பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவது என்பது தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க, பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதைவிட நமது சமூகத்தின் மனப்பான்மையை மாற்றுவது மிக முக்கியம்.
– உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா
பாலச்சந்திரன் கொலை சர்வதேசத்தை உசுப்பி இருக்கிறது. சர்வதேசத்தை உசுப்ப சிறு குழந்தைகளின் மரணங்கள் தேவை எனும் ஒரு கொடிய உலகில் நாம் வாழ்கிறோம். உலகத்தின் மனசாட்சி முன்னால் இலங்கை தலைகுனிந்து நிற்கிறது.
– சிங்கள பத்திரிகையாளர் மஞ்சுள வெடிவர்தன
நாம் ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்கள். அந்த மக்களின் நீதிக்கான போராட்டத்தைத்தான் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த நாட்டில் அரசாங்கமும் ராணுவமும் சேர்ந்து மக்களைக் கூட்டாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.
– மணிப்பூர் போராளி இரோம் ஷர்மிளா
அதிகரிக்கும் ஆயுதங்கள்
ஆயுத ஏற்றுமதியில் உலகின் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ரஷ்யாவும், மூன்றாம் இடத்தில் ஜெர்மனியும், நான்காம் இடத்தில் பிரான்சும் உள்ளன.
முன்பு, எட்டாவது இடத்தில் இருந்த சீனா 2008-12 ஆம் ஆண்டில் அய்ந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் காரணத்தினாலும் பல்வேறு நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய சீனா ஒப்பந்தங்களைப் போட்டுள்ளதாலும் இந்த முன்னேற்றம் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு அமைப்பின் (சிப்ரி) இயக்குநர் பால் ஹால்டம் தெரிவித்துள்ளார்.
1950ஆம் ஆண்டிலிருந்து உலகின் 5 பெரிய ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இடம் பெற்று வந்த பிரிட்டன் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலக அளவில் ஆசிய நாடுகளே அதிக அளவில் ஆயுத இறக்குமதி செய்துள்ளன. 2008-12 ஆம் ஆண்டுகளில் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா (12 சதவிகிதம்) முதலிடத்தில் உள்ளது.
பன்னாட்டுப் பொன்மொழி
இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடிக்கும். நெருப்புடன் சேர்ந்தால் தூய்மையாகும். நாமும் சேரும் இடத்திற்கு ஏற்பவே மாறுவோம்.
– துருக்கி