ஆச்சாரம்

ஏப்ரல்-01-15

அய்யர் வூட்டுப்பொண்ணு, முஸ்லிம் பையனைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டாளாமா!

ஊருக்குள் இப்படிப் பரவலாகப் பேசிக் கொண்டார்கள். சீனிவாச அய்யங்காருக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர் காதுபடவே பேச இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?

தெருவுல நடந்து போக முடியல! எங்க பாத்தாலும் இதே இழவு பேச்சுத்தானா? ஆத்துக்குப் போய் லோகேஸ்வரியை (மனைவி) ஒரு பிடி பிடிக்கவேணும்! இவளாலதானே இப்படி ஆயிடுத்து?

அவ்வூர் வரதராஜ பெருமாள் கோயிலின் பரம்பரைக் குருக்களான அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். பெரிய பெண் சிறீநிதி சேலம் பொறியியற் கல்லூரியில் பொறியியல் படிப்பினை முடித்த நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது.
அவரது மனம் பின்னோக்கிச்…. சென்றது..!

ஏன்னா…! நம்ம பெரிய பொண்ணு பிளஸ் டூ முடிச்சுண்டா…! நல்ல மதிப்பெண் எடுத்திருக்கா… சேலத்துல ஏதோ நல்ல பொறியியல் கல்லூரி இருக்காம்… அங்க அவாள சேர்த்துடலாம்…! அவாளும் படிக்கறேன்…னு ஆசைப்படறா….! என்ன சொல்றேள்? என மனைவி லோகேஸ்வரி கேட்டதும், கல்லூரியும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்! என்றார்.

இந்தக் காலத்துல பி.இ.. ஆவது படிக்க வச்சாத்தான் அவா வாழ்க்கை நன்னாருக்குமோன்னா! நீங்க அந்தக் காலத்து பி.யு.சி. வரை படிச்சிருக்கேள்… அது உங்களுக்குப் போதும்.. இவாளாவது நன்னாப் படிச்சு வாழ்க்கையில் நல்லா இருக்கட்டுமே என்று கெஞ்சினாள் லோகேஸ்வரி.

சரி..சரி.. எப்படியோ அனுப்பு..! என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னார் அய்யங்கார். தாயுக்கும் மகளுக்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது!

சிறீநிதி பொறியியல் பட்டம் பெற்றாள். அவர் குடும்பத்திற்குத்தான் எவ்வளவு பேரானந்தம்! வரதராஜ பெருமாளுக்கு அபிசேகம் செய்து… ஊர் மக்களுக்குப் பொங்கல், சுண்டல் கொடுத்து… மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பெற்றோர்.

நினைக்க நினைக்க சீனிவாச அய்யங்காருக்கு நெஞ்சு கனத்தது.

அன்று.. இரவு மணி எட்டரை ஆகியும் சிறீநிதி இன்னும் வீடு திரும்பவில்லை. கல்லூரியில் ஏதோ விழா என்று காலையில் போனவா இன்னுமா ஆத்துக்கு வரல? என்ன ஆச்சு? அவா சிநேகிதிங்கிட்ட போன் போட்டாவது கேட்டுடு..! என்றார். எல்லாம் கேட்டேன். சரியான பதிலில்லே! என்றாள் மனைவி. இதுக்குத்தான் பொட்டப்புள்ளைங்கள இவ்வளவு படிக்க வைக்கப்பிடாதுன்னு சொன்னேன்.. கேட்டியாடி..! என்ன ஆச்சோ.. ஏதாச்சோ… பத்திரிகையிலேயும், தொலைக்காட்சியிலும் செய்திகளைப் பார்க்கும் போது வயித்துல புளியக் கரைக்கறது! மனம் குமைந்து போனார்கள் இருவரும். சில நிமிடங்கள் கழித்து, இளையமகள் மூச்சிரைக்க ஓடிவந்து சொன்னாள். அப்பா..! அக்கா, தன்னோட கூடப் படிக்கும் முஸ்லிம் பையன திருமணம் பண்ணிண்டாளாம்! அவா பிரண்டு எனக்கு இப்பத்தா குறுஞ்செய்தி (னீ) அனுப்பிச்சிருக்கா! என்றாள்.

இனி ஊருக்குள்ளே தலைநிமிர்ந்து நடக்க முடியாது…! தலைகுனிய வச்சுட்டாளே..

பாவி! ஓடிப்போன இவாள எப்படி இனி ஆத்துக்குள்ள விடமுடியும்? தனக்கு இனி மகளே இல்லை. அவா இறந்துட்டாள் என்று சொந்தபந்தத்துக்கெல்லாம் சொல்லி கருமாதி செய்துவிட்டார்.

அவரின் ஆச்சாரத்திற்கும் – உயர்குலப் பெருமைக்கும் – இந்துதர்மத்திற்கும் களங்கம் கற்பித்து விட்டாள்.

தன்னை ஓர் உயர் வர்ணத்தார் என மதிக்க வேண்டும் என்பதற்காக அவ்விதம் செய்து தன்னை ஆச்சாரமுள்ள பிராமணன் என்று மெய்ப்பித்துக் கொண்டார்.

ஓடிப்போன சிறீநிதியின் உடுப்புக்களையும் – அவள் நிழற்படங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். அவ்வப்போது மனைவி லோகேஸ்வரி மட்டும் மகளை எண்ணி… கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

மூன்றாண்டுகள் ஓடி விட்டது. ஒருநாள் சீனிவாச அய்யங்காரும், மனைவியும் திருவரங்கம் சென்று ரெங்கநாதனைத் தரிசனம் செய்துவிட்டு…. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் வந்தனர்.

பேருந்து நடத்துனரைப் பார்த்து, வண்டி பொறப்பட, இன்னும் எவ்வளவு நேரமாகும்? எனக் கேட்டார். பத்து நிமிடங்கள்! என்றார் நடத்துனர்.

அப்போது, சுமார் முப்பது வயதுள்ள  முஸ்லிம் இளைஞன் ஒரு கையில் பெட்டியையும், இன்னொரு கையில் குழந்தையையும் சுமந்து கொண்டு வந்தான். பேருந்தில் ஏதாவது இடம் காலியாக இருக்கிறதாவென்று கண்களால் தேடிக் கொண்டிருந்தான். சீனிவாச அய்யங்கார் அவனை நோக்கி, தம்பி…! இங்க இடம் இருக்கு, வாங்க… உட்காருங்கோ! என்றார்.

அவருக்கு அருகில் பெட்டியை வைத்துவிட்டு உட்கார்ந்தான். குழந்தையைத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு, வெளியே, யாரையோ எதிர்பார்த்தபடி இருந்தான். மெல்ல அந்த இளைஞனிடம் கேட்டார் அய்யங்கார். தம்பி… யாரையோ தேடறீங்க….! ஆமாங்க…, என் மனைவி வருவாள்…! ஓஹோ…! கடையில ஏதாவது வாங்கப் போயிருக்காங்க போல! என்றார்.

ஆமாம் என்றதும், லோகேஸ்வரி திரும்பிக் குழந்தையைப் பார்த்தாள். அந்த இளைஞனைப் பார்த்து, அந்தக் கொழந்தைய இப்படிக் கொடுங்கோ!  என்று குழந்தையை வாங்கிக் கொண்டாள். ஏண்டிச் செல்லம்… அழறே…! அதோ பார்! அதோ…. பஸ் வருது…! அதோ என்று வேடிக்கைக் காட்டியபோது, குழந்தை அழுவதை நிறுத்திச் சிரித்தது. அப்போது, ரம்ஜான் பீவி…! இதோ, இங்கே வா! என்றதும் பேருந்தினுள் இருக்கையை நோக்கி வந்தாள் இளைஞனின் மனைவி.

சீனிவாச அய்யங்காரையும், அவர் மனைவி லோகேஸ்வரியையும் பார்த்தவுடன்…. ரம்ஜான் பீவி திடுக்கிட்டுப் போனாள்! எனினும் சமாளித்துக் கொண்டு, முகத்தினின்று விலகிய பர்தாவை நன்றாக இழுத்து மூடிக் கொண்டாள். கணவனும் மனைவியும் நிற்பதைப் பார்த்ததும், தன் மனைவி அருகில் ரம்ஜான் பீவியை அமரச்செய்தார் அய்யங்கார். அந்த இளைஞனைப் பார்த்து, எழுந்து கொண்டு,  தம்பி…. நீங்க உட்காருங்கோ! என்றார்.

பரவாயில்ல சார்…. நீங்க உட்காருங்க! என்றான் இளைஞன். பையிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்து, ஒன்றை எடுத்துக் குழந்தையிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் லோகேஸ்வரி. இப்போது, சீனிவாச அய்யங்காரைப் பார்த்துச் சிரித்தது குழந்தை. அவர் குழந்தையை வாங்கிக் கொண்டார்.

அம்மா…. கொழந்தைக்கு என்ன பேர் வச்சிருக்கேள்? என்று அதன் கன்னத்தைத் தொட்டு, அவர் வாயில் முத்தமிட்டுக் கொண்டார். பர்தாவிலிருந்த ரம்ஜான் பீவி, தன் கணவனைப் பார்த்துவிட்டு….. லோகேஸ்வரியை ஏக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

குழந்தை, சீனிவாச அய்யங்காரின் நெற்றியில் வித்தியாசமாகத் தெரிந்த சிவப்புக் கோடிட்ட நாமத்தைத் தன் பிஞ்சுக் கைகளால் அழித்துக் கொண்டிருந்தது!

பர்தாவினுள் இருந்த ரம்ஜான் பீவிக்கு ஆத்திரம், அழுகையினால் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. முகத்தில் இருந்த பர்தாவை விலக்கி, கைக்குட்டையினால் கண்ணீரைத் துடைத்தாள். சட்டென்று முகத்தைப் பார்த்த லோகேஸ்வரி அதிர்ச்சியும், வியப்பும் ஒரு சேர, அப்படியே பிரமித்துப் போனாள். அவளுக்குப் பேச நா வரவில்லை!

பாச உணர்ச்சி மேலிட….. அடியே…! சிறீநிதி…! சிறீநிதி..!. என்று தன் மகளைக் கட்டிக் கொண்டாள் லோகேஸ்வரி!

மூன்று ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டுப் போன சிறீநிதி தற்போது ரம்ஜான் பீவியாக… தன்னிடமே வந்துவிட்டாளே….! என்ன அதிசயம் என்ன வியப்பு, ரெங்கநாதா… என உச்சரித்துக் கொண்டது அவரது வாய்.

கருமாதி செய்த தன் மகள் வயிற்றுப்பேரன் இப்போது சீனிவாச அய்யங்காரின் கைகளிலே! அந்தக் குழந்தையைக் கீழே விடவும் முடியவில்லை. வைத்திருக்கவும் இயலவில்லை! அவருள் இருந்த வறட்டு ஆச்சாரம், ஆணவ அனுஷ்டானம் விடாப்பிடியாக வைத்திருந்த மதமாச்சர்யம் – போலிக் கௌரவம் ஆகியன குருதி உறவின் பாச உணர்வுகளால், படிப்படியாக குறைந்து வந்து கொண்டிருந்தது!

ஆனாலும் ஊரில் நாலு பேருக்கு முன்னால், ஒரு முஸ்லிம் பையனோடு பெற்ற மகள் ஓடிப் போய்விட்டாள் என்பதும், அதற்குப் பிராயச்சித்தமாக, அவர் மகளே இல்லையென்று கருமாதி செய்ததும், அவரின் உள் மனதில் ஓடியது.

சீனிவாச அய்யங்காருக்குக் கோபம் தலைக்கேறியது. தான் வைத்திருந்த பேரக் குழந்தையை – மகளிடமே கொடுத்துவிட்டு, சீ…! நாயே…! என் கண் முன்னால் நிற்காதே! என் மானம், கௌரவம், ஆச்சாரம் எல்லாம் தொலைச்சுண்டு, மீண்டும்….. ஒன்னு சேர்லாமுன்னு பாக்கிறேளா….? அது முடியாது! என்னால் ஏத்துக்க முடியாது…! ஏத்துக்கவே முடியாது! என்றார்.

அடியே….! மொதல்ல பஸ்சவிட்டு எறங்குடி! இவா மொகத்தைப் பாக்கக்கூடாது! என்று கத்தினார் அய்யங்கார். அப்பா….! நா செய்த காரியம் தவறுதான் ஒத்துக்கிறேன். என்னை மன்னிச்சுருங்கோ! அப்பா….! இப்ப லோகத்துல, எத்தனையோ பேரு ஜாதிவிட்டு, மதம் விட்டுத் திருமணம் செய்துக்கிட்டு நலமா வாழுறாங்க! அவா பெத்தவா அங்கங்கே சில எதிர்ப்புத் தெரிவிச்சுட்டாலும் மீண்டும் ஏத்துண்டு அவாள வாழவிடறா.

கலப்புமணம்ங்கிறது இப்போ காலத்தின் கட்டாயம்! நேக்கு நீங்க வேணும்னா கருமாதி செஞ்சிண்டிருக்கலாம். ஆனா தந்தை – மகள்ங்கிற உறவுக்கு யாரும் கருமாதி செஞ்சுட முடியாது. என்னடா பெத்த பொண்ணே, நமக்கு அறிவுரை சொல்றான்னு நெனைச்சுடாதேள். இதனால உங்க ஆச்சாரம், அனுஷ்டானம், இந்துதர்மம் ஒன்னும் கெட்டுப் போகாது.

நம்ம ஊர்ல அடிக்கடி கருப்புச் சட்டைக்காரங்க கூட்டம் போட்டுண்டு, ஜாதியும், மதமும் கடவுள் கற்பிக்கல. அப்படி கடவுள் கற்பிச்சதா நெனச்சா, அந்தக் கடவுள் நமக்குத் தேவையில்ல. மதம் ஒரு அபின், மதம் மனுஷாள மடையனாக்கிறதுன்னு சொல்லிண்டு வர்றத நானும் நிறைய கேட்டிருக்கேன். அவா சொல்றதும் சரிதானேன்னு என் மனதில் அலையடிக்கிற மாதிரி தோனும். அப்புறமா சிந்திச்சுப் பாத்து ஒப்புக்கிட்டேன். அதனால நா படிப்பு முடிக்கறச்ச இவாள திருமணம் செய்துட்டேன். நீங்க போட்டிருக்கிற நாமத்தையும், பூணூலையும் கழட்டிட்டா, நானும் பர்தாவை எடுத்துடுறேன்….! நாம மனஷாளா இருக்கலாம்….! நா, தவறாப் பேசியிருந்தா மீண்டும் மன்னிச்சுருங்கோ! என்று மகள் தன் உள்ளத்தில் கருக்கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படையாகச் சொன்னாள்.

சிறிதுநேர மௌனத்திற்குப் பிறகு, தன் கணவரிடம், ஏன்னா….! அவா சொல்றதும் சரியாத்தானே இருக்கு! நம்ப ஆச்சார, அய்தீகப்படி உங்க தோப்பனார் அவாளுக்கு முன் இருந்தவாளெல்லாம்….. சிறீரங்க ரெங்கநாதரைச் சேவிக்க, சிறீரங்கத்திற்குக் கால்நடையா… நூறுமைல் தூரம்நடந்து வந்ததா, பெரியவா சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போ நம்ம பெரியவா மாதிரி, ஆச்சாரப்படி நடந்தே வந்துதான் பெருமாள சேவிச்சுப் போறமா? ஏன்னா, வளர்ந்து வர்ற அறிவியல் முன்னேற்றத்தில, கார்லயும், பஸ்லயும்தானே வந்துபோறோம்? மதம், ஆச்சாரத்தையெல்லாம் எதிர்த்துண்டுதானே வர்றோம்?

கலப்புமணத்துக்கு மட்டும் ஏன் அந்தக் கருமாதி எல்லாம் பார்க்கறேள்? நாலு பேருக்காக நாம வாழல. நமக்காக வாழலாமோன்னா! அதுதான் புத்திசாலித்தனம்! நீங்க ஏத்துக்காட்டியும்….. நான் என் மகளை… மருமகனை, பேரனை ஏத்துண்டு, இவாள நம்ம ஆத்துக்கு அழைச்சுண்டு போறேன்! என்றாள் தீர்மானமாக!

சீனிவாச அய்யங்கார் தான் தனிமையில் விடப்பட்டதாக  தாயும் – மகளும் கொடுத்த சாட்டையடிகளைத் தாங்காமல் –  பதில் சொல்லாமல் தனக்குத்தானே வெட்கப்பட்டுக் கொண்டார்.

காலமாற்றத்தினால் தானும் மாறுவதில் தவறேதும் இல்லையென நீண்ட மன உளைச்சலுக்குப் பின் தெளிவாகியது அவருக்கு. தான் ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக…. மகளிடமிருந்த பேரக்குழந்தையை, இப்படி….. வாடா….! என்று வாங்கிக் கொண்டார்.

குழந்தை சீனிவாச அய்யங்காரின் மடியில் அமர்ந்துகொண்டு, அவர் நெற்றியிலிருந்த சிவப்பு நாமத்தை மீண்டும் தன் பிஞ்சு விரலால் அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. அதில் அவரின் மத ஆச்சாரம், வீணான சனாதனம், ஆணவ பிறவிபேதம் அழிந்து கொண்டிருந்தது!

– பாவலர் ப.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *