கேள்வி : 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்து, நாடாளுமன்றத்தில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சார்ந்த மூக்கையா தேவர் வாதிட்டபோது, கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு கூறவில்லை. ஏறத்தாழ 39 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கச்சத்தீவு இந்தியாவுக்கு உரிமையானது அல்ல என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறதே! இது குறித்து தங்கள் கருத்து?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ஆசிரியர் பதில் : 1. கச்சத்தீவு எப்படி நமக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மன்னர் பரம்பரை வாரிசுகள் பலவற்றை அளித்துள்ளார்கள்.
2. புலவர் இராசு அவர்கள் விடுதலை பெரியார் மலர் (135ஆம் ஆண்டு) பல்வகை சான்றுகளைத் தந்துள்ளார்.
3. மத்திய அரசு இப்படி எழுதவைத்து அதற்கு மக்கள் எதிர்ப்பு வருவதற்கு திட்டமிட்ட பி.ஜே.பி ஆதரவு அதிகார வர்க்கம் செய்துள்ளது.
இந்திய அமைச்சர்களும் அதுபற்றிக் கவலைப்படாது தாக்கல் செய்வது மகாவெட்கக் கேடு!
கேள்வி : தமிழினத்தின் மீது பார்ப்பனர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஏனிந்த வெறுப்பு? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ஆசிரியர் பதில் : ஆதிக்கவாதிகளுக்கு, அவர்களை அடிமையாக்க முயலுவோர் விழித்துக் கொண்டால் பிடிக்குமா? அதனால்தான்!
கேள்வி : அத்வானி குழுவை ஒதுக்கிவிட்டு மோடியை பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்ததால் பி.ஜே.பி.யில் பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?
– எஸ்.கோவிந்தசாமி, பெரம்பூர்
ஆசிரியர் பதில் : ஏற்படவே ஏற்படாது; காரணம், அத்வானி குழு சரணாகதி அடைந்துவிட்டதே அதுதவிர அவருக்கு வேறு வழி ஏதும் இல்லையே! எனவே சுவற்றுக்கீரையை வழித்துப் போடச் சொன்ன பழைய கணவன் நிலைக்கு அவர் ஆளானார்!
கேள்வி : நாட்டுக்குத் தேவை வலுவான தலைமையா? மதச்சார்பற்ற நலமான தலைமையா?- அ.வெற்றிமுரசு, தஞ்சை
ஆசிரியர் பதில் : நாட்டுக்குத் தேவை மதச்சார்பற்ற நலம் காத்து அனைவரையும் சகோதர, சமத்துவத்துடன் நடத்தும் ஆட்சித் தலைமையே. ஜனநாயக நாட்டில் _ அதுவும் பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் உள்ள நம் நாட்டிற்குத் தேவை.
வலுவான தலைமை ஹிட்லர் தலைமைதான். முடிவு…? அதுபோன்ற விபத்தில் நாடு சிக்கிக் கொள்ளக் கூடாதே!
கேள்வி : சாதாரண மக்களில் பெரும்பாலோருக்குப் பாதுகாப்பு அளித்திட முயற்சி மேற்கொள்ளாத மத்திய, மாநில அரசுகள் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பை அதிகரித்திருப்பது நியாயமா?
– திராவிடமணி, காஞ்சி
ஆசிரியர் பதில் : சட்டத்தின் முன் எல்லா உயிரும் முக்கியமே! என்றாலும் இப்படி நம் நாட்டில் நடக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல.
பெரியார், காமராசர், அண்ணா காலத்தில் அப்படி நிலை இல்லை; இப்போது மக்களின் பாதுகாப்பு போதவில்லை; வெவ்வேறு சூழ்நிலை காரணமாகக் காட்டப்படுகிறது!
கேள்வி : இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு ரூ.10 கோடி வழங்குவது எந்த வகையில் நியாயம்?
– பி. செல்வம், அம்மாபாளையம்
ஆசிரியர் பதில் : மக்கள் வரிப்பணம் பாழ்! பாழ்! சினிமா என்பது தனியார் தொழில். பெரியார் படத்திற்கு – பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் காரணமாக சமூகப் புரட்சியாளர் படம் எடுக்க 94 லட்சம் கலைஞர் தந்தபோது, வழக்குமன்றம் சென்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம், காணவில்லையே?
கேள்வி : மோடி பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்ட உடனேயே உ.பி.யில் கலவரம் வெடித்துவிட்டதே?
– ஜி. சரசுவதி, அந்தநல்லூர்
ஆசிரியர் பதில் : இது அச்சாரம்; அதற்கு அவர் முக்கியமான வரை உ.பி.க்கு அனுப்பிவைத்து பாடம் எடுக்க வைத்துள்ளார் போலும்! (அமித் ஷா)
கேள்வி : தான் விரும்புகின்ற நீதிபதிதான் தன் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்று குற்றவாளியே நீதிமன்றத்தில் மனு போடலாமா? – வீ. அன்பரசன், செய்யாறு
ஆசிரியர் பதில் : ஓ தாராளமாக போடலாமே, அதை பெரிய நீதிமன்றம்கூட ஆய்வு செய்யலாமே. மனுவை அளிக்க, நல்ல முன்னேற்றம். … கப்… சிப்…
கேள்வி : குடிநீரை அரசே விற்பது சரியா? –கி. வீரநிதி, மதுரை
ஆசிரியர் பதில் : வாழ்வின் அடிப்படைத் தேவை உண்ண உணவு போல, குடிக்க நீர். அதை அரசே விற்பது மிகவும் வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது! தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட கிடைக்காதா? – காசு கொடுக்காமல்.
கேள்வி : இலங்கையின் வடக்கு மாகாண தேர்தல் வெற்றி தமிழ் ஈழக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்குமா?
– க. செம்பருத்தி, திருச்சி
ஆசிரியர் பதில் : நீண்ட கால துன்பத்திலிருந்தும் துணிவோடு மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழர் தாகம் மெல்ல தீர்க்கப்படும் நாளுக்காக அவசரப்பட வேண்டாம். அந்நாட்டுத் தமிழர்களை நாம் தர்ம சங்கடத்தில் தள்ளக் கூடாது.