பக்தி – தந்தை பெரியார்

ஆகஸ்ட் 16-31 - 2013

இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு, பேசும்போதும் “மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும்.

 

ஏன் என்றால் அந்தச் சொல்லை உண்டாக்கினவர்களே மக்களிடம் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தில்தான் உண்டாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அந்தச் சொல், அதாவது பக்தி என்கிற சொல் ஓர் அர்த்தமற்ற பொருளற்ற சொல்லேயாகும்.

விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் முதலாவது பக்தி என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல; வடமொழிச் சொல் ஆகும். அதற்குச் சரியான ஒரு தமிழ்ச் சொல்லே இல்லை. பக்தி என்னும் சொல்லுக்கு தமிழில்- அகராதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்கள் அன்பு – வழிபாடு – நம்பிக்கை என்ற சொற்கள்தாம்.

சாதாரணமாக ஒரு மனிதன் “பக்திமானாய் இருக்கிறான், “அவன் தெய்வநம்பிக்கை உடையவன் என்றால் அதற்கு அடையாளம் என்ன?

1. பட்டை நாமம்

2. விபூதிப்பட்டை

3. கழுத்தில் கொட்டை

4. வாயில் ராமா -ராமா, சிவா – சிவா என்பது.

5. எதற்கெடுத்தாலும் ஆண்டவன் செயல், பகவான் செயல் என்பது.

6. கோவில்களுக்குப் போவது

7. அங்கு போய் கண்ணை மூடிக்கொண்டு கையைக் கூப்பி நிற்பது.

8. அப்போது வாயால் எதையாவது முணுமுணுப்பது.

9. நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கும்பிடுவது.

10. மனதில் எதையாவது விரும்புவது.

11. கோவில் பார்ப்பான் எதையாவது கொடுத்தால் அதை வாங்கித் தலையில் கொட்டுவதும், வாயில் கொஞ்சம் போட்டுக் கொண்டு மீதியை உடலில் கொஞ்சம் தடவிக்கொள்வது.

12. பிறகு சாமி அறையைச் சுற்றுவது.

13. தேவாரம், பிரபந்தம், இராமாயணம், பாரதம் முதலிய நூல்களைச் சத்தமாய்ப் படிப்பது.

14. வீட்டில் பூசை அறை வைத்து பூசை செய்வது.

15. உற்சவங்களுக்குப் போவது.

16. ஸ்தல யாத்திரை செய்வது.

17. இவை முதலியவை மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களை சாமி என்று கூறி கண்டவுடன் கும்பிடுவது, அவனுக்குக் கண்டபடி அள்ளிக் கொடுப்பதுவரை செய்யும் காரியங்கள்தான் இன்று பக்தியாய் இருக்கின்றதே ஒழிய மற்றபடி மனிதனின் நல்ல எண்ணம், நாணயம், ஒழுக்கம், நேர்மை, இரக்கம், ஈவு முதலிய நல்லவற்றைக் கொண்டிருப்பதோ, மோசடி, துரோகம், பித்தலாட்டம், திருட்டு, புரட்டு, பொய், ஏமாற்றுதல் முதலிய தீர குணங்கள் இல்லாமல் இருப்பதோ ஒருநாளும் ஒருவரிடமும் பக்தியாய், தெய்வ நம்பிக்கையாய் இருப்பவர்களிடம் காண முடிவதில்லை. எனது 87 ஆண்டு வாழ்வில் மனிதர் என்பவர் எவரிடமும் காண முடியவே இல்லை. அது மாத்திரமல்லாமல், அவை இருக்கவேண்டும் என்கிற கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. இவற்றுக்கும், பக்திக்கும் சம்பந்தமும் இல்லை என்றுதான் முடிவு செய்யவேண்டும்.

இப்படிப்பட்ட பக்தி மனிதனுக்கு எதற்காக வேண்டும் என்றால், மனிதனை மடையனாக்கவும், அயோக்கியர்கள் எளிதில் அவனைச் சுரண்டவும் பயன்படுவதால் “மனிதனுக்குப் பக்தி அவசியமானது என்று பிரச்சாரம் செய்யவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஒரு யோக்கியன் பக்தி செய்யவில்லையானால், கடவுளை நம்பவில்லையானால் அவனுக்குத்தான் என்ன கேடு வரும்? மற்றவர்களுக்குத்தான் என்ன கேடு சம்பவிக்கும்? பொதுவாக மக்களுக்குப் பக்தி இல்லாவிட்டால் பார்ப்பானுக்கும், அயோக்கியர்களுக்கும் பிழைப்பு, வாழ்க்கை நடவாது.

பொதுவாக நாட்டில் பக்தி கொண்ட முட்டாள்களால்தான் இவ்விரு கூட்டம் வாழ்வதுடன், எல்லாவித கெட்ட குணங்களும் மக்களைப் பீடிக்க வசதி ஏற்படுகிறது. இதனால்தான் சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, கதாகாலட்சேப ஆச்சாரிகள் முதல் எந்தப் பார்ப்பனரும் எந்த சமயநூல் புராணங்களும் “பக்தியினால் அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலும் மனிதன் மோட்சமடைய முடியாது என்று தினமும் பேச்சுக்குப் பேச்சு மற்ற மக்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்கள்.

மற்றும் பக்தியினால் பாவம் தீரும் என்கின்ற சொல்லே மிக அயோக்கியத்தனமும், பித்தலாட்டமும் பெரும் கேடும் நிறைந்த சொல்லாகும். மற்றும் பக்தியும் வழிபாடும் பூசையும் வணக்கமும் பிரார்த்தனையும் “மனிதன் செய்த எப்படிப்பட்ட பாவத்தையும் தீர்க்குமே என்று கூறப்படுகிறதே ஒழிய, இவை பாவம் செய்யாமலிருக்கச் செய்யும் சக்தி, தன்மை அற்றதாகவே இருந்து வருகின்றன. நாட்டில் “மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டு செய்த எந்தக் காரியத்தாலும், எந்தக் கோவிலினாலும், எந்தக் குளம் தீர்த்தங்களாலும் மனிதனை “பாவ காரியங்கள் செய்யாமல் தடுக்கவே முடியவில்லையே!

ஆகையால் பக்தி, கடவுள் நம்பிக்கை என்பவை எல்லாம் பார்ப்பனர்களுடையவும், அயோக்கியர்களுடையவும் வஜ்ராயுதங்களேயாகும்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

(விடுதலை, 29.12.1965).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *