சிறந்த நூலில்இருந்து சில பக்கங்கள்

ஏப்ரல்-01-15

தமிழர்களின் 300 இசைக் கருவிகள்

நூல்:    தமிழிசை வரலாறு
ஆசிரியர்:    நா.மம்மது
வெளியீடு:    நாதன் பதிப்பகம், 72/43, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை-_93
தொலைப்பேசி:    044_4554 2637
பக்கங்கள்:    144 விலை: ரூ.100/_

தமிழிசை குறித்து இடைவிடாது பல்லாண்டுகளாக ஆய்வு செய்துவருபவர் நா.மம்மது. நமது உண்மை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவரது தமிழிசைக் களஞ்சியம் தமிழின் மிக முக்கிய நூல்களில் ஒன்று. அண்மையில் மம்மது எழுதி வெளிவந்துள்ள இன்னொரு முக்கிய நூல் இது. ராகங்கள் மற்றும் இசைக் கருவிகள் குறித்து நுணுக்கமான பல செய்திகளை இந்நூலில் வழங்கியுள்ளார். அவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே.

பண் நம்மைப் பண் படுத்துகிறது; பண்படுத்தி நம் பண்பாட்டை உருவாக்குகிறது.

நால் வகை நிலத்திற்கும் நான்கு தெய்வம், முதலியன கூறுவது போல் நால் வகைப் பெரும்பண் கூறுவார். பகுதி என்று சிறுபண் கூறுவார். பெரும் பண்ணை, யாழ் என்பார். சிறு பண்ணை யாழின் பகுதி என்பார் தொல்காப்பியர்.

தமிழகத்தில் நிரந்தரமான பாலை வனம் பாலைநிலம் இல்லை.

வான் பொய்த்து, மழையின்றி குறிஞ்சியும், முல்லையும் தற்காலிகமாகப் பாலையாகும்.

அப்பாலையையும் ஒரு திணையாகவே அதற்கும் பிரிவு என்ற உரிப்பொருள் முதல் முப்பொருளும் கூறுவார்.

நாற்பெரும் பண், அய்ந்நிலப்பண், ஏழ்பெரும் பாலை என்று நம் இசை பெருக்கமடைந்து வந்தது.

சிலப்பதிகார காலம்

தொல்காப்பியர் காலத்து அய்வகை நிலத்திற்குரிய அய்ந்து பெரும் பண்களின் வரிசையில் ஏழ்பெரும் பாலைகள் என மேலும் இரண்டு பெரும் பண்கள் பற்றிய செய்திகளைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

1.    முல்லையாழ் என்ற முல்லை நிலப்பண்ணானது செம்பாலை என்றும்,
2.    குறிஞ்சியாழ் என்ற குறிஞ்சி நிலப்பண், படுமாலைப்பாலை என்றும்,
3.    நெய்தல்யாழ் என்ற நெய்தல் நிலப்பண், செவ்வழிப்பாலை என்றும்,
4.    பாலையாழ் என்ற பாலை நிலப்பண், அரும்பாலை என்றும்,
5.    மருதயாழ் என்ற மருத நிலப்பண், கோடிப்பாலை என்றும்,
நெய்தல் நிலத்திற்கான மேலும் ஒரு பெரும்பண்ணாக விளரிப் பாலையும், மருத நிலத்திற்கான மேலும் ஒரு பெரும்பண்ணாக மேற்செம்பாலையும் நம் இசை மரபில் சிலப்பதிகார காலத்தில் புதிய பெயர்களைப் பெறுகின்றன.

இளங்கோ அடிகளும் சிலப்பதிகார உரையாசிரியர்களும் தெரிவிக்கின்ற
செம்பாலை இன்றைய அரிகாம் போதி என்றும்
படுமலைப்பாலை இன்றைய நடபைரவி என்றும்
செவ்வழிப்பாலை இன்றைய செவ்வழி என்றும்
அரும்பாலை இன்றைய சங்கராபரணம் என்றும்
கோடிப்பாலை இன்றைய கரகரப்பிரியா என்றும்
விளரிப்பாலை இன்றைய தோடி என்றும்,
மேற்செம்பாலை இன்றைய கல்யாணி என்றும் நம் இசை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. 3000 ஆண்டு தொன்மைப் பண்களான இந்த ஏழுபாலைகளுக்கு நேராக, இக்கால இராகங்களை முதன்முதலில் தம் நுட்பமான ஆய்வுகளால் கண்டுபிடித்துக் கூறியவர் விபுலானந்த அடிகளார்.

இந்திய இசை வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைப் பற்றிய செய்திகள் உண்டு. அவைகளில் 300க்கும் மேலான கருவிகளைப் பற்றி நம் இலக்கியங்கள் பேசுகின்றன. அவை நம் தமிழர் கண்டுபிடிப்புகள்.

நம்முன்னோர் இசைக் கருவிகளை நான்கு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.

1.    காற்றுக் கருவி
குழல், நாகசுரம், முகவீணை முதலியன
2.    நரம்புக் கருவி
யாழ், தம்புரா, துந்தனா முதலியன
3.    தோல் கருவி
தவில், மத்தளம், துடி முதலியன
4.    கஞ்சக்கருவி
சிங்கி, கைமணி, சேகண்டி முதலியன

இசைக்கருவி வாசித்த பெரும்பாணர், குழல்ப் பாணர், யாழ்ப்பாணர், பாடினி, பொருநர், மதங்கர், சூதர், மாகதர், விறலியர் என நம் இலக்கியங்கள் நெடுகவே விரிவாகப் பேசுகின்றன.

பண், பாணி, பாண், பாணன், பாண்மகள், பாணிச்சி, பாண்மகன் என பண்ணால் பெயர்பெற்ற இசைக்கருவியாளர் பாடகர் பற்றி நம் பண்டை இலக்கியங்கள் விரிவான செய்திகளைத் தருகின்றன.

வேட்டையாடும்போது அம்பு எய்வதால் வில் நாண் வில் நரம்பு ஏற்படுத்தும் ஒலியைக் கொண்டே நரம்பிசைக் கருவியை மானிடன் உருவாக்குகின்றான். வில்யாழ் அதன் பரிணாம வளர்ச்சியான வீணை என்று இன்று பெயர் பெற்றிருக்கும், நமது செங்கோட்டு யாழும் பிறந்த வரலாறு இதுவே.

மிருதங்கம் வாசிப்பவரின் வலப்பக்கம் உள்ள பகுதி வலந்தலையாகும். இது மூன்று மெல்லிய தோல்களால் ஆனது. உட்கரைத்தட்டு, மீட்டுத்தோல், நடுவிலுள்ள சாய்ப்புத் தோல் ஆகிய நுட்பமான பகுதிகள் கொண்டது வலந்தலை; மீட்டுத்தோல், வெட்டுத்தட்டு என்றும் சாய்ப்புத் தோல் கொட்டுத்தட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இவை ஆட்டுத்தோல் மற்றும் கன்றின் தோலால் செய்யப்படுகிறது.

சோறு, மங்கனீசு, புளிச்சாறு ஆகிய மூன்று கலவைகளாலும் வலந்தலையின் கொட்டுத்தட்டு பூசப்பட்டு நிரந்தரமாக அமைக்கப்படுகிறது. இது சோறு, கரணை, மருந்து என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. கரணை என்ற இந்தப் பகுதியே மிருதங்கத்திற்குத் தனியானதொரு நாதத்தை அளிக்கிறது. வலந்தலைப் பாடகரின் ஆதாரச் சட்சத்திற்கு சுருதி சேர்க்கப்படுகிறது.

இடந்தலை என்பது மிருதங்கக் கலைஞரின் இடப்பக்கப் பகுதியாகும். இது தொப்பி என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு மெல்லிய தோல்களால் ஆனது. இதன் உட்புறத்திலுள்ள உள் வட்டமும் வெளிவட்டமும் முறையே ஆட்டுத்தோலாலும், எருமைத் தோலாலும் அமைக்கப்படுகின்றன.

அரங்கில் இசை நிகழ்ச்சி தொடங்கும் முன்பு மாவும் நீரும் கலந்த கலவை இடந்தலையில் பூசப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் இந்தக் கலவை அகற்றப்படுகிறது.

தபலை என்ற தபலா

பண்டை நாள் முதல்கொண்டே ஒருமுகப்பறை, இருமுகப்பறை, அய்முகப்பறை (பஞ்சமுகவாத்தியம்) என்ற பன்முகம் கொண்ட பறைகள் வழக்கில் இருந்துள்ளன. இருமுகப்பறையைப் பிரித்து இருமுகங்களையும் தனித்தனியே வாசித்த முறையும் பண்டை நாளில் வழங்கி வந்துள்ளது. பகுவாய்ப் பறை என்ற சொல்லாடல் சங்கத்தமிழ் இலக்கியங்களில் உண்டு. அவ்வாறு செய்யப்பட்ட ஒரு கருவியே பதலை என்பது பகுவாய்ப் பதலை, கலப்பையர் என்ற வழக்குகள் சங்க நூல்களில் நிரம்பவே உண்டு.

இந்தப் பதலை என்ற சொல் பின்னாளில் தபலை என்றாகியுள்ளது. தபலை, திமிலைகள், பூரிகை, பம்பை என அருணகிரியார் பாடுகின்றார்.

இந்த தபலையே, வழக்கமாக, ஆ விகுதி சேர்த்து சொல்லாக்கம் பெறும் வடவர் வழக்கில் தபலா என்றாகியுள்ளது. எனவே, இன்றைய தபலா என்பது தமிழர் கண்ட இசைக்கருவியே. முந்தைய நூற்றாண்டு வரை தஞ்சை, மராட்டிய அரசவைகளை அலங்கரித்த தபலாக் கலைஞர்கள் பலர் இருந்துள்ளனர்.

தும்புரு – தம்புரா

துன், துன், என்ற தாளக்கட்டுடன் துந்தனா சுருதிக்கருவியாகவும், தாளக் கருவியாகவும் விளங்கி வருகின்றது. இதுவே தாளத்தின், சுருதியின் அளவைக் காட்டும் யாழின் பக்கச் சாரணியாகப் பின்னாளில் மலர்ந்துள்ளது.

தும்பு என்றால் உட்துளை என்று பொருள்; தூம்புமுகம், வடிகால் தூம்பு என்றெல்லாம் வழங்கி வருவதை நாம் அறிகிறோம். தேனை உறிஞ்ச உட்துளையுள்ள உறுப்பைப் பெற்றுள்ளதால் தேன் வண்டு, தும்பி என்ற பெயர் பெறுகிறது. உட்துளையுள்ள துதிக்கை இருப்பதால் யானையானது தும்பி என்றும் அழைக்கப்படுகிறது.

தும்பு + உரு = தும்புரு. உட்துளை உருக்கொண்டது. தும்புரு, தும்புருயாழ், தும்புருவீணை, தும்புரு -_தம்புர் _ தம்புரா என்றானது. தன்பூர் என்று இந்துஸ்தானியில் பெயர் பெற்றுள்ளது. தூம்பு என்றே பண்டைய சுருதிக் கருவி அழைக்கப்பட்டுள்ளது. இதை கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர என்று மலைபடுகடாம் தெளிவுபடுத்துகின்றது. இங்கு இமிர்தல் என்பது இம் என்ற சுருதியானது, தூம்பின் மூலம் மீட்டப்படுவதைத் தெரிவிக்கின்றது.

சிறுபறை என்ற கஞ்சிரா

பண்டைய சிறுபறையே இன்று கஞ்சிரா என்று அழைக்கப்படுகிறது. இது ஓர் ஒருமுக வாத்தியம். தாளம் கொட்டும் தோல் இசைக்கருவிகளில் மிகப் பழமையானது இச்சிறுபறையே. சிறுபறையின் குடும்பத்தில், பறை, தப்பு, டேப்பு என்றெல்லாம் எண்ணிலடங்கா தோல்கருவிகள் காலந்தோறும் உருவாகியுள்ளன. ஒரு தவில் கலைஞரும் மிருதங்க வித்வானும் செய்யும் தாள முழக்குகளை மிக எளிதாக ஒரு கஞ்சிராக்கலைஞர் செய்து காட்டுவார். மிருதங்கம், தவில் பயில்வோர் முதலில் கஞ்சிரா பழகுவதே சிறந்தது. இன்றைய நாட்களில் அரங்கிசை என்ற செவ்வியல் இசையில் உடன் வாசிக்கப்படும் உயர்வைப் பண்டைய சிறுபறை என்ற கஞ்சிரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளாரிநெட்

காற்றுக்கருவியான கிளாரிநெட் நெகிழி குடும்பத்தைச் சேர்ந்தது. 3 தாளங்கள் வரை வாசிக்க முடிகின்ற, மேல்தானத்திற்கு மேல்தானமும் வாசிக்க      முடிகின்ற உயர்ந்த இசைக்கருவி கிளாரிநெட். இதில் சுரத் துவாரங்களை மூட பொத்தான் அமைக்கப்பட்டுள்ளது. வேண்டிய அளவுகளில் காலளவு, அரையளவு என்றெல்லாம் துவாரங்களை மூட வசதி இருப்பதால், ஒரு சுரத்தின் நுட்ப ஒலிகளையும், அனு சுரங்களையும் கிளாரிநெட்டில் வாசிக்கும் வசதி உண்டு. எனவே, நுட்பச் சுரங்கள் மிகுந்த நமது பண்களுக்கு கிளாரிநெட் ஏற்ற கருவியானதில் வியப்பில்லை.

சாக்சபோன்

பண்டைய ஊதுகுழலின் உலோக வடிவத்திலிருந்து மலர்ந்த ஒரு வாத்தியமே சாக்சபோன். இதன் தாழ்ந்த இசையும் தான மாற்றங்களும் கேட்போரைச் சுண்டி இழுக்கும் தன்மை உடையது. கிளாரிநெட் போன்று பொத்தான் வசதி இருப்பதால் நாம் நினைக்கும் அளவுவரை துவாரங்களை மூடித்திறந்து நுட்பச் சுரங்களையும் இதில் வாசிக்க முடியும். கடந்த நூற்றாண்டு கடைசியில்தான் இந்த வாத்தியக்கருவி நம் தமிழ் இசையுடன் சேர்ந்தது. அரங்கிசைக்கு ஏற்ற கருவியாக சாக்சபோனில் செய்த மாற்றங்கள் அனைத்தும் கதிரிகோபால்நாத் என்ற ஒப்பற்ற சாக்ஸ் கலைஞரையே சேரும். வயலினும், கிளாரிநெட்டும், சாக்சபோனும் வெளிநாட்டுக் கருவிகள். தமிழர் கருவியல்ல. ஆனால் தமிழிசைக் கருவிகள். நம் பண்களின் ஒப்பற்ற நுட்பச் சுரங்களை எல்லாம் காட்ட வல்லவை. தமிழர் இசையிலிருந்து இம்மூன்று இசைக் கருவிகளையும் எளிதில் புறந்தள்ள முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *