ஆசிரியரின் சாதனைகள் யாவும் நாம் அறிந்ததே. அவை அளவிடற்கரியன. ஆனால், அவரது நேர்மைக்கும், நாணயத்துக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. அதில் எனக்குத் தெரிந்ததில் இரண்டு மட்டும்.
ஆசிரியர் சென்னைக்கு – அய்யாவால் அழைக்கப்படுவதற்கு முன்பு, நாங்கள் வழக்குரைஞர்களாக கடலூரில் இருந்தோம். நான் கல்லக்குறிச்சியில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தேன்.
கல்லக்குறிச்சியில் ஒரு வழக்கு என்னிடம் வந்தது. அதாவது, பங்காளிகள் இருவருக்குள் கொடுக்கல், -வாங்கலில் தகராறு. அதனால் எனது கட்சிக்காரர் மற்றவரின் எருது மாடுகளை அவரது பட்டியில் இருந்து ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். அதனால் காவல்துறையில் மாடுகள் திருடியதாக வழக்குத் தொடுத்து, அது விசாரணைக்குப் பின் எனது கட்சிக்காரர் மீது 379 இ.பி.கோ.படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள். அந்த வழக்கு விசாரணையில் எனது கட்சிக்காரருக்கு நான் வழக்காடினேன். கடைசியில் எனது கட்சிக்காரர் விடுதலை செய்யப்பட்டு மாடுகளும் அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவாகி, காவல்துறையும் மாடுகளை எனது கட்சிக்காரரிடம் கொடுத்துவிட்டது.
மாடுகளுக்குச் சொந்தக்காரர், கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு மறுபரிசீலனைக்கு (Revision) மனுபோட்டார். கடலூரில் இருந்து அந்த அழைப்பாணை (Summons) யை எனது கட்சிக்காரர் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். நான் நம் ஆசிரியருக்கு ஒரு கடிதம் கொடுத்து, இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படிச் சொன்னேன்.
அவரும் ஒப்புக்கொண்டு வழக்கு நகல்களைப் பெற்றுக்கொண்டு, வழக்கைப் பற்றி என் கட்சிக்காரரிடம் கேட்டிருக்கிறார். அவர் மாடுகள் தனக்குச் சொந்தமல்லவென்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, ஆசிரியர் வழக்கு நகல்களைத் திருப்பிக் கொடுத்து அவரையே (என்னையே) வந்து வாதாடச் சொல். நான் பொய் சொல்லி வழக்கை நடத்த மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
எனது கட்சிக்காரர் என்னிடம் வந்து நடந்ததைச் சொன்னார். வழக்குத் தேதிக்கு வரும்படி அவரை அனுப்பிவிட்டு நான் கடலூர் போய் ஆசிரியரிடம் ஏன் இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்றேன். மாடுகள் தனக்குச் சொந்தமில்லை என்று சொல்கிறார். நான் எப்படிப் பொய் சொல்வது? என்றார்.
எனக்கு வியப்பாகப் போய்விட்டது. அவன் விடுதலையாக வேறு வழியில்லை. நீங்கள் வழக்கு நகலில் உள்ளபடி வாதாடுங்கள். அவன் சொன்னதை ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்றேன். அதெப்படி முடியும். மன்னிக்கவும், நான் வழக்காட முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் வழக்கு நடத்த உள்ள தொகையை நான் பெற்றுக்கொண்டு நான் வாதாடினேன். அவரும், என்னருகில் நீதிமன்றத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அந்த வழக்கு என் கட்சிக்காரருக்குச் சாதகமாக முடிந்தது. இதைப் போல ஏராளம் சொல்லலாம் என்றாலும், இதை நான் எடுத்துக்காட்டாகத் தான் சொல்கிறேன்.
அடுத்து, அவருடைய நாணயத்தைச் சொல்ல இது ஒரு சம்பவம். ஒருமுறை அவருக்குப் பணமுடை வந்தது. ஆசிரியர், சென்னையில் ஊதியம் வாங்காமல் விடுதலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அய்யாவுக்குச் செய்தி தெரிந்து ஆசிரியரைக் கூப்பிட்டு ரூ.10,000/- (பத்தாயிரம்) கையில் கொடுத்தார். மிகவும் நன்றி சொல்லிவிட்டு அந்தத் தொகைக்கு, ஒரு கடன் உறுதிச்சீட்டு (Promissory Note) எழுதிக் கொடுத்தார்.
அய்யா, இதென்ன நான் கேட்கவில்லையே என்று சொல்லி திருப்பிக் கொடுத்ததை ஆசிரியர் வாங்க மறுத்துவிட்டார். அது அய்யாவிடமே இருந்தது. சில நாட்கள் கழித்து தொகையை அய்யாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். கடன் உறுதிச் சீட்டை இவர் கேட்கவில்லை. அய்யாவிடமே இருந்ததா அல்லது திருப்பிக் கொடுத்தாரா என்று எனக்குத் தெரியாது. நான் அப்போது சென்னையில் இல்லை.
அய்யாவிடம் எந்தச் சூழ்நிலையிலிருந்தும் எதுவும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
(தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007-இல் ஆசிரியருடன் சட்டக் கல்லூரியில் படித்து திராவிடர் கழகப் பொருளாளராக இருந்து அண்மையில் மறைந்த திரு. கோ.சாமிதுரை எழுதியது.)