கார்ல் எட்வர்டு சாகன் (1934-_1996) ஒரு அமெரிக்க வானவியலாளர். வானவியல் இயற்பியலாளர், நூல் ஆசிரியர், அறிவியல் பரப்புநர்; வானவியல் மற்றும் இயற்கை அறிவியல் செய்திகள் அறிவிப்பாளர்.
அறிவியல் ஆய்வுப் பகுப்பையும்(?) அறிவியல் முறைகளையும் வெளிநிலை உயிரியல் ஆய்வு முன்னோடியாகவும், வெளிக்கோள் உயிரின அறிவைத் தேடுபவராகவும் இருந்துள்ளார். சாகன் அவரது வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்களாலும் அண்டவெளி (Cosmos) என்று 1980களில் வந்த தொலைக்காட்சித் தொடராலும் தனிப்பட்ட பயணம் (Personal Voyage) என்ற நூலின் இணை ஆசிரியராகவும் தொடர்பு (Contact) என்ற புதினத்தின் ஆசிரியராகவும் நன்கு அறியப்பட்டுள்ளார். (இந்த நாவல் 1997இல் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது).
கார்ல் சாகன் நியூயார்க்கில் உள்ள ப்ருக்ளினில் பிறந்தார். அவரது தந்தை சாமுவேல் சாகன் (இன்றைய உக்ரேன்) ரஷ்யாவிலிருந்து வந்து குடியேறிய ஒரு ஆடைஅகப் பணியாளர். அவரது தாய் ராட்சேல் மோலி க்ரூபர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி. தனது சிந்தனை ஊக்கத்திற்கு குடும்பத்தின் தாக்கமே காரணம் என்று சாகன் கூறியுள்ளார்.
அவர்கள் அறிவியலாளர்கள் அல்லர்; அதைப்பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அறிவியல் முறைக்கு நடுமையான இரண்டு முரண்பட்ட கருத்துகளை ஒன்றுபடுத்திச் சமன் செய்யும் வழிகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
நியூஜெர்சி ரஹ்வே உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ரயர்சன் வானவெளி இயல் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1954இல் இளங்கலை அறிவியல் பட்டமும், 1955இல் இயற்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1960இல் வானவியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
சாகன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் 1968 வரை பணியாற்றியுள்ளார். பிறகு நியூயார்க் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1971 முதல் 1981 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கே 1972 முதல் 1981 வரை அவர் கோள்கள்பற்றிய ஆய்வுச் சாலையை அமைத்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் சாகன் ரேடியோ இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வு மய்யத்தின் கூட்டு டைரக்டராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
விண்வெளித் திட்டப் பணிகளில் ஆரம்ப முதலே சாகன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அவர் நாசாவின் ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். நிலவிற்குப் போவதற்கு முன்பு அப்பல்லோ விண்வெளி வீரர்களுக்கு விளக்க உரை கொடுப்பதும், அவருக்கு அங்குள்ள பணிகளில் ஒன்று. சூரிய அமைப்பு முறையை ஆய்வு செய்வதற்கான ரோபோக்கள் செயல்படும் விண்கலத்தின் பயணங்களுக்காகவும் சாகன் கருத்துதவி புரிந்துள்ளார். அதற்காகப் பல பயணங்களின்போது பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். சூரிய அமைப்பை விட்டுப் புறப்படும் விண்கலம், மாற்ற முடியாத ஒரு உலகப் பொதுவான செய்தியை அங்கேயே விட்டுவரும் ஒரு கருத்தை உருவாக்கிய அவர், அதன்மூலம் வெளிக்கோள் உயிர்கள் அதனைப் பார்த்துப் புரிந்துகொள்ளக் கூடும் என்று கருதினார்.