ஆசிரியர் பதில்கள்

செப்டம்பர் 16-30

கேள்வி : நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வதும், அதைத் தள்ளிப் போடுவதும் ஜனநாயகத்திற்குச் சரியானதா?
– பி. கூத்தன், சிங்கிபுரம்

பதில் : தவறானது; கண்டிக்கத்தக்கது. மக்கள் வரிப்பணம் இப்படிப் பாழாக்கப்படலாமா? ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல்கள் இவை.

கேள்வி : தர்மம் என்பது என்ன? அதற்குச் சரியான உதாரணம் எது? நாம் கடைப்பிடிப்பது எப்படி? – எஸ். மணி, சோமம்பட்டி

பதில் : தர்மம் என்பது பழைய ஹிந்து தர்மப்படி மனுதர்மம் _ குலதர்மம். கர்மா தத்துவப்படி அவரவர் வினைப்பயன் என்று கூறி _ பார்ப்பன சனாதர்மத்தையே அச்செயல் குறிக்கும். பிறகு அது _ தர்மம் என்றால் பிச்சை போடுவது என்று ஆக்கப்பட்டது. பார்ப்பனர் தொழில் பிச்சை கேட்பது என்பதால் அப்படி மருவியிருக்கக்கூடும். புத்தரின் தம்மம் என்பது பாலி மொழிப்படி தர்மம் அல்ல; நெறி_ கொள்கை _ தத்துவம் ஆகும்!

கேள்வி : ஊடகங்களில் பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்துகொள்ளும்போது, அவர்களிடம் கேட்கும் கேள்வியைத் தவிர்த்து, கேட்காத கேள்விகளுக்குப் பதில் கூறுகிறார்களே? – ப. நாகராசன், பன்னத்தெரு

பதில் : ஊடகங்களைத் தங்கள் கட்சிப் பிரச்சார மேடையாக்கிடும் விரும்பத்தகாத போக்கு அது; அக்கேள்வி கேட்போர் அதனைத் தடுத்துவிடத் துணிவில்லாதவர்களாகவே இருக்கிறார்களே, அதுதான் வேதனை!

கேள்வி : தனது கடமையைச் சரிவரச் செய்யாமல் இஸ்ரோ தலைவர் ராதாகிருட்டிணன் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்பு முன் திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசித்து வெற்றியடைய வேண்டிக்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளதே? – எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : மடங்களில் இருக்கவேண்டிய சாம்பிராணிகள் _ அந்த இஸ்ரோவில் அமர்த்தப்பட்டுவிட்டார்களோ என்ற சந்தேகம் அடிக்கடி பொதுமக்களுக்கு ஏற்படுகிறது – இதன்மூலம்!

கேள்வி : அறிவியல் துறையில் பிழைப்புக்காகப் பணியாற்றும் ஆன்மீகவாதிகள் உண்மையிலேயே அந்தத் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுவார்களா?
– நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : ஆன்மீகவாதிகள் என்றால் யார், இச்சொல் சுத்த ஹம்பக் _ ஏமாற்று வேலை _ ஆத்மாவே இல்லை என்கிறபோது அந்த வாதி எங்கே வந்தார்!

கேள்வி : வேதங்களை மறுப்பவன் நாத்திகனா? கடவுளை மறுப்பவன் நாத்திகனா? ஓர் உண்மையான நாத்திகனுக்குரிய இலக்கணம் எது? – ப. சாக்கியமணி, காஞ்சி

பதில் : காஞ்சி சங்கராச்சாரியாரின் (தெய்வத்தின் குரல்) கூற்றுப்படி, வேதங்களை நிந்திப்பவனே _ ஏற்க மறுக்கின்றவனே நாத்திகன். கடவுளை மறுப்பவன் நாத்திகன் அல்ல. ஆனால் பிறகு எப்படியோ இப்படியும் கூறிடும் வழமை வந்துவிட்டது. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது என்பதை, அறிவைப் பயன்படுத்திக் கேள்வி கேட்டு, அறியாமையை அழிப்பவனே நாஸ்தி-கன் ஆவான்!

கேள்வி : இன்றைய ஆட்சியில் காவல்துறையால் அடக்கப்படும் அல்லது அடக்கி வைத்திருக்கும் மக்களின் போராட்ட உணர்வுகள் பின் விளைவுகளை ஏற்படுத்துமா? – மலர்மன்னன், முசிறி

பதில் : தீவிரவாதம், அதிதீவிரவாதம், பயங்கரவாதம், கட்டுக்கடங்காத வன்முறை, கொரில்லாப் போர்முறை முதலிய பல பேர்களில் பிறகு அவை வெளியாகக் கூடும் அபாயம் உண்டு!

கேள்வி : நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணத்தால் ஈழத் தமிழர்களுக்கு அய்.நா.மன்றத்தில் ஏதாவது பயன் விளையுமா? – கி. அன்பரசன், மதுராந்தகம்

பதில் : ஏதோ ஓரளவுக்கு என்ற நம்பிக்கை முன்பு இருந்தது; ஆனால் இராஜபக்சே அரசும் புத்த பிக்குகளும், இராஜபக்சே கூட்டாளிகளும் பேசும் தலைக்கனம் கொண்ட தறிகெட்டப் பேச்சுகள் அதைத் தகர்த்து வருகின்றன!

கேள்வி : இந்தியப் பொருளாதாரம் திவாலாகும் நிலையில் உள்ளது என்ற கணிப்பு சரியானது என கருதுகிறீர்களா?
– அ. கவிதா, விழுப்புரம்

பதில் : திவாலாகாது. இது ஓட்டுக் கண்ணோட்டத்தை மனதிற் கொண்ட கட்டுப்பாடான பிரச்சாரம். அமெரிக்க நாடுகளில் கூட இந்நிலை உண்டு; விரைந்து வீழ்ந்துள்ள பொருளாதாரம் ஆரோக்கியம் அடையும்.

கேள்வி : ஆசாராம் பாபு போன்ற பெண் பித்தர்களுக்கு பா.ஜ.க. வக்காலத்து வாங்குவதேன்?
– ஜி. சரசுவதி, ஜீயபுரம்

பதில் : சாமியார்கள்தானே பா.ஜ.க.வுக்கு மூலதனம். பக்தி மூடநம்பிக்கையில்லாவிட்டால் இவர்களது அரசியல் அம்போ என்று ஆகிவிட்டிருக்கும்! மதத்தையும் பக்தியையும் மூடநம்பிக்கைகளையும் போட்டுக் குழப்புவதே பா.ஜ.க.வின் உத்திகள் _ மோடி வித்தைகளில் முக்கியமானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *