புதுப்பாக்கள்

மார்ச் 16-31

எதிர்காலம்

கைரேகை பார்த்து…
எதிர்காலத்தைக்
கணிக்காதே!…..
ஏனெனில்,
கையில்லா …
மாற்றுத் திறனாளிக்கும்…
உண்டு, எதிர்காலம்!!…

– நெய்வேலி.க.தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

குடமுழுக்கு

கருடனொன்று வருமென்று
பெருங்கூட்டம் கூடிநிற்க,
ஓதுவாரும் உடன்வந்த
தூதுவரும் காத்திருக்க,
பத்துப்பவுன் சங்கிலியைக்
கொத்தாகப் பறிகொடுத்த
பெண்ணொருத்தி கதறியழ
கண்ணிலந்தக் கருடனையும் கன்னமிட்ட திருடனையும்
என்ன தேடியும் காணாமல்
ஒருவழியாய் முடிந்ததுவே
திருக்கோயில் குடமுழுக்கு!

– க.இளஞ்செழியன்
பேராவூரணி

தருமமிகு….

அய்ம்பது லட்சம் செலவில்
ஆலய கோபுரம்
துவஜ ஸ்தம்பம்
பொன்தகடு வேயும் விழா
இலட்சோபலட்சமாய்
பக்தகோடிகள்
கண்டுகளிப்பு
கோயில் வாசலில்
அய்ம்பதுபைசாகூட விழாத
அலுமினியத் தட்டுகளின் ஓசை
ஆலயமணியாய்….

– கே.பி.பத்மநாபன்
கோவை

விளைந்த பட்டதாரிகள்!

கல்லாமைத் தமிழ்நிலம்
காமராசர் விதைத்த கல்வி
விளைந்த பட்டதாரிகள்!
மனப்பாடக் கல்வி
மந்திரம் ஜெபித்தல்
சிந்தனைக்குப் பூட்டு!
காலில் பட்டவுடன்
கழுவினான் சாணியை
வந்தது புத்தி!
சாணிப் பிள்ளையார்
சாஷ்டாங்கமாய் விழுந்தான்
வந்தது பக்தி!
சிங்கள தேவதை
தமிழன் நரபலி
இந்தியப் பூசாரி!
திருப்பதி சென்று
திரும்பியவன் வீட்டில் திருடன் கைவரிசை!
ஆடுவெட்டிப்
படையல் போட்டான்
சாப்பிடாத சாமிக்கு!
கட்டித் தழுவும் அயல்நாட்டுக்காரன்
எட்டிப்போகும் எதிர்வீட்டுக்காரன் தீண்டாமை!

– கு.நா.இராமண்ணா,
சீர்காழி

சபரிமலை

மகரஜோதி
அமரனாக்கியது பக்தனை
இருமுடி கட்டியவன்
முடிதலை நெறித்தது
சபரிமலை
விலக்கு ஆகாதவனாம்
விலக்கி வைப்போம்
அறிவின் துணைகொண்டு!
நெருப்பைச் செரித்த கருப்பு
அறிவுச்சுடர் கொளுத்தியது
அய்யாவின் வழியில்

– கலைபாரதி, சித்தமல்லி


செங்காத்துப் பூமி….

காந்திசிலை கழுவி
மாலையிட வரும் கைகளில்
மதுவாடை
மழைவாசனையில்
மலர்ந்து கிடக்கு
விறுபிளந்த நிலம்
குடங்கள் நிறைய பால்
குடிக்கவில்லை
கொலைகார சாமி
எடைக்கு எடை தங்கம் வெள்ளி மகிழ்ச்சிக் குதூகலத்தில்
காவி கட்டிய துறவி
இரவில்தான்
திருடு போகிறது
சூரியன்
மேல்ஜாதித் தெருக்களில்
மீசை முறுக்கிச் செல்கிறது
சேரி வீட்டுப் பூனை

அறுவடைக்குத்
தயாராய் தெருக்களில்
தீண்டாமை
உருள்கின்றன,
பட்டினிப் பானைகள்
செங்காத்துப் பூமியில்

– கவிஞர் வாலிதாசன்
முகவை


மரணம் எதுக்கப்பா?

ஒரு மண்டலம் விரதமிருந்து
சபரிமலைக்குச் செல்ல
ஆயத்தமானான் பக்தன்
தினமும் அதிகாலையில்
பக்கத்து வீட்டுக்காரர்களின்
தூக்கத்தைக் கெடுக்கும் வகையில்
சாமியேய்! சரணம் அய்யப்பா!
இறைவனின் ஒளி வடிவமென்று நம்பப்படும்
மகரஜோதியைக் கண்டு
இறைவனோடு ஒன்றாகலாமென்று
கிளம்பியவன் இறுதியில்
புல்மேட்டு விபத்தில் நூற்றிப் பதினைந்து சடலங்களில்
ஒன்றாகிப் போனான்
சாமியேய்! மரணம் எதுக்கப்பா!

– திவ்யா செல்லப்பா
விருதுநகர்


வா இந்த்ப்பக்கம்

கிறித்தவத்
திருமணத்தில்
நேரம்
வீணாகிறது இஸ்லாமியத்
திருமணத்தில்
பணம்
வீணாகிறது
இந்துத் திருமணத்தில்
நேரம், பணம்,
வீணாவதுடன்
தேவையற்ற
சடங்குகளும்
கூடுகிறது; இழிவையும் சுமத்துகிறது;
சுயமரியாதைத்
திருமணம்தான்
மேலே சொன்னயாவும் இன்றி
சுகவாழ்வு வாழ
வழிகாட்டுகிறது!
தமிழா இனி நீ
என்ன
செய்யவேண்டும்?
வா…
இந்தப்பக்கம்!!

– கல்மடுகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *