மந்திரக்காரி

அக்டோபர் 16-31

– ஜலகண்டபுரம் ப.கண்ணன்

(திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான ஜலகண்டபுரம் ப.கண்ணன் சலகை கண்ணன் என்றும் அழைக்கப்பட்டவர். பகுத்தறிவு இதழின் ஆசிரியர். ஜே.பி.கிருஷ்ணன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் சமுதாயச் சீர்கேடுகளைச் சாடி படிப்போர் சிந்தனையைத் தூண்டி பகுத்தறிவுக்கு வித்திடுவன.)

காளியூர் என்பது சேலம் ஜில்லாவிலுள்ள ஒரு சிறிய கிராமம். அவ்வூருக்குப் பெரிய தனக்காரர் தோழர் ராமலிங்க ரெட்டியார். காளியூருக்கு அவரே சர்வாதிகாரி என்றுங்கூடச் சொல்லலாம், அவ்வளவு செல்வாக்கு. ரெட்டியார் நல்லவர்தான். இருந்தாலும் முரட்டு சுபாவம். பிடிவாத குணம். அதற்குக் காரணம் படிப்புக் குறைவு.

நல்ல மனிதர்களையும் மதப்பித்து பொல்லாதவர்களாக்கிவிடுகிறது என்பது அனுபவ உண்மை. ஹிட்லருக்கு யூதர்களைக் கண்டால் எப்படியோ, அப்படித்தான் சுயமரியாதைக்காரர்களைக் கண்டால் ரெட்டியாருக்கு. அவர்களை அழிப்பதற்கு என்னென்னவோ ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். பாவம்!

இந்த நிலையில், காளியூருக்கு ஒரு மந்திரக்காரி வந்து சேர்ந்தாள். சிறு வயதினள், மிக்க அழகி. அவளைப் பார்க்க ஊரே திரண்டு வந்தது. தன் வீட்டைத் தேடி வந்த அந்த மந்திரக்காரியால், தனக்கு ஒரு பெருமையும், கவுரவமும் கிடைத்து விட்டதென்று ரெட்டியாருக்குச் சந்தோஷம்.

அவளுக்குச் சாப்பாடு முதல், சகல வசதிகளும் தன் வீட்டிலேயே உற்சாகத்தோடு செய்து கொடுத்தார். பழைய கால குருகுலத்தில் ஆரிய வாத்தியாரிடம் பாடங் கேட்கும் திராவிடச் சிறுவனைப்போல், பணிவுடன் நடந்துகொண்டார் அந்தப் பெண்ணிடம்.

மந்திரக்காரியிடம் உண்மையில் ஒரு சக்தி இருந்தது. சோதிடம் மாந்திரிகம், இவைகளை எதிர்ப்பவருங்கூட, நேரில் பார்த்தபின் அவளுக்கு மிகப்பரிந்து பேசுவார்கள். காரணம் அவள் மிக்க அழகியோடுங்கூட, ஆளுக்குத் தகுந்த மாதிரி சாதுரியமாகவும், இனிமையாகவும் பேசுவதில் வல்லமைக்காரி.

நாட்டில் நிலவும் பெண்கள் சுதந்திரக் கிளர்ச்சி முதல், இத்தாலி _ அபிஸீனியப் போர் வரையிலும், சகல விஷயங்களையும் அவளிடம் கேட்டுக் கொள்ளலாம். பொதுவாக, அவள் ஒரு கதம்பப் பூச்செண்டு போல் விளங்கினாள். அவள் பெயர் வேதநாயகியம்மாள். பேச்செல்லாம் வேதமணம் கமழும்.

வந்து மூன்று நாட்களாயிற்று. தன்னுடைய மாந்திரிக மாயா விநோத சக்திகளைக் காட்ட, சந்தர்ப்பத்தை நோக்கியிருந்த மந்திரக்காரிக்கு, ஒரு நல்ல வேட்டை கிடைத்தது. ராமலிங்க ரெட்டியாரின் தங்கை பார்வதிக்குப் பேய் பிடித்த மாதிரி ஒருவிதப் பைத்தியம் உண்டு. ஏனோ அது இப்பொழுது அதிகரித்துவிட்டது. அது பேயின் சேஷ்டைதான் என்று எல்லோரும் முடிவு கட்டினர்.

தக்க சமயத்தில் மந்திரக்காரி வந்திருப்பது, ரெட்டியாருக்குச் சந்தோஷம். எல்லாவற்றையும் தீர்ப்பதாக அபயஸ்தமளித்தாள் அம்மையார். அவளிடம் ஒப்புவிக்கப்பட்டாள் பார்வதி.

பார்வதி ஒரு பாலிய விதவை. சிறு வயது. உடலுரம் பெற்ற சிறந்த அழகி. அவளது இன்ப வாசல் அடைபட்டு விட்டது. சமூகம் அவளைக் கொல்லாமல் கொன்றது. இன்ப நுகர்வின் ஆர்வம், மீறும் உணர்ச்சி, இவைகளுக்கு எருவிட்டதைப் போன்று சில வாலிபர்களின் காமப்பேச்சும், கடைக்கண் வீச்சும் அவள் மனதைப் பிய்த்துப் பிடுங்கின. கடவுளால் இந்து சமூகத்துக்கு அருளப்பட்ட விதவைக் கோலம் அவற்றை வெல்ல முடியவில்லை. மாற்றவும் முடியவில்லை.

அவள் புத்தி பேதலித்தது. என்னென்னவோ பேசினாள்; என்னென்னவோ செய்தாள். தனக்குப் பேய் பிடித்து விட்டது என்று சொல்லுவதைக் குறித்து பார்வதி வருந்தவில்லை. ஆனால் தன்னைப் பிடித்துள்ள பேய் இன்னதுதான், அது இம்மாதிரியெல்லாம் துன்புறுத்தும் என்பது, மற்றவர் நெஞ்சில் உறைக்கவில்லையே என்றுதான் கண்ணீர் வடித்தாள்; பேசினாள். பிதற்றினாள்! நிச்சயம் இது பேய்தான் என்பது, மேலும் உறுதியானதுதான் கண்டபலன்!

கள்ளரும் உறங்கும் நள்ளிரவு. ரெட்டியார் வீட்டின் தனி அறையிலே கணார், கணார் என்று மணியோசை ஒலித்தது. உடுக்கையும், சிலம்பும் முழங்கின. சாம்பிராணியும், குங்கிலியமும் புகைந்தன. எருக்கம் பூ, அரளிப்பூக்களின் வாசம் நாசியைத் துளைத்தன. திடீரென்று ஓ ஓ!…….. என்ற ஒரு சப்தம் ஓங்காரமிட்டது. மாந்திரிகப் பெண்ணின் மந்திர உச்சாடனமும், அதட்டும் குரலும் ஆர்ப்பரித்தன. ஊர்ப் பெண்களின் குசுகுசுப் பேச்சுகளும், கதம்ப வாதங்களும், அறையிலிருந்து காற்றோடு கலந்து வந்தன.

வளர்த்துவானேன்; பேய் ஓட்டுவதற்குச் செய்யும், சம்பிரதாயங்களெல்லாம், அங்கு ஆடம்பரமாக நடைபெற்று ஓய்ந்தன. இது நான்காவது நாள். இப்படியாக இன்னும் பதினாறு நாட்கள் ஓட்டவேண்டுமாம். தினசரிப் பேயாட்டம் முடிந்தவுடன் பார்வதியும், மந்திரக்காரியும் அந்தத் தனி அறையிலேயே படுத்துக் கொள்வார்கள்.

அந்தப் பேய் ரொம்பக் கெட்டதாம். பார்வதிக்கு ஏதாவது கேடு விளைவித்து விடுமாம், அதற்கு அவள் பாதுகாப்பு!

பேயோட்ட ஆரம்பித்து பத்து நாட்களாகி விட்டன. பார்வதி வரவர சுகமடைந்து வந்தாள். பேயும் கொஞ்சங் கொஞ்சமாகப் போகத் தொடங்கியது. தெளிவு பிறந்தது. பொதுமக்கள் சுயமரியாதைக்காரனைக் கண்டால் பரிகாசம் செய்தனர். மந்திரக்காரிக்கு நல்ல பெயர். காளியூரிலும், சுற்றுப்புறங்களிலும் அவளுக்கு ஏராளமான புகழ். தகுந்த இடங்களிலிருந்து கிராக்கிகள்! சன்மானங்கள்! அழைப்புகள் வந்து குவிந்தன.

ராமலிங்க ரெட்டியாருக்கு இன்னும் தான் செய்யவேண்டிய பெரிய உபகாரம் உண்டு, அதற்குப் பிறகுதான், மற்றவர்களது விஷயங்கள் கவனிக்கப்படும் என்று மந்திரக்காரி தன்னை அழைத்தவர்களுக்குத் திருவாய் மலர்ந்தருளினாள். ரெட்டியார் பெருமகிழ்வடைந்தார். அந்தப் பாக்கியம் எளிதா?

பேயோட்டக் குறித்த 20 நாட்களும் சென்றன. பேயும் ஓடிவிட்டது. பார்வதி இப்பொழுது உற்சாகம் நிறைந்த பெண்ணாகத் தோன்றுகிறாள். அவள் அழகு பன்மடங்கு பிரகாசித்தது. உடல் பூரித்தது. மனம் சாந்தியும், சமாதானமும் பெற்றது. அவள் முகத்திலே சந்தோஷம் கலந்த ஒரு இனிய புன்னகை. இன்ப வாழ்க்கையை எண்ணி எண்ணி மகிழும் புது மணப் பெண்போல விளங்கினாள் பார்வதி.

மந்திரக்காரி ரெட்டியாருக்குச் செய்யும், அந்தப் பெரிய உபகாரம் ரெட்டியாரின் புடக்களையிலே ரகசியமாக ஆரம்பிக்கப்பட்டு 14 நாட்கள் கழிந்தன. இன்னும் ஒரே ஒரு நாள்தான்! அது பூர்த்தியடைந்தால்; ஃகா! ரெட்டியார் எவ்வளவு செல்வந்தராகி விடுவார்! எவ்வளவு பவுன்கள், எத்தனை வைர ஆபரணங்கள், தங்க நகைகள், நாணயங்கள், பிறகு ஏற்படும் பெருமை, செல்வாக்கு அத்தனையும் நினைக்க நினைக்க, ரெட்டியாரின் மனம் பூரிப்பால் வெடித்து விடும் போலாகிவிட்டது.

கடைசி நாள் வந்தது நடுநிசி, வானத்திலே வெண் மேகக் கூட்டங்கள். சந்திரன் அமுத கிரணங்களை அள்ளிப் பொழிந்தான். எங்கும் பால் போன்ற நிலவொளி. மந்திரக்காரியின் உத்தரவுப்படி, ரெட்டியார் வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த எல்லா ஆபரணங்களையும் கழற்றி அவளிடம் கொடுக்கப்பட்டன. அவைகளை அந்தப் புதையலுக்குப் பக்கத்திலே தற்காலிகமாகப் புதைத்துவைத்து, புதையலை எடுக்கும்போது சேர்த்து எடுத்துக் கொள்வதாம்! புதையல் காக்கும் தேவதைக்குச் சந்தோஷத்தை உண்டாக்குவது என்பது, அதன் சித்தாந்தமாம்.

சகல பூஜா திரவியங்களும் குவிந்துகிடந்தன. பலியிடுவதற்கு ஒரு கறுப்பு ஆடு கட்டப்பட்டிருந்தது. கைகட்டி, வாய் பொத்தி, பயபக்தியுடன் ரெட்டியார் குடும்பம் மந்திரப் பெண்ணைச் சூழ்ந்து நின்றது. எங்கும் நிசப்தம்.

அப்பொழுது மந்திரக்காரி சொன்னாள்:_

ரெட்டியாரே! நீங்களெல்லாம் இனி இங்கிருக்கக் கூடாது. இந்தப் புதையலைப் காப்பது மகா துஷ்டதேவதை! அதை வசப்படுத்த அதனுடன் போராட வேண்டும். அந்தப் பயங்கரக் காட்சியைப் பார்த்தால், நீங்கள் செத்துப் போவீர்கள், ஜாக்கிரதை! ஞாபகமிருக்கட்டும். காலை ஆறு மணிக்கு மேல், நான் கூப்பிடும் வரையில், இந்தப் பக்கம் யாரும் தலை காட்டவேண்டாம். போங்கள்.

விடிய, விடிய ரெட்டியார் விழித்திருந்தார். குடும்பத்திற்கே அன்று ஏகாதசி. சரியாக ஆறு மணி ஆயிற்று. புடக்களையிலே எந்த சப்தத்தையும் காணோம். ரெட்டியார் புதையலைப் பார்க்கத் துடிப்பாய்த் துடித்தார். மணி ஏழு, எட்டு, ஒன்பது என்று ஓடியது. அவரது ஆவல் கரைபுரண்டு விட்டது. எப்படியோ மனதில் ஒரு சந்தேகமும் தோன்றியது. முகத்திலே ஏமாற்றம் வழிந்தோட புடக்களையை நோக்கி நடந்தார். அங்கிருந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டு அசைவற்று நின்று விட்டார்.

என்ன ஆச்சரியம்! மந்திரக்காரி வேதநாயகி அம்மையார் அவர்களே அங்கில்லை! கழுத்தறுபட்ட ஆடும், பூசைத் திரவியங்களும், சிதறிக் கிடந்தன. எல்லாம் ஒரே பாழாகத் தோன்றியது. புதையல் குழிக்கருகே சென்றார். அந்தக் குழி தோண்டப்பட்டது. அங்கு புதைத்த வீட்டு நகைகள் அடியோடு காணப்படவில்லை! ஆனால் மூன்றடி ஆழத்தின் கீழே, ஒரு செம்புத் தவலை கிடைத்தது. மீண்டும் மனதில் தோன்றிய ஆசையோடு ரெட்டியார் அதன் மூடியைத் திறந்தார். அவர் பார்த்தவைகள் என்ன? பவுன் குவியல்களா? தங்க நகைகளா? நாணயங்களா? வைர ஆபரணங்களா? இல்லை; ஒழுங்காகத் தன் விலாசமிடப்பட்ட ஒரு கடிதம்.

ரெட்டியாரின் நெஞ்சின்மேல், ஒரு பெரிய பாறாங்கல் விழுந்த மாதிரி இருந்தது. அவரது மனக்கோட்டை தபதப வென்று சரிந்து விழுந்தது. ஒன்றும் தோன்றாமல், அப்படியே சோகத்தோடு சாய்ந்து விட்டார் தரையில்.

ரூபா 9,000 பெறக்கூடிய நகைகள்! மூட நம்பிக்கையின் காணிக்கை. ரெட்டியாரின் குடும்பம் இரண்டு நாளாகப் பட்டினி! இத்துடன் விட்டதா?

பார்வதியைக் காணோம்! என்ற செய்தி, ரெட்டியாரின் வைதிகப் பச்சை ரெத்தத்தையே துடிக்கச் செய்துவிட்டது. நன்றிகெட்ட கடவுள்கள்! பக்தர்களுக்கு இவ்வளவு பயங்கர சோதனையா? நாஸ்திகம் வலுத்துவிடும் என்ற யோசனை கொஞ்சங்கூட இல்லையே! எதிர்காலத்தில் இந்தக் கடவுளெல்லாம் எப்படித்தான் பிழைக்குமோ தெரியவில்லை.

அந்தக் கடிதம். ஆம்! அது பார்வதியின் எழுத்துப் போன்றிருந்ததே! மறந்தே விட்டேன், என்று சொல்லிக் கொண்டே, கடிதத்தை எடுத்து வந்து பிரித்தார் ரெட்டியார். மனதுக்குள்ளே படித்தார்.

அண்ணா! தங்கள் பார்வதி வணக்கம்!

மன்னிக்கவும். தாங்கள் ஏமாந்துவிட்டீர்கள். பாவம், மந்திரக்காரி இன்னுங்கூட ஒரு பெண்ணென்றுதான் நம்பியிருப்பீர்கள். திடுக்கிடாதீர்கள். அவள் ஒரு அழகிய வாலிபன்; மேற்குலத்தான். வேஷதாரி, கொள்ளைக்காரன். மத பக்தர்களை, மாந்திரிகப் பிரியர்களை மட்டந்தட்டும் மதிவல்லபன்.

அவரை, என்னைப் பிடித்த பேயை ஓட்டுவதற்கு நியமித்தீர்கள். கட்டளையை நிறைவேற்றினார்! வைதவ்யப் பேயை ஓட்டி என்னையும் ஆட்கொண்டு விட்டார். 20 நாட்களாகத் தனி அறையில் என் அன்பரோடு இன்பத்தின் எல்லை கண்டேன்! புத்துயிர் பெற்றேன்! விதவைக்கு வாழ்க்கையில்லை. இன்பமில்லை, நல்ல உணவில்லை, உடையில்லை, அதுதான் தலைவிதி, பிரம்மன் கட்டளை, என்ற கருணையற்ற நமது இந்துமதக் கோட்பாடுகளைவிட, கொடியவன், வஞ்சகன், பொய்க்காரனாகிய எனது காதலன் எவ்வளவோ சிறந்தவன்! நல்லவன்!

எங்கள் இருவர் மனதும், உடலும், ஒன்றுபட்டு விட்டன. கல்யாணம் என்ற கூத்து எங்களுக்குத் தேவையில்லை. அவருக்கு நான் இசைந்தேன், எனக்கு அவர் இசைந்துவிட்டார். அவருக்கு கவுரவமாகவும் சம்பாதிக்க வழி தெரியும். இனி அவர் மந்திரக்காரி வேதநாயகியல்ல. மேன்மை பொருந்திய எனது காதலர். நல்ல தையல்காரர்!
உங்களை ஏமாற்றுவதுதான் கடைசி முறையென்று சொல்லிவிட்டார். வருந்த வேண்டாம், என்னை முண்டையாக்கி, நீங்கள் சுகமனுபவித்ததற்குப் பரிகாரமாக, நமது குடும்ப நகைகளை இனி நானே போட்டுக்கொள்வேன்.

மாந்திரிகத்தின் அடிப்படை, அதன் உண்மை சொரூபம் ஏமாற்றந்தான் என்பது சிலரது வாதம். அது பொய். மாந்திரிகர்களுக்கும், சோதிடர்களுக்கும், எப்பொழுதுமே லாபம் உண்டு. அனுபவத்தில் நீங்களும் கண்டு விட்டீர்கள்; எங்களைத் தேட முயற்சிக்க வேண்டாம். அது வீண் சிரமம். கடைசியாக என்னை வாழாமல் வாழ வைத்த உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

தங்கள்,
பார்வதி

ரெட்டியார் திருதிருவென்று விழித்தார். அவர் முகத்திலே அசடு நிறைந்து வழிந்தது. ஆத்திரம், அவமானம், ஏமாற்றம், வெறுப்பு, துக்கம், எல்லாம் அங்கு குதித்துக் கும்மாளமிட்டன!  இவ்வளவுக்குமிடையே, சுயமரியாதைக்காரர் சிலரின் உருவம் கண் முன்பு தோன்றிச் சிரித்தன. மனம் உடைந்தார். அவர்களை அழிக்கும் ஏற்பாடுகள் யாவும் சுக்குச்சுக்காக உடைந்து சிதறி மண்ணோடு மண்ணாயின!

செய்தி, புயல் வேகத்தில் எங்கும் பரவிற்று. தூங்காமல் தூங்கிய காளியூர் மக்கள் கண் விழித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *