தனுசு கணினியின் திரையைப் பார்த்தான். அவனோடு சேர்ந்துகொண்டு மற்றவர்களும் பதட்டத்துடன் நேர்முக அழைப்புக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தனர்.

வாழ்த்துகள் தனுசு.  அய்.கே.எஸ் கம்பெனியின் வழியாக கேம்பஸ் நேர்முகத் தேர்வுக்குப் பிறகு மீண்டும் உங்களோடு உரையாடுவதில் மகிழ்ச்சி.  உங்களுக்கான நேர்காணல் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் உங்களுடைய கல்வித் தகுதிகள் பற்றிய விவரங்களையும், குடும்பத்தார்கள், நண்பர்கள், பிடித்த விசயங்கள், பிடிக்காத விசயங்கள், செய்ய விரும்புகிற, செய்ய விரும்பாத விசயங்கள் பற்றிய விவரங்களையும் அளிக்க வேண்டும். அதோடு உங்களுடைய பாஸ்போர்ட் சம்பந்தமான விவரங்களையும் அளிக்க வேண்டும். இரண்டாவது பகுதி அய்.கே.எஸ்.சி.யின் நிபந்தனை. முதல் பகுதிக்குப் பதில் அளித்தவுடன்தான் உங்களுக்கான இரண்டாவது பகுதி வரும். இரண்டாவது பகுதிக்கு நீங்கள் அளிக்கும் பதில்களை வைத்தே மூன்றாவது பகுதி அதாவது உங்களுக்கான கேள்விகள் வரும். ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் பதில் அளித்தபிறகுதான் அடுத்த கேள்வி வரும். ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் பதில் அளிக்க பத்து விநாடிகள் மட்டுமே ஒதுக்கப்படும். கேள்வி பதில் முடிந்ததும் முடிவு அறிவிக்கப்படும்.  இனி உங்கள் நேர்முகத் தேர்வுக்கான முதல் பகுதிக்குச் செல்லுங்கள் தனுசு.  வெற்றி பெற வாழ்த்துகள் என்ற பகுதியைப் படித்ததும் தனுசு வேகவேகமாகத் தன்னைப்பற்றிய விவரங்களைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்தான். நேரமாக நேரமாக தனுசுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பதட்டமும், பரபரப்பும் கூடிக்கொண்டே இருந்தது. பதட்டத்தில் தனுசு தவறாகத் தட்டச்சு செய்துவிடுவானோ என்ற கவலையும் கூடுதலாக இருந்தது. அவன் பிரி.கே.ஜி.யிலிருந்து பொறியியல் பட்டப் படிப்புவரை படித்த பள்ளிகளின் பெயர்களையும், பெற்ற மதிப்பெண்களையும் தட்டச்சு செய்துவிட்டு, திரும்பிப் பெருமாளைப் பார்த்தான். அவர் அவனுடைய பாஸ்போர்ட் சம்பந்தமான தகவல்களையும், பிற தகவல்களையும் சொல்லச் சொல்ல தனுசு தட்டச்சு செய்தான். சிறிது நேரத்தில் கணினியின் திரையில் சரி என்று பதில் வந்தது. உங்களுடைய உடல் தகுதித் திறன், குடும்பத்தாருடைய உடல் தகுதித் திறன் குறித்த அறிக்கையை நிர்வாகம் குறிப்பிடும் மருத்துவமனையிலிருந்து பெறப்பட வேண்டும் என்று வந்த கேள்விக்கு, சரி என்று பதில் அளித்தான்.

நிபந்தனைகள்

அய்.கே.எஸ்.சி என்பது ஒரு ஆச்சரியம்.  விவரிக்க முடியாத ஆச்சரியம்.  மழை, காற்று, வெயில், சூரியன் இல்லாத உலகம்.  அய்.கே.எஸ்.சியின் வானத்திற்கு அடிவானம் கிடையாது. இங்கு கடிகாரம் கிடையாது.  இங்கு கம்ப்யூட்டர்தான் கடவுள். சராசரி மூளை அல்ல- _ அதீத மூளை அல்ல _ ஒளிரும் ராட்சசத்தனமான மூளைக்கு மட்டுமே இடம். அறிவுக்கேற்ற பதவி.  பதவிக்கேற்ற பணம். பணம் என்பதுதான் வாழ்க்கை.  பணம்தான் அதிகாரம், பண்பாடு, கலாச்சாரம், கௌரவம், மரியாதை, மதிப்பு, எல்லாமே பணம்தான். காதல், மனைவி,-குழந்தை குடும்பம் எல்லாமே பணம்தான்.  உலகம் என்பதே பணம்தான். பணத்தை ஈட்டுவது மாபெரும் கலை. அய்.கே.எஸ்.சியைப் பொருத்தவரை நேரம் என்பது பணம். எல்லாவற்றையும்விட மதிப்பு வாய்ந்தது. இங்கு நட்பு, -காதல், -பரிவு, -கருணை, -இரக்கம், -சமரசம், -கண்ணீர் போன்ற இந்திய மிகை உணர்ச்சிகளுக்கு இடமில்லை.  மனம் பாறை மாதிரி இறுகி இருக்க வேண்டும்.  நாம் தேடுவதைத்தான் நாம் அடைவோம் என்பது அய.கே.எஸ்.சியின் கொள்கை.  பணி நேரத்தில் பிறரிடம் பேச, -பழக, -சிரிக்க அனுமதியில்லை. தொழில்நுட்பம் _ -வெற்றி _ -லாபம் _ -பணம் இதுதான் பிரதானம்.  புதுமை முக்கியம். பேச்சு, நேரத்தை வீணாக்கும் என்பது நிறுவனத்தின் கொள்கைகளில் ஒன்று. தேவைப்பட்டால் மட்டுமே சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

கணினித் திரையில் அய்.கே.எஸ்.சி-ன் நிபந்தனைகளை மற்றவர்களுடன் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த சாந்திக்குத் திடீரென்று என்ன தோன்றியதோ எழுந்து வேகமாகச் சென்று மேஜையின் மீது இருந்த செல்பேசியை எடுத்து  யாருக்கோ பேசினாள்.  ஹாய், ஒரு குட் நியூஸ்.  எங்க அண்ணணுக்கு அய்.கே.எஸ்.சி-ல வேல கெடச்சிடுச்சி என்று உற்சாகம் பொங்கப் பேச ஆரம்பித்தாள்.  அப்போது தலையில் அடித்துக் கொண்ட விமலா, சீ கழுத போன ஆப் பண்ணு.  உண்டு இல்லன்னு தெரியறதுக்குள்ளார எதுக்கு ஊரெல்லாம் டமாரம் அடிக்குற?  வேலக்கிப்போயி சேந்து மொத மாச சம்பளம் வாங்குனப் பின்னால எல்லாருக்கும் சொல்லிக்கலாம். அதுக்கு முன்னாடி யாருகிட்டயும் சொல்ல வேணாம்.  பொறாம புடிச்ச ஒலகம்னு கழுதைக்குத் தெரிய வேணாமா?  முதல்ல போன ஆஃப் பண்ணு  என்று சொல்லி விரட்டியதும் நான் அப்பறம் பேசறன் என்று சொல்லிவிட்டு சாந்தி செல்பேசியை அதே இடத்தில் வைத்துவிட்டு வந்து முன்புபோலவே உட்கார்ந்து கணினியின் திரையைப் பார்த்தாள்.

அய்.கே.எஸ்.சி-ன் வளாகத்திற்குள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.  உங்களுடைய ஆங்கிலம் பிறரைப் பிரமிக்க வைக்க வேண்டும். நீங்கள் பார்ப்பது, யோசிப்பது, செய்கிற காரியங்கள் எல்லாமே நிர்வாகத்தின் சார்பாக இருக்க வேண்டும்.  நீங்கள் கனவு காணலாம். கனவு காணும் கண்கள் நிர்வாகத்தினுடைய கண்களாக, உங்களுடைய அடையாளம் நிர்வாகத்தினுடைய அடையாளமாக, நீங்கள் பேசும் மொழி நிர்வாகத்தினுடைய மொழியாக இருக்க வேண்டும்.  எல்லாவற்றுக்கும் முனகலற்ற ஒத்துழைப்பு வேண்டும். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றால் ஆறுமாத காலம் உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் தனித்திறன் வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி, மனவெழுச்சி, பிறருடன் பழகும் முறை- _ கொள்ள வேண்டிய உறவு, பேசும் முறை, எப்படி நடப்பது, எப்படி உடை உடுத்துவது போன்றவை கற்றுத் தரப்படும். நிறுவனத்திற்கு ஏற்ற வகையில் உங்களை உருமாற்றம் செய்ய அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுவீர்.  தேவைப்பட்டால் வேறு கிரகத்திற்கும் அனுப்பப்படலாம். அதற்கு மனஅளவில் உடல் அளவில் உருமாற்றம் அவசியம்.  லௌகீக  உலகிலிருந்து நீங்கள் துண்டிக்கப்படலாம். இந்திய மனிதர்கள் இன்னும் மிருக நிலையிலிருந்து முன்னேற்ற மடையவில்லை. இந்தியர்களுடைய முகம் மிருகத்தைப் போலவே இருக்கிறது.  தலைமுடி, வாய், பல், நிறம், நடப்பது, சாப்பிடுவது, மனோபாவம் எல்லாமே மிருக நிலையிலேயே இருக்கிறது. இந்தியர்கள் முழுமையான மனித இனமாக இன்னும் மாறவில்லை.  ஆகவே, உருமாற்றம் அவசியம்.  எத்தகைய உருமாற்றத்திற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதெல்லாம் இந்திய நாட்டை வளப்படுத்தவும் முன்னேற்றவும்தான்.  அய்.கே.சியின் குறிக்கோள் தேசிய சேவையே. 20ஆ-ம் நூற்றாண்டிலேயே 22-ஆம் நூற்றாண்டுக்கான வாழ்க்கையைத் தர விரும்புகிறது அய்.கே.எஸ்.சி.

சாந்தி நச் நச் என்று தொடர்ந்து மூன்று நான்குமுறை தும்மினாள். அப்போது விமலாவுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.  கடுப்புடன் சாந்தியை முறைத்துப் பார்த்தாள். அபசகுணம் மாதிரி எதுக்குடி இப்பிடித் தும்முற? நேரம் காலம் தெரிய வாணாம் என்று சொல்லிச் சலித்துக் கொண்டாள். விமலா சாந்தியை இவ்வளவு மோசமாக இதற்குமுன் திட்டியதே இல்லை.  சாந்திக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. அழுகையை மறைப்பதற்காக தலையைக் கீழே கவிழ்த்துக் கொண்டாள்.  சாந்தி அழுவதையும் பொருட்படுத்தாமல் விமலா கணினியின் திரையைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தாள்.

அய்.கே.எஸ்.சியில் சுய விருப்பத் தேர்வுகளுக்கு இடமில்லை.  புத்திக்கூர்மைக்கு மட்டுமே இடம். உத்தரவுகளைப் பின்பற்றுவது மட்டுமே உங்கள் பணி.  உத்தரவுகளை நிர்வாகம் மட்டுமே முடிவு செய்யும்.  நிர்வாகம் பற்றி, நிர்வாகிகள் யார் என்பது குறித்து நீங்கள் அலட்டிக்கொள்ளக் கூடாது. பணி நியமனம் செய்யப்பட்டால் அய்.கே.எஸ்.சி பற்றியோ, அங்கு நீங்கள் செய்யும் வேலை குறித்தோ நெருக்கமானவர்களிடம்கூட பேசக்கூடாது.  ரகசிய கேமரா மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள். உங்களுக்கான தேவை ஊதியம் மட்டுமே. நிர்வாகம் அனுமதித்தால் மட்டுமே-அனுமதிக்கும்போது மட்டுமே படிக்கலாம் _ -விளையாடலாம் _ -பெண் நண்பருடன் பேசலாம். எப்போதும் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக- வாய்விட்டுச் சிரிக்கக் கூடியவராக, வாய்விட்டு அழக்கூடியவராக இருக்கக்கூடாது. கண்ணீரின் வாசனைக்குக்கூட அய்.கே.எஸ்.சி.யின் வளாகத்திற்குள் அனுமதியில்லை.

விருப்பம், விருப்பமின்மைகளுக்கு இடமில்லை.  ஓயாத ஓட்டம் மட்டுமே முக்கியம். இன்றைய பெருவியாபாரம் தொழில்நுட்பமே.  தொழில்நுட்ப எத்திக்ஸ் மட்டுமே அய்.கே.எஸ்.சிக்கு முக்கியம். இன்றைக்குப் பணம் என்பது அறிவியல் தொழில்நுட்பமே. குதிரைப் பந்தயம், மோட்டார்கார் பந்தயம், மல்யுத்தம் போன்ற போட்டிகளைப்போல அறிவியல் தொழில்நுட்பப் போட்டி. போட்டி இல்லையென்றால் சவால்கள் இல்லை.  சவால்கள் இல்லையென்றால் பணம் இல்லை.  பணம் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. அய்.கே.எஸ்.சி.யின் சிந்தனையும் செயல்திட்டமும் சர்வதேச சமுதாயத்திற்குரியது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை அய்ந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து அளிக்கப்படும். ஒரு முழு நாள் நீங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஆண்டுக்கு ஒருமுறை ஆறுநாள் வெளிநாட்டில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்தச் செலவையும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். அய்.கே.எஸ்.சியில் நீங்கள் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் நிர்வாகம் விரும்பினால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படும். (நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தை அணுக ஊழியர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.  எதன்பொருட்டும் நீதிமன்றம் செல்லமாட்டோம் என்பதற்கான ஒப்பந்தத்தில் ரூபாய் 500க்கான பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். (Duly attested by Notary Public முதன்மைப் பிரதியை பணியில் சேரும் அன்று நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.)

பயிற்சிக் காலத்திலோ -அய்ந்து வருடம் பணி செய்வதற்கு முன்பாகவோ பணியை விட்டு விலகினால் பெற்ற ஊதியத்தைவிட இரண்டு மடங்கு திருப்பிச் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவி-ன்படி உங்கள் மீது வழக்குத் தொடரப்படும்.  வழக்கு தில்லி உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே நடைபெறும் (இதற்கான ஒப்பந்தத்தை ரூபாய் 200 மதிப்புள்ள பத்திரத்தில் கையொப்பமிட்டு Duly attested by Notary Public- பிரதியை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்)

விமலா பெருமாளைப் பார்த்து எதுக்குங்க பத்திரத்தில கையெழுத்துக் கேக்கறான்  என்று கேட்டாள். அப்போது வீட்டின் அழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது.  அந்த நேரத்தில் விமலாவுக்கு எப்படித்தான் அவ்வளவு கோபம் வந்ததோ. சாந்தியிடம், யாருன்னு போயிப் பாரு, யாரா இருந்தாலும் நான் வேலயா இருக்கன்னு சொல்லு.  சனியனுங்க எதுக்குத்தான் ஓயாம மணி அடிச்சிக்கிட்டே இருக்காங்களோ.  ஏதாச்சும் அந்தக் கம்பெனில இருந்து வர்றேன், இந்தக் கம்பெனில இருந்து வர்றேன்னு சொல்லிக்கிட்டு எவனாவது வந்து நிப்பான்.

அப்படி இருந்தா அப்பறம் வான்னு சொல்லு என்று சொன்னதும் சாந்தி எழுந்து  வெளியே சென்றாள். சிறிது நேரம் கழித்து வந்த சாந்தியிடம் யாரு என்று விமலா கேட்டாள்.  அதற்கு அலுப்புடன் “Vaccum Cleaner”  வேணுமான்னு ரெண்டு பேர் கேட்டாங்க. வேணாம்ன்னு சொல்லிட்டேன் என்று சொல்லிவிட்டு உட்கார முயன்றவளிடம் கடுப்புடன், முதல்ல போயி காலிங் பெல்ல ஆஃப் பண்ணிட்டு வா என்று விமலா சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தவாறே எழுந்து சென்று அழைப்பு மணியை நிறுத்திவிட்டு வந்து உட்கார்ந்த சாந்தி ஆர்வத்தோடு கணினியின் திரையைப் பார்த்தாள்.

முப்பது வயதுவரை மட்டுமே பணிக்கு உத்தரவாதம்.  பணி நியமன ஆணை எப்படி உங்களுடைய கணினியின் வழியே கிடைக்கிறதோ, அதே முறையில் பணி நியமன நீக்க உத்தரவும் கிடைக்கும். அய்ந்து வருடம் முடிந்த பிறகு இடமாறுதல் விண்ணப்பம் கொடுக்கத் தகுதி உடையவர் ஆவீர். உங்களுடைய எதிர்பார்ப்பற்ற உழைப்பின் வழியாகவும், தியாகத்தின் வழியாகவும் உங்களுடைய பணிக்காலத்தை நீங்கள் நீட்டித்துக் கொள்ள முடியும்.  அய்.கே.எஸ்.சி என்பது திறமையின் மூலம் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுபவர்களின் உலகம். திறமைசாலிகளைப் பூமியிலிருந்து மேலே தூக்கிவிடவும், பறக்கவும் வைக்கும்.  அய்.கே.எஸ்.சி நிறுவனத்தின் சூரியனுக்கு அஸ்தமனம் கிடையாது. அஸ்தமனமற்ற உலகில் நீங்கள் வாழ விரும்ப வேண்டும்.  கனவு காண வேண்டும். புதிய புதிய கனவுகளை உருவாக்க வேண்டும். கனவுகளைப் பின் தொடர வேண்டும்.  சவால்கள் _ சாதனைகள் மட்டுமே முக்கியம்.

நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றால் உங்களுக்கான குறியீட்டு எண் வழங்கப்படும்.  நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவோ -சமூகத்தில் தொடர்பு கொள்ளவோ உங்களுடைய குறியீட்டு எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அய்.கே.எஸ்.சின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?

பொது நிபந்தனைகளைப் படித்ததும் பெருமாள் பெருமூச்சுவிட்டார்.

ஓரக்கண்ணால் தனுசுக்கு வலது பக்கம் உட்கார்ந்திருந்த விமலாவைப் பார்த்தார்.  அவளுடைய முகத்தில் பழைய உற்சாகம் இருப்பது மாதிரித் தெரியவில்லை. தனுசும் சாந்தியும் பழைய உற்சாகத்திலேயே இருந்தனர். திரும்ப ஒரு முறை படிச்சிப் பார்ப்போம். ஒத்து வரலன்னா விட்டுடலாம் என்று பெருமாள் சொன்னதுதான் தாமதம்.  அவரை அடித்துவிடுவது மாதிரி என்னா பேசுறீங்க? இந்தக் கம்பனியிலெ கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகவும், நேர்முகத் தேர்வுக்கு மெயில் வரணுமின்னு எத்தனை ஆயிரம்பேர் தவம் கெடக்குறாங்க. யாரு செஞ்ச புண்ணியமோ நம்ம புள்ளெக்கி ஒரு பெரிய சான்ஸ் கெடச்சிருக்கு. இந்தக் கம்பனியிலெ வேல கெடச்சா நானே குடும்பத்தோட வந்து திருப்பதியிலெ மொட்டெ போடுறன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா இந்தப் பேச்சுப் பேசிக்கிட்டு இருக்கீங்க?  ஒன்னுக்கும் ஒதவாத துக்கடா கம்பனியிலே ஆயிரத்தெட்டு கண்டிசன் போடுறானாம். இதெவிட ஒலகத்திலே வேற என்னா பெரிய கம்பனி இருக்கு? கம்பனி பெருசுன்னா கண்டிசனும் பெருசாத்தான் இருக்கும். அதெல்லாம் பாத்தா முடியுமா? லட்சம் லட்சமாக அள்ளித்தரவன் சும்மாவா அள்ளித்தருவான் என்று சொன்ன விமலா தனுசுவிடம் ஓ.கே.ன்னு  சொல்லுப்பா என்று சொன்னாள். ஒரு நொடிகூட தாமதிக்காமல் சரி என்று தட்டச்சு செய்தான்.  அவன் தட்டச்சு செய்து முடித்த ஒரு சில விநாடிகளிலேயே நேர்முகத்தேர்வின் மூன்றாவது பகுதியான கேள்வி பதில் பகுதி கணினியின் திரையில் வந்துவிட்டது. அதைப் பார்த்ததும்  வாய்கொள்ளாச் சிரிப்புடன் மத்த எல்லாத்தலயும் ஓ.கே.வாங்கிட்ட. இந்தப் பிரிவிலயும் ஓ.கே. வாங்கிட்டா போதும்.  அப்புறம் அண்ணனப் புடிக்கவே முடியாது என்று சாந்தி சொன்னதும் மற்ற மூவரும் வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தனர்.  சிரிச்சிக்கிட்டே இருக்காதீங்க. மொதல்ல கேள்விய என்னான்னு பாருங்க என்று சொன்னதோடு தானே முந்திக்கொண்டு முதல் கேள்வியைப் படித்தாள். சாந்தியோடு சேர்ந்து மற்றவர்களும் கேள்வியைப் படித்தார்கள்.

சராசரியாக நீங்கள் தூங்கும் நேரம் எவ்வளவு? என்ற கேள்விக்கு தனுசு பதில் அளித்ததுமே க்ரைம் சம்பந்தப்பட்ட சினிமா பார்க்கும் பழக்கமோ, க்ரைம் சம்பந்தப்பட்ட புத்தகம் படிக்கும் பழக்கமோ உண்டா? என்ற கேள்வி வந்தது.  தனுசு இல்லை என்று பதில் அளித்ததும் அடுத்த கேள்வி கணினியின் திரையில் தோன்றியது.  (இதுவரை மாணவர் போராட்டத்திலோ- பிற போராட்டத்திலோ பங்கேற்றதுண்டா? என்ற கேள்விக்கும், நீங்கள் மார்க்சிய தத்துவத்தை, இயக்கத்தை ஆதரிப்பவரா? மார்க்சிய இயக்கங்களின் உறுப்பினரா? என்ற கேள்விகளுக்கும் யாரிடமும் கேட்காமல், கொஞ்சம்கூடத் தாமதிக்காமல் உடனுக்குடன் இல்லை – இல்லை என்று பதில் அளித்தான்.  அவன் பதில் அளிக்கிற வேகத்தைப் பார்த்து சாந்தி கைத்தட்டினாள்.

பாலின மாறுபாடு உள்ளவரா? என்ற கேள்விக்கும், நீங்கள் ஓரினச் சேர்க்கையாளரா?,  ஓரினச் சேர்க்கையைக் குற்றம் என உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பவரா? என்ற கேள்விகளுக்கும் இல்லை, இல்லை, இல்லை என்று தனுசு தட்டச்சு செய்தபோது விமலாவின் முகம் கோணியது.

எரிச்சலுடன் சின்னப் புள்ளெங்ககிட்டெ எப்பிடிப்பட்ட கேள்வி கேக்குறான் பாரு. இதுக்குச் சட்டம் வேற கொண்டாந்துட்டானுவோ. ரெண்டு பேரு சொல்றது எப்பிடித்தான் நாட்டோட சட்டமா இருக்குன்னே தெரியல. எல்லாம் தல எழுத்து.  இந்த மாதிரிக் கேள்விய எதுக்குக் கேக்குறான்னே புரியல என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டாள்.  அப்போது விமலாவின் பக்கம் திரும்பிய தனுசு நான் கடசியா எப்பம்மா அழுதேன்? என்று கேட்டான். ஏம்ப்பா?, அதாம்மா அடுத்த கேள்வி என்று சொன்னான்.

கடைசியா எப்ப அழுதன்னா கேக்குறான்?  நீ ஏம்ப்பா அழுவப்போற? ஒனக்கென்ன தல எழுத்தா?  ஒன்னெ அழவுட்டா வளத்தோம்? என்று கேட்டாள் விமலா. அதற்குச் சலித்துக்கொண்ட தனுசு, நேரமில்லெ.  சட்டுன்னு ஞாபகப்படுத்திப்பாரு என்று சொன்னான். எனக்குத் தெரிஞ்சி நீ முதன் முதலா பிரி.கே.ஜிக்குப்போன அன்னிக்கித்தான் அழுத என்று பெருமாள் சொன்னார். அவரை ஒருமாதிரியாகப் பார்த்தான் தனுசு. அப்போது, ஞாபகம் இல்லெ. அண்மையில் அழுவுலன்னு டைப் பண்ணு என்று சாந்தி சொன்னதும், பெருமாளும் விமலாவும் ஒரே வழியாக இல்லென்னு சொல்லிடு என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதைச் செய்தான் தனுசு. எப்படிப்பட்ட இழப்பு வந்தாலும் அழாமல் இருக்க முடியுமா? என்ற அடுத்தக் கேள்விக்கு யாரிடமும் கேட்காமல் தானாகவே முடியும் என்று சட்டென்று பதில் அளித்தான்.

நிறுவனம் அனுமதிக்கும்வரையோ அல்லது முப்பது வயது நிறைவடைவதற்குள்ளோ திருமணம் செய்யக்கூடாது என்ற கேள்விக்கும் குழந்தை பெறுவது தொடர்பாக நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்  என்ற அடுத்த கேள்விக்கும் ஒரு நொடிகூட, தயங்காமல் பதில் அளித்த தனுசு, உறவினர் மட்டுமல்ல பெற்றோர் இறந்தால்கூட நிர்வாகம் அனுமதித்தால்தான் விடுமுறை எடுக்க வேண்டும்  என்ற கேள்வியைப் படித்ததும், பதில் அளிக்காமல் விமலாவையும் பெருமாளையும் மாறிமாறிப் பார்த்தான்.  பதில் அளிக்காமல் தயக்கத்துடன் உட்கார்ந்திருந்த தனுசுவைப் பார்த்த விமலா இரண்டாவது முறையாகக் கேள்வியைப் படித்தாள்.  பிறகு கரகரத்த குரலில் சரின்னு சொல்லுப்பா என்று சொன்னவளுக்குக் கண்கள் கலங்கின. தனுசு அவளைப் பார்த்தான். அவன் பார்த்ததும் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்ட விமலா யோசிக்காத,  எல்லாக் கேள்விக்கும் சரின்னு சொல்லிடு என்று சொன்னாள்.

சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு அவளாகவே நாங்க செத்த பிறகு நீ வந்து என்னா பண்ணப்போற? நீ லீவ் எடுத்துக்கிட்டு வந்து பாக்குறதால செத்துப்போன நாங்க உசுரோட எழுந்திரிச்சி வரப்போறமா? யாரு செத்தாலும் லீவ் எடுக்கமாட்டேன்னு சொல்லு. இருவத்தி ரெண்டு வருச கனவுடா.  விருத்தாசலத்திலிருந்து என்னிக்கி ஒன்னக் கொண்டுபோய் நெய்வேலி ஜவகர் ஸ்கூல்லெ பிரி.கே.ஜி. சேத்தனோ அன்றிலிருந்து நீ பன்னண்டாவது படிக்கிற வரைக்கும் நாளு தவறாம விடியக்காலம் நாலு மணிக்குத்தான் எழுந்திருச்சேன். பத்தாவதும், பன்னண்டாவதும் படிக்கும்போது நீ படுக்கிறமுட்டும் ராத்திரி ஒரு மணியோ ரெண்டு மணியோ அதுவரைக்கும் ஒங்கூட நானும் ஒங்கப்பாவும் எதுக்காக முழிச்சிருந்தோம். பிரி.கே.ஜியிலிருந்து இன்னியமுட்டும் ஒன்னெ தமிழில பேசவுட்டுருப்பமா? தெருவுல புள்ளெங்ககூட சேந்து வௌயாட வுட்டுருப்பமா, இல்லெ தெருவுலதான் நிக்க வுட்டுருப்பமா?  சொந்தக்காரங்க நல்லது கெட்டதுக்குக்கூட போவாம, சொந்தக்காரங்க ஊடுன்னு ஒன்னெ அனுப்பாம வச்சிருந்ததெல்லாம் இதுக்காகத்தான். நீ +2 முடிச்சதும் தமிழ்நாட்டிலியே பெரிய காலேஜா பாத்து எட்டு லட்சம் கொடுத்து சேத்தது எதுக்காக?  நீ சிரிச்சி வௌயாடவா? இல்ல கல்யாணம் காட்சி, சாவுவாழ்வுக்குப் போகவா?  சொந்தபந்தமின்னு பாத்தா பணமும் வராது.  வெளிநாடும் போவ முடியாது.  சொந்தபந்தமின்னு பாத்துத்தான் இத்தன வருச சர்வீசில ஒங்கப்பா ஒரு ஊடுகூட கட்டாம குந்தியிருக்காரு. எங்கூட வேல பாக்குறவங்க எல்லாம் ஊடும் கட்டிப்புட்டாங்க. மூணு நாலு மனைன்னும் வாங்கிப் போட்டுட்டாங்க. இதெல்லாம் நீ வேலக்கிப் போயித்தான் செய்யணும். நீ ஒன்னும் எங்களுக்காகப் பாக்க வாணாம்.  ஆறாவது சம்பளக்கமிஷன்ல எனக்கும் ஒங்கப்பாவுக்கும் சேத்து அம்பத்தி ஆறாயிரம் வருது. இதுக்கு மேல எங்களுக்கு என்னா வேணும். நாங்க செத்தாக்கூட எங்க பொணத்தத் தூக்கிப்போட அரசாங்கம் பணம் தருது என்று சொன்னாள். அப்போது சாந்தி உற்சாகத்துடன் சொன்னாள்.

இந்தமாரி சான்ஸ் கெடச்சா நான் யோசிக்கவே மாட்டேன்.

நீ இப்பத்தான +2 படிக்கிற. நீயும் இஞ்சினியரிங் முடி. ஒனக்கும் இதே மாதிரி சான்ஸ் கெடைக்கும் என்று பெருமாள் சாந்தியைப் பார்த்துச் சொன்னார்.

தனுசு பெருமாளையும் விமலாவையும் மாறிமாறிப் பார்த்தான். அவன் தயங்குவதைப் பார்த்ததும் மூவரும் ஒரே குரலில் சரின்னு சொல்லிடு என்று சொன்னார்கள்.  அவர்கள் சொன்னதைச் செய்தான் தனுசு. பதில் அளித்த மறுநொடியே அடுத்த கேள்வியாக எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்? என்று வந்தது. கொஞ்சம்கூடத் தயங்காமல் சாந்தி ரெண்டு லட்சம் என்று சொன்னாள்.

தனுசு பதிலைத் தட்டச்சு செய்தான்.  மறுநொடியே திரையில் பச்சை நிறத்தில் யூ.ஆர்.செலக்ட்டேடு என்ற பதில் வந்தது.  அதோடு உங்களுடைய குறியீட்டு எண் அய்.கே.எஸ்.சி. 09AB151515/ உடனே தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.  நீங்கள் சாதனை செய்வதற்கான பாதை உங்கள் முன் நீண்டு கிடக்கிறது.  முடிவில்லா பெருவெளியை நோக்கி உங்களுடைய சிறகுகளை விரியுங்கள். வாழ்த்துகள் என்ற பதிலைக் கண்டதும் நான்குபேரும் ஒரே நேரத்தில் தைத்தட்டிச் சிரித்தார்கள்.  ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டார்கள். பெருமாளுக்கும் விமலாவுக்கும் மகிழ்ச்சியில் அழுகையே வந்துவிட்டது. ஒரு மாவீரனை அழைத்துக்கொண்டு போவதுபோல தனுசுவை பெருமாளும் விமலாவும் அணைத்துக்கொண்டுபோய் சாமி படத்திற்குமுன் விழுந்து கும்பிட வைத்தனர்.

அவர்களும் விழுந்து கும்பிட்டனர்.  எழுந்திருக்கும்போது இரண்டும்பேரும் ஒரே குரலாகச் சொன்னார்கள்: எப்பிடியோ எங்க கனவு நெறவேறிடிச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *