பகுத்தறிவுப் பூந்தோட்டம்

அக்டோபர் 01-15

துண்டு போடுவதை – தோளில்
துண்டு போடுவதை
அனுமதித்தவன் நீ.
ஆனால் தமிழன்
துண்டு படுவதை
ஆட்சேபித்தவனும் நீயே.

நீ ஓட்டுக் கேட்க வரவில்லை – செய்திகளை
ஒட்டுக் கேட்கவும் இல்லை – ஆனால்
ஒட்டுத் துணி உடுத்தி வீதி ஓரங்களில் ஒதுக்கி வைத்திருந்தவர்களின்  விழி ஓரங்களில் வழிந்தோடிய விழிநீரைத் துடைத்து
ஒற்றுமைக் கொடியை உயர்த்திப் பிடித்திட்ட
ஒரே தலைவன் நீதான்.

முகத்தைப் பார்த்தாலே
பணம் வாங்கும்
பல வைத்தியர்களிடையே –
பணம் வாங்காமலேயே
சமுதாய வைத்தியம் செய்த
அதிசய வைத்தியன் நீ – தமிழினத்தின்
அன்புத் தந்தையும் நீயே.

மூட நம்பிக்கை என்ற
ஒட்டடை படிந்து இருந்த
ஒவ்வொரு தமிழனின் இதயத்தில் இருந்த
தூசியை அகற்றி – தூய்மைப்படுத்தி
பகுத்தறிவு ஓவியம் வரைந்திட்ட
பைந்தமிழ் லியனார்டோ-டா-வின்சியும் நீயே.

நீ தோழமையின் தொங்குந் தோட்டம்
தினமும் பார்க்க வேண்டிய
தித்திக்கும் தேரோட்டம்.
நீ இங்கு தோன்றவில்லை என்றால்
இருந்திருக்காது தமிழருக்கு
இரத்தத்தில் இன உணர்வோட்டம்.
என்றுமே நீ(ங்கள்)
பகுத்தறிவுப் பூந்தோட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *