’சமயம்’ பார்த்து நுழைந்த ஆரியம்

ஆகஸ்ட் 01-15

தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் _ ஆழ்வேராய் இருந்து உழைத்தவர் தேவநேயப் பாவாணர். தமிழ்மொழி, திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் இருந்துள்ளது என வாதிட்டவர். 40க்கும் மேற்பட்ட சொல்லியல்பு களைக் கற்று சிறப்பான முறையில் சொல்லாராய்ச்சி செய்துள்ளார். தமிழறிவினாலும், பன்மொழியியல் அறிவினாலும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டவர்.

தமிழ்மொழி கெட்டதற்குக் காரணமே சமயம்தான். ஏனெனில், சமயத்துறையில்தான் முதன்முதலில் ஆரியர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். வடமொழி தேவமொழி யென்றும், அதனை ஒலிமுறை பிறழாமல் ஓதும் ஆற்றல் பார்ப்பனருக்கு அதாவது பிராமணர்க்குத்தான் உண்டென்றும் கூறி, கோவில்களில் வழிபாடு செய்யும் அதிகாரத்தைத் தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டனர். இப்படிச் செய்தது கி.மு.1200 என்று சொல்லலாம்.

#####

பிராமணனை நாம் தமிழன் என்று ஏற்றுக் கொண்டாலும், அவன் அதை ஒத்துக்கொள்வதில்லையே! நம்மைவிட உயர்ந்தவன் _ மேலானவன் _ நம்மின் வேறானவன் என்றல்லவோ அவன் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறான், சொல்லி வருகிறான்!

ஆப்பிரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் எப்படி அந்த நாட்டுப் பழங்குடி மக்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று, தங்கள் நிறவெறி காரணமாகக் கூறிவந்தார்களோ, அப்படியேதான் இந்த நாட்டிற்கு வந்த ஆரியர்களும் _ இக்கால பிராமணர்களும் பூதேவர் என்றும் பூசுரர் என்றும் தங்களை உயர்வாகவே சொல்லிவந்தார்கள்; சொல்லி வருகிறார்கள். எனவே, இதை ஒருவகை நிறவெறிக்கொள்கை அதாவது (Brahman Aparthied) என்று சொல்லலாம்.

தொடக்கத்திலிருந்தே ஆரியர்கள் தங்களை மற்றவர்களிலிருந்து பிரித்துக்காட்டியே வந்துள்ளனர். மலையாளத்தில், அந்நாட்டுக் குடிமக்களான நாயர்கள் வாழும் வீடுகளுக்குக் கரை என்று பெயர்; ஆனால் பிராமணர்களின் இருப்பிடங்களுக்கு மட்டும் இல்லம் என்று பெயர். இவ்வாறே ஆரியர்கள் தங்கியிருந்த ஊர்களுக்கு நம்மை என்று பொருள் தருகின்ற மங்கலம் என்னும் சொல்லைக் கொண்ட சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களை அமைத்துக் கொண்டதோடன்றி, ஏனைய தமிழ் மக்களிடம் கலந்து பழகாமல், தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர்.

வீடு கட்டுதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறும் மனை நூலிலும்கூட, பிராமணர்களுக்கு உளுக்காத _ உறுதியான மரங்களும்; மற்றவர்களுக்கு எளிதில் உளுத்துப்போகக் கூடிய மற்ற மர வகைகளும், சொல்லப்படுகின்றன. அவ்வளவு ஏன்? செய்யுட்களில் சிறந்ததான _ வெண்பா பிராமணர்க்கு உரியது; ஏனைய செய்யுட்கள் மற்றவர்க்கு உரியன என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றனவே! இதுமட்டும் அன்று; தமிழர் குழுவிலே மிகவும் சிறந்தவராக _ உயர்ந்தவராகக் கருதப் பெற்ற முனிவர்களைக் குறிக்கும் அந்தணர் என்ற பெயரையும் நாளடைவில் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டார்கள்.

இதைக் கேட்கும்போது, ஆரியர்கள் எப்படி இத்தகைய தமிழ்ப் பெயர்களைத் தாங்கினர் என்ற அய்யம் உங்களுக்கு எழலாம். ஆனால், இந்த அய்யம் தேவையற்றது. ஏனெனில், தொடக்க காலத்தில் _ அஃதாவது கடைக்கழகக்காலம் வரையில்கூட _ ஆரியர்கள் தூய தமிழ்ப் பெயர்களையே தாங்கியிருந்தனர். ஒருசிலர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். காலப்போக்கில்தான் அவர்கள் படிப்படியாகத் தமிழில் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர்; தமிழரிடையே வடவரின் கதைகளைப் பரப்பினர். சமயம் பார்த்து, மிக்க திறமையோடு இவற்றை அவர்கள் செய்து வந்துள்ளனர். முதன் முதலில் அவர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தியது, முன்னமே நான் கூறியபடி, சமயத்துறையில்தான். ஆனால், ஆரியத்தால் தமிழன் கெடுகிறான்.

ஆரியர்கள் தமிழரை எவ்வழியில் வெல்லலாம் என்று எண்ணிப் பார்த்தார்கள்.  ‘Vulnerable Poison’ என்பார்களே அதைப்போல, சமயத்துறையில் தலையிட்டால்தான், தமிழரை எளிதில் வெல்லலாம் என்று கண்டுகொண்டார்கள். தமிழருக்கு இயல்பாய் அமைந்த பழங்குடிப் பேதைமை, சமயப்பித்து (Religious fanaticism) கொடைமடம் (Indiscriminate munificence) ஆகிய தன்மைகளைத் தங்கள் முன்னேற்றத்திற்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

முதலில் அரசர்களைச் சார்ந்து, அவர்களை வயப்படுத்தினர். பின்னர் அவர்கள் உதவியால் படிப்படியாகப் பொதுமக்களை வயப்படுத்தினர். இவ்வாறாக, முதலில் சமயத்துறையில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி, பிறகு அரசியலிலும் காலூன்றத் தொடங்கினர்.

ஆனால், இந்தச் சமயங்களில் எல்லாம் தமிழ்ப்புலவர்கள் வாளா இருந்துவிடவில்லை. அவ்வப்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தே இருக்கிறார்கள். ஆரியர் வருகையால் தமிழர்க்கு நேர்ந்த தீமைகளைக் கண்டு அஞ்சியே திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

என்றாலும், பொதுவாகத் தமிழர்கள் ஆரியர்களைத் தங்கள் பகைவராக என்றுமே கருதியதில்லை. அவர்கள் இந்த நாட்டிற்கு வந்த காலந்தொட்டு அவர்களைத் தங்கள் உடன்பிறந்தவர்களைப் போல அன்பாகவே நடத்தி வந்திருக்கின்றனர்.  அவர்களை அயலாராக எண்ணி வெறுக்கவோ, விலக்கவோ இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மையுடனேயே பழகி வந்துள்ளனர். இருந்தும்கூட, பிராமணர்கள் அவர்களைத் தங்களைச் சார்ந்தோராகக் கருதாமல் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளனர். இதனாலேயே நாம் அவர்களைத் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும்கூட, எல்லாவகையிலும் தமிழின் சிறப்பை ஒழிக்க நினைக்கும் அவர்கள் இயல்பும், புறம் நட்டு அகம் வேர்க்கும் நச்சுத் தன்மையும் அவர்களை இன்னாரென்று நமக்கு எளிதில் புலப்படுத்தி விடுகின்றன! இஃது ஒருபுறம் இருக்க, மேனாட்டார் தமிழின் மேன்மையையும் தமிழரின் பழைய பெருமையையும் உணரமுடியாமல் இருப்பதற்கு, இன்றைய தமிழரின் தாழ்ந்த நிலையும் ஒரு காரணம் ஆகும். இவர்களைக் காணும் ஆங்கிலேயர்கள், இத்தகையவர்களின் முன்னோர்கள் எப்படிச் சிறந்த நாகரிகம் உடையவர்களாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று அய்யுறு நிலையில் இருந்த ஆப்பிரிக்கர்கள் உயர்ந்துள்ள அளவிற்குக்கூட நம் தமிழர்கள் உயரவில்லை எனலாம். இதற்குக் காரணம் ஆரியப் பார்ப்பனர்களே யாவர். இவர்கள் தமிழர்களின் உள்ளத்திலிருந்து பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய மாந்தன் வளர்ச்சிக்கு இன்றியமையாத மூன்று இயல்புகளையும் அறவே அகற்றி விட்டனர். இறைவனையும் விதியையும் காரணமாகக்காட்டி, தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடை செய்துவிட்டனர்.

இதனாலேயே தமிழர்களிற் சிலர் பிராமணர்களை அறவே வெறுக்க முற்பட்டு, அவர்களுடைய உணவுக்கடைகளையும் புறக்கணித்து வருகின்றனர். சித்த மருத்துவர் தகடூர் செல்லையா அவர்கள், எவ்வளவுதான் பசிக்கொடுமையால் வாடினாலும், பிராமணர்களின் உணவுக் கடைக்குப் போகவே மாட்டார். அது மட்டுமன்று; பிராமணர்களுக்கு மருத்துவம் செய்யவும் மறுத்துவிடுவார். இத்தகைய நெஞ்சுரம் எல்லாத் தமிழர்களுக்கும் வேண்டும்.

சிறிது ஆழ்ந்து நோக்குவோமானால், உண்மையில் பிராமணர்கள் நம்மைவிட எந்த வகையிலும் உயர்ந்தவர் அல்லர் என அறியலாம். எடுத்துக்காட்டாக, ஒன்று சொல்கிறேன். பிராமணர் தங்களை மற்ற குலத்தாரைவிட உயர்ந்தவராகக் கருதிக்கொண்டு மற்ற இனத்தாரிடம் எதுவும் வாங்கி உண்ணமாட்டார்கள்| தமிழரில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சைவ வேளாளர்கள் பொற்கலத்தில் ஏதேனும் உணவுவகையிட்டுக் கொடுப்பினும் வாங்க மறுத்துவிடுவர். ஆனால், அவர்களே வேளாளரினும் தாழ்ந்தவராகக் கருதப்பட்டுவந்த இடையப் பெண்கள் பழைய மட்கலத்தில் கொண்டுவந்த மோரை வாங்கி வானமிழ்தம் என்று கூறி, மகிழ்ச்சியாகக் குடிக்கின்றனர். இந்த முரண்பாட்டை என்னவென்று சொல்லுவது!

இப்படியெல்லாம் இருந்தும், பிராமணர்கள் தங்களை மேற்குலத்தாரென்று சொல்லிக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களைத் தாழ்த்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழர்களின் ஏமாறும் தன்மையேயன்றி, வேறன்று. எட்டினால் முடி; எட்டாவிட்டால் அடி _ இதுதான் பிராமணர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்.

இங்குள்ள பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் செல்வதில்லையென்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், வடநாட்டுப் பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் சென்று, புலாலுணவு நீக்கி மரக்கறி உணவுமட்டும் உட்கொண்டு மீளுவர். தமிழ்நாட்டிலும்கூட, பிராமணர்கள் தங்கள் உணவுக் கடைகளில் எல்லாக் குலத்தாரையும், இனத்தாரையும் ஏற்றுக்கொள்கின்றனர், வாணிகம் என்ற முறையில். ஆனால் வீட்டில் மட்டும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் _ பல்கலைக்கழகக் கண்காணகராக இருந்தாலும், பேராசிரியராக இருந்தாலும், அவ்வளவு ஏன் _ இந்தியக் குடியரசின் தலைவராக இருந்தாலும்கூட, ஒரு சிலரை ஏற்பதில்லை. இந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது!

இதற்கெல்லாம் காரணம் நமது பகுத்தறிவின்மையே. இவ்வாறு நாம் ஆரியருக்கு அடிமைப்பட்டிருப்பதால்தான். ஆங்கிலேயர்கள் நம்மை, உயர்ந்ததொரு நாகரிகத்துக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் _ ஆரியர் வருவதற்கு முன்னமே சிறந்த பண்பாட்டோடு விளங்கியவர்கள் என்று ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றார்கள்; மறுக்கின்றார்கள்.

நூல்: மொழிச் சிந்தனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *