’ஆடி’ப் போச்சு

ஆகஸ்ட் 01-15

ஆடி வெள்ளி, ஆடி விரதம், ஆடிப் பெருக்கு என ஆடி மாத மூடநம்பிக்கை விஷேசங்களைப் பட்டியலிட்டு ஆன்மீகப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதி தங்களின் பிழைப்பைத் தக்கவைக்க முயலுகின்றன. கோவில்களில் விசேடங்கள் என்ற பெயரில் பக்தர்களின் பணத்திற்குக் குறி வைக்கப்படுகிறது. கோவில் வாடிக்கையாளர்களான பக்த கோடிகள் நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் ஆடி மாத மகிமையைப் பேசத் தவறுவதில்லை.

ஆடி மாதம் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது; முகூர்த்தங்கள் கிடையாது; திருமணங்கள் ஆவணிக்குத் தள்ளிவைக்கப்படுகின்றன. சரி, இவர்கள் தங்களின் மத மூடநம்பிக்கையைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்னொரு புறம் என்ன நடக்கிறது? ஆடித் தள்ளுபடி சேலை கட்டிப் பறக்கிறது. ஆடிக் காத்து அதிர்ஷ்டக் காத்து ஆகிவிட்டது. நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மாள் துணிக்கடை விளம்பரம் ஒன்றில் `ஆடியிலே அடிக்குதடா அதிர்ஷ்டக் காத்து என்று பாடுகிறார்.

நாளிதழ்களைப் புரட்டினால் எல்லாப் பக்கங்களும் ஆடித் தள்ளுபடி விளம்பரங்கள்தான். இப்போது அதிலும் ஒரு படி மேலே போய் ஒரு நிறுவனம் `இது ஆடித் தள்ளுபடி அல்ல; ஆடி சேமிப்பு என்று தனது வணிகத்துக்குப் புது விளக்கம் அளிக்கிறது.

ஆடி மாதத்தில் துணிக்கடைக்கே செல்லாத நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கே இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆவணி மாதத் திருமணத்திற்குக்கூட ஆடி மாதம் சேலை, துணிகள் எடுக்கச் செல்லமாட்டார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். ஆடியில் திருமணப் பட்டு எடுக்கச் செல்லுகிறார்கள். ஏன் தெரியுமா? ஆடியில் 5 முதல் 50 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கிறதே! விடலாமா?

மத மூடநம்பிக்கை காரணமாக ஆடி மாதம் துணிக்கடைகள் காத்தாடின. அதனை முறியடித்து வணிகத்தைத் தூக்கி நிறுத்த துணிக்கடைகள் செய்த வணிக உத்திதான் தள்ளுபடி விற்பனை. அந்த உத்தி வெற்றிபெற்றுவிட்டது. மத நம்பிக்கையாளர்களை தங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிட்டனர் வணிகர்கள். பணத்தின் முன் நிற்கமுடியாமல் மத நம்பிக்கை ஓடி ஒளிந்துவிட்டது.

இப்போது அடுத்த கட்டம். ஆடியில் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுவது பன்னெடுங்கால வழமை. காரணம் கேட்டால் சொல்வார்கள் “ஆடியில் இணைந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; சித்திரை கடும் வெப்பம் வீசும் மாதம், அதனால் ஆடியில் இணைய வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்று சொல்வார்கள். இந்த வழக்கத்தையும் இன்னும் சில மூடநம்பிக்கையாளர்கள் பின்பற்றினாலும் முற்றிலும் கடைப்பிடிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் புதுமணத்தம்பதிகள் கணினித் துறையில் வேலை செய்கிறார்களே. ஒரே பகுதியில் அலுவலகங்கள் இருக்கும். ஒன்றாகத்தான் சென்றுவர வேண்டும். தனித்தனியாகவெல்லாம் இருக்க முடியாது. விடுமுறையெல்லாம் கொடுக்க மாட்டார்கள். பின் எப்படி ஆடி மாதப் பிரிவு? ஒரே வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம். ஆடி புதுமணத் தம்பதிகளைப் பிரித்தது ஒரு காலம். ஆனால், இன்று வாழ்க்கைச் சூழல் தம்பதிகளிடமிருந்து ஆடியைப் பிரித்து விட்டது. சென்ற ஆண்டு  ஒரு செல்பேசி நிறுவனம் ஆடி மாத புதுமணத் தம்பதிப் பிரிவை வைத்து ஒரு விளம்பரம் செய்திருந்தது. சினிமாத் தம்பதிகள் சினேகாவும் பிரசன்னாவும் நடித்திருக்கிறார்கள். ஆடி மாதம் பிரிந்திருப்பவர்கள் அந்த செல்போன் கடையில் சந்திக்கிறார்கள். இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்; முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். பின் தனித்தனியாகச் சென்றாலும் செல்பேசியில் தங்களின் ஆசையை, காதலை முத்தங்களின் வாயிலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆடியில் தனித்தனியாக இருந்தாலும் கால மாற்றம், வாழ்க்கைச் சூழல், அறிவியல் வளர்ச்சி புதுமணத் தம்பதிகளைப் பிரிக்க அனுமதிக்கவில்லை என்பதை இந்த விளம்பரம் உணர்த்துகிறது.

இன்னொரு விளம்பரம். அது ஒரு திருமணத் தகவல் நிறுவனம். ஆடி மாதம் என்பதற்காக மணமக்கள் தேடும் பணியை நிறுத்தவேண்டாம்; உடனே வாருங்கள் எங்கள் நிறுவனத்திற்கு என்று அந்நிறுவனம் அழைக்கிறது. அதையும் ஒரு வயதான மூதாட்டியை வைத்தே சொல்ல வைத்திருக்கிறது.

திருமணத் தகவல்கள் எல்லாம் இப்போது இணைய தளங்களிலேயே கிடைக்கின்றன. ஆடிமாதம் என்பதால் யாரும் இணையத்தைப் பார்க்காமல் இருப்பதில்லை. இணையத்தைத் துலாவும் போதே இணையரையும் தேடுகிறார்கள்.

காதல் திருமணங்கள் அதிகம் நடக்கத் தொடங்கியுள்ளன. ஆடி மாதம் என்பதால் காதலர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டு இருப்பதில்லை. முதல் பார்வையும் அதன் வழி காதலும் ஆடி மாதங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆடி மாதம் ஆணையும் பெண்ணையும் பிரித்தது ஏன் என்பதைப் பற்றி ஒரு தகவலை கரிசல் இலக்கியர் கி.ராஜநாராயணன் ஆடி அழைப்பு என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. ஆடியில் விதைப்பு நடக்கும். அக்காலகட்டத்தில் விதைப்புப் பணிக்காக விடிகாலை எழுந்து ஆண்கள் வயலுக்குச் செல்வார்கள். அதனால் முதல் நாள் இரவு விரைந்து உறங்க படுக்கைக்குச் சென்றுவிடுவார்கள். எனவே வீட்டில் மனைவி இருந்தால் இரவில் உறக்கம் கெடலாம் அல்லவா? உறக்கம் கெட்டால் விடிகாலை எழுந்திருக்க முடியாது. விதைப்புப் பணி கெட்டுவிடும். எனவேதான் பெண்களை அவர்களது தாய் வீட்டிற்கு அனுப்புவது அக்கால வழக்கமாக இருந்தது என்கிறார் கி. ராஜநாராயணன். வேளாண்மை மட்டுமே தொழிலாக இருந்த அந்தக் காலத்தில் ஆடிக்கு தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றது சரியாக இருந்திருக்கலாம். இன்றைய  காலத்தில் அது தேவையா? காலம் மாறிவிட்டது; வேலைகளும் மாறிவிட்டன; இந்த ஆடி மாத மூடநம்பிக்கை மாறவேண்டாமா?

அறிவால் உணர்ந்து மாற்றத்தை ஏற்கத் தயங்கும் சமூகத்தை அறிவியல் வளர்ச்சியும், காலத்தின் வேகமும் மாற்றிக்கொண்டிருக்கின்றன. மாறியவர்கள் உலகைப் புரிந்துகொண்டவர்கள் ஆவார்கள். வறட்டு மத மூடநம்பிக்கையால் மாறத் தயங்குபவர்களை காலம் விட்டுவிட்டுச் சென்றுவிடும்.

– அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *