இந்தியத் தத்துவங்களில் கடவுள் மறுப்பு – (10)

ஏப்ரல் 16-30

மனிதர்களைப் பலியிட்ட யாகங்கள்

– சு.அறிவுக்கரசு

ஆள்வதற்குத் தகுதியானவன் சத்திரியனே என்று கூறப்பட்டாலும் பார்ப்பனர்கள் மேலாதிக்கம் செலுத்த விரும்பி அதனை ஏற்க மறுத்துள்ளனர். வாஜசனேய சம்கிதை பார்ப்பனர் சத்திரியரைவிட உயர்ந்தவர் என்கிறது. சத்திரியன் இல்லாமல் பார்ப்பனர் இருக்க முடியும். ஆனால், பார்ப்பனர் இல்லாமல் சத்திரியர் இருக்க முடியாது

எனவும் பார்ப்பனரிடம் இருந்துதான் சத்திரியனுக்கு அதிகாரமே கிடைக்கிறது என்றும் இது கூறுகிறது. ஆனால், அய்த்ரேய பிரமாணம், காதக சம்கிதை ஆகியவை சத்திரியரை உயர்த்திப் பேசுகின்றன.

அதர்வணவேதம், பார்ப்பனர்களுக்கு அதிக உரிமைகள் இருப்பதாகக் கூறுகிறது. வழக்கு விவகாரங்களில்கூடப் பார்ப்பனர்கள் தனிநீதி கோரினார்கள் என்று தைத்ரிய சம்கிதை கூறுகிறது. கொலை செய்தாலும்கூட பார்ப்பானுக்கு மரண தண்டனை தரக்கூடாது; பதிலுக்குத் தலைமயிரை மொட்டையடிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொலை செய்த வங்காளிப் பார்ப்பான் தனஞ்செய் சட்டர்ஜி என்பான் 1995இல் தூக்கில் போடப்படுவதற்கு இந்தியப் பார்ப்பனப் பத்திரிகை உலகம் எவ்வளவு எதிர்ப்புக் காட்டியது என்பது நினைவில் இருக்கலாம்.

நீதி வழங்கும் பொ-றுப்பில் இருந்த சத்திரிய மன்னர்களுக்கு இப்படிப்பட்ட நிலைமைகளும் கட்டுப்பாடுகளும் ஏற்படுத்திய சங்கடங்களின் விளைவாகத்தான் மன்னர்களான மகாவீரர், கவுதமர் ஆகியோர்களால் சமணமும் பவுத்தமும் கடவுளுக்கு எதிரான, ஜாதி முறைகளுக்கு எதிரான கலகக் குரல்களாக எழுந்தனவோ? கடவுள் மறுப்புத் தத்துவக் கொள்கைகள் மேலோங்கி புதிய தத்துவங்கள் உருவாக்கப்பட்டன எனலாம்.

அதர்வணவேதம் எனப்படும் உளறலின் உண்மைப் பெயர் அதர்வங்கிரஷ் என்பது. அதர்வ என்றால் ஆனந்தம் தரும் மந்திரம் எனப் பொருள். அங்கிரஷ் என்றால் கருப்புத் தந்திரம் (பிளாக் மாஜிக் _ பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை) இவை இரண்டும் சேர்ந்தது வேதமோதிகளின் செயல்பாடுகள். சமக்கிருத மொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி என்பானின் கருத்துப்படி, சூத்திரர்கள் ஊருக்கு அப்பால் வசிக்க வேண்டும். அவர்களுக்குப் பூணூல் கிடையாது. எனவே படிப்பும் கிடையாது; கூடாது. அதுபோலவே பெண்களும், சுயேச்சையான வாழ்வுக்கும்கூடத் தகுதி அற்றவர்கள் பெண்கள் என்றாக்கிவிட்டனர்.

வேதங்களைப் படிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு போட்டவர்கள், அதில் எழுதி வைத்துக் கொண்டுள்ளபடி சூத்திரர்களும் பெண்களும் (நால்வருணப் பெண்களும்) கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் என்று பலவற்றைத் திணித்தார்கள். ஒரு சலுகை என்ற வகையில் புராணங்களையும் இதிகாசங்களையும் படிக்கலாம் என்று அனுமதித்தனர். இவர்களும் புராணப் புளுகுப்படியே இதிகாசங்கள் காட்டிய இழிவாழ்க்கையை வாழத் தொடங்கினர்.

ஆனாலும் பார்ப்பன வல்லாண்மையை விட்டுவிட மனதில்லாதவர்கள் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்கிற சொலவடையை உருவாக்கி அதற்கொரு கதையையும் கட்டிவிட்டனர். பார்ப்பன முனிவரான வசிஷ்டருக்கும் சத்திரிய மன்னரான கவுசிகருக்கும் போர். மன்னர் தோற்றார். சிவனை நோக்கித் தவம் செய்து வில், அம்பு பெற்றாராம். மறு போருக்குத் தயார் ஆனதை இப்படிப் புளுகுகிறார்கள். மறுபோரிலும் தோல்வியே!

திரிசங்கு என்கிற மன்னனுக்கு சொர்க்கம் போக வேண்டும் என்கிற ஆசை. அதிலும் மனித உடம்போடு போக வேண்டும் என்கிற ஆசை. இதனை வசிஷ்டரிடம் சொல்லி யாகம் செய்ய ஏற்பாடு செய்ய முனைந்தார்.

ஆனால் வசிஷ்டரோ மனித உடலுடன் சொர்க்கம் போக முடியாது எனக் கறாராகக் கூறிவிட்டார். மனித உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்பக்கூடிய ஆற்றல் படைத்த வேறு ரிஷியிடம் போகப் போகிறேன் என்றார் திரிசங்கு. மன்னனுக்காக யாகம் செய்தால் ஏராளமாக வரும் வருமானம் போய்விடுமே என்கிற எண்ணத்தால் திரிசங்குவைச் சண்டாளனாகப் போகக்கடவது என சாபம் விட்டாராம் வசிஷ்டர். திரிசங்குவின் தங்கநிறமேனி மாறிக் கருப்பு வண்ணம் வந்ததாம். சண்டாளர்கள் என்பவர்கள் எப்படி வந்தார்கள், புரிகிறதா?

சண்டாளனானாலும் சொர்க்கம் போகும் ஆசை திரிசங்குவை விட்டுப் போகவில்லை. வசிஷ்டரிடம் போரில் தோற்ற கவுசிகரை தனக்காக யாகம் செய்து சொர்க்கம் அனுப்பக் கேட்டுக் கொண்டார். அவரும் அனுப்பினார்.

ஆனால், கடவுள்கள் யாகத்திற்கு வரவில்லை. திரிசங்குவை சொர்க்கத்தில் அனுமதிக்காத நிலை உருவாகி அவர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். தொங்கிக் கொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி சொர்க்கம் உருவாக்கிட கவுசிகர் முயன்றார்.

போட்டி சொர்க்கமா? கடவுள்கள் பயந்து போயின. கவுசிகரை தாஜா செய்தார்

வசிஷ்டர். நீ பிரம்மரிஷிதான் என்று ஜாதிச் சான்றிதழ் தந்துவிட்டார். எப்படி? கவுசிகர்தான் சத்திரியர் ஆயிற்றே? பிரம்மரிஷிப் பட்டம் எப்படிப் பெறமுடியும்? பார்ப்பான் மனம் வைத்தால் யாரும் எப்படியும் ஆகமுடியும்? திரிசங்குவைச் சண்டாளன் ஆக்கியது போல, கவுசிகரைப் பார்ப்பானாக்கினார். எதுவும் ஆவதும் பார்ப்பனராலே! அழிவதும் பார்ப்பனராலே! புரிகிறதா?

ஜாதியின் பெயரால், யாகங்களின் பெயரால், அதைச் செய்து வைக்கக்கூடிய உரிமையை, கடவுளால் ஏற்படுத்தப்பட்ட வருண உயர்வால் பார்ப்பனர்கள் அனுபவித்த உயர்வால் பார்ப்பனர்கள் அனுபவித்த மேலாண்மையை சூத்திரர்களைப் போலவே சத்திரியர்களும் எதிர்த்தனர். சமணமும் பவுத்தமும் உருவாகின. கடவுளை மறுத்தன.

யாகங்களில் குதிரை, மாடு, ஆடு போன்ற விலங்குகளைக் கொன்று உயிர்ப்பலி கொடுத்ததைப்போல, மனிதர்களைக் கொன்று பலியிடும் யாகங்களும் வேதங்களின் அதிகாரத்தால் செய்யப்பட்டன. இவை புருஷமேத யாகம் எனப்பட்டன. 1841ஆம் ஆண்டுவரையிலும்கூட புருஷமேத யாகங்கள் நடத்தப்பட்டன. வங்காளத்திலும் சென்னையிலுமாக சுமார் 240 பேரைப் பலியிட்டு இந்த யாகங்கள் நடத்தப்பட்டன எனும் விவரத்தை கேம்ப்ரிட்ஜ் ஷார்ட் ஹிஸ்டரி (பாகம் 3 பக்கம் 564) எடுத்துக் காண்பிக்கிறது என்றால் காட்டுமிராண்டிக் காலம் ஆங்கிலேயர் வருகைவரை நீண்டிருக்கிறதே! இத்தகைய யாகங்களைக் கண்டித்த தத்துவங்கள்தான் சாருவாகம், சமணம், பவுத்தம் முதலியன. இவற்றைக் கண்டித்தால் கடவுளைக் கண்டித்ததுதானே!

வேதகாலத்திலும் கடவுள், யாகங்கள், வருணப் பாகுபாடுகள் போன்றவற்றைக் கண்டித்து கடவுள் மறுப்புத் தத்துவங்கள் கிளர்ந்து எழுந்தன. உபநிடதக் காலங்களிலும் கடவுள் மறுப்புத் தத்துவங்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. வேதங்களைப் படிக்கக்கூடாது, கேட்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்த பார்ப்பனரல்லாத வெகுமக்களுக்காக உருவாக்கப்பட்ட புராண இதிகாச காலங்களிலும் கடவுள் மறுப்புத் தத்துவங்கள் பரப்பப்பட்டன.

சாருவாகத் தத்துவம் கூறுவதைக் கவனிக்க வேண்டும். சொர்க்கமோ, முக்தியோ, மேல் உலகோ, அங்கே வசிக்கும் ஆத்மாவோ எதுவுமே கிடையாது. வேதமுறையையும் கர்மங்களையும் கடைப்பிடிப்பதால் உண்மையான பலன் எதுவும் இல்லை. அக்னிஹோத்ரம், வேதங்கள், தவம் செய்வோர் வைத்திருக்கும் திரிசூலம், சாம்பல் அணிதல் போன்ற புறச் சின்னங்கள் அனைத்துமே அறிவற்ற அற்பர்களின் வாழ்க்கைக்கு வழி செய்பவைகளே! பார்ப்பனர்களின் சுகபோகத்திற்காகப் பிறர் மீது திணித்தவையே! இறந்துபோனவர்க்காகச் செய்யப்படும் சடங்குகள் ஏமாற்று வித்தையே. இவற்றால் பலன் எதுவும் கிடையாது.

மொத்தத்தில் நான்கு வேதங்களிலும் உள்ள 20 ஆயிரத்து 358 பாடல்களிலும் கற்பிக்கப்பட்டிருப்பவை அனைத்தையும் மறுத்த தத்துவம் எழுந்த காலம் என்பது வேதங்களைத் திணித்த காலமே! கடவுளைக் கற்பித்த உடனேயே, அதனை மறுத்த குரலும் எழுந்துவிட்டது.

நைருக்தம், யாஜ்ஞகம், வையாகரணம், ஜ்யவ்திஷம், ஸாம்ப்ரதாயிகம், ஆத்யாதமிகம், அய்திகாசிகம் என்றெல்லாம் கூறப்படும் ஏழு விளக்கவுரைகளை வேதங்களுக்குக் கூறி ஏமாற்றப் பார்த்தும் கடவுள் வேதமறுப்புக் கொள்கையை மழுங்கடிக்க முடியவில்லை.

மாஜி புரட்சிவாதி _ வெடிகுண்டுவீரர் _ கைதுக்குப் பயந்து பாண்டிச்சேரிக்கு வந்து பதுங்கிக் கொண்ட பயந்தாங்கொள்ளி _ பின்னர் பண்டாரமாகிப் போய்விட்ட அரவிந்த கோஷ் (எனும் வங்காளப் பார்ப்பனர்) வேதங்களின் வார்த்தைகளுக்கு மறைமுகப் பொருள் உண்டு என்று கப்சா விட்டுப் பார்த்தார். இன்றைய அறிவியல் கொள்கைகள் வேதங்களிலேயே இருக்கின்றன என்று காட்டுவதற்கு மிகவும் முட்டிப் பார்த்தார். முடியாமல் தோற்றுப் போனார்.

கடவுள் மறுப்புத் தத்துவங்களே இன்றளவும் நின்று நிலவுகின்றன. அரவிந்த் கோஷுக்குச் சமாதியும் ஆசிரமமும் மட்டுமே நீடிக்கின்றன.

உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத நூல்களால் என்னை அசைக்க இயலாது _ என்று புரட்சிக் கவிஞர் பாடியது நினைவிருக்கலாம்!

– (நிறைவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *