கேள்வி : மனிதன் நிலாவிலேயே கால் வைத்துவிட்ட காலத்திலும், கோவில் கருவறைக்குள் கால் வைக்கக் கூடாது என பார்ப்பனர் கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– நெய்வேலி க. தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : அது பழசு; ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க் கோளுக்கு விண்கலத்தை இந்தியா அனுப்ப இருக்கிறது. ஏற்கெனவே செவ்வாய்க் கிரகத்தில் அமெரிக்கர்கள் ஆய்வுசெய்து, மனிதர்கள் வாழும் அளவுக்கு நீரும் உயிர்க்காற்றும் உள்ளனவென்று கண்டறிந்துள்ளனரே! அப்படியிருந்தும் கோவில் கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைய முடியவில்லை. இது நமது முட்டாள் தன்மையையும் இழிதகைமையையும், பார்ப்பனப் புரட்டின் உச்சத்தையும் அல்லவா காட்டுகிறது!
கேள்வி : இனிவரும் காலங்களில் எந்த அரசுத் துறையாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், நீதிமன்றங்களாக இருந்தாலும் காலங்கடந்து செய்வதையே கையாளுவார்கள் என்பது நடைமுறையாகிவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்நிலை மாறுமா? தங்களின் பதில்…
– பெ. கூத்தன், சிங்கிபுரம்
பதில் : எல்லாம் தானாக மாறும் என்று சொல்வது பழைய பொய்யடா என்ற பட்டுக்கோட்டையாரின் உயிர்த்துடிப்பு மிகுந்த பாடல் வரிகள்தான் தங்கள் கேள்விக்குப் பதில். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் _ தெரியாதா? மக்களின் உணர்வு தூண்டப்பட்டால் நொடியில் மாறுமே!
கேள்வி : இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம், குஜராத் முதல்வர் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் கரும்புள்ளி எனக் கூறலாமா?
– ஜி. சரஸ்வதி, ஆவூர்
பதில் : எல்லாப் புள்ளிகளையும் மறைக்க பூணூல் புள்ளிகளின் ஏடுகள் நாட்டில் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடும்!
கேள்வி : வரலாறு காணாத மழை வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் மற்றவர்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டாலும் ஈஸ்வரனுடைய கோவிலுக்கு எந்தச் சேதமும் ஏற்படாதது அவரது பெருமையையும் சக்தியையும் எடுத்துக் காட்டுகிறது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மடாதிபதி ஒருவர் கூறியுள்ளாரே?
– கு. செல்வம், அம்மாபாளையம்
பதில் : கடவுள் மக்களின் உண்மையான தந்தையாக இருப்பான் என்றால் இப்படி பல்லாயிரக்கணக்கான தனது பிள்ளைகளைச் சாகடித்துவிட்டு தன்னைமட்டும் காப்பாற்றிக் கொள்ளுவானா? சிந்தியுங்கள்!
கேள்வி : ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை நேரடியாகவே முழுமையாக இயக்க ஆரம்பித்துவிட்டது போல் தெரிகிறதே? – கே. குமரன், புதுப்பேட்டை
பதில் : முழுக்க நனைந்தபின் முக்காடு ஏதுக்கடி குதம்பாய் என்ற குதம்பைச் சித்தர் பாட்டில் உள்ள வரிகளை உணர்ந்துவிட்டனர் போலும். (பா.ஜ.க., ஆர்.எஸ்.எ.ஸ். பரிவாரங்கள்)
கேள்வி : வழிபாடு, தானம், தவம் ஆகிய நற்செயல்கள் மனித வாழ்க்கையை உயர்த்தும் என்று பகவத் கீதை 18 : 5இல் கூறப்படுவது பற்றி…
– ப. நாகராஜன், மாராச்சேரி
பதில் : அப்படியானால் இந்தியாவில் உள்ள 87 விழுக்காடு இந்து மக்களின் வாழ்க்கைத்தரம் முன்பே உயர்ந்து நம் நாடு அல்லவா NO 1 நாடாக இருந்திருக்க வேண்டும்? அப்படி இல்லையே. 100 சதவிகிதம் பிச்சை – திருவோடு ஏந்திக் கேட்கும் நாடாகி ஞானபூமி இருக்கலாமா?
கேள்வி : அர்ச்சகர் தொழிலுக்குப் பயிற்சிப் பள்ளி அமைத்துக் கொடுத்தது போல சலவைத் தொழில், சவரத் தொழில் இதுபோன்ற தொழிலுக்கும் அரசு பயிற்சிப் பள்ளி அமைத்துக் கொடுத்தால் நன்றாகவும் நன்மையாகவும் இருக்குமே?
– வி. வெற்றிவேல், வந்தவாசி
பதில் : அதுவும் நல்ல யோசனைதான், பிறகு ஜாதி அடிப்படை ஒழியுமே! இப்போதே அது நடைமுறையில் மற்ற நாடுகளில் உள்ளன.
கேள்வி : இங்கும் மெல்ல மெல்ல நுழைகிறதே! உத்திரப்பிரதேசத்தில் ஜாதி அரசியல் பேரணிக்குத் தடை செய்யப்பட்டதைப் போல, தமிழ்நாட்டிலும் ஜாதிச் சங்கங்களைத் தடைசெய்ய முடியுமா?
– எஸ். அருள்வளவன், சிங்கம்புணரி
பதில் : ஜாதிச் சங்கங்களைத் தடை செய்வதற்குப் பதில், பெரியார் அய்யா கூறியபடி 17ஆவது பிரிவில் _ தீண்டாமைக்குப் பதில் ஜாதி என்ற சொல்லைப் போட்டால் ஜாதியே சட்ட விரோதமாகிவிடுமே? சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிடுமே! மத்திய அரசு சிந்திக்கட்டும்.
கேள்வி : ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர் களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் சமூகப் பாதுகாப்பு அளிக்க அரசு என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்? – மு.சுகன்யா, ப.குமாரபாளையம்
பதில் : 1. போதிய பாதுகாப்பு _ உயிருக்கு. 2. வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு. 3. பொருளாதார (வங்கிக் கடன் முதலீடு போன்ற) உதவித் திட்டங்கள். இவை பெரும் அளவில் பயன் தருமே!
கேள்வி : மக்கா, ஜெருசலேம், மானசரோவர் ஆகிய மத நம்பிக்கையாளர்களுக்கான பயணங்களுக்கு நிதி உதவி அளிக்கும் தமிழ்நாடு அரசு பகுத்தறிவாளர்களின் அறிவியல் பயணங்களுக்குச் சலுகை அளிக்கக் கோருவீர்களா? இது தொடர்பாக சட்டரீதியாக வழக்குத் தொடர வாய்ப்பு உண்டா?
– ப.மலர்விழி, திண்டுக்கல்
பதில் : நல்ல யோசனை; நிச்சயம் தீர்மானம் போட்டு, மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தலாம்!