பத்திரிக்கைகள் தணிக்கை தலைவர்கள் கைது
நெருக்கடி நிலை அமல் செய்யப்பட்டது குறித்த மேலும் சில தகவல்களையும் டைம்ஸ் ஆப்இந்தியா வெளியிட்டிருந்தது.
முதல் கடிதத்துக்கு ஜனாதிபதி மறுப்பு
ஜனாதிபதி பக்ருதீன் அவசரநிலைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு இந்தக் கடிதத்தின் பல வாசகங்களை மாற்ற வேண்டும். அவை மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமாகவும் உள்ளன என்று எதிர்ப்புத் தெரிவித்தார். வேறு கடிதம் தயார் செய்வதாக பிரதமர் இந்திரா உறுதியளித்ததன் பேரில் ஜனாதிபதி அவசர நிலை உத்தரவைப் பிறப்பித்தார்.
ஜனாதிபதியே தன்னிச்சையாக முழு மனதுடன் அவசர நிலைக்கு உத்தரவிடுவது போன்ற பொருள்படும்படி முதல் கடிதம் எழுதப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் எதிர்ப்பையடுத்து அடுத்த நாள் மற்றொரு கடிதம் தயாரிக்கப்பட்டது. சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலேயும் மேற்குவங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ரேயும் பிரதமரின் அமைச்சகத்தைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகளும் கூடி இரண்டாவது கடிதத்தைத் தயார் செய்தனர். இந்தக் கடிதத்தை முதல்நாள் தயார் செய்யப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்த இடத்தில் வைத்துவிட்டு முதல் கடிதத்தை எடுத்து விட்டனர். வைக்கப்பட்ட கடிதம் முன் தேதியிட்ட இந்தக் கடிதத்தை அரசு பைல்களில் வைப்பதற்கு ஜனாதிபதி பக்ருதீனும் அனுமதி அளித்தார். முதலில் தயாரிக்கப்பட்ட கடிதம் என்ன ஆனது என்பது பற்றி இன்று வரை தெரியவில்லை. பிறகு பிரதமராக வந்த மொரார்ஜி தேசாயிடம் இந்தக் கடிதத்தைப் பிரதமரின் செயலகத்தினரால் காட்டமுடியாது திண்டாடினர். அந்தக் கடிதம் என்ன ஆனது என்பதே அவர்களுக்கும் தெரியவில்லை. இரண்டாவது கடிதத்தின் நகல் பிரதமரின் செயலகத்திலும்கூட இல்லை. அது ஜனாதிபதியின் செயலகத்தில் உள்ள ஆவணங்களில் மட்டுமே காணப்படுகிறது.
அவசரநிலை பிறப்பிக்கப்படப் போவது பற்றி உயர் அதிகாரிகள் யாருக்குமே தெரியவில்லை என்றாலும் சில கீழ் அதிகாரிகளுக்கு அதுபற்றி நண்பகலுக்கு முன்பாகவே தெரிந்திருந்தது. புதுடில்லியில் கிரிஷன் சந்த், புதுடில்லி டி.அய்.ஜி. பி.எஸ். பிந்தர், நவீன் சாவ்லா, ஒரு போலீஸ் சூப்ரன்டெண்ட் ஆகியோருக்கு இதுபற்றி முன்னதாகவே தெரிந்திருந்தது. உயர்மட்ட அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் எதுவுமே தெரியாமல் காதும் காதும் வைத்தாற்போல் சம்பவங்கள் நடந்தன.
சில நம்பிக்கையான முதலமைச்சர்களையும் பொறுக்கி எடுக்கப்பட்ட சில நம்பகமான அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு இதர காரியங்கள் விரைவாக நடந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; பத்திரிகைகள் மீது கடும் கட்டுப் பாடுகளையும் விதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அவசரநிலை பற்றி அப்போதைய ராஜஸ்தான் முதலமைச்சர் ஹரிதேவ் ஜோஷி யிடம் தகவல் தெரிவிப்பதற்காக மத்தியப் பிரதேச அன்றைய முதலமைச்சர் பி.சி. சேத்தி டில்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தகவல் கூறிவிட்டு, அங்கிருந்து அவர் போபாலுக்குப் புறப்பட்டார். போபாலில் உள்ள கன்ட்ரோல் அறையில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் யார் யாரைக் கைது செய்வது, எந்தெந்தப் பத்திரிகைகளைப் பறிமுதல் செய்வது, எந்தெந்தப் பத்திரிகை அலுவலகங்களை முற்றுகையிடுவது என்பது பற்றி அங்கிருந்தவாறு அவர் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இதே வேலையை அதே நேரத்தில் வேறு சில முதலமைச்சர்களும் செய்து கொண்டிருந்தனர்.
இந்திரா எல்லா முதலமைச்சர்களையும் நம்பிவிடவில்லை. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு ஜூன் 25ஆம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக பிறகு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
இந்திரா கட்சியின் ஆட்சியே நடந்து வந்த மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சரையும் மற்றொரு மாநிலத்தின் முதலமைச்சரையும்கூட இந்திரா நம்பவில்லை. எனவே, அவர்களுக்கு இதுபற்றி தகவல் எதுவும் முன்கூட்டித் தெரிவிக்கவே இல்லை. இதனால்தான் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜூன் 26ஆம் தேதியும் 27ஆம் தேதியும் கைது செய்யப்பட்டார்கள்.
பல மாநிலங்களில் அரசுத் தரப்பிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் குழப்பமே நிலவியது; போபாலிலிருந்து ம.பி.யின் எல்லா மாவட்டக் கலெக்டர்களுக்கும் ஒன்றுக்கொன்று முரணான உத்தரவுகள் வந்து கொண்டே இருந்தன. அந்தக் கலெக்டர்கள் எல்லாம் ம.பி. அரசின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி ஒருவருக்கு மிகவும் எரிச்சலோடு போன் செய்து தகவல் கோரியதாக அண்மையில் அந்த அதிகாரி தெரிவித்தார். மாவட்ட வாரியாக எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களையும் கைது செய்ய ஓர் உத்தரவு வந்ததால் அந்த உத்தரவு வந்த சில நிமிட நேரத்திற்குள்ளாகவே அந்த உத்தரவில் சில திருத்தங்களைச் செய்து மற்றொரு உத்தரவு வரும். இப்படியாக மாறி மாறி முரண்பட்ட உத்தரவுகள் வந்துகொண்டே இருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டதா அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு சதி ஏதாவது நடந்து விட்டதா என்று ஒன்றும் புரியாமல் தாம் குழம்பிக் கொண்டிருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். இதே குழப்ப நிலைதான் மற்ற மாநிலங்களிலும் நிலவியது.
டில்லியில் மட்டும்தான் யார் யாரைக் கைது செய்ய வேண்டும் என்ற பட்டியல் முன்பே தயார் செய்து வைக்கப்பட்டிருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்டவாறு முறைப்படி நடந்து முடிந்தன. இவ்வாறு டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
1975 ஜூன் 25ஆம் நாள்! இந்தியாவில் -_ இந்திராகாந்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்! இந்தியா முழுதும் தலைவர்கள் வேட்டையாடப்பட்டனர். காரணம் எதுவுமின்றி ஓராண்டுக்கு மேல் சிறைப்படுத்தப்பட்டனர்.
பத்திரிகைச் செய்திகள் முன்தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. விடுதலை ஏட்டின் மீதும் பார்ப்பனக் கத்தரிக்கோல் பாய்ந்தது; பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூட பார்ப்பன அதிகாரிகள் தடை போட்டார்கள்!
தந்தை பெரியார் அவர்கள் என்று போடக் கூடாது என்றும், அதேநேரத்தில் சங்கராச்சாரி என்று போடக் கூடாது -_ சங்கராச்சாரியார் என்று போடவேண்டும் என்று ஆணையிட்டனர்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிப் பிரகடனம்
31.0-1.1976 அன்று இரவு, தமிழகத்தில் நடைபெற்று வந்த தி.மு.க. ஆட்சி நீக்கப்பட்டு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அதனையொட்டி நான், விடுதலை மேலாளர் என்.எஸ். சம்பந்தம் உட்பட மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்கள், முன்னணித் தோழர்கள் ஆகியோர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டோம். அன்று முதல் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், இயக்கப் பிரச்சாரங்கள் போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
என்னுடைய மிசா கைதுப் படலத்தை மறைந்த மூத்த பத்திரிகையாளர் மானமிகு சோலை அவர்கள் எழுதியுள்ள வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூலில் பல்வேறு தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ள அந்தச் செய்திகளை அப்படியே தருகிறேன். (நூலின் பக்கம் 69–_81 வரை)
… திண்டிவனத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழம்மா மணியம்மையாரும் வீரமணியும் மதியமே புறப்பட்டுச் சென்றனர்.
புறப்படுவதற்கு முன்னர் வீரமணி பிரபல புத்தக நிலையத்தில் புத்தகம் வாங்கினார். அதன் பெயர் நள்ளிரவில் வாங்கிய சுதந்திரம் (திக்ஷீமீமீபீஷீனீ ணீ விவீபீஸீவீரீலீ) என்பதாகும். நாடு விடுதலையாகும் தருணத்தில் டெல்லி பட்டணத் திரைமறைவுகளில் என்னென்ன காரியங்கள் நடந்தன என்பதனை அந்தப் புத்தகம் விவரிக்கிறது. நாடு முழுமையும் பரபரப்பாக விற்பனையானது.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் வீரமணி பேசிய பின்னர் அம்மா பேசிக் கொண்டிருந்தார். சென்னையிலிருந்து தொலைப்பேசியில் வீரமணிக்கு அவசர அழைப்புகள் வந்தன. அதே சமயத்தில் கழகப் பிரமுகர்கள் வானொலிச் செய்தியை துண்டுச் சீட்டுகளில் எழுதி வீரமணியிடம் கொடுத்தனர்.
ஒரே செய்திதான். தி.மு.க. அரசை மத்திய அரசு தீண்டிவிட்டது என்பதுதான். அந்தச் செய்தியைப் பார்த்த அம்மா தொடர்ந்து பேசினார். கழக அரசு கலைக்கப்பட்டதுபற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. மீண்டும் நியாயம் வெல்லும்; நேர்மை நிலைநாட்டப்படும். உதயசூரியன் மீண்டும் உதிப்பான் என்று அம்மா உருக்கமாகப் பேசினார். கூட்டத்தில் பரிபூரண அமைதி.
தமிழகத்தில் அடுத்து என்ன நடைபெறுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் குடிகொண்டிருந்தது. ஏற்கெனவே டெல்லிச் சிம்மாசனத்திலிருந்த செங்கோல் களவு போய் சூட்டுக்கோல் நர்த்தனம் புரிந்துகொண்டிருந்தது.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு அம்மாவும், வீரமணியும் சென்னை திரும்பினர். நள்ளிரவில் சுதந்திரத்தைத் திருட்டுக் கொடுத்துவிட்ட சோகத்தில் சென்னை மாநகரம் மூழ்கியிருந்தது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தூக்கத்தையே காணாத அண்ணாசாலைகூட அன்று அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.
ஆனால், வேப்பேரிப் பகுதி தினத்தந்தி திருப்புமுனையிலிருந்து அய்யாவின் திடல் கடந்தும் ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. சாலையோரங்களில் காவலர்கள் கண் விழித்துக் காத்திருந்தனர். அம்மாவும், வீரமணியும் வந்த வாகனம் திடலுக்குள் நுழைந்தது. அவ்வளவுதான்.
போலீஸ் பட்டாளம் சுற்றி வளைத்தது; திடலுக்கு வெளியேயும் தமிழ் தெரியாத காவலர்கள், திடலுக்குள்ளும் நம் மொழி தெரியாத வட மாநிலக் காவலர்கள். ஏதோ மஞ்சு விரட்டுக் காளையை மடக்கிப் பிடிப்பவர்கள்போல் சுற்றி வளையமிட்டு வீரமணியை நெருங்கினர். அம்மாவை அவரது அறைக்கு அனுப்பிவிட்டு வீரமணி விடுதலை அலுவலகத்தில் நுழைந்தார்.
அவரைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் நுழைந்தனர். சென்னை மாநகரக் காவல்துறையின் துணை ஆணையரான (ஏ.சி.) பட் வீரமணிக்கு சற்று தூரத்தில் நின்றார்.
ஷிவீக்ஷீ ஷ்மீ லீணீஸ்மீ நீஷீனீமீ யீஷீக்ஷீ லீமீ ஸீஜீறீமீணீமீஸீ ழீஷீதீ.
அய்யா விரும்பத்தகாத காரியம் செய்ய வந்திருக்கிறோம் என்றார் பட்.
வீரமணியைக் கைது செய்யப் போகிறோம் என்பதனைத்தான் அவர் நாகரிகமாகவும் பணிவாகவும் கூறினார்.
அந்த நள்ளிரவில் காவல்துறையினர் கதவுகளைத் தட்டுகிறார்களென்றால், கல்யாணப் பத்திரிகை வைக்கவா வருவார்கள்?
மிஸ்டர் பட், நான் தயார்; நீங்கள் என்னைக் கைது செய்யலாம்; நீங்கள் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். அதற்காக நான் வருந்தவில்லை என்றார் வீரம் விளையும் மணி.
அவருடன் அம்மாவின் தம்பி தியாகராசன், விடுதலை நிருவாகி என்.எஸ். சம்பந்தம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களைக் கைது செய்ய ஏறத்தாழ 200 காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஒருவேளை அய்யாவின் தொண்டர்கள் பாயும் புலிகள் என்று அந்தக் கன்னடத்துக் காவல்துறை அதிகாரியிடம் யாரோ சொல்லியிருக்கக் கூடும். பொதுவாக அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோடுகிறவர்களை நடமாடும் தீப்பொறிகள் என்றுதானே உலகம் கருதுகிறது.
கைதுப் படலத்தை அம்மா கவனித்துக் கொண்டிருந்தார்.
வீரமணியும், மற்றவர்களும் வேனில் ஏற்றப்பட்டனர். அப்போது பின்னிரவு 2.30 மணி. மாநகரக் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். ஒரு ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர். சூழ்ந்து நின்ற அதிகாரிகள் அனைவருமே புதுமுகங்கள். அறிமுகமான ஒரு அதிகாரியைக்கூடக் காண முடியவில்லை. கைது பற்றி மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்த சிறைக் கொடுமைகளையும் தன் எழுத்தில் எழுத்தாளர் சோலை பதிவு செய்துள்ளார்.
– (நினைவுகள் நீளும்…)
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();