தமிழர் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டி இருக்கிறது. தமிழர் அமெரிக்கர், அய்ரோப்பியர், ஜப்பானியர் கண்டுபிடித்த பொருள்களை நுகரக் கற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவற்றைக் கண்டுபிடிக்க அந்த மக்கள் செய்த உழைப்பைக் கடைப்பிடிப்பதில்லை.
சான்றாக, சாலை விதிகளை மிக அருமையாகப் பிடிவாதமாகக் கடைப்பிடிப்பார்கள். அலுவலகக் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் வரும். செனகால் குடியரசுத் தலைவருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு அதே நாள் மாலைகூட விடை மடலும் வந்ததுண்டு. மாறாக, புறங்கூறும் பழக்கம் தமிழர்களிடம் மிக மிகுதி. பொய் சொல்வதிலும் ஒன்றை மிகைப்படுத்திப் பேசுவதிலும் தமிழர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். தமிழர்கள் நோக்கிலும் போக்கிலும் திருத்தம் வேண்டும். காலம் தவறாமையில் அயல்நாட்டார் உறுதியானவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கும். நிகழ்ச்சி முடியும். சினிமாவுக்கு முக்கியத்துவமே கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் திரையரங்குகள் காலியாக இருக்கும். தமிழரிடம், முதலமைச்சராக வரும் அளவிற்கு நடிக, நடிகையருக்குச் செல்வாக்கு இருப்பதுபோல எந்த நாட்டிலும் செல்வாக்கு இல்லை.
– முனைவர் க.ப.அறவாணன்
நன்றி: இனிய உதயம்
(நவம்பர் 2013)