மாரியம்மன் கோவில்
அமுதாவுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. உடம்பில் பதற்றம் பரவியது. உயிருக்கு உயிரான கணவர் சேகர் தொடர்ச்சியாய் இருமுவதும் சதா சளியும் ரத்தத் துளியுமாய் வெளியாவதும் அமுதாவை ரொம்பவே கலவரப்படுத்தியது. எலும்புக்கூடாய் மாறிய சேகரின் தோற்றம் அமுதா இதயத்தைக் கசக்கிவிட்டது. அமுதா கணவரை அழைத்துக் கொண்டு நகரில் பிரபலமான கைலாஷ் நர்சிங் ஹோமிற்குச் சென்றாள்.
கைலாஷ் நர்சிங்ஹோம் வைத்திருக்கும் டாக்டர் கைலாசம் நல்ல கைராசி டாக்டர் என்று ஊரில் நல்ல பெயர் இருந்தது. டாக்டர் கைலாசம் கேட்கும் பீஸைக் கேட்டால் கொஞ்சம் பலஹீன ஆளின் உயிர் போய்விடும். டாக்டர் கைலாசம் கேட்கும் பீஸைக் கொடுத்துவிட்டால் பேஷண்ட் உயிருக்கு டாக்டர் கேரண்டி.
அமுதா தன் கணவரோடு கைலாஷ் நர்சிங் ஹோமிற்குள் முதல் ஆளாக நுழைந்தாள். டாக்டர் கைலாசம் சேகரை ரொம்பநேரம் சோதித்துவிட்டு வாய் திறந்தார். உங்க ஹஸ்பண்டுக்கு டி. பி. இருக்கு. உடனே கவனிக்கணும். இல்லைன்னா, உயிருக்கு ஆபத்து. டாக்டர் சொன்னதும் அமுதாவுக்கு இதயமே நின்றுவிட்டது போல் வலித்தது. டாக்டர் என்ன செலவானாலும் பரவாயில்லே. என் வீட்டுக்காரரு குணமாகனும்.
டி.பி. வியாதிக்கு விலை கூடிய மெடிஷன், ஊசி மருந்து எல்லாம் இங்கே இருக்கு. 25,000/- ரூபாயை பீஸாகக் கட்டி விட்டால் உங்க கணவரை இன்னைக்கே அட்மிட் பண்ணிடலாம்.
டாக்டர், ஒரு வாரத்திற்குள் பணத்தோடு வாரேன்.
பெற்றோர்களைப் புறக்கணித்துவிட்டு காதலர் சேகரைத் திருமணம் செய்துகொண்டதால் அமுதாவால் பிறந்த வீட்டிற்கு உதவி கேட்டுப் போகமுடியவில்லை. ஆனால், புருஷனைக் காசநோயில் இருந்து காப்பாற்ற அமுதா துடியாய்த் துடித்தாள். யாரிடம் உதவி கேட்கலாம் என்று அமுதா நினைத்த போது மாமா தங்கசாமி முகம் பளிச்சிட்டது. தங்கசாமி பேரில் மட்டுமல்ல, ஆளும் தங்கமான குணமுள்ளவர். அமுதா உதவிகேட்டு அவரிடம் சென்றாள்.
மாமா என் வீட்டுக்காரருக்குக் காசநோய் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு. 25,000/– ரூபாய் இருந்தால்தான் என் புருஷனைக் காப்பாற்ற முடியுமாம். டாக்டர் சொல்லிட்டாரு. தயவுபண்ணி ரூ. 25,000/- கடனாகக் கொடுத்து உதவுங்க மாமா. அமுதா தங்கசாமி காலில் விழுந்து கெஞ்சினாள். ஆனால், தங்கசாமி பொருட்படுத்தவில்லை. அமுதா உன்னைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. ஆனால், தற்சமயம் என்கிட்டப் பணமில்லையே என்றார். அமுதா பண உதவி கேட்டுப் போன இடங்களில் ஏமாற்றமே மிஞ்சியது. வெறுங்கையோடு அமுதா வீடு திரும்பினாள்.
காலையில் வழக்கம்போல் பால் வாங்கலையோ பால் என்று பால்காரப் பாட்டி அமுதா வீட்டின் வாசல் முன் வந்தாள். அமுதா செம்பைக் கழுவிவிட்டு பால் வாங்க வெளியே வந்தாள். ஏந்தாயி… உடம்பு சரியாயில்லையா?…
மனசுதான் சரியில்ல பாட்டி.
ஏந்தாயீ…
என் வீட்டுக்காரருக்கு ஒரு நோய் இருக்கு, அதைக் குணமாக்க 25,000/—_ ரூபாய் வேணும். தெரிஞ்ச இடத்துல கேட்டுப்பாத்தும் பணத்தைப் புரட்ட முடியல. அதான் மனசுக்கு ரொம்பக் கவலையா இருக்கு என்று அமுதா தனது கஷ்டத்தைப் பாட்டியிடம் சொல்ல, பால்காரப்பாட்டி ஒரு உபாயம் சொன்னாள். தாயீ… திக்கற்ற பேர்களுக்குத் தெய்வம்தான் துணை. மடப்புதூர் அம்மன்கோயில் ரொம்ப விசேஷமானது. அங்க போ தாயீ, மாரியாத்தா கோவிலில் போய் உதவி கேள். ஆத்தா பணம் கொடுப்பா. பால்காரப் பாட்டி செம்பிலும் அமுதா மனதிலும் பால் வார்த்துச் சென்றாள்.
மடப்புதூரைப்பற்றி அமுதாவுக்கு நன்கு தெரியும். அமுதாவின் அக்கா குமுதா அங்கேதான் இருக்கிறாள். மடப்புதூர் மாரி அம்மன் மேல் குமுதா ரொம்ப பக்தியுடன் இருப்பதால், மாரியம்மன் மகிமையால் அக்காளும் அத்தானும் மடப்புதூரில் செல்வத்தோடு வாழ்வதாக அமுதா கேள்விப்பட்டிருந்தாள். எனவே, அமுதா மடப்புதூர் அம்மன் கோவிலுக்குப் போய் வருவதைப்பற்றி சேகரிடம் கலந்து பேசினாள்.
மனுஷங்க நம்மக் கை விட்டுட்டாங்க. ஆனா, மாரியாத்தா கைவிட மாட்டா… நா மடப்புதூர் மாரியம்மனிடம் வேண்டிக்கிட்டு வாரேங்க. கண்டிப்பா ஆத்தா உதவுவா. அமுதா கூறியது சேகருக்கும் சரி எனப்பட்டது.
பஸ் நிலையத்தில் பக்தகோடிகள் அலை மோதினார்கள். அன்று மாரியம்மன் கோவில் கொடை என்பதால் ஜனநெருக்கடி அதிகமாக இருந்தது. ஜனக் கூட்டத்தில் பஸ் திணறியது. எப்படியோ அமுதா சீட்டில் இடம் பிடித்து உட்கார பஸ் மடப்புதூரை நோக்கி வேகம் எடுத்தது.
மடப்புதூரில் பஸ் நின்றபோது இருட்டிவிட்டது. அமுதா கூட்டத்தோடு இறங்கினாள். பக்தர்கள் பூ மாலைகளோடும் நேமிதப் பொருளோடும் மாரியம்மன் கோவிலை நோக்கி நடந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களோடு அமுதாவும் கோவிலை நெருங்கினாள். யாமிருக்க பயமேன்? என்பதுபோல கோவிலின் இராஜகோபுரம் தரிசனம் தந்தது. மாரியம்மன் கோவில் மின் அலங்காரத்தில் ஜொலித்தது. பந்தலில் பக்தர்கள் நிரம்பிக் கிடந்தார்கள். கோவில் பந்தல் ஓரம் வில்லிசை நடந்தது.
வாராளையா மாரியாத்தா
வார்த்தையாளே வரம் கொடுப்பா
தீராதநோயும் தீர்த்து வைப்பா
திருமாங்கல்யம் காக்கும் மாரியாத்தா
வில்லிசையைக் கேட்டு அமுதா மன ஆறுதல் கொண்டாள். நல்ல சகுனம் போல உணர்ந்தாள். பக்தர்களின் நெருக்கடியில் திணறியபடி அமுதா கோவில் உள்ளே போனாள். அங்கே கருவறையில் மங்கலக் கோலமாய் கையில் சூலத்துடன் மாரியம்மன் தரிசனம் தந்தாள். அமுதா தரையில் விழுந்து தொழுதாள். மாரி யாத்தா என் புருஷனைக் காப்பாத்த நீதான் உதவணும். எனக்கு மாங்கல்யப் பிச்சை போடணும் வேண்டிக் கொண்டு அம்மனுக்கு அமுதா தேங்காய் உடைத்தாள். கோவில் பூசாரி தீபாராதனை காட்டி அமுதாவுக்குத் திருநீறு பூசிவிட்டார். மாரியம்மன் சன்னதியில் தங்கம், வெள்ளியால் நேமிதச் சாமான்கள் நிரம்பிக் கிடந்தன. ஆத்தா எவ்வளவோ செய்திருக்கா, அதான் ஜனங்க இவ்வளவு நேமிதம் போட்டிருக்காங்க என்று அமுதா நினைத்துக்கொண்டாள். தனக்கும் மாரியாத்தா அருள் பாலிப்பாள் என்று அமுதா நினைத்தாள்.
ஊருக்குப் புறப்பட அமுதா நினைத்தாள். ஆனால், கோவிலுக்கு வந்துவிட்டு கொடையின் பாதியில் போவது நல்லதல்ல என்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொல்ல அமுதா கொடையில் கலந்து கொண்டாள். சாமக்கொடையில் மாரியம்மன் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தாள். கழுத்துக்கொள்ளா பூமாலைகள் ஆத்தாளை அழகுபடுத்தி இருந்தது. கோவில் பூசாரி மாரியம்மனுக்குத் தீபாராதனை காட்டினார்.
மேளத்த அடிங்கடா பூசாரி கத்த மேளக்காரர்கள் கனஜோராய் மேளம் தட்ட மாரியம்மன் இளவயசு சாமியாடிக்கு சாமி வந்தது. தலையை விரித்துப்போட்டு ஆடினாள். சாமியாடி இளம் பெண் வயசுக்கேத்த துடிப்பில் திங்கு, திங்கு என தரை தெறிக்க ஆட வாலிபர்களுக்குக் அம்பாள் தரிசனம் காண வாய்ப்புக் கிடைத்தது. இளம் சாமியாடி ஆவேசமாய் ஆட்டம் ஆடியது. வரவர ஆபாச ஆட்டமாய் மாறியது. இளம்பெண் சாமியாடி போடும் ஆட்டத்தில் சேலை அவிழ்ந்து விடுமோ? என்று கோவிலில் சில பெருசுகள் பயந்துகொண்டு இருந்தார்கள். இளம் சாமியாடி எவ்வளவுதான் ஆடுவாள்? அசந்ததும் குறிசொல்லத் தொடங்கினாள். மேளம் நின்றது. பக்த ஜனங்கள் பயபக்தியுடன் இளம் சாமியாடியிடம் குறி கேட்டார்கள். அமுதா கூட்டத்தைத் தள்ளியபடி முன் வந்தாள். ஆத்தா என் வீட்டுக்காரருக்குக் காசநோய் இருக்கு. அதைக் குணமாக்க பணம் கொடுப்பியா என அமுதா கும்பிட்டவாறு கேட்டாள்.
என்னை, கறிவேப்பிலைக்காரின்னு நெனச்சியா?
ஆத்தா வேப்பிலைக்காரி கேட்டதைக் கண்டிப்பா செய்வா. அப்படி நான்செஞ்சா நீ எனக்கு என்ன செய்வே? சாமியாடி கேட்டாள்.
உன் சன்னிதானத்துக்கு வந்து மொட்டை போடறேன் தாயீ… மயிரே போச்சின்னு போயிடுவ
என்ன ஆத்தா செய்யணும்?
தங்கத்தால் தாலி செய்து நேமிதக்கடனா என் உண்டியல்ல போடணும்.
சரி ஆத்தா… அமுதா உறுதி கொடுத்தாள்.அடிடா மேளத்த, சாமியாடி அதட்டினாள். மகள் வயசு பெறாத சாமியாடி டா போட்டுப் பேசும் கோபத்தில் கொட்டுக்காரர்கள் மேளத்தை வெளுத்துக்கட்டினார்கள். சாமக் கொடை முடிந்ததும் கோவில் வாசலில் ஜனங்களுக்குப் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல்,. சுண்டல் விநியோகித்தார்கள். ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு வாங்கினார்கள். அமுதா கூட்டம் குறையட்டும் என்று காத்து நிற்க சிறிது நேரத்தில் கூட்டம் குறைந்தது. அமுதா பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வர கோவில் வாசல் படியோரம் ஒரு பொருள் மினுங்கியது. அமுதா அக்கம் பக்கம் பார்த்து யாரும் தன்னைக் கவனிக்கவில்லை எனத் தெரிந்ததும் துணிந்து டால் அடித்த பொருளைக் கையில் எடுத்தாள். இரண்டு வட தங்கச் சங்கிலி. அப்படியே இடுப்பில் சொருகிக் கொண்டாள்.
மாரியாத்தாள் என் புருசனக் காப்பாத்த உதவி செஞ்சிட்டா, அமுதாவுக்கு, பக்திப் பரவசத்தில் புல்லரித்தது. ஆத்தா திசைநோக்கித் தொழுதுவிட்டு அமுதா அவசரமாய் ஊருக்குப் பஸ் ஏறினாள்.
பார்த்தீங்களா அத்தான். இரட்டை வட தங்கச்செயின். ஆத்தா உங்க வைத்தியச் செலவுக்கு நகையைக் கொடுத்து உதவியிருக்கா.
கரெக்டா சொன்ன அமுதா, மாரியாத்தா ரொம்ப மகிமையான சாமிதான். நாம் கேட்டபடி அனுக்கிரகம் பண்ணியிருக்கா
சேகரும் அமுதாவும் மாரியம்மனை மனதாரத் தொழுதார்கள்.
மறுநாளே சேகர் வெளியூரில் ஒரு நகைக்கடையில் இரட்டைவட தங்கச்செயினை விற்று 40,000/_ ரூபாயுடன் வந்தான். உடனே அமுதா, கணவனை கைலாஷ் நர்சிங் ஹோமில் 25,000/- ரூபாயைக் கட்டி அட்மிட் செய்தாள். கைலாஷ் நர்சிங் ஹோமில் சேகரை டாக்டர் கைலாசம் விலைமிக்க மெடிசன் மூலம் தீவிர சிகிச்சை செய்து ஒரே மாதத்தில் குணப்படுத்திவிட்டார்.
சேகர் முகப்பொலிவுடன் பழைய உடல் நலத்தைப் பெற்றான். டாக்டர் கைலாசம் சேகரை நர்சிங் ஹோமில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார். அமுதா உற்சாகக் களிப்புடன் கணவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.
சேகர் நோய் நொடி இல்லாமல் ஒழுங்காய் வேலைக்குப் போய் வர, ஓரளவு அவர்கள் நல்ல நிலைக்கு வந்தார்கள். மாரியாத்தாவுக்கு வேண்டிக்கொண்டபடி தங்கத்தால் தாலி செய்து நேமிதக்கடன் செலுத்த சேகர் தம்பதி நினைத்தார்கள்.
அந்த விசேஷத்திற்கு அக்காள் குமுதாவையும் அவளது கணவரையும் நேரில் அழைக்க அமுதாவும் சேகரும் மடப்புதூர் சென்றார்கள். கஷ்டப்பட்டு குமுதா வீட்டைக் கண்டுபிடித்து வீட்டுக்கதவைக் தட்ட, கொஞ்சம் தாமதமாக குமுதா வந்தாள். வாம்மா அமுதா.. வாங்க மாப்பிள்ளை வரவேற்று உபசரித்தாள். அமுதா வந்த காரணத்தைக் கூறினாள். அக்கா, நா மடப்புதூர் மாரியம்மன் கோவிலுக்குப் போனதால் என்னோட மாங்கல்யம் நிலைச்சுது. அதுக்கு நேமிதக் கடன் செய்ய அங்க போறோம். நீயும், அத்தானும் கண்டிப்பா வரனும். அமுதா வற்புறுத்தினாள். தங்கச்சி மாரியம்மன் கோவில் போனதால் தாலி பாக்கியம் நிலைச்சதா நம்புறா. ஆனா, நா மாரியம்மன் கோவிலுக்குப் போனதால் பூ இழந்து, பொட்டு இழந்து, புருஷனையே இழந்து நிக்கறேன். குமுதா கண்ணீராய்க் கரைய அமுதாவும் சேகரும் அதிர்ந்து விட்டார்கள். அக்கா கொஞ்சம் புரியும்படிச் சொல்லு என்று அமுதா கேட்டாள்.
எனக்கு மாரியம்மன் மேல ரொம்ப பக்தி. அடிக்கடி ஆத்தாளுக்காக விரதம் இருப்பேன். இது அத்தானுக்குச் சங்கடமாக இருந்தது. என்னடி விரதம்? என்மேல உனக்கு இஷ்டமில்லையா? அடிக்கடி கோவிலுக்குப் போற, எவனை வெச்சிருக்க? என்று சந்தேகப்பட்டாரு
அய்யய்யோ… அப்புறம்
மாரியம்மன் கோவில் கொடையில் ஒரே கூட்டம், அந்த நெருக்கடியில் என் ரெட்டவட தங்கச்செயின் தொலைஞ்சிட்டுது. அதை எடுத்தவன், என் கணவரோட கடையில் வித்திருக்கான்.
அடப்பாவமே
ராத்திரி ரெட்டவட செயினோடு வந்த என் புருஷன் உன் கள்ளக்காதலனுக்கு ரெட்டவட தங்கச்சங்கிலியைக் கொடுக்கிற அளவுக்கு வந்திட்டுயா? என்று என்னை விறகுக் கட்டையால் அடிச்சாரு. நா கோயிலில் நகையைத் தொலைக்க நேர்ந்ததைச் சொல்லிக் கதறினேன். அவர் நம்பவில்லை. என் நடத்தையைச் சந்தேகப்பட்டாரு.
விபச்சாரிக்கு இந்த வீட்டில இடமில்லை என்று ராத்திரி வீட்டை விட்டுத் துரத்தினாரு. இடியும், மின்னலும், பலத்த மழையும் அடித்தது. அதிலிருந்து தப்ப நா மாரியாத்தா கோவிலுக்கு ஓடினேன். என் வீட்டுக்காரரு, வெறியோடு என்னைத் துரத்திட்டு வந்தாரு. கோவிலில் மாரியம்மனின் சூலாயுதத்தை உருவி என்னை நோக்கிப் பாய, நா அவர் கொலைகாரராய் ஆகிவிடக் கூடாதென்று தப்பி ஓடினேன். கோவிலில் ஜனங்கள் கூடிவிட்டார்கள். மானம் போய் விட்டதாக என் கணவர் நினைச்சி சூலாயுதத்தைத் தன் மார்பில் சொருகி இரத்த வெள்ளமாய் சரிந்தாரு. நா புருஷனை இழந்து விதவையா நிக்கேம்மா. குமுதா கேவிக் கேவி அழுதாள் . அமுதாவும் சேகரும் அசந்து நின்றார்கள். அழுது முடித்த குமுதா கேட்டாள்.
இப்பச் சொல்லுங்க, நா மாரியம்மன் கோவிலுக்கு வரணுமா? சேகர் சிறிது சிந்தனைவயப்பட்டு, அதன் பிறகு பேசினான்.
நீங்க மட்டும் அல்ல. நாங்களும் அங்க, போறதா இல்ல. சேகர் உறுதியாகச் சொன்னான்.
அக்கா இப்பத்தான் விசயம் புரியுது
என்னம்மா அது?
என் மாங்கல்யம் நிலைக்க மாரியாத்தாதான் காரணம்னு நெனைச்சேன். ஆனா, மாரியம்மன் கோயிலுக்குப் போயிதானே உன் மாங்கல்யத்த இழந்த. மாரிக்கு பக்தைகளின் தாலிப் பாக்யத்தக் காப்பாத்தும் சக்தி இல்லன்னு புரிஞ்சி போச்சி…