சிறந்த நூல் பற்றி சில வரிகள்

நவம்பர் 01-15

பண்பாட்டு வன்முறை மீது பெரியாரின் சவுக்கடி

நூல்: இராமனும் இராமசாமியும்
ஆசிரியர்: ம.பிரகாஷ்
வெளியீடு: காவ்யா
16, 2ஆம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை -_ 600024.
செல்பேசி: 98404 80232.
பக்கங்கள்: 192  |  விலை: ரூ.150/-

சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவர், பேராசிரியர் வீ.அரசு இந்த நூலுக்கு வழங்கிய அணிந்துரைப் பகுதி:

ராமன் பிறந்த ஊர் என்றும், அவன் ஆண்ட ஆட்சிகள் _ தர்மம் என்றும், அவன் கட்டின பாலமென்றும், அவன் கும்பிட்ட சாமி என்றும், பல இடங்களையும் கற்பனை செய்து, அவற்றிற்கும் மகத்துவம் கொடுத்து மக்கள் அணுகிச் செல்வதும், அவைகளைப் பார்ப்பதும் புண்ணியம் மோட்சம் என்றும் இஷ்டசித்தியாகம் என்று சொல்லி நம்பச் செய்து, அதன் மூலமாகவும் மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயும் செலவும் உண்டாக்கப்பட்டு வருகின்றதையும் யாரும் இல்லை என்று சொல்ல முடியாது (பெரியார் ஈ.வெ.ரா., குடிஅரசு _ 17.11.1929)

பெரியார் தொண்ணூற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொன்னவை எத்துணையளவு எதார்த்தமாகவும் இன்றும் பெரிதும் தேவைப்படுவதாகவும் இருப்பதைக் காண்கிறோம். இந்தப் பின்புலத்தில் இராமாயணத்தை அணுகும் தேவை இன்று நமக்குக் கூடுதல் தேவையாகியுள்ளது. இராமர் பாலம் பற்றி நாள்தோறும் பேசப்படும் செய்திகள் எவ்வளவு கேவலமானவை என்பதையும் நாம் உணரவேண்டும். பண்பாட்டு ரீதியாக உருவாகியுள்ள இந்த வன்முறையை எப்படிப் புரிந்து கொள்வது? என்ற கேள்விக்கு, கீழ்க்காணும் வகையில் பதில்களைத் தொகுத்துக் கொள்வோம்.

_ வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து ஆரியர் _ திராவிடர் என்ற இனக்குழு முரண்பாடுகள் உருப்பெற்று வளர்ந்து வந்தமைக்கான மொழி மற்றும் பண்பாடு சார்ந்த ஏதுக்கள் உள்ளன. இந்த முரண்பாடுகள், குறிப்பிட்ட ஓர் இனக்குழுவை கேவலமாகத் தாழ்த்தியும் இன்னொரு குழுவை கடவுளாகக் கட்டமைத்தும் உருவாக்கப்பட்டுள்ள தொன்மங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைக் கட்டிக் காப்பதற்காகவே புராணங்களும் காவியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

_ பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட நிலப்பகுதிக்கு இந்தியா எனும் பெயரைப் பிரித்தானியர்கள் கொடுத்தார்கள். இக்குழுக்களில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஜாதி என்னும் வன்முறையைப் புராணங்களும் காவியங்களும் காப்பாற்றியே வருகின்றன.

மேற்குறித்த தன்மைகளை சம்மட்டி கொண்டு உடைக்கும் பணியைப் பெரியார் கையில் எடுத்துக்கொண்டு தம்வாழ்நாள் முழுவதும் அதே வேலையாக இருந்து வாழ்ந்து மறைந்தார். இதனை எப்படிப் புரிந்து கொண்டு, இன்று செயல்பட வேண்டும் என்பதே நம்முள் உள்ள நிலைப்பாடு.

_ பொருளாதார முரண்பாடுகளால் சிக்கித்தவிக்கும் இச்சமூகத்தில், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து போராடுவது என்ற நிலைப்பாடு.

_ மதம், ஜாதி, கடவுள் என்னும் வலிமை மிக்க வன்முறைக் கருவிகளால் தாக்கப்பட்டு வரும் வெகு மக்களிடம், இவை குறித்த கட்டுடைப்பு சார்ந்த பண்பாட்டுப் போர் நிகழ்த்தும் நிலைப்பாடு.

மேற்குறித்த இரு தன்மைகளும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்தவையே; ஆனால், சமூகப் போக்கை மதிப்பீடு செய்து, சமூகத்தில் நிகழும் கேவலங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள், மேற்குறித்த இரண்டையும் வேறு வேறாகவே பார்த்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள். ஜாதி குறித்த விமர்சனத்தை மேற்கொள்ளாது வர்க்கப் போராட்டம் பற்றிப் பேசுவதும், ஜாதிய விமர்சனத்தில் இருப்பவர்கள் வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்தாத அணுகுமுறையும் எதார்த்த நடைமுறையில் செயல்படுவதைக் காண்கிறோம். இதில் பெரியார் ஈ.வெ.ரா. நம் கவனத்தை எல்லாம் ஈர்க்கும் பெரும் சக்தியாக இருக்கிறார். பண்பாட்டுத் தளத்தில் அவர் நிகழ்த்திய போராட்டங்கள், ஜாதிய வேரைப் பிடுங்குவதற்கு ஏதுவாக அமைந்தவை. ஒட்டுமொத்த ஜாதியச் சமூகமாக இயங்கும் தளத்தில் அவர் நிகழ்த்திய போரை எளிதாகப் புறம் தள்ள முடியாது. அந்தப் போராட்டம், வெகுமக்களை விடுவிக்கும்; அதன் மூலம் அவர்களது அடிமைத் தளைகளை அறுத்து எறிவர் என்று அவர் நம்பினார். அந்த வகையில்தான் இராமாயணம் எனும் காப்பியத்தை அவர் அணுகினார். ஜாதிய சமூகத்திற்கும் இராமாயணத்திற்கும் உள்ள உறவு ஆழமானது. தமிழ்ச் சூழலில் கம்பனை வாசித்த மரபுக்கும் ஜாதிய அணுகு முறைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே கருத இடமுண்டு. தமிழ்நாட்டில் கம்பன் வாசிக்கப்பட்ட முறைமையை கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம். _ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முதல் புலமைத்தளத்தில் செல்வாக்குடன் வளர்ந்த சைவப் புலமையாளர்கள் இராமாயணமே, தென்னிந்திய ஜாதி உருவாக்கத்திற்கு மூலம் எனும் அணுகுமுறையை முன்வைத்தனர். இராவணனைப் போற்றினர். இதன் பின்புலம் வெள்ளாள _ பார்ப்பன ஜாதியக் கருத்தாடல்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

_ பெரியார் உருவாக்கிய சுயமரியாதைக் கருத்து நிலை சார்ந்து உருப்பெற்ற பகுத்தறிவு இயக்கம், இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றது. இதில் சூத்திர _ உதிரி ஜாதியினர் பெரும்பான்மையினர். ஆனால், சூத்திர ஜாதியில் மேல்ஜாதியாகத் தங்களைக் கருதிக் கொண்டவர்கள் கம்பன் கழகங்களை உருவாக்கினார்கள். உட்ஜாதி முரண்கள் இங்கு செயல்பட்டன. திராவிடக் கட்சிகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளாக மேற்குறித்த நிகழ்ச்சியை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

_ இராமாயணத்தை ஜாதியக் கண்ணோட்டத்தில் வாசிக்காத ஜீவா போன்றவர்கள், உட்டோபியன் சோசலிசத்தை அதில் காணத் தொடங்கினர். திராவிடக் கட்சிகளுக்கு எதிர்நிலையான செயல்பாடாகவே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேற்குறித்த பல்வேறு போக்குகளால் இராமன் கதை தமிழ்நாட்டின் வெகுசன தளத்தில் செயல்பட்டது _ செயல்பட்டு வருகின்றது. அரசியல் புரிதல் அற்ற பண்டிதர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், மற்றும் மேடைப் பேச்சாளர்கள் ஆகியோருக்கு இராமன் கதை மிக முக்கியமான கச்சாப் பொருள்.

இப்படியான தமிழ்ச் சூழலில் இராமன் கதையோடு பெரியார் நடத்திய வல்லடி வழக்குகளைத் திரும்பிப் பார்க்கும்போது, அவரின் வீரியம் புலப்படுகின்றது. அவர் நமக்குள் வாழ்கிறார் என்ற தெம்பும் உருவாகிறது. இராமன் கதையோடு அவர் நிகழ்த்திய போராட்டங்கள் பல்பரிமாணங்கள் கொண்டவை.

_ இராமாயணக் கதைகளின் ஆபாசங்களை மூலைக்கு மூலை மேடைபோட்டுப் பேசினார்.

_ இராமனின் உருவத்தைச் செருப்பால் அடித்தார்.

_ தாம் நடத்திய இதழ்களில் விரிவான கட்டுரைகளை எழுதினார்.

_ கருத்துப் பிரச்சாரத்திற்கு உதவும் வகையில் சிறுசிறு நூல்களை வெளியிட்டார்.

இச்செயல்கள், பண்பாட்டுத் தலத்தில் அவரது நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள உதவுபவை.

மேற்குறித்த பின்புலங்களை ம.பிரகாஷ் இந்த நூலில், விரிவாகத் தொகுத்துப் பேசியிருக்கிறார். பெரியார் இராமாயணம் பற்றிப் பேசிய, எழுதிய, நிகழ்த்திய அனைத்தையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள பிரகாஷ் நூல் நல்ல ஆவணமாக உதவுகிறது. பெரியாருக்குப்பின் இராமாயணம் எவ்வாறெல்லாம் எதிர்கொள்ளப்பட்டது என்பதையும் பதிவு செய்துள்ளார்.

இந்நூலை உருவாக்கிய பிரகாஷைப் பெரிதும் பாராட்டுகிறேன். பிரகாஷின் வாழ்க்கைப் போராட்டத்தில் கைகொடுக்கும் அரிய பணியை காவ்யா செய்கிறது. இதற்காக பேரா. காவ்யா சண்முகசுந்தரம் அவர்களுக்கு எனது நன்றி. பிரகாஷ் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன். இந்நூலை எல்லோரும் வாங்கி வாசிக்க வேண்டுகிறேன்.a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *