செய்தியும் சிந்தனையும்

நவம்பர் 01-15

துடைப்பத்தை எடுத்த பெண்ணும் துடைப்பத்தால் அடிபட்ட பெண்ணும்!

உலக அதிசயங்களுள் ஒன்றாக ஆக்ராவை அலங்கரிக்கும் தாஜ்மகால் கருதப்படுகிறது.

அமெரிக்கப் பெண்மணியின் பெயர் எரின் நயிட் (30) தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என்று பறந்தோடி வந்தார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்தவருக்கு ஒரு அதிர்ச்சி!

 

எங்குப் பார்த்தாலும் குப்பைக் கூளங்கள் அசுத்தம் _ மூக்கைத் துளைத்தன.

வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வரத் தயங்குவதற்கு முக்கிய இடம் வகிப்பது இந்த அசுத்தங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் போக்கும் இந்தக் கொசுக்களும்தான்.

என்ன இருந்தாலும் இந்தப் பூமிக்குப் புண்ணிய பூமி என்ற பெயர் மட்டும் இன்று வரை தள்ளாடாமல் நிற்கிறது.

அமெரிக்கப் பெண் சாதாரணமானவரும் அல்லர். உளவியல் மருத்துவரும்கூட!
அழகிய ஆக்ரா அழுக்குப் போர்வை போர்த்திக் கொண்டு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. இதைவிடக் கூடாது; இந்த நகரைச் சுத்தப்படுத்தியே தீருவேன் என்று கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ஆக்ராவின் வீதியில் இறங்கிவிட்டார். தாஜ்மகாலையும் பெருக்க ஆரம்பித்துவிட்டார்.

தாஜ்மகாலாக இருந்ததால் தப்பித்தோம். இதுவே இந்துக் கோயிலாக இருந்திருந்தால், என்னதான் எலிப்புழுக்காக நாற்றமும், நாய் விட்டைப் போடும் கக்கூசாக இருந்தாலும் சரி, ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி துடைப்பத்தை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்யும் வேலையில் இறங்க முடியுமா? முதலில் கோவில் வளாகத்துக்குள்தான் காலடி எடுத்து வைக்கவும் முடியுமா?

வேற்று மதக்காரர்கள் உள்ளே நுழையக் கூடாது என்ற எச்சரிக்கை _ கோவிலின் நுழைவு வாயிலிலேயே கால்களை இயங்காது ஆக்கிவிடுமே.

இதற்கு விளக்கம் வேண்டுமானால் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு நாம் பயணிக்க வேண்டும்.

பமீலா கே ஃபிளிக் (28) என்ற பெண்மணி ஒருவர். அவரும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்தான்.

வாரணாசியில் வந்து தங்கிய போது அணில் யாதவ் என்ற பொறியாளருடன் காதல் கொண்டு திருமணமும் செய்து கொண்டார். அதற்காக இந்து மதத்திற்கும் மாறினார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வர் லிங்கராஜ் கோவிலுக்கு அந்த இணையர்கள் வந்தனர்.

அவ்வளவுதான். ஒரே களேபரம்தான். உள்ளே நுழையாதே! என்ற குரல்.

மதம் மாறிவிட்டோம் என்று ஆதாரங்களைக் காட்டியும் பயனில்லை. வார்த்தைகள் முற்றி இணையர்கள் அடி உதை பட்டதுதான் மிச்சம்.

இதனைச் சற்றும் எதிர்பாராத மதம் மாறிய அந்தப் பெண்மணி _ காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். புகார் மனு பெற்றுக் கொள்ளவும் மறுக்கப்படுகிறது.

இந்தச் செய்தி பரபரப்பாக ஏடுகளில் வெளிவரவே, அவசர அவசரமாக காவல்துறை புகாரைப் பெற்றுக் கொண்டார்கள். பெயர் அளவுக்கு நடந்த சடங்காச்சாரம் அவ்வளவுதான்.

கோவில் நிர்வாகி ராம்காந்த் மிஸ்ரா. அவரிடமும் அந்தப் பிரச்சினை முட்டியது. அவர் மிஸ்ராவாயிற்றே!

நெற்றியில் திலகமிட்டுக் கொண்டாலும் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா? என்று தனது கோணல் திருவாயால் மொழிந்தார்.

பூரி சங்கராச்சாரியார் நிஷ்ச்சாலனந்தா சரஸ்வதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று அவரிடம் அனுப்பி வைத்தனர்.

அங்கும்தான் சென்று பார்ப்போமே! சென்றனர். பெரியவாள் தன் பெரிய வாயைத் திறந்தார்.

வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால் அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், வழிபாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மாறுபடுகின்றன. இந்து சனாதன தர்மத்தின்படி கோவில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது ஜாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன.

வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது. யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாறலாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும், வரன்முறைகளும் உள்ளன. இந்துக் கடவுள்கள் மீது உண்மையான பக்தியும், நம்பிக்கையும் ஒருவன் கொண்டிருப்பானேயானால், தன் மீது விதிக்கப்படும் இந்த ஜாதிகளையும், வரைமுறைகளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும் என்று இதோபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார் பெரியவாள்.

வெறுத்தே போனார் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி. இதற்காகவா இந்து மதத்துக்கு மாறினேன் என்று புலம்பினார்.

நம் நாட்டு மொழியில் சொல்ல வேண்டுமானால் என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். (ஆதாரம்: ஜூனியர் விகடன் 23.11.2005)

ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி ஆக்ரா வருகிறார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்கிறார். தாஜ்மகாலையும் ஆக்ராவையும் சுத்தப்படுத்த துடைப்பத்தைக் கையில் எடுக்கிறார்.

இன்னொரு அமெரிக்கப் பெண்மணி இந்தியா வருகிறார். இந்துவாகவும் மதம் மாறுகிறார். இந்து மதக் கணவருடன் இந்துக் கோவிலுக்குள் நுழைந்தால் துடைப்ப அடி விழுகிறது.

இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *