நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளியான நண்பர் ப.ஜீவகாருண்யன் – செய்யாறு வட்டம், வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பூத்த இலக்கியப் புதுமலர் – ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் – படைப்பாளி – புதிய கோணத்தில் சிந்திப்பவர்; புராணங்கள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டால்…? என்பதற்கு நல்ல விடையாக அவர் தந்ததே `கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்ற நூல். இந்நூலுக்கு திசை எட்டும் ஆசிரியர் குறிஞ்சிவேலனின் இந்த அணிந்துரை பல்வேறு தகவல்களின் களஞ்சியமாக உள்ளது – படித்துப் பயன் பெறுக.
– ஆசிரியர்
புராணங்களையும் இதிகாசங்களையும் மறு வாசிப்புக்கு உட்படுத்தி பல்வேறு மௌனங்களுக்கு விடை தேடும் முயற்சிகள் இன்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் நம் பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களாகக் கருதப்படும் மகாபாரதமும் இராமாயணமும் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு பல சோதனை முயற்சிகள் தொடர்கின்றன. பாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கிருஷ்ணனின் மகன்களில் ஒருவனான சாம்பன் பற்றிய நாவல் ஒன்று, வங்க மொழியில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு சாகித்ய அகாதமி விருதும் வேறு பல பரிசுகளும் கிடைத்துள்ளன.
மராத்தியில் ம்ருத்தியுஞ்செய என்னும் பெயரில் மகாபாரத நாவல் வெளிவந்துள்ளது. இது மகாபாரதத்தின் கர்ணனை முன்னிலைப்படுத்தி, அவனுடைய பார்வையில் மகாபாரதக் கதைப் போக்கு செல்கிறது. மிகவும் அற்புதமான பல புதிய கோணங்களைத் திறந்துவிடும் இந்த நாவலும் மராத்திய மொழியில் இலக்கிய உன்னத நிலையை அடைந்துள்ளது.
அதேபோல் யுகாந்தா என்னும் நாவலும் மராத்திய மொழியில் வெளியாகியுள்ளது. சூதர்கள் வாய்மொழியாகப் பாடித் திரிந்த மகாபாரதக் கதையை வியாசர் காப்பியமாக விரிவாக்கி அதில் பவனி வரும் பாத்திரங்களான காந்தாரி, குந்தி, திருதராட்டிரன், திரௌபதி, கிருஷ்ண வாசுதேவன் ஆகியோரின் எண்ணங்களாக விரிந்து செல்லும் இந்த நாவலை அய்ராவதி கார்வே நவீன முறையில் அமைத்து மறு சிந்தனைக்கு மக்களை அழைத்துச் செல்கிறார்.
இதே மராத்தி மொழியில் வி.ஸ.காண்டேகர் எழுதிய `யயாதி என்னும் நாவலும் அற்புதம் நிறைந்தது. யயாதியை ஒரு பெண் பித்தனாக முன்னிருத்தும் மகாபாரதத்தினின்றும் சற்று விலகி ஆழமாகச் சிந்திக்கும் காண்டேகர், பெருங்கவி காளிதாசனுடன் ஒத்துப் போய், அசுரக் குரு சுக்கிராச்சாரியின் மகளான தேவயானியை அக்கினியையும் அந்தணர்களையும், சாட்சியாகக் கொண்டு திருமணம் முடித்தாலும், அந்த தேவயானியோ யயாதிக்கு வழங்க வேண்டிய அன்பை வழங்க மறுத்து உதாசீனப்படுத்தியதால்தான் அவளின் பணிப் பெண்ணான சர்மிஷ்டையை யயாதி நெருங்க, அவளும் அந்த அன்பை மனமுவந்து வழங்குகிறாள் என்பதுபோல் மறுவாசிப்புக்கு நாவலை உட்படுத்தியுள்ளார்.
ஒரிய மொழியில், பிரதிபாராய் வடிவமைத்த யாக்ஞசேனியும் திரௌபதியின் பார்வையில் மகாபாரத இதிகாசத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறது. கிருஷ்ணனுக்கு திரௌபதி எழுதும் கடித வடிவில் இந்த நாவல் விரிந்து செல்கிறது. சொர்க்கத்துக்குப் பூத உடலுடன் நடந்து சென்றபோது கால் தடுமாறி விழுந்த திரௌபதி, இமயத்தின் பனிப்பாறைகளில் படுத்தவாறு மிகவும் உணர்ச்சிவயப்பட்டு தன் வாழ்க்கையில் நேர்ந்த ஒவ்வொரு கட்டத்தையும் பற்றி இதயக் குருதி பீறிட்டொழுகும்விதத்தில் கிருஷ்ணனுக்கு எழுதும் கடித வடிவ நாவல்தான் இது. பெண்மைக்கு எதிரான கடுமையான புதிர்களுக்கு எதிராகப் போராடும் பெண் சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமல்ல; உலகெங்கும் உள்ள மனித வர்க்கத்திற்காக பேசுகின்ற ஒரு புதுமை மனம்தான் திரௌபதியினுடையதாக இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ இந்த நாவலுக்கு ஞான பீட விருதும் கிடைத்துள்ளது.
சமகாலப் படைப்புகளிலேயே வங்காளிக்கு அடுத்து புதுமைகளைப் பெற்றிருக்கும் மலையாள மொழியில் எம்.டி. வாசுதேவன் நாயரின் ரண்டாமூழம், பி.கே. பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டெ என்னும் நாவல்களும் மகாபாரத இதிகாசத்தை மறு சிந்தனைக்கு உட்படுத்தும் படைப்புகளே.
பீமனின் பார்வையில் விரிந்து செல்லும் மகாபாரதம் அனைத்து வெற்றிகளுக்கும் தான் ஒருவன் காரணமாக இருந்தாலும் தன்னை எவ்வாறு தர்மன், கிருஷ்ணன், குந்தி, திரௌபதி, விதுரர் ஆகியோர் வஞ்சிக்கிறார்கள் என்பதைத் தோலுரித்துக்காட்டும் படைப்பாக ரண்டாமூழம் இருப்பதுடன், பாண்டவர்களின் பிறப்பிலுள்ள ரகசியங்களையும் அப்பட்டமாக விண்டுரைக்கிறது.
இனி ஞான் உறங்ஙட்டெ நாவலும் திரௌபதியின் குற்றவுணர்வின் வழியாக, தார்மீக ரோஷாக்னி மூலமாக பயணித்து ஒட்டுமொத்த பெண்ணினத்தின் துயரமாக உருவாகி, உலக வாழ்வின் யதார்த்தமாகவும் உள்மனச் சலனமாகவும் விரிந்து கர்ணனின் கதையைப் புதிய வடிவில் கூறுகிறது.
மகாபாரதப் பாத்திரங்களின் கதையை நான் எழுதவில்லை. மனித சமுதாயத்தின் பல்வேறு முகங்கள், உணர்வுகள், உறவுகள், முரண்கள் பற்றி பிரக்ஞை இந்த நாவலை எழுதி முடிக்கும்வரை இருந்தது. சிற்சில இடங்களில் ஒன்றிரண்டு புதிய பாத்திரங்களைச் சேர்க்கும்போது நாவலின் பரிணாமம் பெருகியது… என்று தன்னிலை விளக்கத்தை அளித்த எஸ்.எல்.பைரப்பா தமது பருவம் நாவலில் மனிதநேய மகாபாரதக் கதையைச் சொல்லியிருக்கிறார்.
எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் மகாபாரத காலத்திய மக்களைப் பேச வைக்கிறது. அரசர்களையும் அவர்களின் போர்களையும் அதிகம் தொடாமல் சாதாரணமானவர்களின் உள்மனப் போராட்டங்களையும் அவர்களின் வாழ்வியலையும் முழுமையாகப் பிரதிபலிக்கிறது.
இவ்வாறு மகாபாரதக் கதை பல இந்திய மொழிகளில் பலரின் மறு சிந்தனைகளில் புதிய கோணங்களில் உருவாக்கம் பெற்றது போல் நண்பர் ப. ஜீவகாருண்யனின் கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்னும் இந்தப் புதிய படைப்பைப் படிக்கும்போது நான் ஏற்கெனவே படித்திருந்த பன்மொழிப் படைப்புகளும் என் உள்மனச் சிந்தனைகளில் ஓடின.
ஜீவகாருண்யனின் இந்த நாவலும் கிருஷ்ணன் என்கிற ஒரு மானுடப் பிறவியின் இன்ப துன்பங்களை, அவனின் வாழ்க்கையில் நேர்ந்த வெற்றி தோல்விகளை, மானுடனாகப் பிறந்தாலே இறப்பும் உண்டு என்கிற யதார்த்தத்தை நீரோட்டமான, வாசகனை மிரட்டாத, தேங்க வைக்காத எளிதான மொழி நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மகாபாரதக் கதைதானே, பிற மொழியில் நாம் படிக்காத வேறு எதை இவர் புதுமையாகச் சொல்லப் போகிறார்? என்று நினைத்து இருபது முப்பது பக்கங்களைப் படிப்பதற்குள் நம்மை ஆவேசமாக உள்ளிழுத்துச் செல்கிறது நாவலின் உத்தி.
கிருஷ்ணனின் மாமன் கம்சனைப் பற்றி விவரிக்கும் உண்மை நம்மைத் திடுக்கிடச் செய்கிறது. … கம்சனுடன் பிறந்தவர்கள் நியகிரோதன், சுநாமன், கங்கன், சுபூமிபன், சங்கன், சுதனன், அநாதிருஷ்டன், புஷ்டிமான் என்று ஏழு ஆண்கள் கம்சா, கம்சவதி, சுதனூ, கங்கா, ராஷ்ட்ரபாலி ஆக அய்ந்து பெண்கள். இவர்கள் அனைவரும் உக்கிரசேனரின் குணத்தில், தோற்றத்தில் ஓரளவு குறை _ நிறை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் கம்சன் அப்படியில்லை.
காரணம், அவன் பிறப்பு அப்படி என்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள். திருமணம் முடிந்து சில ஆண்டுகள் வரையில் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்த கம்சனின் தாய், துராவுக்கு அருகிலுள்ள இந்திரகிரி காட்டுக்கு பொழுதுபோக்காக குதிரையில் சென்றாள். நெடு நெடு உயரமும் உயரத்திற்கேற்ற கனமான உடலும் கொண்டு ஓங்குதாங்காக இருந்த துருமீளன் என்ற காட்டு மனிதனுக்கு ஒரு மாலை நேரத்தில் வயப்பட்டவள் பன்னிரண்டு நாட்கள் இரவும் பகலும் அவனுடன் உல்லாசமாக இருந்து கம்சனைக் கருத்தரித்து அரண்மனை திரும்பினாள். தலைமகன் கம்சனையடுத்து மற்ற குழந்தைகள் அனைவரையும் உக்கிரசேனரின் வித்தாகப் பெற்றெடுத்தாள்.
ஒரு கொடூரக் குணமுடையவன் எங்கிருந்து உற்பத்தியானான் என்பதிலிருந்தே நாவலின் மூலம் நமக்குப் புலப்படாத பல தகவல்கள் கிடைக்கப் போகின்றன என்பதைச் சூசகமாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
கிருஷ்ணன் கோபியர்களிடம் செய்யும் குறும்புத்தனங்களும் அவன் ஒரு மானுடப் பிறவிதான் என்பதைப் புலப்படுத்தும் விதமாகவும் மானுடப் பிறவிக்கேயுரிய ஆசாபாசங்களை நிரூபிக்கும் வகையிலும் கீழ்வரும் சம்பவம் வாசகரைப் பரவசப்படுத்தும்.
ஆடையில்லாமல் நிர்வாணமாக நீரில் இறங்கியது தேவ குற்றம்! செய்துவிட்ட பாவத்திற்குப் பரிகாரமாக தலைக்கு மேலாக இரு கைகளையும் தூக்கி வணங்கி ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்றேன். சூட்சுமம் நிறைந்த எனது வார்த்தைகளில் பயந்துபோன பெண்கள், பார்ப்பவர்களைப் பித்தாக்கும் தங்களின் பிறப்புறுப்புகளை ஒரு கையால் மறைத்து, என்னை முறைத்து வணங்கும் பாவனையில் ஒரு கையைத் தலைக்கு மேலாக உயர்த்தி நின்றனர். நான் அவர்களை மீண்டும் பயமுறுத்தினேன்.
பெண்களே, ஒரு கையையுயர்த்துவது வணக்கம் ஆகாது. ஒற்றைக்கை வணக்கம் பாவத்திலும் பாவம் நிறைந்தது. முறையாக இரு கைகளையும் உயர்த்தி வணங்கி ஆடைகளை வாங்கிக் கொள்ளுங்கள்! என்று.
கிருஷ்ணனுக்கு சக்கராயுதம் கிடைத்தவிதம் பற்றி ஆசிரியர் அலசும் ஆராய்ச்சியும் அறிய வேண்டிய ஒன்றாக உள்ளது. கிருஷ்ணனின் இளம் வயதில் ப்ரவர்ஷன குன்றுக்குச் சென்றபோது அக்குன்றின் பூர்வகுடித் தலைவனின் மகள் மேல் மையல் கொள்ள, தலைவனின் மகளும் கிருஷ்ணனை விரும்பி ஏற்றுக் கொள்வதுடன், அந்த அன்பின் பரிசாக ஒரு அதிசய ஆயுதத்தை அளித்தாள். அந்த விசித்திர ஆயுதம் கண்ணெதிர் மிருகங்களைக் குறி தவறாமல் தாக்கி வீழ்த்துவதுடன் மீண்டும் எய்தவரிடமே வந்துசேரும் தன்மையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதையே ஒரு நளின வட்டத்தட்டாக வடிவம் மாற்றியது மட்டுமே கிருஷ்ணனின் யுக்தி என்கிறார் நாவலாசிரியர்.
ஓரிடத்தில் கிருஷ்ணனுக்கு அத்தை குந்தியின் நினைவு வந்தபோது, குந்தியின் உறுதியான சில முடிவுகள் அவனுக்குப் பயத்தையே ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அவளின் அந்த உறுதியான முடிவால் பெண்ணியத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்கொள்ளும் திறன் குந்தியிடம் உள் மனதில் ஆழமாகப் படிந்துள்ளதும் அவளின் வார்த்தைகளாக நாவலில் உலவவிட்டிருக்கும் ஆசிரியரின் எண்ணமும் வெளிப்படுகிறது.
… கிருஷ்ணா, ஆண்மையற்ற பாண்டுவுக்கு வாழ்க்கைப்படுவதற்கும் முன்பாகவே போஜனின் தேரோட்டியிடம் கர்ணனின் பிறப்புக்கு விளைநிலமாக எனதுடலை விரும்பிப் பலிகொடுத்த தொடர்ச்சியில் இன்றுவரை நான் பாவப் பட்டவளாக இருக்கிறேன் என்பது உண்மைதானென்றாலும் என்னிலும் அதிகம் பாவப்பட்டவளாக, கஷ்டப்படுபவளாக திரௌபதி இருக்கிறாள்! பெண்களின் கண்ணீர் கூரிய வாளினும் கொடியது என்பதை உணராதவனாக துரியோதனன் பாண்டவர் களுக்குத் தொல்லை கொடுக்கும் எண்ணத்தில் அறம் பிறழ்ந்து எனக்கும் திரௌபதிக்கும் அளவில்லா துன்பம் கொடுத்து விட்டான். திரௌபதிக் கெதிராக துரியோதனன் இழைத்திருக்கும் குற்றத்திற்குரிய தண்டனையை அந்தக் கொடியவன் யுத்தத்தின் வழியில் தவறாமல் அனுபவித்துத் தீர வேண்டும்! இழந்துவிட்ட ராஜ்யத்திற்கு மாற்றாக அய்ந்து கிராமங்கள் கேட்பது, சமாதானம் பேசுவது, தூது செல்வது இவையெல்லாம் முதுகெலும் பில்லாதவர்கள் செய்கின்ற காரியங்கள். சகுனி நடத்திய சூதாட்ட சூழ்ச்சியில் முதுகெலும்புகளை இழந்து நின்ற பாண்டவர்கள் பதின்மூன்றாண்டுகள் பட்ட சிரமங்களுக்குப் பிறகு இழந்திருந்த முதுகெலும்புகளைப் பெற்றுவிட்டார்கள்! என்ற எனது நம்பிக்கை பொய்த்துவிடக் கூடாது…
என்று கூறியபோது துரியோதனனுக்கு எதிராக குந்தியிடம் திரண்டிருந்த ஆவேசம் தெள்ளத் தெளிவாக நாவலில் வெளிப்படுகிறது.
யுத்த தர்மம் என்பதைக் கூட தெளிவாக ஓரிடத்தில் பீஷ்மர், கிருஷ்ணனின் வாய்மொழியாக விளக்குகிறார் நாவலாசிரியர்.
… யுத்தம் பகலில் மட்டும்தான் நடக்க வேண்டும். இருட்டிய பிறகு சங்குகளின் முழக்கத்துடன், சண்டையை நிறுத்தி, இரு அணிகளும் கூடாரங்களுக்குத் திரும்ப வேண்டும். காயப்பட்டு, களைத்து யுத்த பூமியிலிருந்து வெளியேறுபவர்களைக் கொல்லக்கூடாது. நால்வகைச் சேனையும் தமக்குரிய எதிர்ச் சேனையுடன் மட்டுமே மோத வேண்டும். எந்த வீரனோடும் குழுத் தலைவனோடும் துவந்த யுத்தம் செய்ய யாரும் அறைகூவல் விடுக்கலாம். அறைகூவலை ஏற்பவன் களத்தில் தயார் நிலையில் வந்து நின்ற பிறகுதான் அவனோடு அறைகூவல் செய்தவன் மோத வேண்டும். ஒருவருக்கொருவர் எதிரான போரில் மற்றவர் தலையிடக் கூடாது. சரணடைந்தவர்களை, புறமுதுகிட்டுத் தப்பியோடுபவர்களை, சிறைபிடிக்கப்பட்டவர்களை, ஆயுதமிழந்தவர்களை, சாரதிகளை, கவசமிழந்தவர்களை, வீரர்களுக்கு ஆயுதங்கள், உணவுகள் கொணர்ந்துதரும் பணியாளர்களைக் கொல்லக் கூடாது. சங்கு ஊதுபவர்கள், தாரை, தப்பட்டை முழக்குபவர்கள் மீது ஆயுதம் பிரயோகிக்கக் கூடாது…
கிருஷ்ணனை ஒரு மனிதனாக உருவாக்கி, இந்த நாவல் முழுவதும் ஒரு மானுடனுக்குரிய செயல்களைச் செய்ய வைத்து, மனிதனாகப் பிறந்தவனுக்கு இறப்பும் நிச்சயம் உண்டு என்னும் இயல்பான நிலையில் மகாபாரதக் கதையை அற்புதங்கள் இல்லா யதார்த்த நிகழ்வுகளைக் கொண்ட நாவலாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார் ஜீவகாருண்யன்.
அதுமட்டுமல்ல, கிருஷ்ணனின் இறுதி மூச்சு நிற்கும் நேரத்திலும் கூட மானுடருக்கேயுரிய பங்காளிப் பகையை நாவலாசிரியர் விளக்குகிறார்.
… குடும்ப உட்பகையின் காரணமாக என்றோ எனக்கு நேர் எதிரியாகியிருந்த தாயாதி ஜரா, பிரபாச தீர்த்த பெரும் பரப்பில் யாதவ இனம் வேரற்ற பெருமரமாக வீழ்ந்துவிட்ட கொடுமை குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல், கிருஷ்ணனைக் கொல்வதற்குச் சரியான சந்தர்ப்பம் வாய்த்தது என்னும் மகிழ்வுடன் மரம் ஒன்றின் பின்னால் மறைந்து நின்று தனது நெஞ்சுக்குள் கனன்றிருந்த நெடு நாட்களின் பகைமைக்கு இன்று பழி தீர்த்துக் கொண்ட விதம் என்னை ஆச்சரியப்படுத்திற்று. பாதி கணுக்கால் வரை கூர்மையுடன் துளைத்து நிற்கும் அம்பின் முனையில் நிச்சயம் ஏதோ கொடிய விஷம் தடவியிருக்க வேண்டும் என்பதை உணர்ச்சியற்று உறையும் உடலின் செயலிழப்பில் தெளிவாக உணர முடிந்தது. சகோதரன் ஜரா விருப்பமுடன் என் மீது செலுத்திய விஷ அம்பு தனக்கு விதிக்கப்பட்ட கடமையின் உறுதியில் வாசுதேவ கிருஷ்ணன் எனது உயிர்ப் பானத்தை ஆவலுடன் உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்துவிட்டது: என்ன காரணத்திற்காக எனக்கு இப்படியொரு மரணம்? என்னும் எண்ணத்தை மீறி மரணம் என்னளவில் இப்போது மிகுந்த மதிப்பிற்கும் நேசிப்பிற்கும் உரியதாகி விட்டது என்று முடிக்கும் கட்டத்திலும் மனிதனின் ஆசாபாசங்களை, பழிவாங்கும் பங்காளிப் பகையை விவரிக்கிறார் ஆசிரியர்.
நான் பல்வேறு மொழிகளில் பல்வேறு மறு வாசிப்புத் தன்மையுள்ள கதைகளைப் படித்தபோது, இப்படிப்பட்ட மறு வாசிப்புக்கேற்ற கலைப் படைப்பு தமிழில் இல்லையே! என்னும் வருத்தம் என் மனதில் பல ஆண்டுகளாக உழன்று கொண்டிருந்தது. அந்த வருத்தம் தற்போது ஜீவகாருண்யனின் கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்ற இந்த மாபெரும் இதிகாசப் படைப்பைப் படித்து முடித்தபோது கரைந்துவிட்டது என்பது மிகையற்ற உண்மை.
ப. ஜீவகாருண்யன் இந்த நாவலில் கையாண்டுள்ள, உத்தி, மொழி, வடிவமைப்பு போன்றவைகள் புதிய கோணத்தில் அமைந்துள்ளன; அதுமட்டுமல்லாமல், நாம் இதுவரையில் கேள்விப்படாத பல நிகழ்வுகளை இந்நாவலில் புதிய கோணத்தில் கோர்த்துள்ளார். மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றின் கலவைகள் நாவலில் ஒரு முழுப் பரிணாமம் பெற்று முழுமை பெற்றுள்ளன. அந்தவகையில் ஜீவகாருண்யன் இந்த இதிகாசத்தை ஒரு முற்போக்குச் சிந்தனைக்குக் கொண்டு சென்றுள்ளார் என்பதும் பாரதக் கதையை மறுவாசிப்புக்கு உட்படுத்தியுள்ளார் என்பதும் போற்றுதலுக்குரிய செயலாகும்.