அந்தக் காலத்திலே நடந்தது
– கவிஞர் தமிழ்ஒளி
மரபுக்கவிதைகளில் முத்திரை பதித்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் தன் வழிகாட்டி எனப் புகழப்பட்டவர். காவியங்கள், தனிக்கதைகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல், வரலாறு மற்றும் நாடகங்கள் என தன் புலமைக்குப் பல வடிவங்களைத் தந்தவர். எந்த நிலையிலும் சமரசத்துக்காட்படாத தன்மானக் கவிஞர். திராவிட இயக்க இலக்கியவாதியாக மிளிர்ந்து, பொதுவுடைமையில் மலர்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரது தனித்துவமான படைப்பிலிருந்து…
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்த னோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
ஒல்குபசி யுழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்…
(சிறுபாணாற்றுப்படை) நீண்ட நாட்களாக நெருப்பின் பரிசமே படாமற்போனதால் காளான்பூத்த அடுப்பு; பழைய சுவர்களில் செல் படர்ந்து அகப்பை முதலியவைகளை அரித்துத் தின்கிறது; சாம்பற் புழுதி நிறைந்த அடுப்பில் _ புனிற்று (குட்டிபோட்ட) நாய் தூங்குகிறது பட்டினியால், நாய்க்கும் பால் வற்றி விட்டது. இதெல்லாம் குட்டிகளுக்குத் தெரியுமா? அவைகளின் பசி சும்மா இருக்கவிடவில்லை. தாயின் முலைக் காம்புகளை மூலைக்கொன்றாகப்பற்றி உறிஞ்சி யிழுக்கின்றன. என்ன இருக்கிறது? பசியால் சுருண்டு விழி திறவாது கிடக்கும் நாய் இந்த வேதனையைத் தாங்காமல் வள் வள்ளென்று குரைக்கிறது. இத்தகைய நிலையில் அவ்வடுக்களை நமக்குத் தோற்றமளிக்கிறது.
இப்படிப்பட்ட காட்சிகளை நாம் நெடு நாட்களுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் கண்டு வருகிறோம். எல்லோரும் இல்லாமையின்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்ததாகச் சொல்லவே முடியாது. சங்க காலப் பாடல்களும், தனிப்பாடல்களும் இந்தப் பலஹீனமான நிலையை அழகான அணி நயங்களால் படம் பிடித்துக் காட்டுகின்றன.
படிப்பவர் அழகைப் பார்க்கின்றனர்; பலவீனத்தை மறந்துவிடுகின்றனர். ஏனென்றால், அக்காலக் கவிஞர்கள் தனி மனிதனின் வாழ்க்கைத் துயரங்களுக்குக் காரணத்தை ஆழ்ந்து அலசி ஆராயாமலும் அவைகளின் மேல் தம் அபிப்பிராயங்களைப் பதித்து வைக்காமலும் விட்டு விட்டனர். அதற்குப் பதில் அவர்கள் செய்த கைம்மாறு, உவமைகளை அழகாகச் சொல்லி வைத்ததுதான்!
மூன்றாவது மனிதனாக ஒதுங்கி நின்று காட்சியைப் பார்த்தனர்; பார்க்கச் செய்தனர். அந்நிகழ்ச்சிகளுக்குக் காரணமான குற்றங்குறைகளை அழிக்கத் தூண்டும் போராட்ட உணர்ச்சியை அவர்கள் இழந்திருந்தனர்.
தமிழ் மொழி, அரியாசனமேறி, அரசு புரிந்துவந்த அதே நாட்களில்தான் காளான் பூத்த அடுப்புகளும் நனை சுவர்க் கூரைகளும் தமிழ்ப் புலவர்களின் _ இசைவாணர்களின் சொத்துக்களாக இருந்திருக்கின்றன.
ஆடையின்றி வாடையின் மெலிந்து
காலது கொண்டு மேலது தழீஇ
கையது கொண்டு மெய்யது பொத்தி
பெட்டியுள்ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும் ஏழையாளர்
(சக்திமுற்றப் புலவர் பாடல்)
துன்பமே உருவாய், சோக சரித்திரத்தின் ஏடுகளாய்க் காட்சியளித்த புலவர்கள், வாழாமல் வாழ்ந்து வந்ததும் அந்தக் காலத்தில்தான்! இதற்கெல்லாம் அவர்கட்குப் பரிகாரமாயிருந்தது, எப்போதோ மன்னர்கள் கொடுக்கும் பரிசில்தான்.
வாழ்க்கை முழுமையையும் நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியாத இந்தப் பரிசில் பெறும் முறைமை, புரட்சி மனப்பான்மையை அடியோடு தகர்த்துவிட்டது.
தம் வாழ்க்கை நலிவுறுவதைப் போலவே நாட்டில் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையும் நசித்துக்கொண்டு வருகிறது என்ற உண்மையை அறியும் கண்ணோட்டத்தை யிழந்து பரிசில்கொடுத்த மன்னனுக்குப் பரணிபாடி அவன் ஆட்சியில் மக்கள் இந்திரர்களாகவும் சந்திரர்களாகவும் விளங்கினார்கள் என்று வறட்டு ஜம்பம் பேசிவிட்டுச் சென்றனர். இதனால் நாட்டு மக்களிடம் கோனாட்சியின் மேலிருந்த பற்று அதிகரித்ததே தவிர குறையவில்லை.
தமிழை அரியாசனத்தேற்றிப் பெருமைப்படுத்திய அதே நேரத்தில் வறுமையால் பீடிக்கப்பட்ட புலவனும் இருந்தான் என்றால் ஆட்சி எவ்வளவு தூரம் பொறுப்பற்றமுறையில் நிகழ்ந்து வந்திருக்கிறதென்றும், அவ்வாட்சியின் கீழ் எல்லா மக்களும் வளத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்பது எவ்வளவு பொருத்தமற்றதென்பதும் சாதாரண அறிவுடையவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் பாடம்.
இந்தப் பிரத்தியட்ச உண்மையை _ கௌரவப் பிச்சையான பரிசில் _ புலவர்களின் கண்ணில் படாமல் மறைத்துவிட்டது.
தாம் பெற்ற பரிசிலைப் போற்றியும் வறுமையால் வாடும் மற்றவர்க்கு அப்பரிசில் கிடைக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டி அவ்வழி அவர்களைச் செலுத்துவதாகவும் அமைந்த சாரமற்ற வாழ்க்கையை _ அக்காலப் புலவர்கள் போற்றியது _ அவ்வாழ்க்கையைப் பற்றித் தம் அபிப்பிராயத்தை வெளியிடாமலிருந்தது நமக்கு ஆச்சரியமாகவேயிருக்கிறது.
பார்த்ததைப் பார்த்தபடி அழகாக எழுதிவிடுவதால் மட்டும் புலவனுக்கு உயர்வு வந்துவிடுவதில்லை. புலவன் தான் பார்க்கும் காட்சிகளைப் படம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் அக்காட்சிகளிலுள்ள நியாய அநியாயங்களையும் அலசி ஆராய்ந்து, தான் கண்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கின்றான்.
இதனால்தான் காவியம், மனித சமுதாயத்தைத் திருத்தும் சக்திவாய்ந்ததாக இருக்கின்றது.
சங்ககாலப் புலவர்களிற் பெரும்பாலோர் ஒரு நல்ல ஓவியனைப் போலிருந்தார்களே தவிர உண்மையைத் துருவிக்காணும் சிந்தனைச் சிற்பிகளாக இல்லையென்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும்.
மேலும் இந்தக் காலத்திய ஜனநாயக வளர்ச்சிகளையும் – திட்டப்படி அமைந்துள்ள மிகுந்த சக்திவாய்ந்த பொதுவுடைமைக் கருத்துகளையும் அந்தக் காலத்திலேயே பாடி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். நீதி நெறி வாக்கியங்களைப் பாடவந்த புலவர்களும்கூட, மாவிலும் ஒட்டாமல், கூழிலும் ஒட்டாமல்தான் பாடியிருக்கிறார்கள்.
கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டிலும்
கடும் புலி வாழும் காடு நன்றே
என்பன போன்ற நீதிகள், மன்னர் பரம்பரைக்கும் மணிமுடிக்கும் மண்ணுலகை ஆளும் பாத்தியதை உண்டு என்ற முடியரசு வாதத்தை எதிர்த்ததில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இடைக்காலப் புலவர்களும், முன் ஜென்ம வாசனை, பாவ புண்ணியம், தலைவிதி முதலியவைகள் ஆண்டவனின் கட்டளைகள் என்று நம்பி, அவற்றை வலியுறுத்தும் அடிப்படையிலேயே கதையைச் சிருஷ்டித்திருக்கிறார்கள் அல்லது சிருஷ்டிக்கப்பட்ட கதையைக் காவியப் பொருளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அக்கதைக்கேற்ப முன் செய்த பாபவினை வந்து மூள்கிறது என்ற வாதத்தை மெய்ப்பிக்க _ பாத்திரங்களை உண்டாக்கி, அவைகளை விதியின் கைம்பொம்மைகளாக ஆட்டுவித்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட காரியத்தைச் செய்விப்பதற்காக, பாத்திரங்களுக்குச் சில குணங்களைப் படைத்து குறிப்பிட்ட நிகழ்ச்சி வரும்போது, அதில் பாத்திரங்களை ஈடுபடுத்துகிறார்கள்.
ஓர் அரசன் மிகுந்த இரக்கம் உடையவனாக இருக்கிறான். அவன் மகன் ஒரு நாள் ராஜவீதியில் தேரூர்ந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக ஒரு பசுங்கன்றின் மேல் தன் தேரை ஏற்றிவிடுகிறான். கன்று மடிகிறது. பசு கதறுகிறது. ஆத்திரத்துடன் ஓடி ஆராய்ச்சி மணியை அசைத்து அரசனிடம் முறையிடுகிறது. இரக்கமிகுந்த அரசன், பசுவின் துயர் கண்டு பொறுக்க முடியாமல், கன்று தாயைப் பிரிந்தது போலவே, கன்றைக் கொன்றவனும் தன் பெற்றோரைப் பிரிய வேண்டும் என்ற தண்டனையை நிறைவேற்றச் சித்தமாகிறான்.
இந்நிகழ்ச்சியின் அடிப்படையை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
முன்செய்த தீவினை வந்து மூண்டுவிட்டதால், அரசன் தன் மகனைப் பிரிந்து மீளாத் துயரத்தில் ஆழவேண்டுமாகையால் விதி கோமகனைத் தேரோட்டச் செய்து, ஒரு பசுங்கன்றையும் தேர்க்காலில் பிடித்துத் தள்ளி மடியச் செய்கிறது. எனவே விதி வலிது, அதை மீற முடியாது என்பதுதான் சித்தாந்தம்.
இக்கருத்தே ஆசிரியன் உள்ளத்திலிருந்து கொண்டு கதையை இயக்குகிறது. கதைக்கேற்றாற்போல் பாத்திரங்களுக்குச் சில குணங்களை அமைக்கிறான்.
அக்குணங்கள் நல்லனவோ தீயனவோ என்பதைப் பற்றி ஆசிரியனுக்கு அக்கறையில்லை. அவைகள், அறிவுக்குப் பொருந்தியனவா, அல்லாதனவா என்பதைப் பற்றியும் அவ-னுக்குக் கவலையில்லை. அந்தக் குணங்கள் கதையில் குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதற்கு உடந்தையாக _ பச்சையாகச் சொல்லப்போனால் லஞ்சம் வாங்கும் நீதிபதியாக இருக்க வேண்டும் என்பதே ஆசிரியனின் நோக்கம். அந்நோக்கத்தையே சரியென்றும் முடிவு செய்து கொள்கிறான்.
இக்கதைகளிலிருந்து நாம் மனித சமுதாயத்திற்கு வேண்டிய நடைமுறை இரக்கத்தையும் அன்பையும் காண முடியாது. ஆகாயத் தாமரை என்பது, சொல்வதற்கு என்னமோ அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், அதை நடைமுறையில் காட்ட முடியுமா? மேற்கூறிய குணங்களும் ஆகாயத் தாமரை போன்ற விகற்பங்களே. கானமஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய… (சிறுபாணாற்றுப்படை) மன்னனும், முல்லைக் கொடிக்குப் பொற்றேர் முட்டுக்கொடுத்த வேந்தனும் சோஷலிசத்தின் அந்தக் காலத்திய முன்னோடிகள் என்று இன்னும் சிலர் வாய் கூசாது சொல்கிறார்கள். இந்தக் கடைக்கால் அற்ற வாதத்தை மிக எளிதில் தகர்க்க முடியும்.
ஒரு பக்தர்; தேவார திருவாசகங்களே அவர் திருவாய் மொழிகளில் திருநடனஞ் செய்யும்; கருணையையும் இரக்கத்தையும் பற்றிக் கனிந்து கனிந்து பாடுவார்;
நெஞ்சு நெக்குருகி மெய்ப்புளகித்து ஆனந்தப் பரவசராகி ஆண்டவன் முன்னிலையிலே கண்ணீர்விட்டுக் கதறுவார். எல்லாம் கோவிலுக்குள். வெளியே வந்ததும் பட்டினியால் கதறும் ஏழையைப் பார்த்து சபித்துக்கொண்டு மரத்துப்போன நெஞ்சுடன் செல்வார். இந்தத் தடித்த மேனிப் பக்தருக்கும், மேற்படி, சோஷலிசத்தின் முன்னோடிகள் என்று புகழப்படும் மன்னர்களுக்கும் காரியாம்சத்தில் வேற்றுமையேயில்லை.
இவர்களைக் கற்பூரம் போலிருக்கும் கடலுப்பு அல்லது நற்செயல் செய்பவர்களைப் போல் தோன்றுகிற போலிக் குணத்தினர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தக் காலத்தில் அட்லி, பெவின்ஷுமன் கும்பலைப் போல் போலி சோஷலிசம் பேசுபவர்களுக்கு, மேற்படி மன்னர்களே உதாரண புருஷர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
மேகத்தைக் கண்டு அகவுதல் மயிலின் இயல்பு; அது குளிரால் கதறுகிறது என்று கருதிய மன்னன் அம்மயிலுக்கு ஒரு போர்வை கொடுக்கிறான். இதனால் பொது அறிவுகூட மன்னனுக்கு இல்லையென்றாகிறது. இவ்விவாதத்தை ஒதுக்கிவிட்டு, மன்னனின் இரக்க சிந்தையை மட்டும், நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
அவ்வேந்தர் பரம்பரை அரசாண்ட காலத்திலேயே எத்தனையோ மக்கள் ஆடையின்றி வாடையின் மெலிந்து, நனைந்த சுவரையுடைய பொத்தற்குடிசைகளில், குப்பை வேளைக்கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, நாணத்தால் தலைகுனிந்து கொண்டே சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களின் சோகக் குரல், நாடு முழுதும் எதிரொலித்திருக்கும் அல்லவா? காட்டில் அகவித்திரியும் மயிலின் குரலுக்குச் சோகப் பின்னணி அமைக்கும் மன்னனின் செவி நாட்டில் உலவும் மக்களின் துயர்க்குரலைக் கேட்காதது விந்தையினும் விந்தை!
இதைத்தான் போலி இரக்கம் என்று சொல்லுகிறோம். காட்டுமயிலுக்கு தானே வலிந்து சென்று கலிங்கம் நல்கியதுபோல் நாட்டு மக்களுக்கு _ வறுமையால் சிறுமைப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததாகவோ, வாழ்க்கைக்கு முழு வசதியும் செய்து கொடுத்ததாகவோ நம்மால் அறிய முடியவில்லை. இத்தனைக்கும் நாட்டிலே செல்வம் கொழித்துக்கிடந்ததாம்.
இதுபற்றி அக்காலப் புலவர்களின் சிந்தனை ஒரு தீர்ப்பையும் உரைக்கவில்லை. எனவேதான் அவர்களை சிந்தனைச் சிற்பிகள் என்று நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
நல்ல குணங்கள், செயல்கள்போல் தோன்றுகிற _ போலிக்குணங்கள், செயல்களே அக்கால மன்னர்களின் பெருமைச் சாசனம் என்பதை நாம் நேர்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையேல், அந்தக் காலத்தில் மக்களை, வறுமையே தீண்டவில்லை என்று சாதிக்க வேண்டும். இப்படி அடித்துப் பேச யாருக்காவது தைரியம் இருக்கிறதா?
-நூல்: தமிழ்ஒளி கட்டுரைகள்