நாட்டு மக்களில் உச்சநிலை வறுமை யிலும், சமூகப் பாதுகாப்பு இல்லாமலும் வாழ்வோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இவர் களும் தங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்ளச் செய்வது நமது கடமை. ஒருசிலர் நீதி பெறுவதால் மட்டும் நீதி நிலைநாட்டப்பட்டு விடாது.
சமத்துவம், நீதி, விடுதலையை அளிப்பதற்கு சட்டப் பணிகள்தான் கருவிகளாக உள்ளன. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. கொத்தடிமைச் சட்டம் வந்து 30 ஆண்டுகள் மறைந்துவிட்டன. ஆனால் இன்னும் கொத்தடிமை நிலை ஒழிக்கப்படவில்லை என்பதுதான் வேதனை.
_ ராஜேஷ்குமார் அகர்வால், தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றம்
நூறு கோடி ரூபாய் கொடுத்து எம்.பி. பதவியைப் பெறுபவர்கள் ஏழை மக்களைப் பற்றிச் சிந்திப்பார்களா? ராஜ்யசபாவில் இருக்கும் எம்.பி.க்களில் பலர் கோடீஸ்வரர்கள். அவர்களுக்கு எம்.பி.யாவது ஒன்றும் கடினமானதல்ல. இந்தக் காலத்தில் கோடீஸ்வரர்களால்தான் ராஜ்யசபாவுக்குள் நுழைய முடியும். ஜனநாயகத்தில் பண ஆதிக்கம் அதிகரித்து விட்டதால் ஏழைகளின் குரல் மூழ்கடிக்கப்பட்டு விட்டது.
– பிரேந்தர் சிங், அரியானா மாநில காங்கிரஸ் எம்.பி.
படித்தவர்கள் மத்தியில்தான் இன்று மூட நம்பிக்கை அதிகம் இருக்கிறது. படித்த, நாகரிகமிக்க, பணம் படைத்தவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு பூஜை அறை உள்ளது. கிராமத்தில் கூரை வீட்டில் வசிப்பவர்கள், எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பூஜை அறை வைத்துக்கொள்ள மாட்டார்கள். காலண்டர் படங்கள்தான் அவர்களுக்கு சாமிகள். பணம் இல்லாதவர்கள் சாமி கும்பிடுவார்கள். அதோடு அதை மறந்தும்விடுவார்கள். அவர்களுடைய சாமிகள் வானம் பார்த்த சாமிகள். அந்த மனிதர்களைப் போலவே அந்தச் சாமிகளும் மழையில் நனையும் வெயிலில் காயும். பகலிலும் இரவிலும் அநாதையாக காட்டில் கிடக்கும். சில நேரம் சுருட்டும் சாராயமும் குடிக்கும். இதுதான் மக்கள் மரபு. ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை உண்டாக்கிய பணக்காரர்களுக்கு ஆண்ட பரம்பரை என்ற பெருமை தேவையாக இருக்கிறது. அதனுடைய விளைவுகளில் ஒன்றுதான் ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் வரன் தேடும் சுயம்வர நிகழ்வுகள். மற்றபடி ஜாதி இருக்கும்வரை பெரியாரின் கொள்கைகளும் இருக்கும். திராவிட இயக்கங்களும் இருக்கும்!
– எழுத்தாளர் இமையம்