இணைய தளம் – www.taluk.tn.nic.in
சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் தங்களின் பட்டா விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் இணையதளம். அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் அமைந்துள்ளது. இந்தத் தளத்துக்குச் சென்று, நிலப் பதிவேடு – நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்களைப் பார்வையிட என்னும் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு மாவட்டம், வட்டம், கிராமத்தைத் தேர்வு செய்து பட்டா எண், புல எண், புல உட்பிரிவு எண்களைத் தட்டச்சு செய்து சமர்ப்பித்து விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நூல்
நூல்: பூஜ்யத்தின் ராஜ்ஜியம்
ஆசிரியர்: பாண்டூ
வெளியீடு: கந்தகப்பூக்கள் பதிப்பகம்,
120, குட்டியணஞ்சான் தெரு,
சிவகாசி -_ 626 123
செல்பேசி: 98435 77110
பக்கங்கள்: 100 விலை: ரூ.100/_
பார்த்த _ அனுபவித்த _ கேட்ட கருத்துகளை மரபுக்கவிதை, புதுக்கவிதை, துளிப்பா என்ற வடிவங்களில் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.
சாமி(யார்?) என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வரியும் சிந்திக்க வேண்டியன. தலையாட்டினால் பக்தன்…/ கேள்வி கேட்டால் பித்தன்… / நல்லதென்றால் அவன் செயல்… / அல்லதென்றால் இவன் விதி… / என்று சாமியார்களின் இயல்பினைக் கூறி விடுபடும் வழிமுறையும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜாதி, பாலியல், ஒடுக்குமுறை, வருணம் போன்ற ஆதிக்கங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பி படிப்போர் மனதில் சமூக சிந்தனைக்கு வித்திடப்பட்டுள்ளது.
குறும்படம்
படிக்க வேண்டிய மாணவப் பருவத்தில் தனக்குப் பிடித்த நடிகரின் படம் வெளியாகும் அன்றே படத்தினைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.
தன் மனம் கவர்ந்த நாயகன் நடித்து வெளிவர இருக்கும் படத்தின் இரண்டு டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு, தான் கெடுவது மட்டுமன்றி, வகுப்பிலுள்ள பிற மாணவர்களின் கவனத்தையும் சிதறடிக்கிறான் மணி என்ற சிறுவன்.
வீட்டில் வைத்த டிக்கெட்டினைத் தேடும்போது அது காணாமல் போகிறது. சக நண்பனைச் சந்தேகப்படுகிறான் மணி. இருவரும் மோதிக்கொள்கின்றனர். இருவரின் தாயும் இவர்களுக்காகச் சண்டை போடுகின்றனர். டிக்கெட்டுகளை எடுத்தது யார்? பாதிக்கப்பட்ட சிறுவனின் மனம் மீண்டதா என்பதே படத்தின் இறுதிக் காட்சி.