பேரறிவாளனை விடுதலை செய்வதே சரியானதாகும்

டிசம்பர் 01-15

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன?  கடுமையான மின்வெட்டு, மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக் கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் காலந்தாழ்ந்திருக்கும் நிலைமை, மறைமுகமான நன்மைகளையே (Blessing in Disguise) விளைவித்துள்ளது.

பல்வேறு புதைபட்ட உண்மைகள் நீதியின் அடிப் படையிலும், பலரின் மனசாட்சியின் விழிப்பின் காரணமாகவும் வெளிவரத் துவங்கியுள்ளன!

பேரறிவாளன் என்ற இளைஞனின் பங்கு அந்தக் கொலைக் குற்றத்தில், பிராசிகியூஷன் தரப்புப்படி, ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்துவதற்கான குண்டுக்காக பேட்டரி செல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்தவர் இவர் என்பதேயாகும்.

பேரறிவாளன் என்ற இளைஞர் பாலிடெக்னிக்கில் படித்தவர் என்பதை முடிச்சுப் போட்டு, இந்த பேட்டரி செல்கள் நான் வாங்கிக் கொடுத்தேன் என்ற வாக்கு மூலம் மட்டும் விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் சொன்னதை அப்படியே பதிவு செய்யாமல், வழக்கில் பிராசிகியூஷனுக்குச் சாதகமாக அமையும் வகையில், இந்தக் காரியத்திற்காக என்றே தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்பதாக, அவரே சில வாக்கியங்களை _ பேரறிவாளன் சொல்லாததை வாக்கு மூலத்தில் இணைத்துக் கொண்டு, பதிவு செய்து விட்டார் -_ அந்த விசாரணை அதிகாரி. அவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவர், நான்தான் வழக்கில் தண்டனை வாங்கித் தருவதற்காக அந்த வரிகளைச் சேர்த்துக் கொண்டேன் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் -_ -மனசாட்சி உறுத்தியதால்!

குற்றவாளியின் வாக்குமூலம் என்று விசாரணை அதிகாரிகள் எழுதி வைப்பதையெல்லாம்  அப்படியே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும், அடிப்படை உரிமைப் பறிப்புக்கான சட்டம்தான் தடா சட்டம் ஆகும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீதான குற்றத்தை நிரூபிப்பது பிராசிகியூஷன் வேலை – -_  பொறுப்பு, என்பதைத் தலைகீழாக மாற்றி – -_  குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வர வேண்டியது -_  -குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பு என்பதாக இருப்பதும் மற்ற கிரிமினல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத சாட்சியங்களை, இந்தத் தடா சட்டத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதுமான கொடுமையான சட்டம் என்பதால்தான் அதற்கு எதிராக கருத்துப் போர் தொடுத்து, ஜனநாயக அடிப்படை மனித உரிமையாளர்கள் -_ நம்மைப் போன்ற இயக்கத்தவர்கள் இயக்கம் நடத்தி, ரத்துசெய்ய வைத்தோம். அதன் முழு நியாயமும் இப்போது வெளியான விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் படி, தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

குற்றத்தினை முடிவு செய்ய மென்ஸ்சிரியா (‘Mens Rea’) என்ற குற்றநோக்கு அக்குற்றவாளியின் மனதில் இருந்திருந்தால்தான் அவர் குற்றவாளியாக முடியும்; இன்றேல் அவர் நிரபராதிதான். இது (கிரிமினல்) குற்றச் சட்டத்தின் அடிப்படையாகும்.

பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததில் எந்தக் குற்ற நோக்கமும் இல்லையே! (விசாரித்த அதிகாரி யல்லவா அவசர ஜோடனை செய்து மேலும் சில வாக்கியங்களை இணைத்துக் கொண்டார். காவல்துறை விசாரணை வழமையில் இது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகும்).

எனவே இந்தத் தகவல் -_ அவரது தூக்குத் தண்டனைக்கு எவ்வித முகாந்திரமும், நியாயமும் இல்லை என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற சான்றாதாரம் ஆகும்.

அதுபோலவே முருகன், சாந்தன் இருவரும்கூட இவருடன் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றியும் இம்மாதிரி பல தகவல்கள் வெளியாகும் நிலையில், சந்தேகத்தின் பலனை ((Benefit of doubt) அவர்களுக்கே தந்து உச்சநீதி மன்றமே முன்வந்து, இந்த வழக்கை எடுத்துக்கோணலாகிப் போன நீதியைச் சரி செய்ய முன்வருதல் அவசரம்; அவசியம் ஆகும். 2. மேலும்  தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, ஜஸ்டீஸ் கே.டி.தாமஸ் அவர்கள், வழக்கின் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பினைக் கூறியதும் ஏடுகளில் வந்துள்ளது.

3. வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.அய். அதிகாரிகளில் ஒருவரான திரு. ரகோத்தமன் அவர்கள் செய்தியாளர்கள் பேட்டி, தான் எழுதிய புத்தகம் ஆகியவற்றிலும் இவ்வழக்கில் விசாரணை சரியாகச் செல்லவில்லை என்ற கருத்தை மய்யப்படுத்தியுள்ளார்.

சதி என்பது பேரறிவாளனைப் பொறுத்து நிரூபிக்கப்படவே முடியாது –_ இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது. எனவே அவர்கள் மூவரையும் விடுதலை செய்வதுதான் நீதிக்கு – நியாயத்திற்குத் தலை வணங்குவதாகும்.

இம்மூவருக்கும் ஏதோ கருணை காட்டி விடுதலை செய்கிறோம் என்று எண்ணாமல், நீதி கெட்டுவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில், நீதியின் கோணலை நிமிர்த்தி வைக்கும் கடமையாகவே இதனைக் கருதுவதும், நீதிக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும்.

கிரிமினல் சட்டம், பத்துக் குற்றவாளிகள் தப்பினாலும்கூட ஒரு நிரபராதி, தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது என்ற தத்துவத்தைக் கொண்டதல்லவா?

– கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *