முட்டுக் கொடுக்கும் முதியோர் தடி பொய் புளுகுகளை எட்டித் தள்ளும் பெரியார் தடி! முதுமையைக் காட்டும் முதியோர் தாடி நூற்றாண்டுகள் கடந்தும் சிந்திக்கத் தூண்டும் பெரியார் தாடி! அந்தக் குழந்தை சிரிப்பை நிறுத்தவில்லை நிழற்படம் மகிழ்ச்சியில் அவன் அனுதாபத்தில் நாம் நடைபாதைவாசி! நீர்ப்பந்தல் வைத்தவர்க்கு தீர்ந்தது தாகம் தேர்தல் வெற்றி! தேக்கியவன் தரமாட்டான் காய்ந்தவன் விடமாட்டான் காவிரி – முசிறி மலர்மன்னன்
பணக்கார அப்பன் ஜாதி வெறியன் தீவட்டித் தடியன் சமுதாயக் கட்டுப்பாடு சம்பிரதாயக் கோட்பாடு சதிவேலை சரிக்கட்டும் வேலை எல்லாவற்றையும் ஒருகை பார்த்திடும் உண்மைக் காதல்
– ஆட்டோ. கணேசன், அருப்புக்கோட்டை
மூடநம்பிக்கையை வளர்ப்பதனால்தானோ கூண்டுக் கைதியாய் அதிர்ஷ்டச் சீட்டெடுத்து ஓடி ஒளிந்து விடுதே ஓரிரு நெல்லுக்கு அடிமைக் கிளி!
பாவிகளையும் ரட்சிப்பவர் ஆண்டவர் அப்பாவி மக்களை அம்போ என்று விட்டுவிட்டாரே பூகம்பம் சுனாமி அணுஉலை அடுக்கடுக்காய் ஆபத்துகள்!
– கே.ஆர். இரவீந்திரன், சென்னை-1
அன்புள்ள அப்பாவுக்கு… நீங்களும் அம்மாவும் நேர்த்திக் கடனென்று_ பழனிக்குப் போய் முருகனைப் பார்த்தீர்கள்! சபரிமலைக்குப் போய் அய்யப்பனைப் பார்த்தீர்கள்! திருப்பதிக்குப் போய் ஏழுமலையானைப் பார்த்தீர்கள்! இவர்களில் எவரும் என்னைப் பார்க்க வரவில்லை! இதற்கெல்லாம், நீங்கள் பட்ட கடன் கொஞ்சமல்ல! நீங்கள் நோன்பிருந்து நோன்பிருந்து நோஞ்சானாய்ப் போனதுதான் மிச்சம் இதையெல்லாம் எவரேனும் ஓர் ஏழைக்குச் செய்திருந்தால், உங்களுக்கு என்னைப் பெற்ற கடனாவது தீர்ந்திருக்கும் இப்படிக்கு, வயதுவந்த நாள் முதலாய் நோன்பிருக்கும் உங்கள் அன்புமகள் முதிர்கன்னி! க. இளஞ்செழியன், பேராவூரணி
அநீதி நடந்தால் கண்களை மூடு… அவலக்குரல் கேட்டால் காதுகளை மூடு… பொதுப் பிரச்சினையா…? பஜனையைத் தொடங்கு போராட்டமா…? பூசையில் மூழ்கு தேசமே எரிந்தாலும் திரும்பிப் பார்க்காதே… மயானமாய்ப் போகட்டும் தியானம் கலையாதே…! ஜாதிக் கொடுமையா… சமூக ஏற்றத்தாழ்வா… இனப்படுகொலையா… ஏனிந்தக் கொடுமையென ஆனந்த அலை அம்புட்டும் உனக்கே பாவம் சமூகம் பாழாய்ப் போகட்டும் வாழும் கலை இது அறிவாய் குழந்தாய்…! கண்டு கொள்ளாமல் இருப்பதே கடவுளை அடையும் பாதை சத்குருக்களின் அருளாசிகளில் மீண்டும் ஒலிக்கிறது கீதை.
உடலைவிட உயிர் அழகு! உயிரைவிட உள்ளம் அழகு! உள்ளத்தைவிட நட்பு அழகு! நட்பைவிட அறிவு அழகு! அறிவைவிட இவ்வுலகில் வேறு எது அழகு? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர் |