சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

அக்டோபர் 16-31

 

ஆர்.எஸ்.எஸ். அமைப்புகூட 1925இல் மகாராஷ்டிரிய பிராமணர்களால் (சனாதன சித்பவன்) துவக்கப்பட்டது. அவர்களின் தலைவர்கள் (சர்சங்சாலக்) ஹெட்கேவார் (1925_40), கோல்வால்கர் (1940_73), தேவ்ராஸ் (1974_94), ஆகிய இவர்கள் யாவரும் மகாராஷ்டிரிய சித்பவன் பிராமணர்கள். இன்றைய சர்சங்சாலக் மோகன் மதுக்கர் பாகவத் _ இவரும் சித்பவன் பிராமணரே. மாநிலப் பிரிவுகளிலெல்லாம் தலைமையில் பிராமணர்கள்தான். தமிழ்நாட்டிலும் அப்படியே! நாளாவட்டத்தில் இயக்கம் விரிவுபடுத்தப்படுவதற்காக இந்துத்துவம் _ சனாதன தர்மம் இவைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் இதர ஜாதியினரையும் சேர்த்துக் கொண்டனர். இன்றுவரைகூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் முக்கிய பொறுப்புகளில் காண்பது அரிது. பி.ஜே.பி. என்ற அவர்களின் அரசியல் விரிவில், திட்டமிட்டு கீழ் ஜாதியினரைப் பொறுக்கி எடுத்து சில பொறுப்புகளில் அமர்த்தி ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். சில முஸ்லிம்களைக் கூட பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.சில் அனுமதி இல்லை.

ஆர்.எஸ்.எஸ். – ஓர் ஃபாசிச முறை அமைப்பு

ஆர்.எஸ்.எஸ்.சின் கொடி பாக்வா; அதாவது மராட்டியத்தை ஆண்ட பிராமண பரம்பரையான பெஷ்வாக்களின் ஆட்சிக்கொடி.

இந்த அமைப்புக்கு அமைப்பு விதிகள் கிடையாது. உறுப்பினர் பதிவு ஏடுகள் இல்லை. வரவு செலவுக் கணக்கு சமர்ப்பிப்பதில்லை. இதன் செயல்படும் முறை இரகசியமானது. தலைவருக்கே அனைத்து அதிகாரங்களும், தேர்தல் கிடையாது. அடுத்த வாரிசை தலைவர் உயிருடனிருக்கும் பொழுதே அடையாளம் காட்டி விடுவார். இத்தாலியில் முசோலினி அமைத்த ஃபாசிஸ்ட் கட்சியிடமிருந்து இதைக் கற்றுக்கொள்ள முற்பட்டனர்.

இவர்கள் மராட்டிய மொழியில் வெளியிட்டு வந்த கேசரி என்ற இதழில் 1924_35ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இத்தாலியைப் பற்றியும், முசோலினியின் கொள்கைகள் மற்றும் அவரின் ஃபாசிஸ்ட் கட்சி பற்றியும் ஏராளமான கட்டுரைகள், தலையங்கங்கள், சிறப்பு உரைகள் வெளியிடப்பட்டு வந்தன. குறிப்பாக முசோலினியின் சீர்திருத்தங்கள், பார்லிமெண்டுக்குப் பதிலாக மகத்தான ஃபாசிஸ்ட் கவுன்சில் அமைத்தது பற்றி எல்லாம் பாராட்டி எழுதி வந்தனர். (இன்று கிராமசபா அமைத்து நேரடித் தேர்தலைத் தவிர்ப்பது சங்பரிவாரின் வழி அல்லவா?) ஒரு தலைவனுக்குக் கட்டுப்படும் ஆட்சி ஒரு தலைவனுக்குக் கீழ்படியும் கட்டுப்பாடு இவைகளை முன்னுதாரணக் கோட்பாடாகப் புகழ்ந்தனர். இளைய தலைமுறை இந்துக்கள் இந்த முறைகளில் ஆர்.எஸ்.எஸ். மூலம் பயிற்சி பெறுதல் வேண்டும் என உத்வேகமூட்டினர். இந்த ஏட்டின் லண்டன் நிருபர் டி.வி.தமன்கர் முசோலினியும் ஃபாசிசமும் என்ற தனது நூலில் (1927) ஃபாசிஸ்ட் அரசு அமைப்பு, ஃபாசிஸ்ட் கட்சி அமைப்பு, ஃபாசிச சமூக அமைப்பு முறை, ஃபாசிச சித்தாந்தம் இவை பற்றி விரிவாக விவரித்துள்ளார்.

பி.எஸ்.மூஞ்சே ஆர்எஸ்.எஸைத் துவக்கிய ஹெட்கேவாரின் குருநாதர் ஆவார். அன்று இந்துத்துவ இயக்கத்தின் மிக முக்கியத் தலைவர். இவருடைய (டைரி) தினக்குறிப்பில் (நேரு மியூசிய நூலகத்தில் உள்ளது) 1931இல் ரோமாபுரிக்குச் சென்று முசோலினி சந்திப்பைப் பற்றி 13 பக்கங்கள் குறிப்பெழுதி வைத்துள்ளார். ராணுவக் கல்லூரி, மத்திய ராணுவ உடற்பயிற்சிப் பள்ளி, மற்றும் ஃபாசிஸ்ட் கட்சியின் முக்கிய ஸ்தாபன அலுவலகங்கள் ஆகியவைகளை எல்லாம் பார்வையிட்டு விவரங்கள் குறிப்பெடுத்துள்ளார். 6 வயதிலிருந்து 18 வயது வரை சிறுவர்கள் பயிற்சி, இளைஞர்கள் கூட்டம் நடத்தி உடற்பயிற்சி மற்றும் சில ராணுவ ரீதியான பயிற்சி, அணிவகுப்பு, டிரில்கள் என்பன எல்லாம் புரிந்து தெரிந்து இதே பாணியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முறைகளையும் உருவாக்கினார் மூஞ்சே. இவரும் சித்பவன் பிராமணரே.

இந்து இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்துக்களின் ராணுவ மறுமலர்ச்சிக்கும் ஃபாசிசம் தெளிவான வழிமுறைக் கோட்பாடுகளைக் காட்டுகின்றது. ஹெட்கேவார் தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இதுபோன்ற நிறுவனமாகும். ஹெட்கேவாரின் அமைப்பை விரிவுபடுத்தவும், இதர மாநிலங்களுக்குப் பரப்பவும் எனது எஞ்சியுள்ள வழிநாள்களைக் கழிப்பேன் என்றும் எழுதினார் மூஞ்சே.

***
ஃபாசிசத்தைத் தீவிரமாக எதிர்த்து வந்த ஜவஹர்லால் நேருவை வி.டி.சவர்க்கர் (அத்வானியின் ரோல் மாடல்!) கடுமையாகத் தாக்கி வந்தார்.

ஜெர்மனிக்கு எது ஒத்துவரும் என்பதை நேருவை விட ஹிட்லர் நன்றாக அறிந்தவர். இத்தாலியும் ஜெர்மனியும் ஃபாசிஸ்ட் மற்றும் நாஜி, மந்திரக்கோல் தொட்ட மாத்திரத்தில் முன்னெப்போதையும்விட சக்தி வாய்ந்த நாடுகளாக வளர்ந்துள்ளன. இந்த அரசியல் சித்தாந்தம்தான் அவர்களின் உடல் வலிமைக்குத் தேவையான டானிக் என்று 1939லேயே சவர்க்கர் எடுத்துக் காட்டினார்.

ஹிட்லரின் யூதர் அழிப்புக் கொள்கையை சவர்க்கர் பகிரங்கமாக ஆதரித்தார்.

தேசிய இனம் என்பது பொதுவான பூகோளப் பிரதேசத்தில் வாழ்வதைப் பொருத்தது அல்ல. சிந்தனைப் போக்கு, மதம், மொழி, கலாச்சாரம், இவற்றின் ஒற்றுமையைப் பொருத்ததாகும். இக்காரணத்தினால் ஜெர்மனியில் வாழும் ஜெர்மானியர்களையும் யூதர்களையும் ஒரே தேசிய இனம் என்று கருத முடியுமா? (ஆகஸ்ட் 1939) என்று வாதாடினார்.

ஜெர்மனியில் ஜெர்மானியர்களின் இயக்கம் ஒரு தேசிய இயக்கமாகும். ஆனால் யூதர்களின் இயக்கம் ஒரு வகுப்புவாத இயக்கம்தான் (டிச. 1938)

ஒரு நாட்டில் வாழும் பெரும்பான்மையினரால் ஒரு தேசிய இனம் உருவாக்கப்படுகின்றது. யூதர்கள் சிறுபான்மையினராதலால் ஜெர்மனியிலிருந்து அடித்து விரட்டப்படுகின்றனர். (அக்டோபர் 1938)

ஜெர்மனியின் யூதர்களைப் போன்றே இந்தியாவின் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாகத் தங்களது அண்டை வீட்டில் வாழும் இந்துக்களைவிட வெளிநாடுகளின் முஸ்லிம்களுடன் தங்களது நலன்களையும் அடையாளத்தையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றனர். இவையெல்லாம் சவர்க்கரின் பொன்மொழிகளாகும். இவரும் சித்பவன் பிராமணர். (மிக உயர்வான பிராமணர்களாம்).

இந்துத்துவா _ இந்து யார்? என்ற தனது நூலில் முஸ்லிம்களை அவர்களின் புனித பூமி மிகத் தொலைவில் உள்ள அராபியாவிலோ அல்லது பாலஸ்தீனத்திலோ இருக்கின்றது. அவர்களின் புராணக் கதைகள், தெய்வப் பிறவிகள், கருத்தோட்டங்கள் மற்றும் கதாநாயகர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்லர். இதன் விளைவாக அவர்கள் பெயர்களும் கண்ணோட்டமும் வெளிநாட்டுத் தோன்றல்களாகும் என்று சவர்க்கர் கூறியுள்ளார்.

ஆரியக் கலாச்சாரத்தைப் புதுப்பிக்கும் ஜெர்மனியின் பவித்திரமான நோக்கம், ஸ்வஸ்திகாவை மகத்துவப்படுத்துவது, வேதகால கலாச்சாரக் கல்வி பரிபாலனத்திற்.கு உதவி, இந்தோ _ ஜெர்மன் பாரம்பரியத்தை ஆர்வத்துடன் உயர்த்திப் பிடிப்பது _ இவை எல்லாம் மகிழ்ச்சி பொங்கும் நம்பிக்கையுடன் மத உணர்வு கொண்ட விவேகமான இந்துக்கள் வரவேற்கின்றனர். ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கும் சில சோசலிஸ்டுகள் மட்டும்தான் ஜெர்மனியின் இன்றைய அரசுக்கு எதிராகக் கோபக்குமிழிகளைக் கிளப்பி விடுகின்றனர் என்று நேருவை சவர்க்கர் கண்டிக்கின்றார்.
மூஞ்சே, சவர்க்கர், ஹெட்கேவார், ஆர்.எஸ்.எஸ். தத்துவ மூலவர் கோல்வால்கர் இவர்களின் பல்வேறு பேச்சுக்களும், எழுத்துக்களும், ஸ்தாபன செயல்பாடுகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரகசியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களில் _ ஆவணப் பாதுகாப்பு நூலகங்களில் இன்றும் காணலாம்.

பாசிச உறவுகள்

1930இல் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே பாசிஸ்ட், நாஜி இயக்கத்தைத் தெரிந்து வைத்திருந்தவர். இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இவரை அனுப்பியது. கிறிஸ்துவுக்கும், கிறிஸ்துவத்திற்கும் எதிராக எழுதிய நீட்சே, ஹிட்லரை மிகவும் கவர்ந்த அறிஞர். அவர் மனுஸ்மிருதியால் கவரப்பட்டு அதை ஆழ்ந்து பயின்றார். மனுவின் உன்னத மனிதன் ஹிட்லருக்குப் பெரும் ஈர்ப்பைத் தந்தது. மனுவின் வாசகங்கள் நாஜி முகாமில் வாசிக்கப்பட்டது. நீட்சேவின் சிலை முன் மனு வாசிக்கப்பட்டது. மூஞ்சே இத்தாலியின் முசோலினியைச் சந்தித்தார். அவரது பாசிசத்தை மிகவும் புகழ்ந்தார். ஜெர்மனியில் ஹிட்லரின் பயிற்சி முறைகளையும், பயங்கரவாத அதிரடிப் படை, அதன் போர் முறைகள், பிரச்சார முறைகள் பற்றியும் பயின்றார்.

பாசிசம் பிராமணியத்தின் மறுபதிப்பு என்றும், நாஜியன் எஸ்.எஸ்.படை, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் பிரதிபலிப்பு எனலாம் என்றும் கவி தாகூர் விவரித்தார். ஹிட்லரின் மெய்ன் காம்ப், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போற்றும் நூல். இதைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து அவர்கள் விற்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்சும் பாசிசமும் இரட்டையர் போல ஒன்றானவை. இரண்டிற்கும் மனசாட்சியுமில்லை, அறநெறியும் இல்லை. இரண்டும் இனவாதம், ஜாதியவாதம், சமுதாயப் பாகுபாடு கொண்டவை. ஹிட்லரின் யூத இன அழிப்பின் மறு பிரதியே மும்பைப் படுகொலையும் (1992) குஜராத் படுகொலையும் (2002). நாஜிக்கள் யூதப் பெண்களைக் கற்பழித்து அவர்களின் இனத்தைக் களங்கப்படுத்தியது போல, வி.எச்.பி., பஜ்ரங்கள் போன்றவை இஸ்லாமியப் பெண்களைக் கற்பழித்துப் பெருமைப்படுகின்றன.

இரண்டுமே சீர்திருத்தங்களுக்கும், விஞ்ஞானத்திற்கும், சிந்தனைச் சுதந்திரத்திற்கும் எதிரானவை. இரண்டுமே பெண்களை இனப்பெருக்கக் கருவியாக மட்டுமே கருதி அடக்கியாளுபவை. இரண்டுமே ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானவை. சமூகப் பொறுக்கிகள் துவங்கி சிறு வியாபாரிகள் என ஈர்த்து, கோடீஸ்வரர்களின் அரவணைப்பைப் பெறுவன. ஜெர்மனியில் குரூப் என்றால் இந்தியாவில் பஜாஜ், அம்பானி, மபத்லால், இரண்டுமே பயங்கரவாதிகள் மற்றும் மஃபியாக்கள் பலரைக் கொண்டவை. (பஜ்ரங்தள், சிவசேனா) பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவன. நாட்டை ராணுவமயமாக்கலையும், அணு ஆயுதங்களைத் தயாரிப்பதையும் மையமாகக் கொண்டவை. (பொக்ரான் 2). இந்தியாவை ராணுவமயமாக்கு, ராணுவத்தை இந்துமயமாக்கு என்பதே மூஞ்சே, சவர்க்கர் ஆகியோர் தந்த கோஷமாகும்.

நாஜிக்களின் அகண்ட ஜெர்மனி அமைத்திடும் குறிக்கோள் (லெபன்ஸ்ரம்) போன்றே ஆர்.எஸ்.எஸ். அகண்ட பாரதம் தன் லட்சியம் என்பான். ஈரான் துவங்கி, சிங்கப்பூர் வரை, ஸ்ரீலங்கா துவங்கி திபெத் வரை இவர்களின் அகண்ட பாரதம். வரலாற்றை மாற்றி தமது மனுசாஸ்திரத்தை நிலைநாட்ட நினைக்கிறார்கள்.

***

இந்தியாவில் இனக் கலவரங்கள் மற்றும் மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதிலும், தடுப்பதிலும், தேர்தல் கணக்கீடுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்ற இறுதி முடிவிற்கு வந்தார் வில்கின்சன்.

இந்தியாவில் வாக்குகள் _ வன்முறை _ தேர்தல் போட்டிகள் _ இனக் கலவரங்கள் என்ற தலைப்பில் அறிவார்ந்த வில்கின்ஸனின் ஆய்வின் சில அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறோம். அவருடைய முடிவில் இந்து _ முஸ்லீம்  கலவரங்கள் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே தூண்டிவிடப்படுகின்றன. அவற்றை அடக்குவதா? வேண்டாமா? என்பதையும் தேர்தல் கணக்கீடுகளை வைத்தே அரசு முடிவு செய்கிறது என்கிறார். நமது நேரிடை அனுபவம் அதுவே.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் சாம்பனிஸ் இந்தியாவின் இந்து _ முஸ்லிம் கலவரங்களுக்கும் தேர்தல் போட்டிகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பதில் எந்த அய்யப்பாடும் விட்டு வைக்காமல் வில்கின்சன் உறுதியாக உள்ளார் என்று கூறுகிறார்.
அஸ்தோஷ் வார்ஸ்னி, வில்கின்ஸின் நிபுணத்துவம் வாய்ந்த ஆய்வு முறையை நான் மெச்சுகிறேன். ஓர் ஆர்வத்தைத் தூண்டும் சமூக விஞ்ஞான பிரச்சினையை முன்மொழிகிறார். இந்தியாவின் சில பகுதிகள் மட்டும் அடிக்கடி சமூகக் கலவரங்களைக் காண்கின்றன. அதேசமயம் மற்ற பகுதிகளில் அமைதி நிலவுவது எப்படி, என்று கேட்கிறார்.

சமீபத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி ஏன் நடவடிக்கை எடுப்பதில் பலவீனம் காட்டினார்? ஆனால் அதே சமயத்தில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும், மத்திய பிரதேசத்தின் திக் விஜய்சிங்கும் வெற்றிகரமாக கலவரங்களைத் தடுத்தனரே, ஏன்? என்றும் கேட்கிறார்.

1989_92இல் பாபர் மசூதி _ ராமர் ஜன்மபூமி என்ற தேசிய அளவிலான பிரச்சினையில் ஏன் ஒரு சில நகரங்கள், மாநிலங்கள் மட்டுமே கலவரங்களால் பாதிக்கப்பட்டன? மற்றவை ஏன் பாதிக்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வில்கின்ஸன் உறுதியான பதிலைத் தருகிறார். சில அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் இம்மாதிரியான பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது தேர்தலில் ஆதாயம் அடைவதற்காகத்தான் என்ற சாதாரண உண்மை நிரூபணமாகின்றது என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *