அன்னையாரின் பற்றற்ற உள்ளம்
– கி.வீரமணி
அன்னையார் அவர்களது அறக்கொடை உள்ளமும், பீறிட்டுக் கிளம்பிய உணர்வும், தொண்டறத்தின் வெளிப்பாடும் அருகில் இருந்த எங்களையேகூட வியக்க வைத்தது!
அய்யா அவர்களுடன் அம்மா ஒரு தொண்டறப் பணியாள்போல்தான் இறுதிவரை வாழ்ந்தார் -_ காரணம் பற்றற்றான் பற்றினைப் பற்றிலவர் அல்லவா? எளிமைதான் இவரது அணிகலன். இலட்சியப் பணிதான் அவரது அன்றாடக் கடமைகள். தனக்கென வந்தது, தந்தது எல்லாம்கூட தந்தையைப் போலவே மக்களுக்கே அளித்துவிட்டவர்.
அது மட்டுமா? அவர் உருவாக்கிய இந்த அறக்கட்டளை _ பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் (Periyar Maniammai Educational Charitable Society) என்பது அன்னையாரின் பெயரில் பூர்வீகமாக இருந்த சொத்துக்களோடு, அய்யா, அம்மாவுக்கென ஒரு பாதுகாப்பு வேண்டும், அவர்களுக்குப் பிறகு என்று எண்ணி, சென்னை நம்பர் 1, மீரான் சாயபுத் தெரு(பழைய மவுண்ட் ரோடு)வில் வாங்கிய வீடு (அது 1948 வாக்கில் வாங்கப்பட்டது.) அய்யா சென்னை வந்தால் அங்குதான் தங்குவார்கள்.
பல சரித்திர நிகழ்வுகள், சந்திப்புக்கள், முக்கிய அரசியல் முடிவுகள் எல்லாம் நடைபெற்ற இல்லம்தான் அது!
எடுத்துக்காட்டாக, இயக்கம் பிளவுபடுவதற்கு முன்பு, 1948-_49இல் திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் கவர்னர்_ஜெனரல் பதவியேற்று சென்னைக்கு முதன்முறையாக வருகை தருவதையொட்டி திராவிடர் கழகச் சார்பில் கவர்னர் ஜெனரல் ஆச்சாரியாருக்கு சென்னையில் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்து, அது சம்பந்தமான திராவிடர் கழகக் கமிட்டி, தந்தை பெரியார் தலைமையில் இந்த இல்லத்தில்தான் முதல்நாள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கேயே சென்னைக் காவல் துறையினர் வந்து அய்யா, அண்ணா, கழக முக்கியஸ்தர்கள் அத்துணைபேரையும், முன்கூட்டியே மாலையில் (Preventive Arrest) கைது செய்து காவலில் வைத்துவிட்டனர்.
இப்படி பற்பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏராளம் உண்டு.
1952 ராஜாஜி இரண்டாம் முறையாக முதல் அமைச்சரான பிறகு தந்தை பெரியார் அவர்களைத் திடீரெனச் சந்தித்து உரையாடி நலம் விசாரித்ததும் இங்கேதான்! பெருந்தலைவர் காமராசர் தந்தை பெரியார் விருப்பத்திற்கேற்ப ஆச்சாரியாருக்குப் பின் முதல் அமைச்சரான பின்பு தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்தது, 1954_55இல் சற்றும் எதிர்பாராமல் வந்து சந்தித்து நலம் விசாரித்ததும் இந்தப் பெரியார் இல்லத்தில்தான்!
1960இல் இந்திய தேசப்படத்தில் தமிழ்நாடு நீங்கலான பகுதியை எரிக்கும் போராட்டம்பற்றி தந்தை பெரியார் அவர்கள் என்னைத் திருச்சியில் நடைபெற்ற கமிட்டியில் கழகச் செயலாளர்கள் இருவரில் ஒருவராக அறிவித்த பிறகு (மற்றொரு செயலாளர் ஆனைமலை திரு. ஏ.என்.நரசிம்மன் பி.ஏ. அவர்கள் ஆவார்கள்) சென்னையில் அய்யாவுடன் தங்கியிருந்தபோது, சென்னையில் தந்தை பெரியார், அன்றைய விடுதலை ஆசிரியர் திரு. சா.குருசாமி (குத்தூசி), புலவர் கோ. இமயவரம்பன் மற்றும் நான் உட்பட நான்கு பேரை மீரான் சாயபுத் தெரு இல்லத்தில்தான் கைது செய்து, சென்னை மத்திய சிறைச்சாலையில் தந்தை பெரியார் அவர்களுடன் (தனித்தனி அறைகளில்தான்)அடைத்தது அன்றைய காங்கிரஸ் அரசு.
அன்றைய நாம் தமிழர் இயக்கத் தலைவர் -_ திரு. சி.பா.ஆதித்தனார் அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்; திருவல்லிக்கேணிப் பகுதியில் கைது செய்து நாங்களிருந்த _ நம்பர் 1 ஹாலில் அடைத்தனர்.
அய்யா அவர்களுடன் அந்த இல்லத்தில் கைதாகி, அவர்களுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பு சிறையில் எனக்கும் எனது ஆருயிர்த் தோழர் புலவர் கோ.இமயவரம்பனுக்கும் கிடைத்ததை நாங்கள் இருவரும் எண்ணி எண்ணிப் பெருமிதம் கொண்டோம்.
அதே இல்லத்தில்தான் சுமார் 3, 4 மாதங்கள் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்ற நிலையில், நான், அய்யா அம்மா அவர்களால் குடி அமர்த்தப்பட்டுக் குடும்பம் நடத்தினேன்.
இயக்க வாழ்விலும் என் வாழ்விலும் மறக்க முடியாத அந்த இல்லம் _ அய்யா, அம்மாவின் வருங்காலப் பாதுகாப்புக்கெனவே வாங்கி ஒதுக்கி வைக்கப்பட்டது என்பதும், தந்தை பெரியார் அவர்கள் பின்னாளில் செய்த ஏற்பாட்டின் மூலம்தான் என்பது எங்களைப் போன்ற அணுக்கத் தொண்டர்களுக்குப் புரிந்தது!
சென்னையில் நான் அடையாறில் உள்ள (கஸ்தூரிபா நகர் 13ஆம் எண் இல்லம்) எனது மாமனார் அவர்களால் வாங்கப்பட்ட (கூட்டுறவுத் துறை மூலம்) இல்லம். அதில் நானும் இணையர் மோகனாவும் 1962 டிசம்பர் வாக்கில் குடியேறினோம். (அதற்கு முன் ஒரு வாடகைதாரர் குடியிருந்தார். உடனே காலி செய்யவில்லை) அய்யா வந்தால் எங்கள் இல்லத்தில் (அடையாறில் வந்து தங்குவார்கள் _ காரணம் 1, மீரான் சாயபுத் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏராளம் பிறகு ஏற்பட்டுவிட்டதால் வேனை நிறுத்திட, அமைதியாக ஓசையின்றித் தங்கிட அங்கே வாய்ப்பு இல்லை.)
ஒருநாள் அம்மாவை, பள்ளி வேலைகளுக்காக திருச்சியில் விட்டுவிட்டு, புலவருடன் மட்டும் சென்னைக்கு நேரே எங்கள் வீட்டிற்கு வந்தார் அய்யா. என்னையும் நிர்வாகி சம்பந்தம் அவர்களையும் அழைத்து, அம்மாவிற்காக, மீரான் சாயபுத் தெரு வீட்டை, எழுதி வைக்க யோசித்துள்ளேன்; அவர்களுக்கு இது இப்போது தெரிய வேண்டாம்; காரணம், அந்த அம்மா இதை விரும்ப மாட்டார் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால், அவரது பாதுகாப்புக்கு அது தேவை என்று நான் கருதுகிறேன். நமது பிரபல வழக்குரைஞர் திரு. சுப்பிரமணியப் பிள்ளை (மயிலாப்பூர்) அவர்களிடம் இந்தப் பத்திரங்களைக் காட்டி, தானம் (Gift) நல்லதா? செட்டில்மெண்ட் நல்லதா? என்று சட்ட ஆலோசனையை நான் கேட்டதாகக் கூறிக் கேட்டு வாருங்கள் என்றார். நாங்கள் அவரை நேரில் சென்று சந்தித்து விவரம் கூறினோம்; அவரே புறப்பட்டு அய்யாவிடம் நேரில் வந்து (என் இல்லத்தில்) விளக்கமாக விவாதித்து செட்டில்மெண்ட்தான் மிகவும் பாதுகாப்பானது என்று கூறி ஆலோசனை கூறினார்.
அய்யாவும் ஒப்புக்கொண்டார்; அதனைப் பதிவு செய்ய ராயப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்ய உரிய பத்திரங்கள், பத்திரக் கட்டணங்கள் எல்லாவற்றிற்கும் அய்யா என்னிடம் பணம் தந்து அடுத்த வாரம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு திருச்சிக்குச் சென்றுவிட்டார். குறிப்பிட்டபடி அடுத்த வாரம் என் இல்லத்திற்கு முதல் நாள் மாலையே வந்துவிட்டார்கள்.
காலை நாங்கள் பதிவாளரை இங்கேயே அழைத்து வர ஏற்பாடு செய்வதாக இருந்தோம். அதற்கு அப்போது கூடுதல் கட்டணம் ரூ.50 அல்லது ரூ. 100 தான். அதைக்கேட்டு அய்யா, அது எதற்கு வீண்செலவு? நானே அங்கு வந்து கையெழுத்திட்டால் அந்தப் பணம் மிச்சம்தானே என்று கூறி புறப்பட்டு வந்தார். அன்றே இது முடிந்து, வீட்டிற்குத் திரும்பி வந்து, பத்திரத்தை என்னிடம் பதிவாளர் ஒப்புவிக்க எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்கள். அன்னையாருக்கு இதுபற்றி நாங்கள் யாரும் மூச்சே விடவில்லை; இரண்டாண்டு கழித்து ஒருமுறை எப்படியோ, அய்யா வாய்தவறிக் கூறியதைக் கேட்டு, திருச்சியில் அம்மா அழுதுபுலம்பி, மறுப்பைத் தெரிவித்தார். இந்தச் சொத்துக்காகவா நான் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தேன் என்று எல்லாம் பற்றற்ற அவர் கூறி நெகிழ வைத்தார். அய்யா தந்த விளக்கத்தால் பெரிதும் சமாதானம் அடையவில்லை. அப்படியே அந்த ஏற்பாடு இருந்தது! பத்திரத்தைப் பத்திரமாக நான் அய்யாவிடம் ஒரு சில நாட்களில் ஒப்படைத்துவிட்டேன்!
ஒருநாள் அம்மா என்னைத் திருச்சியில் (அய்யா முன்னிலையில்), நீ கூடவா என்னிடம் இதை மறைத்து வைத்தாய்? என்று கேட்டார். நான் அய்யாதான் சொன்னார் என்று சொல்லியே மவுனத்துடன் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு, இயக்கப் பணியாளனுக்கு (எனக்கு) எல்லை உண்டே அம்மா என்று கூறி நகர்ந்துவிட்டேன்.
அந்த வீடுதான் பெரியார்-_மணியம்மை அறப்பணிக் கழகத்தின் சொத்துப் பட்டியலில் முதன்மையானது. அய்யா அம்மாவிற்குத் தந்த அந்த வீடு பொதுவுக்கே அன்னையாரால் எழுதி வைக்கப்பட்டது மற்ற சொத்துக்களுடன் சேர்த்தே!
அப்படி ஒரு அறக்கட்டளையைப் பதிவு செய்தபின் என்னைத் தனியே அழைத்துச் சொன்னார் என்று சென்ற கட்டுரையில் சொல்லிய செய்திக்கு இப்போது வருகிறேன்.
இந்த அறக்கட்டளையைப் பெரிதும் நீதான் நிர்வகிக்கப் போகிறாய்; எனது உடல்நலம் நாளுக்குநாள் குன்றிவரும் நிலையில், இதில் உனக்கு யார் யார் ஆதரவாக இருப்பார்களோ அவர்களையே முக்கிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நீயே ஒரு பட்டியல் தயாரித்துப் போட்டுக்கொள், நான் கையெழுத்து இட்டு ஒப்புதல் அளிக்கிறேன் என்றார்கள்.
என் கண்கள் பனித்தன. என் மீது அன்னையார் வைத்த நம்பிக்கைதான் எவ்வளவு? நான் அவர்களிடம் சொன்னேன், அது சரியில்லை அம்மா, நீங்கள் யாரைப் போட்டாலும் அவர்களுடன் ஒத்துழைத்து இந்த அறப்பணிக் கழகம் மூலம் உங்கள் விருப்பத்தை முழு வடிவத்தில் நிறைவேற்றி வைப்பேன் எனக் கூறினேன்.
பிறகு அம்மாவே ஏழு பேர்களின் பெயர்களை ஒரு தாளில் எழுதிக் கொடுத்து, அவர்களைத் தொடர்புகொள்ளச் சொல்லிப், பணித்தார்கள்! அந்தத் தாள் இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது!
இன்று நான் இவ்வளவு உடல்நிலையிலும் கடுமையாக உழைப்பதற்கு ஒரே காரணம் புகழ் வேட்டைக்கோ, பெருமைக்கோ அல்ல; மாறாக, அய்யா அம்மா என் மீது வைத்த அந்த நம்பிக்கையை நியாயப்படுத்த வேண்டுமே என்பதற்காகத்தான். இதில் முழு நிறைவு கொண்டு உழைப்பதை எனது வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன்.
– (நினைவுகள் நீளும்…)