தமிழ்நாடும் புதுவகையில் இந்தித் திணிப்பும்

நவம்பர் 01-15

இங்கே தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். இடப் பக்கத்தில் உள்ள படம் அது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசம். இரு மொழிக் கொள்கையைக் கையாளும் அந்த மாநிலத்தில் ஆட்சிமொழியான இந்தியும் ஆங்கிலமும் பயன்பாட்டில் உள்ளன. வலதுபக்கத்தில் உள்ள படம் தமிழ்நாடு. இருமொழிக் கொள்கையைக் கையாள்வதாகக் கருதப்படும் மாநிலம். நடுவண் அரசின் மொழிக்கொள்கையினால், தமிழ் மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தவன், தமிழ்நாட்டுக்குள்ளேயே முடக்கப்படுகிறான்; இந்தி மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தவன் நாடுமுழுவதும் சுற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டதன் நோக்கமே தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டுவதே. அதன்பிறகு அரசு மொழிச் சட்டத்தில் 1970இல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் தமிழ்நாட்டிற்கு இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

நடுவண் அரசின் அரசுமொழிச் சட்டம் 1963 (1963இல் 19)இல் பகுதி 8இல் பிரிவு 3இல் உள்ள துணைப்பிரிவு 4இல் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி நடுவண் அரசு கீழ்க்காணும் விதிகளைச் செய்துள்ளது. அவையாவன:

1.    இந்த விதிகள் அரசு மொழிகள் (நாட்டின் அதிகாரப் பயன்பாடுகளுக்காக) 1976 என்று அழைக்கப்படும்.

2.    தமிழ்நாடு மாநிலம் தவிர, இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் இவை பயனில் இருக்கும்.

3.    அரசின் அதிகாரபூர்வமான இதழில்  (Official Gazette) வெளியிடப்படும் நாளிலிருந்து அவை நடைமுறைக்கு வரும்.

மேலே கூறப்பட்டதிலிருந்து, தமிழ்நாடு அதன் பகுதிக்குள் இந்தியைப் பயன்படுத்தக் கடமைப்பட்டிருக்கவில்லை. இந்தி என்கிற ஒரு மொழியை மட்டும் பேசும் மக்கள், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை கொண்டவர்களாக இருந்தும்கூட, தமிழ்நாட்டில் வரிசெலுத்துபவர் பணத்திலிருந்து முன்னுரிமை கொடுக்கப்படுகிறார்கள். மொழியுடன் ஆதிக்க மனோபாவமும் வந்து விடுகிறது. அது தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதற்கான ஒரு முயற்சிதான். தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்கள் வசதியாக தமிழைப் புறந்தள்ளி விடுகின்றன. மதுரை _ சென்னை செல்லும் விமானத்தடத்தில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. இதில் பயணிப்பவர்களில் 90 விழுக்காடு தமிழர்களாகவோ தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த பயணிகளையோ கொண்டிருக்கிறது. என்ன காரணத்தால் பாதுகாப்புப் பணியாளர்கள் தமிழ் கற்றுக் கொள்ளவில்லை?

தமிழ் பேசும் வாடிக்கையாளர்கள், தமிழ்நாட்டில் இந்திபற்றிய அறிவு கொண்டிருக்க வேண்டும். ரயில் நிலையங்களிலும் நிலைமையில் மாற்றமில்லை. செல்லும் இடங்களுக்கான பல பலகைகள், சென்னை _ கோயமுத்தூர் தடத்தில் தமிழைவிட இந்தியில் மிகுதியாக இருக்கின்றன. ஒரு தமிழன், தன்னுடைய சொந்த நாட்டில் தாய்மொழியில் பேச வேண்டுமென்று கேட்காமல், அயலாரின் மொழியில் பேச முயற்சிப்பது நகைப்புக்கிடமாகி இருக்கிறது. ஃபிரான்சுக்காரர்களிடமிருந்து தமிழன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமா?

தமிழ்நாட்டிற்குள்ளே ஓடும் ரயில்களில் மும்மொழிக் கொள்கையைக் கொள்வதன் குறிக்கோள் என்ன? சொந்த மொழியான தமிழும் தொடர்பு மொழியான ஆங்கிலமும் போதுமே! இதில், ஏமாற்றத்தின் உச்சகட்டம், ரயில்களில் உள்ள முன்பதிவிற்கான பட்டியல்!

airport boards

பயணிகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. அங்கே, தமிழ் எங்கே?

தமிழ்நாட்டில், உள்ள இந்த நிலைமையை மாற்றுவதற்காகவும், ஒவ்வொரு மொழியும் தமிழ்நாட்டில் சமமாகவும் சீராகவும் நடத்தப்படுவதற்கு அரசு மொழிச்சட்டம் 1976அய் நடைமுறைப்படுத்தக் கோரியும், தமிழ்நாட்டில் இந்தி அடையாளப் பலகைகளையும் அறிவிப்புகளையும் நீக்கக்கோரியும் ஒரு ஆன்லைன் விண்ணப்பம் செயலாக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை பல மாநிலங்களின் கூட்டு (Union of States)  என்று விளக்குகிறது. அதன் மூலம் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளை அது அங்கீகரிக்கிறது. ஆகவே, இந்தி பேசும் மாநிலங்கள் உட்பட, ஒவ்வொன்றும் அதனதன் மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பது அவசியம். அய்ரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளில், 300 மொழிகளுக்கு மேற்பட்டு மொழிபெயர்ப்பு வசதிகளும் விளக்க வசதிகளும் அந்த மொழி மக்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் வேளையில், இந்திய அரசின் மனப்பான்மை முக்கிய மறு ஆய்விற்கு ஆட்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் அதன் நலன்பற்றி கவலை எடுத்துக் கொள்ளுமானால், அதன் குடிமக்களின் நலன்பற்றியும் அக்கறை எடுத்துக் கொள்ளுமானால், இந்தியக் கூட்டமைப்பின் நலன்களும், தானே அக்கறை எடுத்துக் கொள்ளும் வகையில் அமையும்.

http://tamilswave.com– ல் ராஜ் விக்னேஷ் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *