ஹாய் மேடம்… ஹான் சாகேப்…

டிசம்பர் 01-15

– ரகசியன்

“சாகேப்ஜி மேலே எனக்கு மரியாதை இருக்குதுங்கப்பா. அவருக்கும் என் மேலே அன்பு அதிகம்தான். அதற்காக என் சொந்த விருப்பங்களை மறைச்சிக்க முடியுமா? அந்த அதிகாரிகூட நான் பேசுறதுலேயும் பழகுறதுலேயும் என்ன தப்பு?“

“சாகேப்ஜிக்கு இது பிடிக்கலை. அவர் எவ்வளவு பெரிய ஆளு. இந்த நாட்டோட எதிர்கால பொக்கிஷம். அவருக்குக் கீழே வேலை பார்க்குற அதிகாரியோடு நீ பழகுனா அவருக்கு கோபம் வரத்தானே செய்யும்.”

“நான் என்ன பொதுசொத்தா டாடி? எனக்குன்னு மனசு ஒண்ணு இருக்கக்கூடாதா? நான். எங்கெங்கே போறேன்னு கண்காணிச்சிருக்காரு சாஹேப்ஜி. யார்யார்கூட பேசுறேன்னு மொபைலை ஒட்டுக்கேட்டிருக்காரு. இதெல்லாம் பெரிய மனுசங்க செய்யுற காரியமா?”

“பெரிய இடத்துலதாம்மா இதெல்லாம் நடக்கும். சாகேப்ஜிக்கு எவ்வளவு அன்பு இருந்தா உன் விஷயத்தில் இத்தனை அக்கறையோடு கண்காணிச்சிருப்பாரு! முக்கியமான மீட்டிங்கில் அவர் இருந்தாலும் உன் போன்கால் வந்தால் வெளியே போய் பேசிட்டு வருவாராமே.. நீயும் அவர்கூட ரொம்ப நேரம் பேசியிருக்கியே..”

“ஒரு பெரிய மனிதரோடு பேசுற சான்ஸ் கிடைக்கும்போது அதை அவாய்ட் பண்ண முடியுமா? அதுவும் உங்களுக்காகவும் அண்ணன்களுக்காவும்தாம்ப்பா நான் அவ்வளவு நேரம் பேசுனேன். சாஹேப்ஜியோடு நான் பேசுனதிலே உங்களுக்கு சந்தோஷமா இருக்குது.

ஆனா, அந்த அதிகாரியோடு பேசுறதும் பழகுறதும் கோபத்தை உண்டாக்குதுல்ல…”

“எங்களுக்கு மட்டும் கோபம் வரலை. சாஹேப்ஜிக்கும் கோபம்தான். ஏன்னா உன் மேலே இருக்கிற அன்பிலேதானே நம்ம கம்பெனிக்கு கான்ட்ராக்ட் கிடைக்கும்படி செய்தாரு சாஹேப்ஜி. அதுவும் ஓப்பன் டென்டரே விடாமல் நமக்கே அந்த காண்ட்ராக்ட் கிடைக்கச் செய்திருக்காரு. எட்டு மாசமா நம்ம கம்பெனி என்ன நிலைமையில் இருந்ததுன்னு உனக்குத் தெரியும். எந்த ஆர்டரும் கிடைக்காம கஷ்டப்பட்டோம். சாஹேப்ஜிக்கு உன் மேலே இருக்கிற அன்புதான் உன் அண்ணன்கள் டைரக்டரா இருக்கிற நம்ம கம்பெனிக்கு காண்ட்ராக்ட் கிடைக்கக் காரணம். இது உனக்குத் தெரியாதா?”

“அதுவும் தெரியும்.. அதுக்கு மேலேயும் தெரியும்”

“என்ன தெரியும்?”

“சாஹேப்ஜிக்கு சேவகம் செய்யுற எல்லோருமே என்னை மேடம் மேடம்னு சுத்தி வந்தாங்க. பெரிய மனுசரோட ராஜ்ஜியத்தில் என்னை ராணி மாதிரி ட்ரீட் பண்ணினாங்க. அது மட்டுமா, அவரோட டின்னர் சாப்பிட்டதுக்காக 12ஆயிரத்து 500 ரூபாயை அரசாங்க கஜானாவிலிருந்து எடுத்து ஹோட்டலுக்கு பில் கட்டியிருக்காங்களே… ரனோத்ஸவத்துக்குப் போனப்ப என்னோட வண்டிக்கு பெட்ரோல் செலவுக்காகவும் என்னோட மொபைல் பில்லுக்காகவும் 5ஆயிரத்து 153 ரூபாய் அரசாங்க பணத்தை செலவு பண்ணியிருக்காரே பெரிய மனுசர்.”

“எல்லாத்துக்கும் காரணம் உன் மேலே சாஹேப்ஜிக்கு இருக்கிற அன்புதான். அதைப் புரிஞ்சுக்க. இதை விவகாரமாக்காதே… உன் நலனுக்காகத்தான் அவர் கண்காணிச்சாரு, ஒட்டுக்கேட்டாருன்னு நாங்க சொல்லிக்கிறோம். உன்னோட எதிர்காலமும் நம்ம கம்பெனியோட வளர்ச்சியும் நமக்கு முக்கியம்.”

“நான் இதை விவகாரமாக்காம இருந்தாலும், அரசாங்க பணத்தை எடுத்து செலவு செஞ்சா அரசியல்வாதிகள் விட்டு வச்சிடுவாங்களா? ஆர்.ட்டி.ஐ ஆக்ட்டில் போட்டு எல்லா விவரத்தையும் வாங்கிக்கிட்டிருக்காங்க.”‘

“அவங்க என்னவோ பண்ணிட்டுப் போகட்டும். அதையெல்லாம் பெரிய மனுசரு சமாளிச்சுக்குவாரு. கொத்துக் கொத்தா நடந்த கொலைகளையே மறைச்சி, தன்னோட இமேஜை இந்திய அளவுக்கு பில்டப் பண்ணிக்கிட்டிருக்கிற சாமர்த்தியசாலியாச்சே நம்ம சாஹேப்ஜி. நீ எப்பவும் போல அவரு ராஜ்ஜியத்தில் மேடம்ங்கிற அந்தஸ்தோடு இருக்கணும். அந்த அதிகாரி சகவாசமெல்லாம் வேணாம். அப்புறம் சாஹேப்ஜி சதிகாரியா, சர்வாதிகாரியா மாறிடுவாரு. சாஹேப்ஜி மனசு நோகாம பார்த்துக்க. புரியுதா?”

“புரியுது..”

“என்ன புரியுது?”

“யோக்கியன் வர்றாரு.. சொம்பை எடுத்து உள்ளே வையின்னு சொல்றீங்க. அதானே!”

நன்றி: www.kavvinmedia.com

படம்- நன்றி: Deccan Chronicle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *